ஜூலை 2021-ல் மழை வெள்ள நீர் வீட்டுக்குள் நுழையத் தொடங்கியதும், உடைமைகளை விட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார் ஷுபாங்கி காம்ப்ளே. வெளியேறுகையில் வேகமாக இரண்டு நோட்டுப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்.
பல வாரங்களுக்கும் மாதங்களுக்கும் 172 பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் இரண்டும் பல வாழ்க்கைகளை அவர் காப்பாற்ற உதவின.
அச்சமயத்தில்தான் அர்ஜுன்வாட் வசித்த மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டம் இன்னொரு பேரிடரையும் சந்தித்துக் கொண்டிருந்தது. கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஷுபாங்கி எடுத்த நோட்டுப் புத்தகங்களில் கோவிட் பாதிப்பு கொண்டிருந்த குடும்பங்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள், முகவரிகள், பாதிப்புப் தகவல்கள் யாவும் அழகாக எழுதப்பட்டிருந்தன.
“கிராமத்தில் நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனை முடிவுகள் முதலில் எனக்குத்தான் வரும்,” என்கிறார் 33 வயது சுகாதார செயற்பாட்டாளர். இந்தியாவின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டில் நாடு முழுக்க நியமனம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பெண் சுகாதாரப் பணியாளர்களில் அவரும் ஒருவர். அவரது குறிப்புகள், ஷிரோர் தாலுகாவிலுள்ள வெள்ள நிவாரண முகாமுக்கு இடம்பெயர்ந்திருக்கும் கோவிட் உறுதி செய்யப்பட்ட கிராமவாசியை அடையாளம் காண உதவும். 5,000 பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கும் சூழல்.
”வெள்ளத்தின் காரணமாக பல மக்களின் செல்பேசிகள் அணைக்கப்பட்டிருக்கும். அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும்,” என்கிறார் அவர். 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாய் தெர்வாதின் வீட்டுக்கு இடம்பெயர்ந்த ஷுபாங்கி, உடனே குறிப்புகளில் தேடி, முகாமில் இருக்கும் வேறு சிலரது தொடர்பு எண்களை கண்டுபிடித்தார். “எப்படியோ ஒருவழியாய் நோயாளியை கண்டுபிடித்தேன்.”
உடனடியாக ஒரு கோவிட் மையத்தை அருகே இருந்த அகர் கிராமத்தில் அவர் உருவாக்கி, நோயாளியை அங்கு வர வைத்தார். “நோட்டுப் புத்தகத்தை நான் எடுத்திருக்காவிட்டால் ஆயிரக்கணக்கான பேருக்கு தொற்று வந்திருக்கும்,” என்கிறார் அவர்.
கிராமத்துக்கு வந்த பெரும் நெருக்கடியை ஷுபாங்கி தடுத்தது அச்சமயத்தில் மட்டுமல்ல. 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நேர்ந்த வெள்ளங்களின்போதும், அவர் தன் வீட்டுச் சேதத்தை பார்க்காமல் பணி செய்யச் சென்றார். “பஞ்சாயத்தின் உத்தரவின் பேரில் மொத்த கிராமத்திலும் நேர்ந்த சேதத்தை கணக்கெடுக்க சென்றுவிட்டேன்,” எனக் கூறுகிறார் அவர்.
அதற்கு பின்னான மூன்று மாதங்களுக்கு அவர் கிராமம் முழுக்க சுற்றி, வெள்ளத்தில் பிழைத்தவர்களுடன் பேசி, அழிவை எங்கும் ஆய்வு செய்தார். பார்த்ததும் கேட்டதும் அவரை கடுமையாக பாதித்தது. ஆய்வு செய்த 1,100 குடும்பங்களின் இழப்புகளை கணக்கெடுக்கையில் மனப்பதற்றமும் அழுத்தமும் கொண்டார் அவர்.
“என் மனநலத்தை நான் பொருட்படுத்தவில்லை,” என்கிறார் அவர். “ஆனால் வேறு வழி என்ன இருக்கிறது?”
அந்த வருடத்தின் வெள்ளச்சேதம் கொடுத்த அக பாதிப்பிலிருந்து மீளுவதற்கு முன்னமே அவர் 2020ம் ஆண்டு நேர்ந்த கோவிட் பாதிப்புக்கான சேவையில் முன்னணியில் நின்றார். தொற்று வேகம் பெற்ற ஜூலை 2021 ஜூலையில் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவி செய்து கொண்டிருந்தார். “வெள்ளமும் கோவிட்டும் சேர்ந்து நாம் கற்பனை கூட செய்து பார்த்திர முடியாத அளவுக்கு பேரழிவை உருவாக்கியிருந்தது,” என்கிறார் ஷுபாங்கி.
சொந்த மன நலத்தையும் ஆரோக்கியத்தையும் அவர் பொருட்படுத்தாமல் இருந்ததன் விளைவு வேறு வடிவங்களில் வெளிப்பட்டன.
ஏப்ரல் 2022-ல் அவருக்கு நிமோனியாவும் ரத்தசோகையும் இருப்பது கண்டறியப்பட்டது. “எட்டு நாட்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தன. வேலையின் காரணமாக அறிகுறிகளை நான் பொருட்படுத்தவில்லை,” என்கிறார் அவர். பெண்களுக்கு இருக்க வேண்டிய (ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 12-16 கிராம்) அளவுக்கும் குறைவாக ரத்த அணு அவருக்கு 7.9 ஆக இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அவர் குணமாகி வரும்போது கிராமம் கனமழையை எதிர்கொண்டது. வெள்ள நீர் மட்டம் வேகமாக உயர்வது ஷுபாங்கிக்கு மீண்டும் அழுத்தத்தைக் கொடுத்தது. “ஒரு காலத்தில் நாங்கள் ஆர்வத்துடன் மழைக்குக் காத்திருந்தோம். ஆனால் இப்போது மழை என்றாலே இன்னொரு வெள்ளம் வந்துவிடுமோ என அஞ்சுகிறோம்,” என்கிறார் அவர். “இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் நீர்மட்டம் வேகமாக உயரவே, பல நாட்களுக்கு நான் தூங்காமல் தவித்தேன்.” (உடன் படிக்க: கொல்ஹாப்பூரில் தடகள வீரர்கள் மூழ்குவதைப் போல் உணர்கின்றனர் )
தொடர் சிகிச்சைக்குப் பிறகும் ஷுபாங்கியின் ரத்த அணு அளவு குறைவாகவே இருக்கிறது. பலவீனம் மற்றும் கிறுகிறுப்பு இருப்பதாக அவர் சொல்கிறார். ஆனால் ஓய்வோ குணமாகுதலோ கண்ணுக்கு எட்டியவரை தென்படவில்லை. “சுகாதாரச் செயற்பாட்டாளர்களாக நாங்களே அழிவை எதிர்கொண்டாலும் எங்களுக்கான ஆதரவை நாங்களே உருவாக்கிப் பெற்றுக் கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர்.
*****
ஷிரோலின் கணேஷ்வாடி கிராமத்தைச் சேர்ந்த 38 வயது சுகாதாரச் செயற்பாட்டாளரான சாயா காம்ப்ளே, 2021ம் ஆண்டின் வெள்ளங்களை தெளிவாக விவரிக்கிறார். “காப்பாற்ற வந்த படகு எங்களின் வீட்டுக்கு மேல் மிதந்து சென்றது,” என்கிறார் அவர்.
ஷுபாங்கி போலவே நீர் வடியத் தொடங்கியதும் சாயாவும் வேலைக்கு திரும்பினார். அவரின் வீட்டில் இன்னும் வடிந்திருக்கவில்லை. “நாங்கள் அனைவரும் (கணேஷ்வாடியின் ஆறு சுகாதாரச் செயற்பாட்டாளர்கள்) முதலில் துணை சுகாதார மையத்துக்குச் சென்றோம்,” என்கிறார் அவர். கட்டடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால், தற்காலிக துணை மையம் ஒன்றை ஒருவரது வீட்டில் உருவாக்கினார்கள்.
“ஒவ்வொரு நாளும் நிமோனியா, காலரா, டைஃபாய்டு, தோல் வியாதி, காய்ச்சல் எனப் பல நோய்கள் தாக்கிய மக்கள் பலர் வருவார்கள்.” ஒருநாள் விடுப்பு கூட இன்றி ஒரு மாதத்துக்கு இப்பணி தொடர்ந்தது.
“கண்ணீர் விடும் அனைவரையும் பார்ப்பது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,” என்கிறார் சாயா. “எங்களுக்கென மன நல வசதிக்கான மையம் எதுவும் இல்லை. நாங்கள் எப்படி குணமடைவது?”. அவரால் குணமாக முடியவில்லை.
அவரின் அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து விரைவிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடுகிறது. “பணிச்சுமையால் நேர்வதாக நினைத்து பொருட்படுத்தாமலே இருந்தேன்.” சில மாதங்களில் அவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. “அபரிமிதமான அழுத்தம்தான் காரணம் என மருத்துவர் கூறினார்,” என்கிறார் அவர். ஆஸ்துமாவை அழுத்தத்துடன் தொடர்புபடுத்தும் பல ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன.
மருந்துகள் உதவினாலும், காலநிலை மாற்றம் குறித்து கவலைப்படாமல் சாயாவால் இருக்க முடியவில்லை. இந்த வருடத்தின் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நேர்ந்த வெப்ப அலையின்போது அவருக்கு கிறுகிறுப்பும் மூச்சிரைப்பும் ஏற்பட்டது.
“பணியில் இருக்கும் நேரம்தான் கடினமாக இருக்கும். என் தோல் எரிவதைப் போல் இருக்கும்,” என அவர் நினைவுகூறுகிறார். அதிக தட்பவெப்பம் அறிதிறன் செயல்பாட்டை பாதிப்பதாகவும் தற்கொலை எண்ணம் , வன்முறை, ஆக்ரோஷம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சாயாவுக்கு இருக்கும் அறிகுறிகள் இன்னும் பல சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்கு இருக்கின்றன. “இது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஒவ்வொரு காலத்திலும் ஏற்படும் குறைபாடு இது,” என்கிறார் கொல்ஹாப்பூரைச் சேர்ந்த மனநல மருத்துவரான ஷல்மாலி ரன்மாலே - ககடே
பருவகாலம் மாறுவதால் ஏற்படும் சோர்வினால் இக்குறைபாடு ஏற்படுகிறது. உயரமானப் பகுதிகளில் இருக்கும் நாடுகளில் குளிர்காலங்களில் இத்தகைய அறிகுறிகள் தென்படுவது வழக்கமென்றாலும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளிலும் இக்குறைபாடு நிலவுகிறது.
“காலநிலை மாறும்போது, பதற்றம் என்னுள் துவங்கி விடுகிறது. கிறுகிறுப்பு வந்து விடுகிறது. இனியும் என்னால் இப்படி இருக்க முடியாது,” என்கிறார் ஷுபாங்கி. “வெள்ளம் பாதித்த இடங்கள் பெரும்பாலானவற்றிலும் உள்ள சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் ஏதோவொரு வகை அழுத்தத்தை அனுபவிக்கின்றனர். அது பின்னாளில் தீவிர நோய்களுக்கு அவர்களை உள்ளாக்குகிறது. பலரை நாங்கள் காப்பாற்றினாலும் அரசாங்கம் எங்களுக்கு உதவுவதில்லை.”
சுகாதார அதிகாரிகளுக்கு பிரச்சினை தெரியாமலில்லை. அவர்களின் எதிர்வினை போதுமானதாகவோ சரியானதாகவோ இருக்கிறதா என்பதே கேள்வி.
வெள்ளம் பாதித்த ஹட்கனங்க்ளே தாலுகாவின் சுகாதார அதிகாரியான டாக்டர் பிரசாத் டட்டார் சொல்கையில், “இப்பகுதியின் சுகாதாரப் பணியாளர்கள் வெள்ள காலத்திலும் கோவிட் தொற்றிலும் அதிகம் பணி செய்து அழுத்தத்தைப் பெற்றிருக்கின்றனர்,” என்கிறார். “இப்பிரச்சினைகளை கையாள சுகாதார செயற்பாட்டாளர்களுக்கென வருடாந்திர பண்பாட்டு நிகழ்வு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்,” என்கிறார் அவர்.
ஆனால் கொல்ஹாப்பூர் ஷிரோல் தாலுகாவிலுள்ள சுகாதாரச் செயற்பாட்டாளர் சங்கத் தலைவரான நேத்ரதிப்பா பாட்டிலைப் பொறுத்தவரை, இந்தத் திட்டங்களால் எந்த உதவியும் இல்லை. “மன நலப் பிரச்சினைகளுக்காக நான் அதிகாரிகளிடம் குரல் கொடுத்தபோது, இத்தகைய சூழல்களை கையாள நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்கள்,” என்கிறார் அவர்.
ரன்மாலே ககாதே சொல்கையில், சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் தொடர் அழுத்தத்தைக் கையாள சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் வேண்டும் என்கிறார். “உதவும் கரத்துக்கும் உதவி தேவை,” என்கிறார் அவர். “துரதிர்ஷ்டவசமாக நம் சமூகத்தில் இது நடப்பதில்லை.” மேலும், பல முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் உதவும் நிலையிலேயே அதிகமிருப்பதால் தங்களின் விரக்தி, கோபம், உளவியல் சுமை ஆகியவற்றை அடையாளம் காணுவதில்லை என்கிறார் அவர்.
தொடர்ந்து மாறும் காலநிலை போன்ற தொடர் அழுத்தம் தரும் சிக்கல்களுக்கு அதிகரிக்கப்பட்ட தொடர் தலையீடுகள் தேவை என்கிறார் அவர்.
*****
மாறி வரும் காலநிலை மாற்றம், கொல்ஹாப்பூரின் மனநலத்தை பல விதங்களில் பாதிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது.
பணிச்சுமை அதிகம் இருக்கும் சூழலிலும் ஒவ்வொரு சுகாதாரச் செயற்பாட்டாளரும் 1,000 பேர் கொண்ட கிராமத்தில் 70 சுகாதாரப் பணிகளை செய்கின்றனர். பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் தடுப்பூசிப் பணிகள் அவற்றில் அடக்கம். ஆனாலும் இப்பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை. சுரண்டப்படுகின்றனர்.
மகாராஷ்டிராவின் சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்கு மிக குறைவாக 3,500 - 5,000 ரூபாய்தான் ஒரு மாதத்துக்குக் கிடைக்கிறது எனச் சுட்டிக் காட்டுகிறார் நேத்ரதிபா. அதுவும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் கிடைக்கும். “இப்போதும் கூட நாங்கள் தன்னார்வ ஊழியர்களாகதான் கருதப்படுகிறோம். எங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமும் பிற பலன்களும் நிராகரிக்கப்படுகிறது,” என்கிறார் அவர். ‘வேலை சார்ந்த ஊக்கத் தொகை’யை சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் பெறுகிறார்கள். அதாவது குறிப்பிட்ட பணிகளை செய்து முடித்தால் மட்டுமே அவர்களுக்கு அத்தொகை கொடுக்கப்படும். குறிப்பிட்ட கவுரவ ஊதியம் என எதுவும் கிடையாது. அதுவும் மாநிலம் பொறுத்து மாறும்.
பல சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் சுகாதாரப் பணியில் ஈட்டும் வருமானத்தை மட்டும் கொண்டு பிழைக்க முடியவில்லை. உதாரணமாக வாழ்க்கை ஓட்ட ஷுபாங்கி விவசாயத் தொழிலாளராகவும் பணிபுரிகிறார்.
“2019, 2021ம் ஆண்டுகளில் நேர்ந்த வெள்ளங்களுக்குப் பிறகு நிலங்கள் அழிந்ததால், மூன்று மாதங்களுக்க்கு எனக்கு வேலை கிடைக்கவில்லை,” என்கிறார் அவர். “மாறும் காலநிலையால், மழைகளை கணிக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் மழை பெய்தாலும் எல்லாவற்றையும் அது அழித்து விடுகிறது. விவசாய வேலை கிடைக்கும் என்கிற எங்களின் நம்பிக்கையையும் சேர்த்து அழித்து விடுகிறது.” ஜூலை 2021-ல் கனமழையும் வெள்ளங்களும் கொல்ஹாப்பூர் உள்ளிட்ட மகாராஷ்டிராவின் 24 மாவட்டங்களில் 4.43 லட்ச ஹெக்டேர் பயிர்களை பாதித்தது.
2019-லிருந்து திரும்பத் திரும்ப நேரும் வெள்ளங்களும் நிலம் அழிவதும் விவசாய வேலையின்மையும் பல வட்டிக்காரர்களிடமிருந்து அதிக வட்டிக்கு சிறு சிறு கடன்களை 1,00,000 அளவுக்கு ஷுபாங்கியை வாங்க வைத்துள்ளது. தங்கத்தைக் கூட அவர் அடகு வைக்க வேண்டி வந்தது. பழைய வீட்டை திருப்பி கட்டுமளவு வசதி இல்லாததால் 10 X 15 தகரக் கூரை வீட்டுக்கு இடம்பெயர்ந்தார்.
“2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெள்ள நீர் 30 மணி நேரங்களுக்குள் வீட்டுள் புகுந்தது. எங்களால் எதையும் காக்க முடியவில்லை,” என்கிறார் அவரது கணவரான 37 வயது சஞ்சய். விவசாயத் தொழிலாளர் வேலை கிடைக்காததால் அவர் தற்போது மேஸ்திரியாக பணிபுரிகிறார்.
சொந்த இழப்பு மற்றும் துயரம் ஆகியவற்றைத் தாண்டி, சுகாதார செயற்பாட்டாளராக செய்ய வேண்டிய எண்ணற்ற வேலைகளில்தான் ஷுபாங்கி அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
வெள்ளச்சேதத்தை கணக்கெடுக்கும் வேலையோடு சேர்த்து நீரால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரை சுத்தம் செய்யும் பணியும் செயற்பாட்டாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்யும் பல வேலைகளுக்கு ஊதியம் கிடையாது, என்கிறார் நெத்ரதிபா. “பல அகச்சிக்கல்களை எங்களுக்குக் கொடுத்த வெள்ளத்துக்கு பிறகான பணிகள் எதற்கும் எங்களுக்கு ஊதியம் கிடையாது. இலவச உழைப்பு.”
“ஒவ்வொரு வீட்டுக்கும் நாங்கள் சென்று ஏதேனும் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறதா என குறிப்பு எடுக்க வேண்டும்,” என்கிறார் ஷுபாங்கி. “சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்து சுகாதார செயற்பாட்டாளர்கள் பல உயிர்களை காப்பாற்றியிருக்கின்றனர்.”
ஆனால் ஏப்ரல் மாதத்தில் அவர் நோயுற்றபோது, அமைப்பிலிருந்து குறைந்த உதவிதான் கிடைத்தது. “பொதுச் சுகாதாரப் பணியாளராக இருந்தும் நான் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டியிருந்தது. 22,000 ரூபாய் செலவானது. அரசு மருத்துவமனையில் மருந்துகள்தான் எழுதிக் கொடுத்தனர். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது,” என்கிறார் அவர். ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்துக்கான ஆகாரங்கள் இலவசமாக அவருக்கு துணை சுகாதார மையத்திலிருந்து கிடைத்தபோதும் கூடுதல் மருந்துகளுக்கென ஒவ்வொரு மாதமும் அவர் 500 ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தது.
சுகாதார செயற்பாட்டாளராக பணிபுரிந்து மாதந்தோறும் 4,000 ரூபாய் சம்பாதிக்கும் சாயா, மருந்துகளுக்கென 800 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அவரால் செலவழிக்க முடியாத தொகை அது. “இறுதியில் நாங்கள் சமூகப் பணியாளர்கள் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டோம். அதனால்தானோ என்னவோ நாங்கள் அதிகம் துன்பப்பட வேண்டியுள்ளது,” என்கிறார் அவர்.
பொதுச் சுகாதார துறையை தொலைதூரத்தில் வசிக்கும் சமூகங்களுடன் இணைக்கும் பணியை செய்வதற்காக 2022ம் ஆண்டில் சுகாதார செயற்பாட்டாளர்களுக்கு உலக சுகாதாரத் தலைவர்கள் விருது வழங்கி உலக சுகாதார நிறுவனம் கவுரவித்தது. “இது எங்கள் அனைவருக்கும் பெருமை,” என்னும் சாயா, “மேலே உள்ளவர்களிடம் தாமதமாகும் குறைந்த ஊதியத்தைப் பற்றி எப்போது நாங்கள் கேட்டாலும், மானுடத்துக்கு முக்கியமான சேவையை செய்கிறீர்கள் என பதில் சொல்கிறார்கள் - ஊதியம் கிடைக்காமல் போகலாம், மக்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு, எனச் சொல்வார்கள்,” என்கிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கை அறிவிக்கை , இத்தகைய முண்களப் பணியாளர்கள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை கவனப்படுத்தியிருக்கிறது. “தீவிர வானிலை நிகழ்வுகளால் மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் போன்ற அகச்சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன.”
சீர்குலைந்து வரும் பணிச்சூழல் மற்றும் அதன் மீதான அக்கறையின்மை ஆகியவற்றுடன் கூடிய காலநிலை மாற்ற நிகழ்வுகள், சுகாதாரச் செயற்பாட்டாளர்களின் ஆரோக்கியத்தையும் மனதையும் பாதிக்கிறது என சொல்கிறார் நெத்ரதிபா. “இந்த வருடத்தின் வெப்ப அலைகள் நேர்ந்த காலத்தில் எங்களில் பலர் தோல் எரிச்சல் ஏற்பட்டது. எரிச்சலும் பலவீனமும் ஏற்பட்டது,” என்கிறார் அவர். “எந்த பாதுகாப்பும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.”
புனேவிலிருக்கும் இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தில் காலநிலை அறிவியலாளரும் ஐநாவின் உலக நாட்டு அரசுகளுக்கான கூட்டமைப்பின் காலநிலை மாற்ற அறிக்கையில் பங்களிப்பவருமான ராக்சி கோல், வெப்ப அலைகளும் தீவிர நிகழ்வுகளும் நேரும் காலங்களை தெளிவாகக் குறிப்பிடும் ’காலநிலை செயல்பாட்டுத் திட்டம்’ உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறார். “அடுத்த பல வருடங்களுக்கான காலநிலை கணிப்புகள் நம்மிடம் இருக்கின்றன. எனவே அப்பகுதிகளையும் தொழிலாளர்கள் வெயிலில் இருக்கக் கூடாத நேரத்தையும் அடையாளம் காண முடியும்,” என்கிறார் அவர். “இது பெரிய வேலை இல்லை. தரவுகள் இருக்கின்றன.”
இவற்றை சரிசெய்வதற்கான அதிகாரப்பூர்வமான கொள்கையோ முயற்சியோ இல்லையெனில், சுகாதார செயற்பாட்டாளர்கள் தங்களுக்கு தெரிந்த வழிகளை உருவாக்குவார்கள். ஷுபாங்கி அப்படித்தான் தினசரி வானிலை அறிக்கையைப் பார்த்துவிட்டு தன் பணியைத் தொடங்குகிறார். “என் வேலையை நான் கைவிட முடியாது. குறைந்தபட்சம் நாளின் வானிலையை எதிர்கொள்ளவேனும் நான் தயாராகிக் கொள்ள முடியும்,” என்கிறார் அவர்.
இண்டெர்நியூஸ் எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க் அளிக்கும் சுயாதீன இதழியலுக்கான மானியத்தில் கட்டுரையாளர் எழுதிய தொடரின் ஒரு பகுதி இக்கட்டுரை ஆகும்.
தமிழில்: ராஜசங்கீதன்