சையது கனி கான் அன்று மயக்கம் போடும் நிலையை அடைந்துவிட்டார். அவரின் நிலத்தில் பயிர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் அசாதாரணமாக உணர்ந்தார். பயிர்களுக்கு அவர் அடித்துக் கொண்டிருந்த பூச்சிக் கொல்லி மருந்தின் நெடி தலைசுற்ற வைத்தது. “அப்போதுதான் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எனக்கு எழுந்தது? இந்த பூச்சிக்கொல்லி மருந்து அடித்து நானே இப்படி உணருகிறேன் எனில், இந்த நெல்லை உண்ணும் மக்களுக்கு நான் விஷத்தை கொடுக்கிறேன் என்று பொருள்,” என்கிறார் அவர்.
இருபது வருடங்களுக்கு முன் 1998ம் ஆண்டு நேர்ந்த அந்த திருப்பத்துக்கு பிறகு கனி, ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் பயன்படுத்துவதை நிறுத்தினார். மேலும் அவர் உள்நாட்டு நெல் ரகத்தையே விளைவிக்கத் தொடங்கினார். “என்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தின் மூத்தவர்கள் நிலத்துக்கு செல்லும்போது நானும் கூட சென்றிருக்கிறேன். அவர்கள் பயிரிட்ட பல பயிர்களோடு ஒப்பிடும்போது உள்நாட்டு ரக நெல் குறைவாகவே இருந்தது,” என நினைவுகூர்கிறார்.
மாண்டியாவில் 10 பேருக்கும் குறைவானவர்களே உள்நாட்டு வகைகளை இயற்கை முறையில் விளைவிப்பதாக சொல்கிறார் 42 வயது விவசாயி. அவர் இருக்கும் மாண்டியா மாவட்டத்தில் 79,961 ஹெக்டேர்களில் நெல் விளைவிக்கப்படுகிறது. “அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாலும் சமயங்களில் குறைவான விளைச்சலே கிட்டுவதாலும் உள்நாட்டு நெல் ரகம் அதற்கான முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. பயிரைவிட அதிகமாக களைகளே இருக்கும்,” என்கிறார் அவர்.
மரபணு மாற்ற வகைகள், நல்ல விளைச்சலை குறைந்த காலத்தில் கொடுக்குமென பல விவசாயிகளுக்கு ஆர்வம் காட்டப்படுகிறது. சில நேரங்களில் அது நடக்கவும் செய்கிறது. அதுவும் அதிகமாக ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லியையும் நீரையும் பயன்படுத்திதான் சாத்தியப்படுவதாக உள்நாட்டு வகைகளை முன்னிறுத்துபவர்கள் சொல்கிறார்கள். விளைச்சல் குறைந்தாலும் கூட, செலவுகள் அதிகரிக்கின்றன. ஆரோக்கியம் கெடுகிறது. விவசாயக் கடன்கள் தோன்ற தொடங்குகிறது.
உள்நாட்டு நெல் ரகம் மெல்ல அழிவதை கனி கவனிக்கத் தொடங்கியதும் பல்வேறு உள்நாட்டு வகைகளில் சேகரித்து பாதுகாக்கத் தொடங்கினார். 1996ம் ஆண்டில் அவர் 40 வகை விதைகளை சேகரித்தார். விதை சேகரிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் காலப்போக்கில் வளர்ந்ததில், இந்தியா முழுவதுமிருந்து 700 நாட்டு நெல் வகைகளை அவர் சேகரித்த தற்போது வைத்திருக்கிறார். பல்வேறு விதைகளை பெறுவதற்கென சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, மேற்கு வங்கம் முதலிய மாநில விவசாயிகளிடம் ஒருவகை பண்டமாற்று முறையை கையாளுகிறார் கனி.
மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் சகோதரரின் குடும்பத்துடன் அவர் வாழும் வீட்டுக்குள் நுழையும்போதே அவரின் ஆர்வம் உங்களுக்கு புரிந்துவிடும். சுவர்களின் அருகே அழகாக அடுக்கப்பட்ட கண்ணாடி குடுவைகளில் எண்ணற்ற நெல் விதைகளும் நெல் பூக்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு அருகே ஒவ்வொரு வகையை பற்றிய தகவல்களும், ஆர்வத்துடன் வரும் விவசாயிகள், விவசாய மாணவர்கள் ஆகியோருக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு நடந்து செல்வது இந்தியாவின் வளமான நெல் வகைகளுக்கு மத்தியில் நடப்பதை போலிருந்தது.
”வெவ்வேறு வகைகளை சேகரித்து பாதுகாப்பதுதான் எனது வேலையின் இலக்கு. அவற்றில் லாபமீட்டுவது அல்ல,” என்கிறார் கனி. இயற்கை முறைகள் பயன்படுத்தி பயிரிட விரும்புபவர்களுக்கு சாதகமான விலையில் விதைகளை அவர் கொடுக்கிறார்.
ஒரு ஏக்கரில் நெல் விளைவிக்க 8000லிருந்து 10000 ரூபாய் வரை ஆகிறது என்கிறார் அவர். நாட்டு ரகங்களை விதைத்து அவை மரபணு மாற்ற ரகங்களை காட்டிலும் குறைவான விளைச்சலை கொடுத்தாலும் விவசாயிக்கு நஷ்டம் ஏற்படுவதில்லை. “இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெல், ரசாயன மருந்துகள் போட்டு விளைவிக்கப்பட்ட நெல் வகைகளை விட 20-40 சதவிகிதம் அதிக வருமானம் ஈட்டுகிறது,” என்கிறார் அவர்.
நாட்டு நெல்லுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கனி சொல்கிறார். உதாரணமாக ‘நவரா’ என்கிற வகை மூட்டு வலிக்கு நல்லது. ’கரிகிஜிவிலி அம்பெமொகர்’ வகை தாய்ப்பால் அதிகரிக்கச் செய்கிறது. ‘சன்னாக்கி’ என்கிற வகை குழந்தைகளின் வயிற்றுப் போக்கை குணப்படுத்துகிறது. ‘மகதி’ நெல், கால்நடைகளுக்கு ஏற்படும் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
தமிழ்நாட்டில் ‘மாப்பிள்ள சம்பா’ என்கிற நெல்வகை இளம் மணமகனுக்கு வலிமை பெற கொடுக்கப்படுவதாக கனி சொல்கிறார். பாரம்பரியமாக மாநிலத்தின் சில பகுதிகளில், மணமகன் அவனது வலிமையை காட்ட பாறையை தூக்கும் வழக்கம் இருக்கிறது. ‘இந்த நெல் அந்த விளையாட்டை அவன் செய்து காட்ட உதவக் கூடும்.
நெல் விளைந்த இடம், சுவை மாறுபாடு, மருத்துவ குணம் போன்ற விவரங்கள் கனி வீட்டில் இருக்கும் ஒவ்வொரு வகைக்கும் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “நாட்டு ரகங்களுக்கென தனித்தன்மைகளும் குணங்களும் இருக்கின்றன. அவை அளவிலும் உருவத்திலும் நிறத்திலும் வேறுபடுபவை,” என்கிறார் அவர்.
அப்பாவின்
வழி கனிக்கு வந்த ‘பெருந்தோட்டம்’ என்கிற அந்த வீடு, மாண்டியாவின் 16 ஏக்கர் விவசாய
நிலத்தில் அமைந்திருக்கிறது. இங்கு அக்குடும்பம் நெல்லும் மாம்பழங்களும் காய்கறிகளும்
விளைவிக்கிறது. கால்நடைகளையும் வளர்க்கிறது. 36 வயது மனைவியான சையதா ஃபிர்தோஸ் நாட்டு
நெல்லை பாதுகாக்கும் கனியின் முயற்சிகளுக்கு துணை நிற்கிறார். விவசாயக் கழிவிலிருந்து
சுவரோவியம், மாலைகள், ஆபரணங்கள் முதலியவற்றை அவர் உருவாக்குகிறார். வீட்டுக்கு வருபவர்களுக்கும்
உள்ளூர் கடைகளுக்கும் சாதக விலைகளில் அவற்றை விற்கிறார்.
விதை
பாதுகாப்பு மையம் என்பதையும் தாண்டி அவர்களின் வீடு தற்போது ஒரு வகுப்பறையாகவும் மாறி
இருக்கிறது. மாணவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் நெல்லின் அற்புதங்கள் காட்டி
விளக்கப்படுகின்றன. கனியின் அறிதல் ‘விவசாய விஞ்ஞானி’ என்ற பெயரை உள்ளூரில் அவருக்கு
பெற்றுக் கொடுத்திருக்கிறது. விவசாய விஷயங்களுக்கு ஆலோசகராகவும் அவர் மாறியிருக்கிறார்.
இதனால் பல நகரங்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விவசாய அறிவியல் மையங்களுக்கும்
பிற நிறுவனங்களுக்கும் அவர் சென்று இயற்கை வேளாண்மை மற்றும் விதை பாதுகாப்பு பற்றி
பேச முடிகிறது.
சில
விருதுகளை பெற்றபோதும் அரசிடமிருந்து எந்த உதவியும் கனிக்கு கிடைக்கவில்லை. 2007ம்
ஆண்டில் மாண்டியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் விவசாயத்தில் புதுமை செய்ததற்காக ‘அரசமா மென்செகவுடா
விருது’ வழங்கியது. கர்நாடக அரசின் ‘கிருஷி பண்டித விருது’ 2008-09 ஆண்டுக்கும் (ரூ.25000
பரிசுத்தொகை) ‘ஜீவவைவித்ய விருது’ 2010ம் ஆண்டுக்கும் (ரூ.10000 கிடைத்தது) அவருக்கு
கொடுக்கப்பட்டது.
“நாட்டு ரகங்கள் பாதுகாக்கப்பட்டு இறுதியில் மக்களை சென்றடைய வேண்டும்,” என்கிறார் அவர். “நம்மிடமிருக்கும் வேறுபட நெல் வகைகளை அடையாளப்படுத்துவதிலிருந்து இந்த வேலையை தொடங்கலாம்.”
தமிழில் : ராஜசங்கீதன்