அவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்த ஒரே விஷயம் தனது பெயர் மட்டுமே. கோ-பூஹ்-லீ என அவர் தேவநாகரியில் பெருமையுடன் கவனமாக எழுதுகிறார். பிறகு சத்தமாக சிரிக்கிறார்.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான 38 வயதாகும் கோப்லி கமேதி, பெண்கள் மனதில் நினைத்துவிட்டால் எதையும் செய்து விடுவார்கள் என்கிறார்.
உதய்பூர் மாவட்டத்தின் கோகுண்டா வட்டாரம், கர்தா கிராமத்தில் உள்ள இந்த குடியிருப்பில் சுமார் 30 வீடுகள் உள்ளன. அச்சமூகத்தின் பிற பெண்களின் உதவியோடு நான்கு குழந்தைகளையும் கோப்லி வீட்டிலேயே பெற்றெடுத்தவர். அவரது நான்காவது குழந்தையான மூன்றாவது மகளைப் பெற்ற பிறகு கருத்தடை சாதனம் பொருத்திக் கொள்ள முதன்முறையாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
“என் குடும்பம் முழுமைபெற்று விட்டதாக இப்போது தான் முதன்முறையாக உணர்கிறேன்,” என்கிறார் அவர். கோகுண்டா சமூக சுகாதார மையத்திலிருந்து (CHC) வரும் சுகாதாரப் பணியாளர் ஒருவர், மேற்கொண்டு கர்ப்பமடைவதை தடுக்கும் “அறுவை சிகிச்சை” குறித்து அவரிடம் கூறியிருந்தார். அதுவும் இலவசமாக. கிராம மக்களுக்காக அரசு நடத்தும் கிராமப்புற மருத்துவமனைகளான 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) வழியாகச் செயல்படும் CHCக்கு அவர் நேரடியாக செல்ல வேண்டியதுதான் மிச்சம்.
இதுபற்றி வீட்டில் கணவரிடம் பலமுறை பேசியும் அவர் கண்டு கொள்ளவில்லை. தனது கடைசி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதெல்லாம் யோசித்து, பல மாதங்களாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளார்.
“ஒருநாள் காப்பர் டி பொருத்திக் கொள்ள தாவக்கானா [சிகிச்சை மையம்] செல்வதாக சொல்லிவிட்டு நடந்துச் சென்றன்,” என்று தனக்கு தெரிந்த சிறிதளவு இந்தி, பிலி மொழிகளில் புன்னகையுடன் அவர் நினைவுகூர்கிறார். “என் கணவரும், மாமியாரும் பின்னால் ஓடி வந்தனர்.” கோப்லியின் முடிவுக்கு எதிராக சாலையில் சிறிய விவாதம் நடைபெற்றது. பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து கோகுண்டா CHC-க்கு பேருந்தில் சென்றனர். அங்கு கோப்லிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
CHC-இல் அதே நாளில் பிற பெண்களும் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு வந்திருந்தனர் எனும் அவருக்கு அன்று கருத்தடை முகாம் நடைபெற்றதா என்பதும் எத்தனைப் பேர் CHC-இல் இருந்தனர் என்பதும் பற்றிய நினைவும் இல்லை. கிராம சுகாதார நிலையங்களில் நிலவும் பணியாளர் தட்டுப்பாடுகளை ஈடுகட்ட கிராமப்புற பெண்களுக்கான கருத்தடை முகாம்கள் சிறுநகரங்களில் நடத்தப்படுகிறது. ஆனால் அம்முகாம்களின் சுகாதார நிலைகளும், கருத்தடைக்கான இலக்கு நோக்கிய அணுகுமுறை போன்றவை பல தசாப்தங்களாக விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
கருத்தடை அறுவை சிகிச்சை என்பது பெண்களின் கருப்பை செல்லும் குழாயை அடைக்கும் முறை என்பதால் குடும்பக் கட்டுப்பாடு முறை எனப்படுகிறது. 30 நிமிடங்கள் நடைபெறும் சிகிச்சை, ‘கருத்தடை அறுவை சிகிச்சை’ அல்லது மகளிர் கருத்தடை எனப்படுகிறது. ஐ . நாவின் 2015ம் ஆண்டு அறிக்கை படி உலகளவில் 19 சதவீத திருமணமான அல்லது உறவிலுள்ள பெண்கள் மத்தியில் மகளிர் கருத்தடை பிரபலமாக உள்ளதை கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் 15 முதல் 49 வயது வரையிலான திருமணமான பெண்களில் 37.9 சதவீதம் பேர் கருத்தடை அறுவை சிகிச்சையை தேர்வு செய்கின்றனர் என்கிறது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21) .
கோப்லியைப் பொறுத்தவரை, பாதி கண்கள் வரை மூடியிருந்த ஆரஞ்சு நிற முக்காடை தலையிலிருந்து தளர்த்தியதே புரட்சிகர செயல்தான். நான்காவது குழந்தையைப் பெற்ற பிறகு சோர்ந்திருந்தாலும், அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். பொருளாதாரம் சார்ந்தே இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.
சூரத்தில் புலம்பெயர் தொழிலாளராக உள்ள அவரது கணவர் சோஹன்ராம் ஆண்டில் பெரும்பாலான காலம் அங்குதான் இருக்கிறார். ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் மட்டுமே அவர் வீடு திரும்புகிறார். நான்காவது குழந்தை பிறந்த சில மாதங்களில் கணவர் வீட்டிற்கு வந்தபோது மீண்டும் கர்ப்பமடையக் கூடாது என கோப்லி தீர்மானித்தார்.
“குழந்தை வளர்ப்பின்போது ஆண்கள் எந்த உதவியும் செய்வதில்லை,” என்கிறார் தனது கூரை வேயப்பட்ட செங்கல் வீட்டின் தரையில் அமர்ந்தபடி கோப்லி. “ சிறிதளவு சோள முத்துக்கள் உலர்த்துவதற்காக தரையில் பரப்பிவிடப்பட்டுள்ளது. கர்ப்ப காலங்களில் பெரும்பாலும் சோஹன்ராம் உடன் இல்லாத காரணத்தால் கோப்லி தனியாகவே தங்களின் அரை பிகா [0.3 ஏக்கர் நிலம்] விளைநிலத்தில் வேலை செய்துவந்துள்ளார்.” வீட்டையும் கவனித்துக் கொண்டு பிறரது நிலத்திலும் அவர் வேலை செய்துள்ளார். “இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே போதிய பணமில்லை, இன்னும் குழந்தைகளை பெற்றுக் கொள்வது எப்படி சரியாக இருக்கும்?”
வேறு ஏதேனும் கருத்தடை முறைகளை பின்பற்றியதுண்டா என்று கேட்டால் அவர் வெட்கத்துடன் சிரிக்கிறார். அவரது கணவர் குறித்து எதுவும் பேச மறுக்கும் அவர், தனது சமூக ஆண்கள் பொதுவாக எவ்வகையான கருத்தடைக்கும் தயாராக இல்லை என்கிறார்.
*****
ராய்டா ஊராட்சியின் ஒரு பகுதியான கர்டா கிராமம் ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது ராஜ்சமந்த் மாவட்டத்தில் சுற்றுலாத் தளமான கும்பல்கார் கோட்டையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பழங்குடியின பில்-கமேதி சமூகத்தின் ஒற்றை பரம்பரையில் 15-20 எனும் பெரிய குடும்பங்களாக கர்தாவில் கமேதிகள் வாழுகின்றனர். கிராமத்திற்கு வெளியே குடியமர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிகாவிற்கும் குறைவான நிலம் சொந்தமாக உள்ளது. இக்குடும்பத்தில் எந்த பெண்ணும் பள்ளிக்கு சென்றதில்லை, ஆண்கள் ஓரளவு படித்துள்ளனர்.
ஜூன் பிற்பகுதியிலிருந்து செப்டம்பர் வரையிலான பருவமழை மாதங்களைத் தவிர, அவர்கள் கோதுமை விளைவிப்பதற்காக தங்கள் நிலத்தில் பயிரிடும் போது, ஆண்கள் ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் வாழ்வது அரிது. கோவிட்-19 ஊரடங்கு எனும் கடுமையான மாதங்களுக்குப் பிறகு பெரும்பாலான ஆண்கள் சூரத்தில் புடவை வெட்டும் ஆலையில் வேலைக்கு சென்றுவிட்டனர். அங்கு நீண்ட துணிகள் ஆறு மீட்டர் நீளத்திற்கு வெட்டப்பட்டு நுனிகளில் மணிகள் அல்லது முடிச்சுகள் போடப்படுகின்றன. முற்றிலும் திறன்சாரா இப்பணியில் அவர்கள் ஒரு நாளுக்கு ரூ. 350-400 வரை சம்பாதிக்கின்றனர்.
கிராமங்களில் பெண்களை விட்டுவிட்டு சூரத், அகமதாபாத், மும்பை, ஜெய்பூர், புதுடெல்லி போன்ற நகரங்களுக்கு தெற்கு ராஜஸ்தானிலிருந்து பல தசாப்தங்களாக புலம்பெயரும் லட்சக்கணக்கான ஆண் தொழிலாளர்களில் கோப்லியின் கணவர் சோஹன்ராம் போன்ற பிற கமேதி ஆண்களும் இருக்கின்றனர்.
ஆண்கள் இல்லாத இடத்தில், முற்றிலும் படிப்பறிவற்ற, அரைகுறையாக படித்த பெண்கள் தங்களின் சுகாதார தேர்வுகளையும், முடிவுகளையும் அண்மை ஆண்டுகளாக மிகுந்த சிக்கலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
பெருந்தொற்றுக்கு முன் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சூரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பதின்பருவ சிறுவன் உட்பட மூன்று குழந்தைகளுக்கு தாயான 30களில் உள்ள புஷ்பா கமேதி இச்சூழலை பெண்கள் ஏற்றுக் கொண்டோம் என்கிறார்.
முன்பெல்லாம் மருத்துவ அவசர உதவி தேவைப்பட்டால் பெண்கள் பதற்றம் கொள்வார்கள். அவர் கடந்த கால அனுபவங்கள் சிலவற்றை விளக்குகிறார். குழந்தைக்கு பல வாரங்கள் காய்ச்சல் தொடர்ந்தால், அல்லது வயல் வேலைகளின் போது ஏற்படும் காயத்தில் தொடர் இரத்த கசிவு ஏற்பட்டால், பெண்களுக்கு அச்சம் ஏற்படும் என்கிறார். “எங்களைச் சுற்றி எந்த ஆணுமின்றி, மருத்துச் செலவுக்கு பணமுமின்றி, சிகிச்சைக்கு பொது போக்குவரத்தில் எப்படிச் செல்வது என்றுகூடத் தெரியாது,” என்கிறார் புஷ்பா. “மெதுவாக நாங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டோம்.”
நிலத்தை தூர்வாரும் இயந்திரத்தின் ஓட்டுநருக்கு உதவியாளராக புஷ்பாவின் மூத்த மகன் கிஷன் தற்போது அருகாமை கிராமத்தில் மீண்டும் வேலை செய்கிறான். அவரது இளைய குழந்தைகளான 5 வயது மஞ்சுவும், 6 வயது மனோஹருக்கும் உடல்நிலை பாதித்தால் 5 கிலோமீட்டர் தொலைவில் ராய்டா கிராம அங்கன்வாடிக்குச் செல்ல புஷ்பா கற்றுக் கொண்டுள்ளார்.
“என் மூத்த குழந்தைகளின் பேரில் நான் அங்கன்வாடியில் இருந்து எதுவும் பெற்றதில்லை,” என்கிறார் அவர். ஆனால் அண்மைக் காலங்களாக கர்டாவின் இளம் தாய்மார்கள் ராய்டா நெடுஞ்சாலைக்கு கவனமாக ஏறிச் செல்ல தொடங்கிவிட்டனர். அங்குள்ள அங்கன்வாடியில் பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் சூடான உணவு பரிமாறப்படுகிறது. அவர் மஞ்சுவை இடுப்பில் தூக்கிக் கொண்டு செல்கிறார். அவ்வப்போது அவரை யாரேனும் வண்டியில் ஏற்றிக் கொள்வார்கள்.
“அதெல்லாம் கரோனாவிற்கு முன்பு,” என்கிறார்
புஷ்பா. ஊரடங்குகளுக்கு பிறகு, 2021 மே மாதம் வரை
அங்கன்வாடி மையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியதா என்ற தகவலை அப்பெண்கள் பெற
முடியவில்லை.
5ஆம் வகுப்புடன் கிஷன் பள்ளிப்படிப்பை நிறுத்திய பிறகு, நண்பனுடன் சூரத்தில் சேர்ந்து வேலைக்கு சென்றுவிட்டான். அச்சிறுவனை கையாளவும், குடும்பத்தில் முடிவு எடுக்கும் அதிகாரமும் தனக்கில்லை என புஷ்பா கருதுகிறார். “பிள்ளைகளை எனது கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும், முடிவுகளை எடுக்கவும் நான் முயற்சிக்கிறேன்,” என்கிறார் அவர்.
கர்டாவில் தற்போது வேலைசெய்யும் வயதில் அவரது கணவர் நாதுராம் மட்டுமே உள்ளார். 2020 கோடைக் கால ஊரடங்கின் போது சூரத் காவல்துறையினருடன் மற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மோதிக் கொண்டிருந்தபோது, வாய்ப்புகளற்ற கர்டாவில் அவர் வேலை தேடிக் கொண்டிருந்தார்.
கருத்தடை அறுவை சிகிக்சையின் நன்மைகள் குறித்து புஷ்பாவிடம் கோப்லி கூறியிருந்தார். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு இல்லாததால் ஏற்படும் மருத்துவப் பிரச்னைகள் (ஆறாத காயம் அல்லது நோய்த்தொற்றுகள், குடல் அடைப்பு அல்லது குடல் மற்றும் சிறுநீர்ப்பை சேதம் உட்பட) அல்லது இந்த முறையில் கருத்தடை தோல்வி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பெண்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. மக்கள் தொகை கட்டுப்பாட்டின் இலக்காக இந்த கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது என்பதையும் கோப்லி புரிந்துகொள்ளவில்லை. “கவலை தீர்ந்தது,”என்கிறார் அவர்.
புஷ்பா தனது மூன்று பிள்ளைகளையும் வீட்டிலேயே பெற்றெடுத்தவர். அவரது கணவரின் சகோதரி அல்லது சமூகத்தின் மூத்தோர் தொப்புள்கொடியை வெட்டி ‘லச்சா தாகா’ கொண்டு முனையை கட்டுகின்றனர். இந்துக்கள் புனிதமாக கருதி மணிக்கட்டில் கட்டிக் கொள்ளும் ஒருவகைக் கயிறு அது.
இளம் தலைமுறை கமெதி பெண்கள் இதுபோன்ற ஆபத்தான வீட்டுப் பிரசவங்களை செய்து கொள்வதில்லை, என்கிறார் கோப்லி. அவரது ஒரே மருமகள் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். “நாங்கள் அவளது உடல்நலத்திலும், எங்கள் பேரக்குழந்தைகளின் உடல்நலத்திலும் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.”
18 வயதாகும் அவரது மருமகள் தற்போது பிரசவத்திற்காக ஆரவல்லி மலையில் உள்ள தனது தாய்வீட்டிற்குs சென்றிருக்கிறார். அங்கு அவசரத் தேவை என்றால் வேகமாக வெளியேறுவது மிகவும் கடினம். “பிரசவ காலம் வந்தவுடன் அவளை நாங்கள் இங்கு கொண்டு வந்துவிடுவோம், இரண்டு அல்லது மூன்று பெண்கள் அவளை டெம்போவில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்.” உள்ளூர் பொதுப் போக்குவரத்திற்கான மூன்று சக்கர பெரிய வண்டியை தான் கோப்லி டெம்போ என்கிறார்.
“இப்போதுள்ள பெண்கள் வலியை பொறுத்துக் கொள்வதில்லை,” என்று அங்கு திரண்டுள்ள அண்டை வீட்டு மற்றும் உறவுக்காரப் பெண்களை சுட்டிகாட்டியபடி சிரிக்கிறார் கோப்லி. அவர்களும் அதற்கு தலையாட்டியபடி சிரிக்கின்றனர்.
இக்குடியிருப்பில் வசிக்கும் ஏனைய பெண்களில் இரண்டு அல்லது மூன்று பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளனர். ஆனால் இதுபற்றி பேசுவதற்கு அவர்கள் கூச்சப்படுகின்றனர். வேறு எந்த நவீன கருத்தடை முறைகளையும் பொதுவாக பயன்படுத்துவதில்லை, “இளம்பெண்கள் சாதுர்யமாக உள்ளனர்,” என்கிறார் கோப்லி
அருகாமை சுகாதார மையம் 10 கிலோமீட்டர் தொலைவில் நந்தேஷ்மா கிராமத்தில் உள்ளது. கருவுற்றதை உறுதி செய்தவுடன் கர்டா இளம்பெண்கள் இங்குள்ள மையத்தில் பதிவு செய்து கொள்கின்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் அப்பெண்கள் கிராமத்திற்கு வந்து கால்சியம் மற்றும் இரும்பு மாத்திரைகளை சுகாதார பணியாளர்கள் தரும்போது வாங்கிக் கொள்கின்றனர்.
“கர்டாவைச் சேர்ந்த பெண்கள் குழுக்களாக செல்கின்றனர், சிலசமயம் தொலைவில் உள்ள கோகுண்டா CHCக்கு செல்கின்றனர்,” என்கிறார் ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவரும், அக்கிராமத்தில் வசிப்பவருமான பம்ரிபாய் காலுசிங். கமேதி பெண்கள் சொந்தமாக முடிவெடுக்கத் தொடங்கியதால் அவர்களின் உடல்நிலை மாற்றம் ஏற்பட்டது. முன்பெல்லாம் அவர்கள் ஆண்களின்றி தனியாக கிராமத்தைவிட்டு வெளியே செல்ல மாட்டார்கள், என்கிறார் அவர்.
கமேதி ஆண்கள் உட்பட புலம்பெயர் தொழிலாளர்களுடன் பணியாற்றி வரும் ஆஜீவிகா பீரோவின் உதய்பூர் பிரிவு சமூக ஒருங்கிணைப்பாளர் கல்பனா ஜோஷி பேசுகையில், பெருமளவுக்கு புலம்பெயர்வு நிகழ்வதால் கிராமங்களில் ‘விட்டுச் செல்லப்படும்’ பெண்கள் மெல்ல சுயமாக முடிவெடுக்கத் தொடங்கிவிட்டனர் என்கிறார். “அவசர ஊர்திக்கு எவ்வாறு தாங்களே அழைப்பது என்பதை இப்போது அவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். மருத்துவமனைக்கு தாங்களாகவே செல்கின்றனர், தாமாகவே முன்வந்து என்ஜிஓ பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடம் பேசுகின்றனர்,” என்கிறார் அவர். “பத்தாண்டுகளுக்கு முன்பு முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது.” சூரத்திலிருந்து ஆண்கள் திரும்பும் வரை முன்பெல்லாம் அனைத்து மருத்துவ தேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், என்கிறார் அவர்.
இக்குடியிருப்பில் வசிக்கும் ஏனையப் பெண்களில் இரண்டு அல்லது மூன்று பேர் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். ஆனால் இதுபற்றி பேசுவதற்கு அவர்கள் கூச்சப்படுகின்றனர். வேறு எந்த நவீன கருத்தடை முறைகளையும் பொதுவாக பயன்படுத்துவதில்லை, “இளம்பெண்கள் சாதுர்யமாக உள்ளனர்,” என்கிறார் கோப்லி. அவரது மருமகள் திருமணமாகி ஓராண்டிற்கு பிறகே கருவுற்றார்.
*****
கர்டாவிலிருந்து 15 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பார்வதி மெக்வால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசுகையில், புலம்பெயர் தொழிலாளரின் மனைவியாக இருப்பது எப்போதும் கவலை அளிக்கக்கூடியது என்கிறார். அவரது கணவர் குஜராத்தின் மேஷனாவில் உள்ள சீரகம் பொட்டலம் கட்டும் ஆலையில் வேலை செய்தார். சிறிது காலம் மெஹ்சனாவில் தேநீர் கடை நடத்தி கணவருடன் வாழ்ந்து வந்த அவர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக உதய்பூர் திரும்பினார்.
2018ஆம் ஆண்டு கணவர் அருகில் இல்லாதபோது அவருக்கு சாலை விபத்து ஏற்பட்டது. கீழே விழுந்தபோது நெற்றியில் ஆணி குத்திவிட்டது. காயங்கள் ஆறி மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர், கண்டறியப்படாத மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவர் சொல்கிறார்.
“நான் எப்போதும் என் கணவர், குழந்தைகள், பணம் எனக் கவலைப்படுவேன், அப்படியான நேரத்தில் தான் விபத்து நடந்தது,” என்கிறார் அவர். அவருக்கு சிறிது காலம் மனப்பித்தும், ஆழ்துயரமும் இருந்தது. “நான் செய்ததையும், அலறியதையும் கண்டு அனைவரும் அஞ்சினர். ஒட்டுமொத்த கிராமத்தில் யாரும் என் அருகே வர மாட்டார்கள். என் மருத்துவப் பரிசோதனை காகிதங்கள் யாவற்றையும் கிழித்துவிட்டேன். ரூபாய் நோட்டுகளையும் என் துணிகளையும் கூட கிழித்தேன்...” தனக்கு ஏற்பட்ட மனப்பித்து பற்றியும், அப்போது அவர் நடந்து கொண்ட விதத்தையும் நினைத்து வெட்குகிறார்.
“ஊரடங்கு வந்தது. மீண்டும் அதே நிலைக்குச் சென்றுவிட்டது,” என்கிறார் அவர். “எனக்கு மீண்டும் மற்றொரு மனநிலை பாதிப்பு கிட்டத்தட்ட நேர்ந்தது.” அவரது கணவர் மெஹ்சனாவிலிருந்து 275 கிலோமீட்டர் நடந்தே வீட்டிற்கு வந்தார். இந்தப் பதற்றம் பார்வதியை இன்னும் விளிம்பிற்கு தள்ளியது. அவரது இளைய மகன் உதய்பூரிலேயே தங்கியிருக்கிறான். அவன் உணவகத்தில் ரொட்டி செய்யும் வேலையைச் செய்கிறான்.
மெக்வால் சமூகம் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களில் விட்டுச் செல்லப்படும் பட்டியலினப் பெண்கள் வாழ்வாதாரத்திற்கு சொல்ல முடியாத இன்னல்களை சந்திப்பதாக பார்வதி சொல்கிறார். “ஒரு தலித் பெண்ணிற்கு மனநிலை பாதிப்பு அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு நலமடைந்திருந்தார் என்றால், எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?”
பார்வதி, அரசு அலுவலகத்தில் உதவியாளராகவும், அங்கன்வாடி பணியாளராகவும் வேலை செய்தவர். விபத்திற்குப் பிறகு மனநலம் பாதிக்கப்பட்டவுடன், வேலையைத் தொடர்வது கடினமானது.
2020 தீபாவளியின் போது, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில், மீண்டும் புலம்பெயர்ந்து வேலைக்குப் போக வேண்டாம் என அவர் தனது கணவரிடம் கூறினார். குடும்பத்தினரிடமும், கூட்டுறவுச் சங்கத்திலும் கடன் வாங்கி தனது கிராமத்தில் பார்வதி சிறிய மளிகைக் கடை வைத்தார். அவரது கணவர் சுற்றுவட்டார கிராமத்தில் தினக்கூலிக்கு வேலை தேடினார். “பிரவாசி மஸ்தூர் கி பீவி நஹின் ரெஹ்னா ஹை [புலம்பெயர் தொழிலாளியின் விட்டுச் செல்லப்பட்ட மனைவியாக இருக்க விரும்பவில்லை],” என்கிறார் அவர். “அது மிகுந்த மனஅழுத்தம் தரும்.”
கர்டாவில் ஆண்களின்றி பெண்கள் சொந்தமாக வாழ்வாதாரத்தை தேடுவது சாத்தியமற்றது என பெண்கள் ஒப்புக் கொள்கின்றனர். கமேதி பெண்களுக்கு கிடைக்கும் ஒரே வேலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலை மட்டும்தான் (MGNREGA). மழைக்காலம் தொடங்கிய நேரத்தில் கர்டாவிற்கு வெளியே வசிக்கும் பெண்கள் 2021ஆம் ஆண்டிற்கான 100 நாள் வேலைகளை முடித்திருந்தனர்.
“எங்களுக்கு ஆண்டுதோறும் 200 நாட்கள் வேலை வேண்டும்,” என்கிறார் கோப்லி. இப்போது பெண்கள் காய்கறிகளை விளைவித்து அருகில் உள்ள சந்தையில் விற்க முயல்கின்றனர் என்கிறார். இதுவும் ஆண்களை அணுகாமல் எடுத்த மற்றொரு முடிவு. “எது எப்படியோ எங்களுக்கு உண்பதற்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது, சரிதானே?”
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில்: சவிதா