செய்முறை: அப்புறப்படுத்தப்பட்ட ஒரு டீசல் பம்பை எடுத்துக்கொள்ளுங்கள், அதோடு தூக்கி எறியப்பட்ட டிராக்டரின் நான்கு பாகங்களையும், கடைசியாக நடைபெற்ற உலகப் போரில் செயலிழந்த ஜீப்பின் இரண்டு பாகங்களையும் சேர்த்து, மாட்டு வண்டியில் இருந்து பலகைகளை தாராளமான உதவிகளாக பயன்படுத்தவும். மூங்கில் கம்புகள், சில கம்பிகள் மற்றும் ஒரு காடாத்துணி ஆகியவை அனைத்தும் இதற்கு ஒரு சிறப்புச் சுவையை சேர்க்கின்றன. பிறகு சக்கரங்களை சேருங்கள். அவை சற்று மாறுபட்ட அளவுகளில் இருந்தாலும் பரவாயில்லை, எந்த நான்கு சக்கரங்களும் சிறப்பாகவே செயல்படும். இலவசமாக கிடைக்கின்ற பிற பாகங்களையும் நம் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம். இப்போது ஜுகாதை மொத்தமாக சேர்த்து அதன் வடிவத்தில் பொருத்தவும் அல்லது ஒட்டவும். எந்த வடிவமானாலும் பரவாயில்லை.
நீங்கள் இப்போது இதை இயக்கத் தயாராக இருக்கிறீர்கள், மத்திய பிரதேசத்திலுள்ள பிந்து - மொரினா. பந்தேல்கண்ட். ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் ஆகியவற்றிலும் கூட இதை இயக்கலாம், ஆனால் ஹரியானாவில் அல்ல.
இது இந்திய தொழில்நுட்ப மேதைமையின் சின்னம். அவர்களால் இதை இயக்க முடியும் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள், ஆனால் அதை இயக்க முடியும். நான் ஜுகாதை பயன்படுத்தியிருக்கிறேன், பல இந்தியர்களால் செய்ய முடிவதை போல, என்னாலும் அதை இயக்க முடிந்திருக்கிறது.. இது கழிவு மறு சுழற்சியில் ஒரு அதிசயமாகும். இதில் இருக்கின்ற டீசல் என்ஜின் ஒரு காலத்தில் நீர்ப்பாசன பம்பாக இருந்தது. இதை ஒன்றாக இணைப்பதற்கான செலவு மிகவும் குறைவு, சில ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாகவே முடிந்துவிடும். சில நேரங்களில் 20,000 ரூபாய்க்கு உள்ளாகவே முடிந்துவிடும். இதைவிட குறைந்த விலையில் கூட இதை செய்யமுடியும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மெதுவாகத்தான் செல்லும், ஆனால் பயன்படுத்த முடியும். விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஏற்றி சந்தைக்கு கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது. சந்தையில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வரப் பயன்படுகிறது. தொலைதூர கிராமங்களில் இருக்கும் மக்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதற்கு இதனை பயன்படுத்துகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை பேருந்தாகப் பயன்படுத்துகின்றனர். (இந்தப் படம் எடுக்கப்பட்ட இடமான) மொரினாவில் இருக்கும் மக்களுக்கு இது ஒரு பொது போக்குவரத்தின் வடிவம். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சக்கரங்கள் விமானப்படை தளத்தின் கழிவுப் பொருளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
இந்த இயந்திர வடிவமைப்புக்கான ஞானம் சிலநேரங்களில் கல்வியறிவற்ற அல்லது அரைகுறையாக கல்விகற்ற விவசாயிகளிடம் இருந்து வருகிறது. அவர்களின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மிகவும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. ஜுகாத் சமூகத்திற்கு நிச்சயமாக அதன் வலிமையான பங்களிப்பை அளித்து வருகிறது. மிகவும் மெதுவாகத் தான் செல்லும், பலரால் ஒரு மணி நேரத்திற்கு 20 மைல் தொலைவுக்கு மேல் செல்ல முடியாது.
இவை அனைத்தும் அதிகாரத்தில் இருப்பவர்களை பெரிதும் எரிச்சலூட்டுகிறது. ஹரியானாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதனை ஒரு அச்சுறுத்தலாக கருதி, அவர்களின் அழுத்தத்தின் மூலம் ஜுகாதை தடை செய்ய வைத்திருக்கின்றனர். சாலையிலேயே மெதுவாக செல்லக் கூடிய வாகனமான இதை, சாலையில் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் என்று ஆதாரமற்ற கதைகளைக் கூறி அதை செய்திருக்கின்றனர். பிற இடங்களில் இது ஒரு மோட்டார் வாகனமாக கருதப்படவில்லை.
ஜுகாத் உரிமையாளர்கள் இதற்கான வாகன வரியை செலுத்த மறுப்பதன் மூலம் பதிலடி தருகிறார்கள். ("இது ஒரு வாகனமே அல்ல", என்று அவர்கள் கூறுகின்றனர், இல்லையா?”) போலீஸ்காரர்களும் பதிலடி தருகிறார்கள். ஒரு ஜுகாத் உரிமையாளர், ஜுகாதை வைத்து ஒரு பாதசாரியை இலேசாக இடித்தால் கூட, அலட்சியமாக வாகனம் ஓட்டிய காரணத்திற்காக அவர் இழுத்துச் செல்லப்பட மாட்டார், கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டு கூறி இழுத்துச் செல்லப்படுவார். "அவர்களால் எப்படி விபத்தை ஏற்படுத்த முடியும்?" என்று போலீஸ்காரர்கள் சிரிக்கின்றனர். "அவை வாகனங்கள் அல்ல நினைவிருக்கிறதா?" என்று கேட்கின்றனர்.
ஜுகாத் என்ற வார்த்தையின் மெய்ப்பொருளை துல்லியமாக மொழிபெயர்க்க இயலாது. இங்கு இது ஒரு இயந்திர ஒட்டு வேலை என்று பொருள்படும். கடினமான மற்றும் சுலபமாக கிடைக்கக்கூடிய தீர்வு, அதன் கட்டமைப்பை விட அதன் பயன்பாடு குறித்து அதிகம் அக்கறை கொள்ளும் ஒரு தீர்வு. இதை என்னவாக மொழிபெயர்த்தாலும், அதை நான் வழிமொழிகிறேன்.
தமிழில்: சோனியா போஸ்