“நான்.. நான்…”. பிறருக்கு முன் பதிலளித்து விட வேண்டுமென அமன் முகமது ஆர்வமாக இருந்தார். 12-க்கும் மேற்பட்டக் குழந்தைகள் இருந்த குழுவிடம் இந்த வருட விநாயகர் சதுர்த்தியின் பந்தல் குழுத் தலைவர் யாரெனக் கேட்டேன். “அவரே 2,000 ரூபாய் பணத்தை திரட்டி விட்டார்,” என்கிறார் குழுவிலேயே மூத்தவரான டி.ராகினி. எனவே அமனின் கோரிக்கையை யாரும் எதிர்க்கவில்லை.
அவர் திரட்டியதுதான் இந்த வருடத்தில் அதிகம். பந்தல் குழு திரட்டிய 3,000 ரூபாயின் மூன்றில் இரண்டு பங்கு அவரிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஆந்திராவின் அனதப்பூர் டவுனிலுள்ள சாய்நகர் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளிடமிருந்து அவர்கள் நிதி திரட்டியிருக்கின்றனர்.
தனது விருப்பமான விழா இது என அமன் கூறினார். எனக்கு வியப்பில்லை.
2018ம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி சாய் நகரில் முடிந்த சில வாரங்களுக்கு பிறகான ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று நான்கு குழந்தைகள் ‘போலச் செய்தல்’ விளையாட்டு விளையாடுவதை நான் பார்த்தேன். புகைப்படங்கள் எடுத்தேன். சிறுவன் பிள்ளையாராக நடிப்பார். இரண்டு குழந்தைகள் அவரை தூக்கிச் சென்று, பிள்ளையார் சிலையைக் கடலில் கரைக்கும் நிகழ்வாக, இறுதியில் தரையில் போடுவார்கள்.
சிறு பிள்ளையாராக நடிப்பவர் அமன் முகமது. 11 பேரில் முன் வரிசையில் (இடது ஓரம்) முகப்புப் படத்தில் நிற்பவர்தான் அவர்.
இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாத விநாயகர் சதுர்த்தி விழாவுக்கென அமனும் அவரது நண்பர்களும் 2x2 அடி பந்தல் போட்டு பிள்ளையார் சிலை வைத்திருந்தனர். அனந்தப்பூரிலேயே சிறிய சிலை அதுவாகத்தான் இருக்கும். புகைப்படம் எடுப்பதற்கு முன் பந்தலைப் பிரித்துவிட்டார்கள். சிலையை 1,000 ரூபாய்க்கு வாங்கியதாக குழந்தைகள் கூறினர். மீதி 2,000 ரூபாய் அந்தக் குடிலுக்கும் அலங்காரத்துக்கும் செலவானது. அந்தப் பந்தல் சாய்நகரின் மூன்றாவது குறுக்குத் தெருவுக்கருகே இருக்கும் தர்காவுக்கு அடுத்து அமைந்திருக்கிறது
இங்கிருக்கும் உழைக்கும் மக்கள் வசிக்கும் இப்பகுதியின் குழந்தைகள் பல காலமாக இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர். பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்களாகவும் வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருக்கும் பெற்றோரும் குழந்தைகளின் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பணம் கொடுக்கின்றனர். பந்தல் குழுவில் மூத்தவரின் வயது 14. இளையவருக்கு வயது 5.
“நாங்கள் விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடுவோம். பீர்ல பண்டகாவும் (ராயலசீமா பகுதியின் முகர்ரம்) கொண்டாடுவோம்,” என்கிறார் 14 வயது ராகினி. குழந்தைகளின் பார்வையில் முகர்ரமும் விநாயகர் சதுர்த்தியும் ஒரே பாணி விழாதான். இரண்டிலும் பந்தல்தான் முக்கியமான இடம். குழந்தைகள் பணம் திரட்ட இரண்டிலும் அனுமதி இருக்கிறது. அவர்கள் திரட்டும் பணத்தில் பந்தல் குடிலை முழுமையாகக் கட்டுகின்றனர். “வீடுகள் எப்படி கட்டுவதென்ற யூ ட்யூப் வீடியோக்களை நாங்கள் பார்த்தோம்,” என்கிறார் 11 வயது எஸ்.சனா. “மண் சுமக்க நான் உதவியிருக்கிறேன். குச்சி மற்றும் சுள்ளிகளை கொண்டு பந்தல் கட்டினோம். ஒரு ஷீட்டை கொண்டு அதை மூடி, உள்ளே பிள்ளையார் சிலையை வைத்தோம்.”
குழுவின் மூத்தவர்களான ராகினியும் இம்ரானும் (இவருக்கும் 14 வயதுதான்) மாறி மாறி பந்தலை காவல் காத்தனர். “நானும் பார்த்துக் கொண்டேன்,” என்கிறார் ஏழு வயது எஸ். சந்த் பாஷா. “பள்ளிக்கு நான் தொடர்ந்து செல்வதில்லை. சில நாட்கள் செல்வேன். சில நாட்கள் செல்ல மாட்டேன். எனவே நான் சிலையைப் பார்த்துக் கொண்டேன்.” குழந்தைகள் பூஜையும் நடத்தி, பந்தலுக்கு வருபவர்களூக்கு பிரசாதமும் வழங்குகின்றனர். குழந்தைகளின் தாய் ஒருவர் வழக்கமாக பிரசாதத்தை சமைத்துக் கொடுப்பார். புளி சாதம்தான் பிரசாதம்.
அனந்தப்பூரின் உழைக்கும் வர்க்க மக்கள் வசிக்கும் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விருப்பத்துக்குரிய விழா என்பதால், கொண்டாட்டம் மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும். குழந்தைகள் களிமண் சிலைகள் செய்வர். சிறு குச்சி, மூங்கில், படுக்கை மற்றும் இதரப் பொருட்கள் கொண்டு சிறு பந்தல்களைக் கட்டுவர். பிறகு அவர்களின் விருப்பத்துக்குரிய விழாவை மீண்டும் நடித்து விளையாடுவார்கள். குறிப்பாக சதுர்த்தி முடிந்து வரும் பள்ளி விடுமுறை நாட்களில்.
போலச் செய்தல் விளையாட்டுகள் டவுனின் ஏழ்மை நிறைந்த பகுதிகளில் பிரபலம். இல்லாமையை குழந்தைகளின் சிந்தனையில் போக்கி கற்பனையை ஊக்குவிக்க அத்தகைய விளையாட்டுகள் பயன்படுகின்றன. ஒருமுறை ஒரு குழந்தை ‘ரயில்வே கேட்’ விளையாட்டு விளையாடுவதை நான் பார்த்தேன். ஒவ்வொரு முறை ஒரு வாகனம் கடக்கும் போதும் ஒரு குச்சியை தூக்கிக் காட்டியது அக்குழந்தை. விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகும் பிள்ளையார் இத்தகைய விளையாட்டுகளில் தொடர்ந்து நீடிக்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்