மும்பையில் நடக்கும் போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள ஏன் பாட்டி செல்கிறார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தார் பத்து வயது நுடான் ப்ராமணே. ஆகவே அவரை ஜிஜாபாய் ப்ராமணே உடன் அழைத்து செல்ல முடிவெடுத்தார். “பழங்குடியினரின் பிரச்சினைகளையும் துயரங்களையும் தெரிந்து கொள்ள இவளை என்னுடன் அழைத்து வந்திருக்கிறேன்,” என்கிறார் தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்த்தின் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்திருக்கும் ஜிஜாபாய்.
”தில்லியில் போராடும் (மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து) விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்திருக்கிறோம். உள்ளூர் பிரச்சினைகள் சிலவற்றை நோக்கியும் கவனத்தை ஈர்க்க வந்திருக்கிறோம்,” என்கிறார் 65 வயது ஜிஜாபாய். ஜனவரி 25 மற்றும் 26 தேதிகளில் ஆசாத் மைதானில் நுடானுடன் தங்கிவிட்டார்.
நாசிக் மாவட்டத்தின் அம்பெவானி கிராமத்திலிருந்து ஜனவரி 23ம் தேதி கிளம்பிய விவசாயக் குழு வுடன் அவர்கள் வந்திருக்கிறார்கள்.
பல பத்தாண்டுகளாக 70 வயது கணவர் ஷ்ராவனுடன் சேர்ந்து திந்தோரி தாலுகாவில் இருக்கும் கிராமத்தின் ஐந்து ஏக்கர் வன நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார் ஜிஜாபாய். இருவரும் கோலி மகாதேவ் என்கிற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். 2006ம் ஆண்டு வந்த வன உரிமை சட்ட ப்படி அவர்களுக்கு நில உரிமை கிடைத்திருக்க வேண்டும். ”ஆனால் எங்கள் பெயரில் ஒரு ஏக்கருக்கும் குறைவாகத்தான் நிலம் கிடைத்தது. அதில் நாங்கள் நெல், கோதுமை முதலியவற்றை விளைவிக்கிறோம்,” என்கிறார் அவர். “மிச்ச நிலம் வனத்துறையிடம் இருக்கிறது. நிலத்துக்கு அருகே சென்றாலே வனத்துறை அதிகாரிகள் எங்களை அச்சுறுத்துகின்றனர்.”
மும்பையில் நடக்கவிருந்த குடியரசு தின போராட்டத்தில் கலந்து கொள்ள ஜிஜாபாயின் மகனான சஞ்சய், மகளை அனுப்ப உடனே ஒப்புக்கொண்டார். “2018ம் ஆண்டு நடந்த விவசாயிகளின் நெடும்பயணத்தில் கலந்து கொள்ள விரும்பினாள். அப்போது நாங்கள் ஒரு வாரம் நாசிக்கிலிருந்து மும்பைக்கு நடந்தோம். இவள் சிறு பிள்ளையாக இருந்தாள். அந்த தூரத்தை இவள் நடக்க முடியுமா என தெரியவில்லை. இப்போது இவள் வளர்ந்துவிட்டாள். நீண்ட தூரம் நடக்க வேண்டிய அவசியமும் இல்லை,” என்கிறார் ஜிஜாபாய்.ஜிஜாபாயும் நுடானும் நாசிக் குழுவுடன் ட்ரக்குகளிலும் பிற வாகனங்களிலும் சென்றனர். கசரா கணவாயில் மட்டும் அனைவரும் வாகனங்களிலிருந்து இறங்கி தங்களின் வலிமையை காட்ட 12 கிலோமீட்டர் நடந்தனர். “என் பாட்டியுடன் நானும் நடந்தேன்,” என்கிறார் வெட்கப் புன்னகையுடன் நுடான். “நான் சோர்வடையவே இல்லை.” நாசிக்கிலிருந்து ஆசாத் மைதானத்தை அடைய 180 கிலோமீட்டர்கள் அவர்கள் பயணித்தனர்.
“இவள் ஒருமுறை கூட அழவில்லை. அடம் பிடிக்கவில்லை. மும்பையை அடைந்தபின் இன்னும் அதிக உத்வேகம்தான் அடைந்தாள்,” என்கிறார் ஜிஜாபாய் பெருமையுடன் நுடானின் நெற்றியை தடவியபடி. “ரொட்டியும் மிளகாய் சட்னியும் பயணத்துக்காக கொண்டு வந்தோம். எங்கள் இருவருக்கும் அதுவே போதுமாக இருந்தது,” என்கிறார் அவர்.
அம்பெவானியில் இருக்கும் நுடானின் பள்ளி கொரொனாவால் மூடப்பட்டிருக்கிறது. குடும்பத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. ஆகவே இணையவழி கல்விக்கும் சாத்தியமில்லை. “நுடானுக்கு இது ஒரு நல்ல கற்றல் அனுபவமாக இருக்கும் என நினைத்தேன்,” என்கிறார் ஜிஜாபாய்.
“எத்தனை பெரிது என தெரிந்து கொள்ள விரும்பினேன்,” என்கிறார் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நுடான். மும்பையை பார்க்க வேண்டுமென்பது அவரின் நீண்ட நாள் ஆசை. “ஊருக்கு திரும்பியதும் என் நண்பர்களிடம் இதை பற்றி எல்லாவற்றையும் சொல்வேன்.”
பாட்டி பல வருடங்களாக நிலவுரிமை கேட்கிறாரென்பது நுடானுக்கு தெரியும். விவசாயக் கூலிகளான அவரின் பெற்றோருக்கு கிராமத்தில் அதிகமாக வேலை இல்லையென்பதும் அவருக்கு தெரியும். மோடி அரசால் கொண்டு வரப்பட்டு, நாட்டிலிருக்கும் விவசாயிகள் எதிர்த்துக் கொண்டிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை பற்றியும் அவர் தற்போது கற்றுக் கொண்டிருக்கிறார்.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
,
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020
மற்றும்
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
ஆகியவை மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும்.2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். “பெருநிறுவனங்கள் விவசாயத்துக்கு தேவையில்லை. அவர்கள் எங்களின் நலனை பற்றி யோசிக்க மாட்டார்கள்,” என்கிறார் ஜிஜாபாய்.
விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும்
குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை
யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை எதிர்க்க விவசாயிகள் தெருக்களில் இறங்க வேண்டும் என்கிறார் ஜிஜாபாய். “குறிப்பாக பெண்கள்,” என ‘ஏன் வயோதிகர்களும் பெண்களும் போராட்டத்தில் இருத்தி வைக்கப்படுகின்றனர்?’ என்ற இந்தியாவின் தலைமை நீதிபதி ஷரத் பொபடேவின் கேள்வியை சுட்டிக் காட்டி சொல்கிறார்.
”என்னுடைய வாழ்நாளை விவசாய நிலத்தில் வேலை செய்து கழித்திருக்கிறேன்,” என்கிறார் ஜிஜாபாய். “என் கணவர் உழைத்த அளவுக்கு நானும் உழைத்திருக்கிறேன்.
மும்பைக்கு வரலாமா என நுடான் கேட்டதும் அவர் சந்தோஷமடைந்திருக்கிறார். “இந்த விஷயங்களை பற்றி இளம்பருவத்திலேயே இவள் புரிந்து கொள்வது முக்கியம். இவளை ஒரு சுதந்திரமான பெண்ணாக்க நான் விரும்புகிறேன்.”
தமிழில்: ராஜசங்கீதன்