தினமும் காலையில், பென்டபள்ளி ராஜா ராவ், அவரது முதுகிலோ அல்லது தலையிலோ சிவப்பு மிளகாய் மூட்டையை சுமந்தபடி மெதுவாக ஆறு தளங்கள் இறங்குகிறார். அந்த சாக்குமூட்டைகள் ஒவ்வொன்றும் சுமார் 45 கிலோ எடைகொண்டது. அதுபோல் அடுத்துவரும் சில மணி நேரங்களில் அவர் பலமுறை அதுபோல் சென்று வருகிறார். “130 படிகளை ஏறுவதைவிட இறங்குவது மிக எளிதான ஒன்றாகும்“ என்று 29 வயதான ராஜா ராவ் கூறுகிறார். அவர் தனது 19 வயதிலிருந்து இந்த வேலையை செய்து வருகிறார்.
விஸ்வா குளிர் பாதுகாப்பகத்தின் தரை தளத்தில் அனைத்து மிளகாய் மூட்டைகளும் இறக்கப்பட்ட பின்னர், அந்தப்பகுதியில் காத்திருக்கும் டிரக்கில் ராவும் மற்ற 11 பேரும் சேர்ந்து ஏற்றுகின்றனர். டிரக் நிறைந்த பின்னர், அது 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டூர் என்டிஆர் வேளாண் சந்தை குழு மண்டிக்கு கொண்டு செல்லப்படும்.
“அவர்கள் லாரியில் இருந்து மூட்டையை மாடியில் உள்ள பாதுகாக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.15ம், அதை மீண்டும் கீழே எடுத்து வந்து லாரியில் ஏற்றுவதற்கு ரூ.10ம் கொடுக்கிறார்கள்“ என்று ராஜா ராவ் கூறுகிறார். அவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் உள்ள கோர்னி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், நாங்கள் ஒரு மூட்டைக்கு ரூ.23 மட்டுமே பெறுகிறோம். மேற்பார்வையாளர் ரூ.2ஐ கமிஷனாக எடுத்துக்கொள்கிறார். அதாவது ஒரு மூட்டையை மேலே கொண்டு செல்வதற்கு ஒரு ரூபாய் மற்றும் இறக்குவதற்கு ஒரு ரூபாய் என்று கணக்கிடுகிறார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பிப்ரவரி முதல் மே வரை மிளகாய் அதிகம் விற்கும் காலகட்டத்தில் விஸ்வா குளிர் பாதுகாப்பகத்தில் மட்டுமே மிளகாய்கள் இருக்கும். அப்போது ராஜா ராவுக்கு நாளொன்றுக்கு ரூ.300 வரை கூலி கிடைக்கும். ஆண்டின் மற்ற மாதங்களில் அவரது வருமானம் நாளொன்றுக்கு ரூ.100 அல்லது அதற்கு கீழ் வரை குறையும்.
ராஜா ராவ் உள்ளிட்ட அவருடன் வேலை செய்யும் குழுவினர், அண்மையில், பிரகாசம் மாவட்டம் ஓடுபள்ளம் கிராமத்தில் உள்ள வெங்கடேஷ்வர ராவ் என்ற விவசாயியிடம் வேலைக்கு சேர்ந்தனர். “கடந்த இரண்டு ஆண்டுகளாக (2016-17 மற்றும் 2017-18) மிளகாயின் விலை மிகவும் குறைந்துவிட்டது. எனவே, நான் 40 குவிண்டால் மிளகாயை குளிர்சாதன வசதிகொண்ட அறையில் மார்ச் 2017ம் ஆண்டு முதல் சேமித்து வைத்திருந்தேன்“ என்று அவர் கூறுகிறார். “விலை உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் பின்னர் விற்கலாம் என்றிருந்தேன். 15 மாதங்களுக்கு மேலாக நான் காத்திருந்தேன், விலை கிட்டத்தட்ட குறைந்து அதே அளவுதான் இருந்தது“ என்கிறார். 2018ம் ஆண்டு ஜீலை மாதம் குவிண்டால் ரூ.4,500க்கு விற்பனை செய்வதற்கு, வெங்கடேஷ்வர ராவ் நிர்பந்திக்கப்பட்டார். அப்போதுதான் அவரால் 2018-19ம் ஆண்டு மிளகாய் வரத்து அதிகமுள்ள காலத்தில் முதலீடு செய்ய முடியும். வரத்து அதிகமிருக்கும் காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும், சந்தையில் விற்பனை மே மாதம் வரை நடைபெறும். (பார்க்க: குண்டூரில் நல்ல விலைக்காக காத்திருப்பு )
குண்டூர் மிளகாய் உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம். இங்கு மிளகாய் பணப்பயிராகும். மாவட்டத்தில் மிளகாய் 125 முதல் 175 வரையுள்ள குளிர்சாதன வசதி கொண்ட பாதுகாக்கும் இடங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. மிளகாய் விலை மாறுபாட்டில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஒரு உணவுப்பொருளாகும். 2016ல் வெளியான ஆய்வில் 2010ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் இதுபோன்ற 290 பாதுகாப்பு கிடங்குகள் இருந்தன. இவை முதன்முதலாக 1990களில் வரத்துவங்கியது என்று குளிர் பாதுகாப்பு கிடங்குகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த குளிர்சாதன வசதிகொண்ட பாதுகாப்பு கிடங்குகள் விவசாயிகளுக்கு விளைபொருள் வீணாகாமல் தரத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன. இந்த பாதுகாப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள மற்ற பொருட்கள் மஞ்சள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அலங்கார மலர்கள் ஆகியவையாகும்.
இந்த குளிர் பாதுகாப்பு கிடங்குகள், ஒரு மூட்டையை 10 மாதங்கள் சேமிப்பதற்கு ரூ.170 முதல் ரூ.200 வரை வசூலிக்கின்றன. இது சராசரியாக ஒரு விவசாயி பாதுகாப்பிற்கு மிளகாயை வைத்திருக்கும் காலஅளவு. குண்டூரில் உள்ள குளிர் பாதுகாப்பு கிடங்குகளின் கொள்ளளவு 60 ஆயிரம் முதல் 1.2 லட்சம் மூட்டைகளாக உள்ளன.
மிளகாய் மண்டியில் உள்ள தரகு முகவர்களுடன், சில குளிர் பாதுகாப்பகங்கள் நேரடி வர்த்தக ரீதியான தொடர்புகள் வைத்திருக்கும். மற்றவர்கள் அந்த தொடர்பின்றி இயங்குகிறார்கள். அவர்களின் விளைச்சலை சந்தையில் விற்பனை செய்வதற்கு, குறைந்த விலையில் கொள்முதல் செய்வதற்கு, சந்தையில் அதிக விலைக்கு பேரம் பேசுவதற்கு மற்றும் கூடுதல் தொகை வைத்திருப்பதற்கு விவசாயிகளிடம் இந்த முகவர்கள் தரகுத்தொகை அதாவது கமிஷன் பெறுவார்கள். “தரகு முகவரால் கூறப்படும் குறைந்த விலை ஒரு சூதுபோல், முகவர்களுக்கும், குளிர் பாதுகாப்பகத்திற்கும் இருக்கும்“ என்று வெங்கடேஷ்வர ராவ் கூறுகிறார். விவசாயிகள் விலை உயரும் என்ற நம்பிக்கையில் தங்கள் விளைச்சலை குளிர் பாதுகாப்பகங்களுக்கு எடுத்து வருகிறார்கள். குண்டூரில் உள்ள பெரும்பாலான தரகு முகவர்கள் காலப்போக்கில் குளிர் பாதுகாப்பகத்தின் உரிமையாளர்களாகிவிட்டனர்.
குளிர் பாதுகாப்பகங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும், ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த கம்மா, ரெட்டிகளாக இருப்பார்கள். அங்கு வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள் பெரும்பாலும் உத்தாரந்தரா பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். கிட்டத்தட்ட 2,500 தொழிலாளர்கள், இந்திய வர்த்தக சங்க மையத்தில், குளிர் பாதுகாப்பக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் சங்கம் என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிப்ரவரி முதல் மே வரையிலான மிளகாய் அதிகம் விற்கும் காலகட்டத்தில் குளிர் பாதுகாப்பகங்களில் பணிபுரிவார்கள். பாதுகாப்பு திறனைப்பொருத்து, ஒவ்வொரு இடத்திலும், 12 முதல் 25 தொழிலாளர்களை ஒரு மூட்டைக்கு கூலி என்ற அடிப்படையில் வைத்துக்கொள்கிறார்கள்.
குளிர் பாதுகாப்பகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளில் சிலர் ஒடிஷாவிலிருந்தும் வரத்துவங்கிவிட்டனர்“ என்று சிந்தடா விஷ்ணு (50) கூறுகிறார். இவர் தொழிலாளர் சங்க செயலாளர் மற்றும் விஸ்வா குளிர் பாதுகாப்பகத்தின் மேற்பார்வையாளராவார். “சிலத்தொழிலாளர்கள் வேலை குறைவாக இருக்கும் ஜீன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள காலத்தில் கிராமங்களுக்கு விவசாய வேலைகள் செய்ய சென்றுவிடுவார்கள். எங்களுக்கு தேவையுள்ளபோது நாங்கள் அவர்களை வேலைக்கு அழைத்துக்கொள்வோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
விஷ்ணு பிற்படுத்தப்பட்ட கலிங்கா சமூகத்தைச் சேர்ந்தவர், அவருக்கு சொந்தமாக நிலமும் இல்லை. “வேளாண் தொழில் நலிவடைந்ததால், 1999ம் ஆண்டில் (ஸ்ரீகாகுளத்தில் இருந்து) நான் இங்கு வந்து சேர்தேன். நான் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, மூன்று ஆண்டுகள் நெல் பயிரிட்டு, பாசன வசதிகள் குறைவு மற்றும் விளைச்சலுக்கான சந்தை விலை குறைவு போன்ற காரணங்களால் நஷ்டப்பட்டேன்“ என்று அவர் கூறுகிறார்.
குளிர் பாதுகாப்பக ஊழியர்கள், பிப்ரவரி முதல் மே முதலான மிளகாய் அதிகளவு விற்பனையாகும் காலத்தில், வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்கிறார்கள். இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல, அது மிளகாயின் தேவையைப்பொருத்து அமையும். “எங்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேலை இருக்கும். ஏனெனில் லாரி எப்போது வருகிறதோ அப்போது நாங்கள் வேலை செய்ய வேண்டும். சில நேரங்களில் நாங்கள் அதிகாலை 3 மணிக்கு கூட விழிக்க நேரிடும். அன்று இரவு வரை கூட வேலை இருந்துகொண்டே இருக்கும். எங்களுக்கு இடையில் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலும், அப்போது நாங்கள் உறங்கிக்கொள்வோம்“ என்று ராஜா ராவ் கூறுகிறார்.
திருமணமாகாத ஆண்கள் குளிர் பாதுகாப்பகத்தில் உள்ள இரண்டு அறைகளில் தங்கிக்கொள்கின்றனர். அங்கு தங்களுக்கு தேவையான சாதம் மற்றும் குழம்பு ஆகிய உணவை தாங்களே தயாரித்துக்கொள்கிறார்கள். (பெரும்பாலும் ஆண்களே சுமைதூக்கும் தொழிலாளர்களாக உள்ளனர்) திருமணமானவர்கள் அருகில் அறை எடுத்துக்கொள்கிறார்கள்.
“நாங்கள் 11 பேரும் சேர்ந்து 150 மூட்டைகளை இன்று கீழே இறக்கினோம். நாங்கள் எத்தனை பேர் வேலை செய்கிறோமோ, அத்தனை பேரும் கிடைக்கும் பணத்தை பகிர்ந்துகொள்கிறோம். இன்று நாங்கள் ஒவ்வொருவரும் நூறு ரூபாய்க்கு அதிகமாக பெற்றோம்“ என்று சம்மலா சம்பத் ராவ் கூறுகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலம் கொர்னி கிராமத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் வேலை தேடி குண்டூருக்கு வந்தார்.
அவர்களின் மேற்பார்வையாளர் விஷ்ணு அருகில் இல்லாததை உறுதிபடுத்திக்கொண்டு நம்மிடம் கூறுகிறார், “அனைத்து கடினமான வேலைகளையும் நாங்கள் செய்வோம். ஆனால், மேற்பார்வையாளர்கள் ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். அவர்கள் எங்களுக்கு வேலை வழங்குவதும், எங்களை கண்காணிப்பது மட்டுமே செய்வார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு மூட்டையை நாங்கள் எங்கள் தோள்களில் சுமந்து வரும்போதும் அவர்கள் ஒரு ரூபாய் கமிஷன் பெறுகிறார்கள். எங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வருமானமே (மூட்டை தூக்குவதற்கு கிடைக்கும் கூலி) அவருக்கும் கிடைக்கிறது. மூட்டையில் கையை கூட வைக்காமல் அவர்களுக்கு பணம் கிடைத்துவிடுகிறது.
விஸ்வா குளிர் பாதுகாப்பகத்தில் 1.2 லட்சம் மூட்டைகளை ஒரே நேரத்தில் வைக்க முடியும். அதற்கு அந்த மேற்பார்வையாளர் ஓராண்டில் 2.4 லட்ச ரூபாய் பெறமுடியும் என்று பொருள். கூடுதலாக மூட்டை தூக்கும் கூலியும் கிடைக்கும். இதுகுறித்து, அவரிடம் கேள்வி எழுப்பினால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது தொழிலாளர்களுக்கு தெரியும். “அவர் எங்களை வெளியே அனுப்பிவிட்டு வேறு ஒருவரை பணியில் அமர்த்திக்கொள்வார் என்பது எங்களுக்கு தெரியும்“ என்று ராஜா ராவ் மேலும் கூறுகிறார்.
கரிமி சின்னம் நாயுடு (35), 13 ஆண்டுகளுக்கு பின்னர், குளிர் பாதுகாப்பகத்தில் வேலை செய்வதை கடந்த ஆண்டோடு நிறுத்திக்கொண்டார். “நான் 2 ரூபாய் கமிஷனுக்கு எதிராக போராடினேன். மேற்பார்வையாளரை எதிர்த்ததால், அங்கு தொடர்ந்து நான் இருப்பதையே கடினமாக்கினார். எனவே நான் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்தில் வேலை தேடி வேண்டிய சூழல் ஏற்பட்டது“ என்று நாயுடு கூறுகிறார். பின்னர் அவர் மிளகாய் மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக தற்போது வேலை செய்கிறார்.
நான் இந்த கமிஷன் தொகை குறித்து விஷ்ணுவிடம் கேட்டபோது அவர், “சில நேரங்களில் நாங்கள் பணியாளர்களுக்கு முன்பணம் கொடுப்போம். இந்தப்பணம் சில நேரங்களில் ஏற்படும் இழப்பை சமாளிக்கப்பயன்படுகிறது. தொழிலாளர்கள், குளிர் பாதுகாப்பக உரிமையாளர்களிடம் தங்களின் கூலியை உயர்த்தி கேட்க வேண்டும்“ என்கிறார்.
உரிமையாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை. “பத்தாண்டுகளுக்கு முன்னர் நான் இந்த வேலை செய்ய துவங்கியபோது, மூட்டைக்கு ரூ.12 கிடைத்தது, இப்போது நாங்கள் ரூ.23 பெறுகிறோம். அது இரண்டு மடங்காகக்கூட உயரவில்லை. இதே காலகட்டத்தில் குளிரில் பாதுகாக்க வசூலிக்கப்படும் தொகை மட்டும் மூட்டைக்கு ரூ.50லிருந்து ரூ.200ஆக உயர்ந்துவிட்டது. (தொழிலாளர்கள் கூலி உள்பட)“ என்று சம்பத்ராவ் கூறுகிறார். இந்தத்தொகையை தங்கள் விளைச்சலை இங்கு பாதுகாத்து வைத்திருக்கு விவசாயிகள் வழங்குகிறார்கள்.
குளிர் பாதுகாப்பகத்தின் உரிமையாளர்கள் நல்ல லாபத்தை பெறுகிறார்கள். இந்த பாதுகாப்பகங்களை இயக்குவதற்கு அவ்வளவு செலவு பிடிப்பதில்லை. விஸ்வா குளிர் பாதுகாப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீநிவாச ராவ் கூறுகையில், “குளிர்சாதன வசதிக்கு ஆகும் மின்சாரம், மின்வெட்டு நேரங்களில் ஜெனரேட்டர்களை இயக்க பயன்படுத்தும் டீசல், குளிர்சாதன வசதிக்கு தேவையான அமோனியா மற்றும் தண்ணீர் ஆகியவை முக்கிய செலவினங்களாகும். இதுமட்டுமின்றி பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மின்கட்டணமே மாதத்திற்கு 2.8 முதல் 3 லட்சம் வரை வரும், தண்ணீருக்கான செலவு மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம்.
“எனவே ஒட்டுமொத்தமாக குளிர் பாதுகாப்பகங்களை இயக்குவதற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாய் செலவானாலுமே, இத்தொழில் பெரும் லாபம் பெறக்கூடிய தொழில்தான். ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் வரை இதன் மூலம் லாபம் பெறமுடியும்“ என்று குண்டூர் நகர சிஐடியு செயலாளர் நளினிகாந்த் கொட்டப்பட்டி கூறுகிறார்.
குளிர் பாதுகாப்பகத்தின் ஊதிய பட்டியலில் கூலித்தொழிலாளர்கள் கிடையாது. மேலும் தொழிலாளர் சட்டங்களின் பாதுகாப்பு அம்சங்களும் அவர்களுக்கு அவசியம் கிடையாது. மருத்துவ காப்பீடு, தொழிலாளர் வைப்பு நிதி , மாநில தொழிலாளர்கள் மருத்துவ காப்பீடு, ஊக்கத்தொகை மற்றும் எவ்வித நன்மைகளும் அவர்களுக்கு கிடையாது. “மூட்டையை ஏற்றவும், இறக்கவும் விவசாயிகளே ஆட்களை அழைத்து வருவார்கள். எனவே எவ்வித பொறுப்பையும் அதன்மூலம் அவர்களே ஏற்றுக்கொள்வதாக குளிர் பாதுகாப்பகத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்“ என்று நளினிகாந்த் கூறுகிறார்.
சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் காக்கும் அனைத்தையும் அவர்கள் கேட்க வேண்டும். முறைசாரா தொழிலாக இருப்பதால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து எதுவும் கேட்க முடியாத நிலை உள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை கேள்வி கேட்டால் தாங்கள் வேலையிழக்க நேரிடும் என்ற அச்சமும் ஏற்படுகிறது.
“எங்கள் கிராமத்தில் எங்களால் வாழ முடியவில்லை என்று ஒரு வாழ்வாதாரத்தைத் தேடித்தான் இங்கு வருகிறோம். எங்கள் குடும்பத்தினரை விட்டு யார்தான் அடிமையாக வாழ விரும்புவார்கள்? ஆனால் எங்கள் அடிமை நிலை குறித்து எங்களால் பேச கூட முடியாது“ என்று ராஜா ரால் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.