“ஒரு இரவுநேரத்தில் அவர்கள் எங்களின் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை அழித்தனர். ஒரேநாளில் எங்களின் நிலத்தை எடுத்துக் கொண்டு கொட்டகைகள் போட்டுக் கொண்டார்கள்,” என 2020 பிப்ரவரியில் சர்க்கானி கிராமத்தில் கொண்டிருந்த 8 ஏக்கர் நிலம் குடும்பத்திடமிருந்து பறிக்கப்பட்டதை விவரிக்கிறார் 48 வயது அனுசயா குமாரே.

உள்ளூரை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேராத வணிகர்கள் அடியாட்களுக்கு பணம் கொடுத்து நிலத்தை அபகரித்து கொண்டதாக நம்புகிறார் கோண்ட் பழங்குடி சமூகத்தை சேர்ந்த அனுசயா. ”அவர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி எங்களின் நிலத்தை பழங்குடியல்லாத மக்களுக்கு விற்றுவிட்டனர். 7/12 பட்டா இன்னும் எங்கள் பெயர்களில்தான் இருக்கிறது.” அவரின் குடும்பம் பருத்தி, கொண்டைக்கடலை, துவரை மற்றும் கோதுமை ஆகிய பயிர்களை விளைவிக்கிறது.

“கோவிட் காலத்தில் எங்களுக்கிருந்து சிறு நிலத்தில் விளைந்ததை வைத்துதான் நாங்கள் உயிர் வாழ்ந்தோம். போன மாதம் (டிசம்பர் 2020) அதையும் எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள்,” என்கிறார் அனுசயா. சார்கானியில் அவர் மட்டுமே நிலம் இழக்கவில்லை. 3250 பேர் வசிக்கும் கிராமத்தில் 900 பேர் பழங்குடிகள். 900த்தில் 200 பேர் நிலங்களை இழந்திருக்கின்றனர். ஜனவரி தொடக்கத்திலிருந்து அவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வெளியே தினமும் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

“ஒரு மாதமாக பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோ. எங்கள் கால்கள் வலிக்கின்றன,” என்கிறார் அனுசயா அவரின் பாதங்களை தேய்த்துக் கொண்டே. ஜனவரி 23ம் தேதி இரவு 9 மணி. அவருடைய இரவுணவான கம்பு ரொட்டிகளும் பூண்டு சட்னியையும் உண்டு முடித்தார். அவரும் சில பெண்களும் கந்தாதேவி கோவிலில் இரவை கழிக்க படுக்கைகளை விரித்தனர்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்க நாசிக்கிலிருந்து மும்பைக்கு செல்லும் வாகன ஊர்வலத்தில் அவர்கள் இருந்தனர். அவர்களின் போராட்டங்களை முன்னிறுத்த போகிறார்கள்.

PHOTO • Shraddha Agarwal

மேலே இடது: அனுசயா குமாரே (இடது) மற்றும் சரஜாபாய் அடே (வலது) சார்கானி கிராமத்தை சேர்ந்தவர்கள். மேலே வலது: ஊர்வலம் இரவுக்காக காந்தாதேவி கோவிலில் நிறுத்தியிருக்கின்றனர். கீழே: விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கில் நாசிக்கிலிருந்து மும்பைக்கு டெம்போக்களிலும் ஜீப்களிலும் ட்ரக்குகளிலும் பயணித்தனர்

ஜனவரி 22ம் தேதி பிற்பகலில் அனுசயாவும் 49 பழங்குடியினரும் அவர்களின் கிராமத்திலிருந்து ஜீப்களிலும் டெம்போக்களிலும் கிளம்பினர். 18 மணி நேரம் 540 கிலோமீட்டர்கள் பயணித்து அவர்கள் நாசிக் நகரத்தை அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு அடைந்தனர். அங்கு ஜனவரி 23ம் தேதி தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்துக்கு கிளம்பவிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் இணைந்தனர்.

கந்தாதேவி கோவிலில் சார்கானியை சேர்ந்த சரஜாபாய் அடேவும் சோர்வாக இருப்பதை சொல்லிக் கொண்டிருந்தார். “என் முதுகும் கால்களும் வலிக்கின்றன. எங்கள் ஊரில் நடக்கும் போராட்டத்தை அரசுக்கு தெரிவிக்க இந்த ஊர்வலத்தில் வந்திருக்கிறோம். எங்களின் நிலங்களுக்காக ஒரு மாதமாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சோர்வுற்றிருக்கிறோம். ஆனால் சாகும்வரை எங்களின் நிலவுரிமைக்காக நாங்கள் போராடுவோம்,” என்கிறார் கொலம் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 53 வயது சரஜாபாய்.

அவரும் குடும்பமும் துவரை மற்றும் காய்கறிகளை அவர்களின் மூன்று ஏக்கர் நிலத்தில் விளைவித்திருக்கின்றனர். “அவர்கள் எங்களின் பயிர்களை அழித்து கொட்டகை போட்டிருக்கிறார்கள். அது விவசாய நிலமாக இருந்தாலும் பொய்யாக ஆவணம் தயாரித்து அது விவசாய நிலம் கிடையாது என்கிறார்கள்,” என்கிறார் அவர்.

சார்கானியின் பழங்குடிகடிகளிடம் அவர்களின் உரிமையை உறுதிபடுத்துவதற்கான சட்ட ஆவணங்கள் எல்லாமும் இருப்பதாக குறிப்பிடுகிறார் சரஜபாய். “சட்டரீதியாக இது எங்களின் நிலம். கலெக்டருக்கு தகவல் சொல்லி தாசில்தாரிடம் எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். பத்து நாட்களுக்கு கலெக்டரால் கிராமத்திலுள்ள பிரச்சினையை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மாதம் காத்திருந்தோம். பிறகு போராடுவதென முடிவெடுத்தோம்.”

“ஊர்வலத்தில் வருவதற்கு முன் எங்களின் பிரமாண பத்திரத்தை ஊர்த் தலைவர், தாசில்தார் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறோம்,” என்கிறார் அனுசயா. அவர்கள்தான் உண்மையான நிலவுரிமையாளர்கள் என்றும் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதெனவும் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். “பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வெளியே நாள் முழுவதும் உட்கார்ந்திருக்கிறோம். அங்கேயே சாப்பிட்டு உறங்குவோம். குளிக்கவும் உணவு கொண்டு செல்லவுமே வீட்டுக்கு வருவோம். பழங்குடி மக்களின் பிரச்சினைகள் தெரிந்தும் எங்களின் நிலங்களை ஏன் பழங்குடி அல்லாதோருக்கு அவர்கள் வழங்குகிறார்கள் என நாங்கள் கேட்க விரும்புகிறோம்,” என்கிறார் அவர்.

Farmers of Maharashtra sat in protest against the three new farm laws in Mumbai. The Adivasi farmers spoke up about their struggles at home
PHOTO • Sanket Jain
Farmers of Maharashtra sat in protest against the three new farm laws in Mumbai. The Adivasi farmers spoke up about their struggles at home
PHOTO • Riya Behl

மகாராஷ்ட்ரா விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து மும்பையில் அமர்ந்திருக்கின்றனர். பழங்குடி விவசாயிகள் அவர்களின் ஊர்களில் நடத்தும் போராட்டங்களை பற்றி பேசினர்

ஜனவரி 24ம் தேதி ஆசாத் மைதானத்தை அடைந்தவுடன் அனுசயாவும் சரஜபாயும் சம்யுக்தா ஷேத்கரி கம்கர் மோர்ச்சாவால் ஜனவரி 24-26 வரை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் புதிய வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். மகாராஷ்ட்ராவின் 21 மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் மும்பைக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். தில்லி எல்லையில் ஜனவரி 26ம் தேதி விவசாயிகள் நடத்தவிருக்கும் ட்ராக்டர் ஊர்வலத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

நவம்பர் 26ம் தேதியிலிருந்து முக்கியமாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் தில்லியின் எல்லையில் நின்று, 2020 ஜூன் 5 அன்று அவசர சட்டங்களாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள்.

மூன்று சட்டங்களும் பெரு வணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ள வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.

சார்கானியின் பழங்குடி விவசாயிகள் அவர்களின் போராட்டங்களை மும்பையில் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கையில் 150 பேர் ஊரிலேயே தங்கி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன் இரவு பகலாக நடக்கும் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். “பழங்குடிகளின் குரல்களை கேட்க வைக்கவே நாங்கள் மும்பைக்கு வந்திருக்கிறோம்,” என்கிறார் அனுசயா. “நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Shraddha Agarwal

শ্রদ্ধা অগরওয়াল পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার সাংবাদিক এবং কন্টেন্ট সম্পাদক।

Other stories by Shraddha Agarwal
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan