அந்தத் தொலைபேசி அழைப்புக்கு பதிலே வரவில்லை. கடமையே கண் என்கிறபடி 30 நொடிகளுக்கு தானாக ஒலித்தது, ஒரு பதிவுசெய்யப்பட்ட விளம்பரம். அது, ”கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கமுடியும்… உங்கள் கைகளை தினமும் சோப்பு போட்டு கழுவவும். யாராவது நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவுக்கு விலகி இருக்கவும்.”என்பதே!
இரண்டாவது முறையாக நான் பாலாசாகேபை அழைத்தபோது, தொலைபேசி அறிவுறுத்தலுக்கு நேர்மாறாக அவர் நடந்துகொண்டிருந்தார். மேற்கு மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் உள்ள வயல் ஒன்றில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார். " இங்கே எல்லோரும் கொரோனா வைரசால் அச்சம் அடைந்துள்ளனர். ஒரு நாள், ஒரு பெண் அழுது அரற்றியபடி இருந்தாள்.. தனக்கு அதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடும்; தன் குழந்தைக்கும் அது தொற்றிக்கொள்ளும் என்று அவள் கவலைப்பட்டாள்." என்றார் பாலா சாகேப்.
39 வயதான கெட்கர், ஜி.டி. பாபு லேட் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளராகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். மகாராஷ்டிரத்தில் தொடர்ச்சியாக இயங்கிவரும் ஆலைகளில், இதுவும் ஒன்று. சர்க்கரையானது ‘இன்றியமையாத பொருள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரதமர் நரேந்திரமோடியால் மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்ட நாடு முடக்கத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு விலக்கு கிடைத்தது. அதற்கு ஒரு நாள் முன்னர், மாநிலத்தின் எல்லைகளை மூடவும் மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு தடைசெய்தும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆணையிட்டிருந்தார்.
மாநிலத்தில் மொத்தம் 135 சர்க்கரை ஆலைகள் உள்ளன; இவற்றில், 72 கூட்டுறவு ஆலைகளும் 63 தனியார் ஆலைகள் அடங்கும் என்கிறார், மாநில கூட்டுறவு அமைச்சர் பாலாசாகேப் பாட்டீல். " இந்த சர்க்கரை ஆலைகளில் 56 ஆலைகள் மார்ச் 23 அன்று மூடப்பட்டன. மீதமுள்ள 79 ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளுக்கு வரக்கூடிய கரும்பு இன்னும் வயல்களில் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. சில ஆலைகள் மார்ச் கடைசிக்குள் கரும்புவெட்டை முடித்துவிடும்; மற்றவை ஏப்ரல் கடைசிவரை தொடரும்.” என்றும் தொலைபேசியில் அவர் என்னிடம் கூறினார்.
ஒவ்வொரு சர்க்கரை ஆலைக்குமென குறிப்பிட்ட பரப்பளவு கரும்பு வயல்கள் உள்ளன. ஆலையால் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் விளைந்த கரும்புகளை வெட்டி, சர்க்கரையைப் பிழிந்தெடுக்க அவற்றை ஆலைக்கு கொண்டுசேர்க்க வேண்டும். இந்த தொழிலாளர்களை ஒப்பந்தகாரர்கள் மூலம் ஆலைகள் வேலைக்கு அமர்த்துகின்றன.
தொழிலாளர்களுக்கு அடையாளமாக முன்பணம் தந்து அவர்களை உறுதிப்படுத்திக் கொள்வதாகச் சொல்கிகிறார், பாராமதிக்கு அருகில் உள்ள சத்ரபதி சர்க்கரை ஆலையின் ஒப்பந்தகாரரான அனுமந்த் முண்டே. “பருவ காலம் முடியப்போகையில் இவர்கள் கரும்புவெட்டுக்கு வருகிறார்கள் என்பதை நாங்கள் உறுதிசெய்தாக வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார்.
கெட்கர் பணியாற்றும் சாங்லி சர்க்கரை ஆலையின் நிர்வாகம், அதன் ஒப்பந்தகாரருக்கு மார்ச் 18 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியது. அச்சுறுத்தலைப் போல அமைந்திருந்த அந்தக் கடிதத்தில், ”கரும்புப் பருவம் முடிவடைய இருப்பதால் பருவம் முடியும்வரை தொழிலாளர்கள் கரும்பு வெட்டில் ஈடுபடவேண்டும். இல்லையென்றால் வீடு திரும்புவதற்கான தரகுப் பணமும் பயணப் படியும் கிடைக்காது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் கரும்புவெட்டைத் தொடரும்படி தொழிலாளர்களை ஒப்பந்தகாரர்கள் கட்டாயப்படுத்தியாக வேண்டும். தானும் ஒரு விவசாயிதான் என்கிற முண்டே, ஆலையிலிருந்து வரவேண்டிய தரகுத்தொகையை இழக்க தன்னால் முடியாது என்கிறார். " கரும்புவெட்டில் உள்ள எல்லாரும் ஊருக்குத் திரும்ப விரும்புகிறார்கள். ஆனால், கெடுவாய்ப்பாக அது அவர்களின் கையில் இல்லை." என்கிறார் சலிப்பாக.
மார்ச் 27 அன்று நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, சக தொழிலாளர்களுடன் அவர் இருந்தார். பக்கத்தில் இருக்கும் யாரிடமாவது தொலைபேசியைத் தரமுடியுமா என அவரிடம் கேட்டுக்கொண்டேன். அதையடுத்து, பீட் பகுதியைச் சேர்ந்த பகாடி பர்கான் கிராமத்தின் மாருதி மாஸ்கே (35) என்னிடம் பேச ஒப்புக்கொண்டார். "இந்த வைரஸ் தொடர்பாக பெரும்பாலும் எங்களுக்கு அச்சமாகவே இருக்கிறது. ஏனென்றால் இது எப்படிப்பட்டது, என்ன, ஏது என்று யாரும் எங்களிடம் சொல்லவேமாட்டேன் என்கிறார்கள். வாட்சாப் தகவல்கள் பீதியைக் கூட்டுகின்றன. நாங்கள் ஊருக்குத் திரும்பியாக வேண்டும், அவ்வளவுதான்." என்றார் மாருதி.
மார்ச் 26 அன்று பொது அறிவித்தல் ஒன்றை வெளியிட்ட மகாராஷ்டிர முதலமைச்சர், பயணத்தால் வைரஸ் பரவும் ஆபத்தை அதிகரிக்கும் என்பதால், தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொண்டார். " தொழிலாளர்களை நாங்கள் கவனித்துக்கொள்வோம்; இது, எங்கள் பொறுப்பு மட்டுமல்ல, நம்முடைய பண்பாடும்கூட” என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தற்போது இருக்கும் இடத்திலேயே தங்குவார்களேயானால், அவர்களை கவனித்துக்கொள்வதற்கு அரசாங்கம் பெருமளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருக்கும். அந்தத் தொழிலாளர்களோ தங்கள் வாழ்க்கைத் தேவைகளை சுருக்கிக்கொண்டார்கள். அரசாங்கம் ஏதோ செய்யுமெனக் காத்திருக்ககும் நிலையில் அவர்கள் இல்லை.
அவர்களில் பெரும்பாலானவர்கள் தத்தம் ஊரில் சிறிதளவு நிலம் உள்ள விவசாயிகள் ஆவர். ஆனால் அந்த நிலம் அவர்களின் குடும்பங்கள் சாப்பிடும் அளவுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. தொடர்ச்சியாக, தட்பவெப்பநிலையின் ஒழுங்கின்மை அதிகமாகிக்கொண்டேயும் விதைகள், உரங்கள் போன்ற வேளாண் இடுபொருள்களின் விலை உயர்ந்தும் வருகிறது. விவசாயிகளுக்கான பலனோ குறைந்துவருகிறது. பீட் - அகமத் நகர் எல்லையில் உள்ள முங்குஸ்வாடே கிராமத்தில் கெட்கருக்கு மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது; அதில் சோளம்தான் முதன்மைப் பயிர். ” விளையும் பயிரை நாங்கள் விற்கமாட்டோம். எங்கள் குடும்பம் சாப்பிடுவதற்கே போதுமானதாக இருக்கும். எங்கள் வருமானமானது இந்த வெட்டு உழைப்பையே முழுமையாக நம்பியுள்ளது.” என்கிறார் கெட்கர்.
கெட்கரைப் போலவே மராத்வாடா பகுதியின் இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள், ஆண்டுதோறும் நவம்பரில் கரும்புவெட்டு தொடங்கும்போது மேற்கு மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தின் சர்க்கரை ஆலைகளுக்கு புலம்பெயர்கின்றனர். அந்தப் பகுதியிலேயே தங்கி ஒரு நாளைக்கு 14 மணி நேரமென ஆறு மாதங்கள் கரும்பு வெட்டுவார்கள்.
பாலா சாகேபும் அவரின் இணையர் பார்வதியும், 36, பதினைந்து ஆண்டுகளாக இப்படி புலம்பெயர்ந்து வருகின்றனர். இப்போது நாடு முடக்கத்தின் காரணமாக நாட்டில் ஏராளமானோர் பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் தங்கிவிட்டாலும், இவர்கள் இருவரும் நூற்றுக்கணக்கான சக தொழிலாளர்களுடன் வெட்டவெளியில் கரும்புவெட்டிக்கொண்டு இருக்கிறார்கள். " நாங்கள் பெரும் தேவையோடு இருக்கிறோம். ஆகையால், இதைச் செய்துதான் ஆகவேண்டும்." என்கிறார் பாலாசாகேப்.
மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் பெரும்பாலானவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இங்குள்ள பலம்வாய்ந்த அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை. அவர்களுக்கு இவற்றின் மூலம் அதிக இலாபம் கிடைக்கிறது. இதேவேளை, தொழிலாளர்களுக்கோ வெட்டும் கரும்புக்கு ஏற்ப ஒரு டன்னுக்கு வெறும் 228 ரூபாய்தான் கூலி தரப்படுகிறது. பாலாசாகேப்பும் பார்வதியும் சேர்ந்து 14 மணி நேரம்வரை உழைத்தாலும் ஒரு நாளைக்கு அவர்களால் 2 - 3 டன்னுக்கு மேல் வெட்டமுடியாது. " ஆறு மாதங்கள் முடிந்த பிறகு, எங்கள் இருவருக்கும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கிடைக்கும். பொதுவாக, நாங்கள் எந்தக் குறையையும் சொல்வதில்லை; ஆனால் இந்த ஆண்டு ஆபத்து அதிகமாக இருக்கிறது." என்கிறார் பாலா சாகேப்.
புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் கரும்பு வயல்களில் தற்காலிகமாக குடில்களை அமைத்துக்கொள்கிறார்கள். ஐந்து அடி அளவு உயரத்தில் வைக்கோல் மேய்ந்தும் சில குடில்கள் பிளாஸ்டிக் பாயால் மூடப்பட்டும் இருக்கும். அதில், இரண்டு பேர் தூங்குவதற்குப் போதுமான இடம் இருக்கிறது. வயல் வெளியில் சமைத்துக்கொள்கிறார்கள்; வயல்களின் வேறு பகுதியைத்தான் கழிப்பிடமாகப் பயன்படுத்தியாக வேண்டிய நிலை, அவர்களுக்கு! .
"இங்கே எங்களின் வாழ்க்கைமுறையின் படங்களைப் பார்த்தால், நீங்கள் அதிர்ந்து போவீர்கள். தனிநபர் இடைவெளி என்பது எங்களுக்குத் தோதுப்படாது. அது சொகுசாகத்தான் இருக்கு." என்று கூறுகிறார், பாலாசாகேப்.
"குடில்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக அமைக்கப்பட்டு உள்ளன" என்கிற பார்வதி, " குடில்களுக்கு வெளியிலோ வயல்களுக்கு உள்ளேயோ மற்ற தொழிலாளர்களிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவைக் கடைப்பிடிக்க முடியாது. மேலும், அன்றாடம் மாலையில் நாங்கள் தண்ணீர் எடுத்தாகவேண்டும். ஒரே குழாயில் 25 பெண்கள் தண்ணீர் பிடிப்போம். அதில் கிடைக்கும் அளவுத் தண்ணீர்தான் சமைக்க, குடிக்க, பாத்திரம் கழுவ எல்லாவற்றுக்குமே!” என்கிறார்.
நிலைமை பயங்கரமானதாக இருந்தாலும், அது தொடர்பாக தங்களால் எதுவும் செய்யமுடியாது என்கிறார் கெட்கர். " அரசியலில் இருப்பதால் சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு நிறைய செல்வாக்கு இருக்கிறது. எங்களில் யார் ஒருவரும் அவர்களுக்கு எதிராகப் பேசவோ எங்கள் உரிமைகளுக்காகப் போராடவோ துணிவதில்லை." என்றும் அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு சர்க்கரை தொழிற்சாலையும் குறைந்தது 8,000 தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கிறது என்கிறார், புலம்பெயர்ந்த கரும்புத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாகப் பணியாற்றும் பீட் நகரைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தீபக் நாகர்கோஜே. இப்போது, 79 சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன என்றால், 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவோ அல்லது போதுமான சுகாதாரத்தைப் பேணவோ முடியாது. " தொழிலாளர்கள் மீதான மனிதநேயம் அற்ற தன்மையே தவிர வேறொன்றும் இல்லை. சர்க்கரை ஆலைகள் அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்; அவர்களின் ஊதியத்தில் கைவைக்கக்கூடாது." என வலியுறுத்துகிறார் தீபக் நாகர்கோஜே.
உள்ளூர் ஊடகங்கள் மூலம் நாகர்கோஜே இந்த விவகாரத்தை வெளிக்கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து, மார்ச் 27 அன்று மகாராஷ்டிர சர்க்கரைத் துறை ஆணையர் சௌரப் ராவ் வெளியிட்ட அறிவிப்பில், சர்க்கரை ஒரு அத்தியாவசியப் பொருள் என்றும் அதனால் முடக்கத்திலிருந்து சர்க்கரை ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். " மாநிலத்துக்கு போதிய அளவு சர்க்கரை இருப்புவைக்க வேண்டுமானால், ஆலைகள் தொடர்ந்து இயங்கவேண்டும். மூலப்பொருள் அங்கிருந்துதான் வருகிறது என்பதால் இது அவசியம். ஆலைகளில் கரும்புவெட்டும் தொழிலாளர்களும் கவனித்துக்கொள்ளப்படவேண்டும்.” என்று அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆலைகளுக்கு குறிப்பான வழிகாட்டல்களையும் சர்க்கரைத் துறை அனுப்பியுள்ளது.
தொழிலாளர்கள் தங்குவதற்கும் அவர்களுக்கான உணவுக்கும் ஆலைகளே ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும் போதுமான சுகாதாரத்தைb பேணுவதற்குப் போதுமான தண்ணீரையும் கைசுத்திகரிப்பானையும் வழங்கவேண்டும் என்றும் அரசின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன், தொழிலாளர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துமாறும் ஆலைகளின் நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
பிந்தைய தகவல்: மார்ச் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குள், 23 சர்க்கரை ஆலைகளில் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டனர். ஏனெனில், ஆலை நிர்வாகத் தரப்பில் இந்த வசதிகள் செய்து தரப்படவில்லை.
தங்கள் ஆலையில் உள்ள உள்ளூர் கரும்புத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைசெய்வதாக பாலாசாகேப் கெட்கர் என்னிடம் கூறினார். ஆனால், அவர், பார்வதி போன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இரண்டு நாள்களுக்கு முன்னர் வேலையை நிறுத்துவிட்டிருந்தனர். " இதனால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. ஏனென்றால், உள்ளூர் ரேசன் கடைகளில் எங்களைச் சேர்க்க அவர்கள் விரும்பவில்லை. எங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக அவர்கள் அஞ்சுகிறார்கள். வெறும் வயிற்றோடு நாங்கள் இந்த வேலையைச் செய்யமுடியாது. ஆலைத் தரப்பில் எங்களுக்கு முகக்கவசமோ கைசுத்திகரிப்பானோ தரவில்லை. குறைந்தது, எங்களுக்கான உணவையாவது அவர்கள் உறுதிப்படுத்தவேண்டும்தானே?" எனக் கேட்கிறார், கெட்கர்.
தமிழில்: தமிழ்கனல்