ஆந்திராவின் அரசியலை செய்தியறைகள் கணிப்பதை விட அனந்தப்பூரில் ரெக்சைன் பொருட்கள் விற்கப்படும் கடைத்தெரு தெளிவாக கணித்து விடுகிறது. கடந்த தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றது அனந்தப்பூரின் அறிஞர்களுக்கு ஆச்சரியம் கொடுத்திருக்கலாம். ஆனால் ரெக்சைன் கடைத்தெரு முன்பே அறிந்திருந்தது. “ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு (இரு சக்கர வாகன) சேணப் பைகளை தேர்தலுக்கும் பல மாதங்களுக்கு முன்பே நிறைய நாங்கள் தைக்கத் தொடங்கினோம்,” என்கிறார் டி.நாராயணசாமி. இங்கிருக்கும் ரெக்சைன் கடை ஒன்றின் உரிமையாளர் அவர்.
சேணப் பையின் பிடி சரியாக சக்கரத்தில் எழுத்துகளை கொண்டது போல் அமைக்கப்பட்டிருந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பைகளுக்கான அதிக தேவை, 2019ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளை முன்னறிவித்தது.
1990களில் இக்கடைகள் மலிவான பள்ளிப்பைகளைத்தான் பிரதானமாக தைத்துக் கொண்டிருந்தன. நானே சிலவற்றை வாங்கியிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு பிறகு, காலணி கடைகளில் பள்ளிப் பைகள் வாங்கும் வழக்கம் உருவானது. ரெக்சைன் கடைகள் இருசக்கர வாகன சேணப்பைகளை விற்கத் தொடங்கின. சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் படங்களை கொண்ட சேணப் பைகள் தயாரித்தன. கூடவே ஆட்டோ சீட், சோஃபா, கார் ஆகியவற்றுக்கான உறைகளையும் அவை தயாரித்தன. அரசியல் முத்திரைகள் கொண்ட பைகளின் விற்பனை 2019 தேர்தல் நேரத்தில் உச்சம் பெற்றது. “பசியில் கூட இருப்போம். ஆனாலும் நமக்கான கட்சிக் கொடிகளுடன்தான் வெளியே செல்வோம். நாங்கள் செல்ல வேண்டும். வேறு வழி கிடையாது,” என்கிறார் தெலுகு தேசக் கட்சி தொண்டர் ஒருவர். அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் ஒரு தெலுகு தேசக் கட்சி சேணப் பை இருந்ததை நான் பார்த்ததாக ஞாபகம்.
தொற்றுப் பரவல் அதிகரித்தவுடன் அரசியல் (மற்றும் அரசியல்வாதிகள்) படங்களை தங்கள் இரு சக்கர வாகனங்களில் மாட்டுவதில் மக்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. முன்பெல்லாம் ரெக்சைன் கடைகளின் முகப்பில் எப்போதும் அரசியல் வாசகங்கள் மற்றும் முகங்கள் அடங்கிய சேணப் பைகள்தான் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். தற்போது அவர்கள் சாதாரண பைகளையும் பிரபலமான நிறுவனங்களின் பைகளையும்தான் காட்சிக்கு வைக்கின்றனர். தற்போதைய சூழலில் ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் பொருட்கள் வாங்குவதற்கான தேவை குறைந்து போயிருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம்.
ஊரடங்கு தொடங்கியபிறகு அதிகமாகியிருக்கும் காவல்துறை நடமாட்டத்தால், தங்களின் அபிமானங்களை பொதுவில் காட்டும் முனைப்பு குறைந்ததாலும் இருக்கலாம். “ஏதோவொரு காரணத்துக்காக காவலர் உங்களை இருசக்கர வாகனத்தோடு பிடிக்கும்போது நீங்கள் ஒரு கட்சியை (காவலர் வேறு கட்சியை) சேர்ந்தவராக இருந்தால், உங்களுக்கு பிரச்சினைதான்,” என்கிறார் நாராயணசாமி.
தமிழில் : ராஜசங்கீதன்