இரண்டு இலைகளுக்கும் ஒரு மொட்டுக்கும் ரஜிந்தெர் தேடி அலைகிறார். அவரின் விரல்கள் சரிவான மலைப்பகுதியில் வரிசையாக நடப்பட்டிருக்கும் தேயிலைத் தாவரங்களின் மீது அலைகிறது. அருகே நிற்கும் அவரின் மனைவி கூடையுடன் தயாராக இருக்கிறார். இமயமலையின் தவுலதார் தொடரில் இருக்கும் இம்மலைப்பகுதியின் தேயிலை தாவரங்களை தாண்டி உயர்ந்து நிற்கும் ஓஹி மரங்கள் மனிதர்களை குள்ளமாக தெரிய வைக்கிறது.
அது அறுவடைக் காலம். அவசரமாக ரஜிந்தெர் சிங் தேடும் இலைகள் கிடைக்கவில்லை. தினமும் கங்க்ரா மாவட்டத்தின் தண்டா கிராமத்திலுள்ள வயலுக்கு அவர் வருவார். சும்னா அல்லது 20 வயது மகன் ஆரியன் அவருடன் வருவார்கள். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள்தான் தேயிலை பறிப்பதற்கான காலம். ஆனால் அவர் பறிப்பதற்கு எதுவுமில்லை.
“வெயிலை உங்களால் உணர முடியும். மழை எங்கே என தெரியாது!” என்கிறார் அவர் இமாச்சலப் பிரதேசத்தின் பலம்பூர் தாலுகாவில் இறந்து கொண்டிருக்கும் தாவரங்களை கவலையோடு பார்த்தபடி.
கடந்த இரண்டு வருடங்களில் பொழிந்த குறைவான மழையினால் ரஜிந்தெருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சம் புரிந்து கொள்ளக் கூடியதே. 2016ம் ஆண்டின் ஐநா உணவு விவசாய நிறுவனத்தின் பன்னாட்டு அரசுகளின் அறிக்கை யின்படி, “தேயிலை தோட்டங்களுக்கு நிலையற்ற மழை பாதிப்பை விளைவிக்கும்.” பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே மழைப்பொழிவை வேண்டும் தேயிலை மீதான காலநிலை மாற்ற விளைவை ஆராயும் அறிக்கை அது. ஏப்ரல் மாதத்தின் முதல் அறுவடைக்கு அதிக விலை தேவைப்படும். 800 ரூபாயிலிருந்து கிலோவுக்கு 1,200 வரை விலை இருக்கும்.
இரண்டு ஹெக்டேர் நிலத்தை மேலதிகமாக குத்தகைக்கு எடுத்திருந்ததால் 2022ம் வருடம் ரஜிந்தெருக்கு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். “என் வருமானம் அதிகரிக்கும் என நினைத்தேன்,” என்கிறார் அவர். மொத்தமாக தற்போது மூன்று ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் அவர், விளைச்சல் காலம் முடிந்ததும் கிட்டத்தட்ட 4,000 கிலோ தேயிலை அறுவடை செய்துவிடும் திட்டத்தில் இருந்தார். 20,000 ரூபாயை குத்தகைக்கு செலவழித்தார். தேயிலை தயாரிப்பு செலவின் 70 சதவிகிதம் தொழிலாளர் ஊதியம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்கிறார் அவர். “தோட்டத்தை பார்த்துக் கொள்வதில் உழைப்பு மற்றும் இடுபொருள் செலவுகள் நிறைய ஆகும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார். இலைகளை பதனப்படுத்துவதற்கான செலவு கூடுதல் செலவாகும்.
இமாச்சலப் பிரதேசத்தின் பிற பிற்படுத்தப்பட்ட சாதியாக பட்டியலிடப்பட்டிருக்கும் லபானா சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள். “முந்தைய (என் குடும்பத்தின்) தலைமுறைகள் இந்த வேலையை செய்ய வேண்டியிருந்தது.” நீடித்த நோயால் தந்தை உயிரிழந்த பிறகு குடும்ப நிலத்தின் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்போது அவருக்கு வயது 15. நான்கு உடன்பிறந்தாரில் மூத்தவரான அவர், நிலத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை எடுத்துக் கொண்டார். பள்ளி படிப்பை நிறுத்தினார்.
தோட்ட பராமரிப்பு மற்றும் தேநீருக்கு முந்தைய செயல்முறைகள் எல்லாவற்றிலும் மொத்தக் குடும்பமும் ஈடுபடுகிறது. மகளான அஞ்சல் இளங்கலை படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். பொட்டலம் கட்டவும் களை எடுக்கவும் உதவுகிறார். அவர்களின் மகனான ஆரியன், களையெடுத்தல் தொடங்கி, பறித்தல், கத்தரித்தல், பொட்டலம் கட்டுதல் என எல்லா வேலைகளையும் செய்கிறார். இளங்கலை கணக்கு படிப்பு படிக்கும் அவர், பகுதி நேரமாக ஆசிரியர் வேலை செய்கிறார்.
கங்க்ராவின் தேயிலைத் தோட்டங்களில் கறுப்பு மற்றும் பச்சை வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டுமே உள்ளூரில் பிரபலம். “இங்கு தேநீர் கடையை நீங்கள் பார்ப்பதே அரிது. பதிலாக, எல்லா வீட்டிலும் நீங்கள் தேநீருடன் வரவேற்கப்படுவீர்கள். எங்கள் தேநீரில் பாலோ சர்க்கரையோ எடுத்துக் கொள்வதில்லை. எங்களுக்கு அது மருந்து போல,” என்கிறார் சும்னா. இலைகளின் தரம் நிர்ணயிப்பது மற்றும் பொட்டலம் கட்டுவது போன்ற வேலைகளை அவரும் செய்வதாக சொல்கிறார். ரஜிந்தெர் போன்ற பெரும்பாலான தேநீர் வளர்ப்பவர்கள், இலைகளை உருட்டி வறுப்பதற்கான கருவியுடன் கூடிய சிறு தற்காலிக அறையை கொண்டிருக்கின்றனர். அவர்கள் பிறருக்காகவும் இலைகளை பதனப்படுத்தி தருகிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ.250 விலை வாங்குகின்றனர்.
1986ம் ஆண்டு இறப்பதற்கு முன் ரஜிந்தெரின் தந்தை கடன் வாங்கியிருந்தார். இலைகளை குடும்பம் பதனப்படுத்துவதற்கான எட்டு லட்ச ரூபாய் மதிப்பு கருவி வாங்க நிலத்தை விற்றார். அந்த கடன் இன்னும் அடைக்கப்படவில்லை.
கங்க்ரா மாவட்டத்தில், ரஜிந்தெர் போன்ற சிறு விளைச்சல்காரர்கள் தேயிலை நிலப்பரப்பில் மாநிலமெங்கும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 96 சதவிகிதம் பேர் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பதாக 2022ம் ஆண்டு விவசாயத்துறையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு குறிப்பு சொல்கிறது. பாதிக்கும் சற்று அதிகமான தோட்டங்கள் பலாம்பூர் தாலுகாவிலும் மிச்ச தோட்டங்கள் பைஜ்நாத், தரமஷாலா மற்றும் தெஹ்ரா தாலுகாவிலும் இருக்கின்றன.
“இமாச்சலின் சில மாவட்டங்கள் மட்டுமே தேயிலை வளர்ப்பதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றன. ஏனெனில் அங்கு மட்டும்தான் தேயிலை வளர்ப்புக்கு தேவையான அமிலத்தன்மையும் Ph அளவு 4.5லிருந்து 5.5 வரை இருக்கும் மண்ணும் கிடைக்கிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் டாக்டர் சுனில் பாடியால். விவசாயத்துறையின் தேயிலை தொழில்நுட்ப அதிகாரியாக அவர் இருக்கிறார்.
கங்க்ராவின் தேயிலைத் தோட்டங்களும் மலைப்பரப்பும் பாலிவுட் படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. சமீபத்தில் வெளியான அமானுஷ்யப் படம், பூத் போலீஸிலும் இடம்பெற்றிருக்கிறது. “பல சுற்றுலாவாசிகள் எங்களின் தோட்டங்களை புகைப்படங்கள் எடுக்க கேமராக்களுடன் வருகின்றனர். ஆனால் அவற்றை பற்றி அவர்கள் அறிந்திருப்பது கொஞ்சம்தான்,” என சுட்டிக் காட்டுகிறார் ரஜிந்தெர்.
*****
இமாச்சலப் பிரதேசத்தின் தேயிலைத் தோட்டங்கள், நிலவியல் சார்ந்த மழைப்பொழிவைத்தான் பிரதானமாக சார்ந்திருக்கின்றன. வெப்பம் மேலெழும்பொது, எப்போதும் மழை பொழியும். தேயிலைத் தாவரங்களுக்கு ஏதுவாக அமையும். “மழையின்றி வெப்பநிலை மட்டும் உயர்வது பெரிய பிரச்சினை. தேயிலைச் செடிகளுக்கு ஈரப்பதம் தேவை, ஆனால் இப்போது (2021 மற்றும் 2022) மிகவும் வெயிலாக இருக்கிறது,” என விளக்குகிறார் பாடியால்.
2022ம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கங்க்ரா மாவட்டத்தின் மழைப்பொழிவில் 90 சதவிகிதம் பற்றாக்குறை இருந்ததாக இந்திய வானிலை மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. விளைவாக 2022ம் ஆண்டின் ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் பலம்பூர் கூட்டுறவு தேயிலை ஆலைக்கு அனுப்பப்பட்ட இலைகள் ஒரு லட்சம் கிலோ குறைவாக இருந்தது. 2019ம் ஆண்டின் அதே மாதத்தில் கிடைத்ததில் கால்வாசிதான் ஒரு லட்சம் கிலோ.
ரஜிந்தெரும் தப்பவில்லை. 2022ம் ஆண்டின் மே மாத இறுதியில் பாரி கேட்டபோது, வெறும் ஆயிரம் கிலோ மட்டும்தான் அறுவடை செய்ய முடிந்ததாகக் கூறினார். அதில். பாதி உள்ளூரில் விற்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டு மிச்சப்பாதி பதனப்படுத்தவென பலம்பூர் ஆலைக்கு சென்றது. “நான்கு கிலோ பச்சை இலைகள் ஒரு கிலோ தேநீர் கொடுக்கும். நாங்கள் 100 ஒரு கிலோ பாக்கெட்டுகள், விற்பதற்கு உருவாக்கினோம்,” என்கிறார் மகன் ஆரியன். ஒரு கிலோ கறுப்பு தேயிலை 300 ரூபாய்க்கும் பச்சைத் தேயிலை 350 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பெரிய அளவுக்கான தேயிலை அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாட்டின் நீலகிரி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. 2021-22-ல், இந்தியா 1,344 மில்லியன் கிலோ தேயிலையை தயாரித்தது. சிறு விளைச்சல்காரர்கள் 50 சதவிகிதம் பங்களித்திருந்தனர் என்கிறது இந்திய தேயிலை வாரிய இணையதளம். ஒன்றிய தொழில்துறை மற்றும் வணிக அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த அமைப்பு மேலும், “சிறு விளைச்சல்காரர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாக அதிகம் இருப்பதால், பலன் கிடைக்கும் வரிசையில் கீழே இருக்கின்றனர்,” என்றும் குறிப்பிடுகிறது.
இமாச்சலை சேர்ந்த தேயிலையும் பிற பகுதிகளை சேர்ந்த தேயிலையுடன் போட்டி போடுகிறது. மாநிலத்துக்குள் ஆப்பிள் விளைவிப்பவர்களுக்கு முக்கியத்துவமும் உள்ளூர் நிர்வாகத்தின் கவனமும் கொடுக்கப்படுகிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் டாக்டர் பிரமோத் வெர்மா. பலம்பூரின் இமாச்சலப் பிரதேச விவசாயப் பல்கலைக்கழகத்தின் தேயிலை தொழில்நுட்பவியலாளராக இருக்கும் அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக தேயிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தேயிலை விளைவிக்கும் பகுதி சுருங்குவதால் தேயிலை விளைச்சலிலும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தேயிலை புதர்கள் கங்க்ரா மாவட்டத்தின் 2,110 ஹெக்டேர் அளவில் இருக்கின்றன. ஆனால் பாதியளவான 1096.83-தான் விளைச்சலில் இருக்கிறது. மிச்சப் பகுதி கைவிடப்பட்டிருக்கிறது. புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அல்லது வசிப்பிடங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இறுதி விஷயம் இமாச்சல் பிரதேச நில உச்சவரம்பு சட்டம் 1972 -க்கு புறம்பான விஷயம். ஏனெனில் அச்சட்டத்தின்படி தேயிலை விவசாயத்திலுள்ள நிலம் விற்கப்படவோ பயன்படுத்தப்படவோ முடியாது.
“என் வயலுக்கு பின்னால் பல தேயிலைத் தோட்டங்கள் சில வருடங்களுக்கு முன் இருந்தன. இப்போது நீங்கள் வீடுகளைதான் பார்க்க முடியும்,” என்கிறார் தண்டா கிராமத்தில் வசிக்கும் ரஜிந்தெரின் பக்கத்து வீட்டுக்காரரான ஜாட் ராம் பஹ்மன். அவரும் அவரது மனைவி அஞ்சக்யா பஹ்மனும் சொந்தமாக வைத்திருக்கும் 15 வாய்க்கால் தோட்டத்தில் (கிட்டத்தட்ட ஒரு ஹெக்டேரின் நான்கில் மூன்று பங்கு) தேயிலை விளைவிக்கின்றனர்.
87 வயது ஜாட் ராம், பல தேயிலைத் தோட்டங்கள் சுற்றிமுற்றி நிறைந்திருந்து, சொந்த தோட்டம் லாபங்கள் கொடுத்திருந்த காலத்தை நினைவுகூருகிறார். முதல் விதைகளை 1849ம் ஆண்டில் அவர்கள் விதைத்தனர். 1880களில் கங்க்ராவின் தேயிலை, லண்டன் மற்றும் ஆம்ஸ்டெர்டாம் சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று கொண்டிருந்தன. 2005ம் ஆண்டில், தனித்துவமான ருசிக்காக கங்க்ரா புவிசார் குறியீடு (GI) பெற்றது.
“அது ஒரு பொற்காலம்,” என நினைவுகூருகிறார் 56 வயது ஜஸ்வந்த் பஹ்மன். 10 வாய்க்கால் (கிட்டத்தட்ட அரை ஹெக்டேர்) தேயிலை தோட்டத்தை அவர் தண்டா கிராமத்தில் கொண்டிருக்கிறார். “எங்கள் வீட்டிலேயே (பாரம்பரிய) கருவிகளை கொண்டு இலைகளை நாங்கள் பதனிட்டு அமிர்தசரஸ்ஸில் விற்றோம். அது பெரிய சந்தை.”
பஹ்மன் 1990களை குறிப்பிடுகிறார். உள்ளூர் தேயிலை வாரியத்தை பொறுத்தவரை, கங்க்ரா 18 லட்ச டன் தேயிலையை ஒரு வருடத்தில் உற்பத்தி செய்தது. சாலையின் வழியாக தேயிலை அமிர்தசரஸ் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தூரம். அங்கு அவை சர்வதேச ஏலத்தில் இடம்பெற்றன. இன்று அந்த அளவில் பாதியான 8,50,000 டன்கள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
“எங்களால் நல்ல வருமானம் (எங்களின் ஒரு ஹெக்டேர் நிலத்தில்) ஈட்ட முடிந்தது. தேயிலை தயார் செய்ததும் பல பயணங்களை நாங்கள் வருடந்தோறும் மேற்கொண்டோம். ஒரு பயணத்தில் 13,000 ரூபாய் தொடங்கி 35,000 ரூபாய் வரை ஈட்ட முடிந்தது,” என சொல்கிறார் ரஜிந்தெர் பழைய ரசீதுகளைக் காட்டி.
பொற்காலம் நீடிக்கவில்லை. “அமிர்தசரஸில் நாங்கள் பிரச்சினை சந்திக்க தொடங்கினோம்,” என்கிறார் ஜஸ்வந்த். கங்க்ராவின் தேயிலை விவசாயிகள், இந்தியாவின் தலைமை தேயிலை ஏல மையமான கொல்கத்தாவுக்கு இடம்பெயரத் தொடங்கினர். பலர், பதனிடும் வேலையை வீடுகளிலிருந்து பலம்பூர், பிர், பஜ்நாத் மற்றும் சித்பரி ஆகிய இடங்களில் அரசு நடத்தும் ஆலைகளுக்கு மாற்றினர். அந்த ஆலைகள் நேரடியாக கொல்கத்தா ஏலத்துடன் தொடர்பு கொண்டியங்க முடியும். ஆனால் இந்த ஆலைகள் மூடப்படத் தொடங்கின. உள்ளூர்வாசிகள் அரசின் ஆதரவை இழந்தனர். இன்று ஒரே ஒரு கூட்டுறவு ஆலைதான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
கொல்கத்தா ஏல மையம் கங்க்ராவிலிருந்து சுமாராக 2,000 கிமீ தூரம். அதிக போக்குவரத்து செலவு, அதிக கொள்முதல் மையக் கட்டணம், அதிக தொழிலாளர் செலவு. அசாம், மேற்கு வங்கம் மற்றும் நீலகிரி போன்ற இந்தியாவின் பிற பகுதி தேயிலைகளுடன் போட்டியிடுவதை இச்செலவுகள் கடினமாக்கின. கங்க்ரா தேயிலை விவசாயிகளின் லாபங்கள் குறைந்தது.
“கங்க்ரா தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் கங்க்ரா தேயிலை என்ற பெயரில் இல்லாமல், வாங்குவோர் மற்றும் வணிகர் சூட்டும் வணிகப் பெயர்களில் ஏற்றுமதியாயின. கொல்கத்தா, தேயிலையை குறைந்த விலையில் எடுத்துக் கொண்டு, நல்ல விலைக்கு விற்கிறது. ஏற்றுமதி மையம் கூட அங்குண்டு,” எனச் சுட்டிக் காட்டுகிறார் வெர்மா.
*****
“தோட்டத்துக்கு கிட்டத்தட்ட 1,400 கிலோ உரம் எனக்கு தேவை. இதற்கு மட்டும் 20,000 ரூபாய் செலவாகிறது,” என்கிறார் ரஜிந்தெர். முன்பு மாநில அரசாங்கம் 50 சதவிகித மானியம் உரத்துக்கு அளித்தது. கடந்த ஐந்து வருடங்களில் அது நின்று போனதாக அவர் சொல்கிறார். அரசுத்துறை உட்பட யாருக்கும் ஏன் அது நிறுத்தப்பட்டது என தெரியவில்லை.
தேயிலை அதிக உழைப்பைக் கோரும் பயிர். தொழிலாளர்களுக்கான தேவை, ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பறிக்கவும் நவம்பர் முதல் கத்தரிக்கவும் இருக்கும். கத்தரிப்பதற்கான கருவியை அரசு கொடுக்கிறது. ரஜிந்தெரும் அவரது மகனும் அதை இயக்கி, தொழிலாளர் செலவை சேமிக்கின்றனர். ஆனால் அதை பெட்ரோல் செலவில் இழக்கின்றனர்.
”கடந்த வருடத்தில், 300 ரூபாய் நாட்கூலிக்கு குடும்பம் மூன்று தொழிலாளர்களை பணிக்கமர்த்தியது. “பறிப்பதற்கென ஒன்றுமில்லாதபோது தொழிலாளர்களை வைத்திருப்பதில் என்ன பயன்? எப்படி எங்களால் ஊதியம் கொடுக்க முடியும்?” எனக் கேட்கிறார் ரஜிந்தெர், ஏன் அவர்களை வேலையிலிருந்து அனுப்ப வேண்டியிருந்தது என விளக்க. ஏப்ரலிலிருந்து அக்டோபர் வரையிலான அறுவடை சமயத்தில்தான் மலைப்பகுதியில் தொழிலாளர்கள் அதிகம் குடி வருவார்கள். 2022ம் ஆண்டின் அறுவடைக் காலத்தில் ஒரு தொழிலாளரும் கிடைக்கவில்லை.
சுருங்கும் லாபங்களும் அரசாங்கத்தின் ஆதரவின்மையும் இளையோரின் எதிர்காலத்தை இங்கு பறித்துக் கொண்டிருக்கிறது. தன் குழந்தைகள் அரசாங்க வேலைகளில் இருப்பதாக ஜாத் ராம் சொல்கிறார். அவரது மனைவி அஞ்சக்யா சொல்கையில், “எங்களுக்கு பிறகு தோட்டத்தை யார் பார்த்துக் கொள்வாரென தெரியவில்லை,” என்கிறார்.
ரஜிந்தெரின் மகன் ஆரியனுக்கும் அங்கு இருக்க விருப்பமில்லை. “வாழ்க்கை ஓட்ட அவர்கள் (பெற்றோர்) போராடுவதை நான் பார்த்திருக்கிறேன். இப்போதைக்கு என் பெற்றோருடன் வேலை பார்க்கிறேன். ஆனால் நீண்ட நாட்களுக்கு செய்ய மாட்டேன்,” என்கிறார் ஆரியன்.
வருடத்தின் முடிவில், 2.5 லட்ச ரூபாய் சம்பாதித்ததாக ரஜிந்தெர் கணக்கிடுகிறார். அதில் பெரும்பகுதி, தேயிலை விளைச்சல் முடியும் அக்டோபர் மாதத்தில்தான் ஈட்டப்பட்டது. அந்த வருமானத்தில்தான் வாடகை, இடுசெலவு மற்றும் பிற செலவுகள் எல்லாவற்றையும் அவர்கள் எடுக்க வேண்டும்.
2022ம் ஆண்டில் குடும்பம், சேமிப்பை சார்ந்திருக்க முடியவில்லை என்கிறார் ரஜிந்தெர். இரண்டு மாடுகளின் பாலை விற்றும் பிற சிறு தோட்டங்களின் இலைகளை பதனிட்டும் ஆரியனின் ஆசிரியர் பணியில் கிடைத்த 5,000 ரூபாய் வருமானத்தைக் கொண்டும்தான் அவர்கள் வாழ்க்கை ஓட்ட முடிந்தது.
குறைவான வருமானத்தால், 2022ம் ஆண்டில் ரஜிந்தெரும் சும்னாவும் அவர்களின் இரண்டு ஹெக்டேர் தோட்ட குத்தகையை ரத்து செய்து திருப்பிக் கொடுத்து விட்டனர்.
தமிழில் : ராஜசங்கீதன்