பருவமழை தணிந்தது. பீகாரில் உள்ள பராகான் குர்த் கிராமத்தின் பெண்கள் தங்கள் ’குட்சா’ (ஒரு வகை குடிசை) வீடுகளின் வெளிப்புற சுவர்களை அடுக்குவதற்கு வயல்களில் இருந்து சேற்றைப் எடுத்துக்கொண்டிருந்தனர், குறிப்பாக பண்டிகைகளுக்கு முன்பு அவர்கள் அவ்வப்போது அதனை உறுதிச்செய்யவும் அழகுப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்.
22 வயதான லீலாவதி தேவி மற்ற பெண்களுடன் ஈர மண் சேகரிக்க வெளியில் செல்ல வேண்டும். ஆனால், மூன்று மாதமான அவளது ஆண் குழந்தை அழுதுக்கொண்டே, தூங்க மறுத்தது. அவரது கணவர், 24 வயதான அஜய் ஓரான், அருகில் அவர் நடந்து மளிகை கடையில் இருந்தார். குழந்தை அவரது கைகளில் குவிந்து கிடந்தது, சில நிமிடங்களுக்கு ஒருமுறை, லீலாவதி காய்ச்சலைச் சோதிப்பது போல அவள் உள்ளங்கையை அவன் நெற்றியில் வைத்துப் பார்க்கிறார். "அவன் நன்றாக இருக்கிறான், குறைந்தபட்சம் நான் அப்படி நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், லீலாவதியின் 14 மாதமான மகள், காய்ச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டது. "அது இரண்டு நாட்கள் காய்ச்சல்தான், அதிகமாகக்கூட இல்லை" என்று லீலாவதி கூறினார். அதையும் மீறி, மரணத்திற்கு என்ன காரணம் என்று பெற்றோருக்குத் தெரியவில்லை. மருத்துவமனை பதிவுகள் இல்லை, மருந்துவ குறிப்புகள் இல்லை, மருந்துகள் இல்லை. இன்னும் சில நாட்களுக்கு காய்ச்சல் குறையவில்லை என்றால், கைமூர் மாவட்டத்தின் அதவுரா தொகுதியில் உள்ள தங்கள் கிராமத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய வாய்க்கவில்லை.
கைமூர் வனவிலங்கு சரணாலயத்தின் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் எல்லைச் சுவர் இல்லை. பராகான் குர்த் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அதை ஒட்டிய பர்கான் கலன் கிராமத்தில் வசிப்பவர்கள் காட்டு விலங்குகள்- சோம்பல் கரடிகள், சிறுத்தைகள் மற்றும் நீலான் - கட்டிடத்திற்குள் அலைந்து திரிந்தன கதைகளை நினைவு கூர்கின்றனர். (இரண்டு கிராமத்திற்கும் பொதுவான ஒரு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது). அவை நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களை பயமுறுத்துகிறது, இங்கே சேவை செய்ய ஆர்வம் காட்டாத சுகாதாரப் பணியாளர்களையும்!
[பராகான் குர்தியில்] ஒரு துணை மையமும் உள்ளது, ஆனால் கட்டிடம் கைவிடப்பட்டது. இது ஆடுகள் மற்றும் பிற விலங்குகளுக்கான ஓய்வுக் கொட்டகையாக மாறியுள்ளது , என்று அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் (ஆஷா) புல்வாசி தேவி கூறுகிறார். இவர் வரையறுக்கப்பட்ட வெற்றியுடன், தனது சொந்த முயற்சியால் 2014 முதல் பணியைத் தொடர்ந்தார் .
“மருத்துவர்கள் அதவுராவில் [15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில்] வசிக்கின்றனர். அலைப்பேசி இணைப்பு இல்லை, எனவே அவசரகாலத்தில் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது, ”என்கிறார் புல்வாசி. இருந்த போதிலும், பல ஆண்டுகளாக, அவர் குறைந்தது 50 பெண்களை பி.எச்.சி அல்லது தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையின் பரிந்துரை பிரிவுக்கு (பி.எச்.சிக்கு அடுத்து அமைந்துள்ளது) அழைத்து வந்துள்ளதாக குறிப்பிடுக்கிறார், இது பெண் மருத்துவர்கள் இல்லாத மற்றொரு சிதைந்த கட்டிடம். இங்குள்ள அனைத்து பொறுப்புகளும் துணை செவிலியர் மருத்துவச்சி (ஏ.என்.எம்) மற்றும் ஒரு ஆண் மருத்துவரால் கையாளப்படுகின்றன, அவர்கள் இருவரும் கிராமத்தில் வசிக்கவில்லை, தொலைத் தொடர்பு இணைப்பு இல்லாவிட்டால் அவசரகாலங்களில் தொடர்பு கொள்வது கடினம்.”.
ஆனால், புல்வாசி வீரர்கள் பராகான் குர்தில் 85 குடும்பங்களை (மக்கள் தொகை 522) கவனித்து வருகின்றனர். புல்வாசி உட்பட பெரும்பான்மையானவர்கள் ஓரான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு பட்டியலின பழங்குடியினர், அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் விவசாயம் மற்றும் காடுகளை மையமாகக் கொண்டவை. அவர்களில் சிலர் கொஞ்சம் நிலங்கள் வைத்திருக்கிறார்கள், அதில் அவர்கள் முக்கியமாக நெல் பயிரிடுகிறார்கள், சிலர் ஆதாரா மற்றும் பிற நகரங்களுக்கு தினசரி கூலி வேலையைத் தேடிச் செல்கின்றனர்.
"இது ஒரு சிறிய எண்ணிக்கை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அரசாங்கத்தின் இலவச ஆம்புலன்ஸ் சேவை இங்கு இயங்காது" என்று, பல ஆண்டுகளாக பி.எச்.சிக்கு வெளியே நின்று கொண்டிருந்த பழைய மற்றும் உடைந்த வாகனத்தை சுட்டிக்காட்டியப்படியே, புல்வாசி கூறுகிறார். "மேலும், மருத்துவமனைகள், காப்பர்-டி , கருத்தடை மாத்திரைகள் [காப்பர்-டி எவ்வாறு செருகப்படுகிறது என்பது பற்றியும், அல்லது மாத்திரைகள் எவ்வாறு பலவீனத்தையும் தலைச்சுற்றலையும் ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும்] தவறான புரிதல்கள் கொண்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, தாய்-சேய், போலியோ மற்றும் பலவற்றைப் பற்றி 'விழிப்புணர்வு' பிரச்சாரங்கள் செய்ய வீட்டு வேலைகளை எல்லாம் செய்தப் பிறகு இங்கு யார்க்கு நேரம் கிடைக்கிறது?"
பராகான் குர்தில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுடனான எங்கள் உரையாடல்களில் இந்த சுகாதாரத் தடைகள் பிரதிபலித்தன. நாங்கள் பேசிய அனைத்து பெண்களும் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே பிரசவித்தார்கள் - முந்தைய ஐந்து ஆண்டுகளில் நடந்த பிரசவங்களில் 80 சதவீதம் மருத்துவமனை பிரசவங்கள் என்று கைமூர் மாவட்டத்திற்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வு ( NFHS-4 , 2015-16) தரவில் கூறப்பட்டப்போதிலும்! வீட்டில் பிறந்த எந்தக் குழந்தையும் பிறந்த 24 மணி நேரத்திற்குள் பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்றும் என்.எஃப்.ஹ்ச்.எஸ்-4 குறிப்பிடுகிறது.
பராகான் குர்தில் உள்ள மற்றொரு வீட்டில், 21 வயதான காஜல் தேவி தனது பெற்றோர் வீட்டில் குழந்தையை பிரசவத்த பிறகு, தனது நான்கு மாத ஆண் குழந்தையுடன் மாமியார் வீட்டிற்கு திரும்பியுள்ளார். கர்ப்ப காலம் முழுவதும் ஒரு மருத்துவரிடம்கூட எந்த ஆலோசனையும் , பரிசோதனையும் இல்லை. குழந்தைக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை. "நான் என் அம்மாவின் வீட்டில் இருந்தேன், அதனால் நான் வீடு திரும்பியவுடன் அவருக்கு தடுப்பூசி போடலாம் என்று நினைத்தேன்," என்று காஜல் கூறுகிறார். பக்கத்து ஊரான பார்கான் கலானில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில்கூட தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டிருக்கலாம் என்று அவருக்கு தெரியவில்லை. அது சற்றே பெரிய கிராமம்; 108 வீடுகள் மற்றும் 619 மக்கள் தொகையுடன், அதன் சொந்த ’ஆஷா’ தொழிலாளி பெற்றத்துள்ளது.
ஒரு மருத்துவரை அணுகுவதற்கான தயக்கம் அச்சங்களிலிருந்து உருவாகிறது. மேலும் பல சந்தர்ப்பங்களில், ஒரு ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண்களின் உதவியுடன் தனது குழந்தையை ஏன் வீட்டில் பிரசவிக்கத் தேர்ந்தெடுத்தார் என்று கேட்டபோது, "மருத்துவமனைகளில் குழந்தைகளை மாற்றிவிடுவதாக நான் கேள்விப்பட்டேன், குறிப்பாக அது ஒரு ஆண் குழந்தை இருந்தால், எனவே வீட்டிலேயே பிரசவிப்பது நல்லது", என்று காஜல் பதிலளித்தார்.
பராகான் குர்தின் வசிக்கும் மற்றொருவர், 28 வயதான சுனிதா தேவி, அவரும் ஒரு பயிற்சி பெற்ற செவிலியர் அல்லது மருத்துவரின் உதவியின்றி வீட்டிலேயே பிரசவித்ததாகக் கூறுகிறார். அவருடைய நான்காவது குழந்தை, அதுவும் பெண் குழந்தை, அவர் மடியில் தூங்குகிறாள். தனது அனைத்து கர்ப்பங்களின்போதும், சுனிதா ஒருபோதும் மருத்துவமனைக்கு ஒரு சோதனை அல்லது பிரசவத்திற்காக சென்றதில்லை.
“மருத்துவமனையில் பலர் உள்ளனர். நான் அனைவரின் முன்பும் பிரசவிக்கமுடியாது. எனக்கு கூச்சமாக இருக்கும்., அதுவும் ஒரு பெண் குழந்தையாக இருந்தால், அது இன்னும் மோசம்”, என்று சுனிதா கூறுகிறார், மருத்துவமனைகள் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்று புல்வாசி கூறும்போதும் நம்ப விரும்பவில்லை.
“வீட்டில் பிரசவிப்பது சிறந்தது - ஒரு வயதான பெண்ணின் உதவியைப் பெறுங்கள். நான்கு குழந்தைகளுக்குப் பிறகு, உங்களுக்கு அதிக உதவி தேவையில்லை, " என்று சுனிதா சிரித்துக்கொண்டே கூறுகிறார். பின்னர் இந்த நபர் ஒரு ஊசி போட வருவார், நீங்கள் கொஞ்சம் நன்றாக உணர்வீர்கள்."
ஊசி போட வரும் நபர் ஒரு “பினா-டிகிரி மருத்துவர்” ( அதாவது, பட்டம் இல்லாத மருத்துவர்) கிராமத்தில் சிலர் அவரை அழைப்பது போல; அவர் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ’தலா’ சந்தையில் இருந்து வருகிறார். அவரது படிப்பு என்ன அல்லது அவர் நிர்வகிக்கும் ஊசி என்ன என்பது குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை.
எங்களின் உரையாடலின் போது, சுனிதா தனது மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து, மீண்டும் பெண்ணைப் பெற்றெடுத்த குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்துக்கிறார். மேலும், தன் மகள்கள் அனைவரையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பார் என்றும் கவலைப்படுகிறார். வயல்களில் கணவருடன் உதவ குடும்பத்தில் ஆண் துணை இல்லாதது பற்றி கவலைக்கொள்கிறார்.
அவரது பிரசவத்திற்கு முந்தைய 3-4 வாரங்கள் தவிர, சுனிதா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஒவ்வொரு பிற்பகலும் வயல்களுக்கு செல்கிறார். "இது ஒரு சிறிய வேலை - விதைப்பு மற்றும் மற்ற வேலைகள், அவ்வளவு இல்லை," என்று அவர் முணுமுணுக்கிறார்.
சுனிதாவின் வீட்டிற்கு சில வீடுகள் தொலைவில் கிரண் தேவி வசிக்கிறார்; அவர் தனது முதல் குழந்தையுடன் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவர் ஒரு முறை கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை, அங்கு செல்ல அவர் நடந்து செல்ல வேண்டிய தூரம் மற்றும் ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு ஆகியவற்றால் அச்சமடைந்திருக்கிறார். கிரணின் மாமியார் சில மாதங்களுக்கு முன்பு (2020 ஆம் ஆண்டு) காலமாகிவிட்டார். “அவர் நடுக்கத்தில் இங்கேயே இறந்துவிட்டார். எப்படியும் நாங்கள் மருத்துவமனைக்கு எப்படி செல்வோம்?”, என்று கிரண் கேட்கிறார்.
இந்த கிராமங்களில் யாருக்காவது திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனால், பராகான் குர்த் அல்லது பார்கான் கலன்தான் செல்வார்கள், தேர்வு மிகவும் குறைவாக உள்ளது: பொது பி.எச்.சி, எல்லைச் சுவர் இல்லாமல் பாதுகாப்பற்றது; தாய் மற்றும் சேய் மருத்துவமனையின் பரிந்துரை பிரிவில் (உண்மையான மருத்துவமனை கைமூர் மாவட்ட மருத்துவமனையின் ஒரு பகுதியாகும்) இருக்கும் ஒரே மருத்துவர் கிடைக்காமல் போகலாம்; அல்லது 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பபுவாவில் உள்ள கைமூர் மாவட்ட தலைமையகத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்வார்கள்.
பெரும்பாலும், கிரணின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தூரத்தை நடந்தே கடக்கிறார்கள். நிலையான கால அட்டவணை இல்லாமலும், தனியார் வாகனங்களாக ஒரு சில பேருந்துகள் இணைப்பு என்ற பெயரில் இயக்கப்படுகின்றன. அலைபேசிகளின் நெட்வொர்க் வரும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான போராட்டம் கடுமையாக இருக்கிறது. இங்குள்ள கிராமவாசிகள் யாருடனும் இணைப்பில் இல்லாம் பல வாரங்கள் இருக்கலாம்.
அவர் தனது வேலையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்ய என்ன உதவி வேண்டும் என்று கேட்டபோது, புல்வாசி தனது கணவரின் தொலைபேசியை வெளியில் கொண்டு எடுத்த வந்து, “நன்கு பராமரிக்கப்படும் பயனற்ற பொம்மை”, என்று கூறுகிறார்.
“இதில் சற்றே நெட்வொர்க் கிடைத்தால் பல விஷயங்களை மாற்றலாம்”, என்று அவர் கூறுகிறார்; அவர்களுக்கு தேவை ஒரு மருத்துவரோ செவிலியரோ அல்ல; நல்ல இணைப்பும் தகவல் தொடர்பும்தான் என்கிறார்.
அட்டை வரைப்படம்: மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தின் ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த லாபனி ஜங்கி, கொல்கத்தாவின் சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் வங்காள தொழிலாளர் இடம்பெயர்வு குறித்து முனைவர் பட்டம் பயின்று வருகிறார். அவர் சுயமாக கற்றுத்தேர்ந்த ஓவியர் மற்றும் பயணம் செய்ய விரும்புவார்.
பாரி மற்றும் கெளண்டர்மீடியா அறக்கட்டளையின் கிராமப்புற இந்தியாவில் பதின்வயது பெண்கள் மற்றும் இளம் பெண்கள் குறித்த நாடு தழுவிய செய்தி சேகரிப்பு திட்டம், ‘பாபுலேஷன் ஃபோண்டேஷன் ஆஃப் இந்தியா’வின் ஒரு பகுதியாகும். இது சாதாரண மக்களின் குரல்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் முக்கியமான இன்னும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிலைமையை ஆராய்வதற்கான முயற்சி ஆகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய வேண்டுமா? [email protected] என்ற முகவரிக்கும் CCயுடன் [email protected] என்ற முகவரிக்கும் எழுதுங்கள்.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்