“இங்கிருந்துச் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆரம்பத்தில், அவர்களைப் புறக்கணித்தோம். பின்னர் வனத்துறை அதிகாரிகள் வரும்போதெல்லாம் ஒழிந்து கொண்டோம். இப்படித்தான் பல நாட்களை நாங்கள் கடந்தோம். இந்த முடிவை 2008-ம் ஆண்டே எடுத்துள்ளனர் என நான் நினைக்கிறேன். காட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் உடனடியாக நாங்கள் வெளியேற வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் எங்களிடம் கூறினர்” என நினைவு கூர்கிறார் தல்கான் கிராமத்தில் வாழ்ந்து வாரும் பாபுலால் குயாந்தர்.

இங்கிருந்துச் செல்ல மாட்டோம் என நான்கு வருடங்களாக மறுத்தப் பிறகு,  வற்புறுத்தலின் பேரில் தங்கள் பாரம்பர்ய கிராமத்தை விடுத்து 16கிமீ தொலைவிலுள்ள சரத்புரா கிராமத்தில் தஞ்சம் அடைந்தனர் தல்கான் ஆதிவாசிகள். தாரா-டெக் என அழைக்கப்படும் இந்தக் கிராமம், பன்னா மாவட்டத்தின் அமன்காஞ் தாலுகாவிற்குச் செல்லும் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.

2008-2009ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகள் அனைத்தும் இறந்ததால், புலிகள் வாழ்விடத்திற்கு அதிக இடங்களை உருவாக்க 12 கிராமங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. தல்கானும் அதில் ஒன்று. காப்பகத்தின் மையப் பகுதியில் 16 கிராமங்கள் வருவதாக 2011 அறிக்கை ஒன்று கூறுகிறது. ( 11 பன்னா மாவட்டத்திலும் ஐந்து சத்தர்பூர் மாவட்டத்திலும் வருகிறது; இடமாற்றம் செய்யப்படாத நான்கு கிராமங்களின் நிலை என்னவென்று உறுதி செய்ய முடியவில்லை )

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி அப்போதைய தல்கானில் 171 குடும்பங்கள் இருந்துள்ளன. அவர்களில்

பெரும்பாலானோர் ராஜ் கோண்ட் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதில், 37 குடும்பங்கள் மட்டுமே சரத்புராவில்  உள்ளன. மற்றவர்கள் சாத்னா, கட்னி, அஜய்கார் போன்ற நகரங்களுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர்.

எனினும், இந்த இடமாற்றம் பல சட்ட விதிமுறைகளை மீறியுள்ளது. புலிகள் திட்டத்தின் பிரிவு 4.9-ன் படி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் இடமாற்ற தொகுப்புகளுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்குகிறது: ஒன்று, குடும்பத்தினர் 10 லட்சத்தை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டு இடமாற்ற செலவுகளைச் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவது, வனத்துறையும் மாவட்ட ஆட்சியரும்  மறுவாழ்வு நடைமுறைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

Babulal Kuandhar’s house   Sarathpura Hamlet, Tara Village, Amanganj tehsil, Panna District
PHOTO • Saurav Verma
Shoba Rani Kuandhar’s house in Sarathpura Hamlet, Tara Village, Amanganj tehsil, Panna District
PHOTO • Saurav Verma

இடது: சரத்புரா கிராமத்திலுள்ள பாபுலால் குயாந்தரின் வீடு; ‘இங்கிருந்து செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை’. வலது: ஷோபா  ராணியின் வீடு; ‘மறுபடியும் எங்களை அப்புறப்படுத்தினால் நாங்கள் எங்கு செல்வது?’

தங்களிடம் நிலப் பட்டா உள்ளது என்றும் பல தலைமுறைகளாக இந்தக் கிராமத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் எனக் கூறினாலும், தல்கான் மக்களுக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் மறுகுடியேற்றத்திற்கு தாங்களே மற்றொரு இடத்தைப் பார்த்துக் கொண்டனர். தற்போது, சரத்புராவில் தங்கள் புதிய வீடுகளில் வாழ்ந்து வரும் அவர்கள், எந்த நிலப்பட்டாவும் இல்லாமல் எப்போது வெளியேற்றப்படுவோம் என்ற கவலையோடு இருக்கின்றனர்.

“பாதித் தொகையை (இழப்பீடு) செலவழித்து எங்கள் வீட்டைக் கட்டினோம். ஆறு மாதங்களாக தற்காலிக வீடுகளில்தான் வசித்து வந்தோம். இந்த நிலத்திற்குப் பட்டா கூட எங்களிடம் கிடையாது. மறுபடியும் எங்களை அப்புறப்படுத்தினால் நாங்கள் எங்கே செல்வது?” என கேட்கிறார் பாபுலாலிம் தாயார் ஷோபா ராணி குயாந்தர்.

பல தல்கான் குடும்பத்தினர் இன்னும் இழப்பீடு தொகையை முழுதாகப் பெறவில்லை. ஒரு சிலர் ஆரம்பத்திலேயே 10 லட்சம் பெற்றுக்கொண்டு நகரங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனால் சொந்தமாக நிலம் இல்லாமல், பணத்தை வைத்துக் கொண்டு காட்டிற்கு வெளியே எங்களால் எப்படி உயிர் வாழ முடியும்? அதனால் எங்களில் சிலர் மறுத்துவிட்டதாக” கூறுகிறார் பாபுலால். எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர் – சரத்புராவில் உள்ள 37 குடும்பம் – இறுதியில் குடும்பம் ஒன்றிற்கு எட்டு லட்ச ரூபாய் மட்டுமே பெற்றனர். ஏன் இந்தத் தொகை குறைக்கப்பட்டது என தெளிவாக தெரியவில்லை. இதற்குப் பதிலாக, தங்கள் வீடுகளையும், சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருந்த விவசாய மற்றும் வீட்டு நிலம் உள்பட ஆறு ஏக்கர் நிலத்தையும் விட்டுக் கொடுத்தனர்.

எந்தவொரு மீள்குடியேற்றத்திற்கு முன்பும் கிராமத்தினரிடம் சம்மதம் வாங்க வேண்டும் என வன உயிர் (பாதுகாப்பு) சட்டம், பிரிவு 38 (V) ல் கூறப்பட்டுள்ளது. இதுவும் தல்கானில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. “எங்களை அவர்கள் (வனத்துறையினர்) தினமும் துன்புறுத்துவார்கள். சில நாட்களில், புலியின் பழைய தோலைக் கொண்டு வந்து, புலிகளை வேட்டையாடியதாக உங்கள் மீது பொய்யான வழக்கு போடுவோம் என அச்சுறுத்துவார்கள். மிளாவைக் கொன்றதாக கூறி என்னையும் சில நாட்கள் சிறையில் அடைத்தார்கள். ஒருநாள் எங்கள் வீடுகளை அழிக்க யானைகளை கொண்டு வந்தனர். இதற்குப் பிறகு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்கிறார் தீலன் குயாந்தர். கூலித் தொழிலாளியான இவர், பாபுலாலின் உறவினராவார்.

Deelan Kuandhar in his house in Sarathpura Hamlet, Tara Village, Amanganj tehsil, Panna District
PHOTO • Maithreyi Kamalanathan
Sarathpura Hamlet, Tara Village, Amanganj tehsil, Panna District
PHOTO • Maithreyi Kamalanathan

“ஒருநாள் எங்கள் வீடுகளை அழிக்க யானைகளை கொண்டு வந்தனர். அதன்பிறகு எங்களால் என்ன செய்ய முடியும்?’ என கேட்கிறார் தீலன் குயாந்தர் (இடது); இவரும் தற்போது சரத்புராவில் வசித்து வருகிறார் (வலது)

எப்படி தன்னுடைய திறன் புலிகள் பாதுகாப்பில் முக்கியமானதாக இருக்கிறது என மற்றொரு சரத்புரா வாசியான பாரத் குயாந்தர் நினைவு கூர்கிறார். “ஓடிப்போன புலியை மறுபடியும் காப்பகத்திற்குக் கொண்டு வரவும் அதற்கு ரேடியோ பட்டை மாட்டிவிடவும் வனத்துறைக்கு நான் உதவி செய்வேன். காடுகளில் உள்ள மக்கள் புலிகளுக்குப் பயப்படுவதில்லை. அதன் அருகிலேயே நாங்கள் நடந்து செல்வோம்.”

இத்தகைய கூட்டு வாழ்வு, வன உரிமை சட்டம், 2006 -ல் பாதுகாக்கப்பட்டுள்ளது. வனத்தில் குடியிருப்பவர்களால் வன உயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படுகிறது என்பதை நிறுவ வேண்டியது முக்கியமானது என இச்சட்டத்தின் பிரிவு 4(2)(b) மற்றும் 4(2)(c) கூறுகிறது. இடமாற்றத்திற்கு முன் வேறு தெரிவுகள் ஆராயப்பட்டதா என தெளிவாக தெரியவில்லை. வனத்துறையை நான் தொடர்பு கொண்டபோது, அனைத்து விபரங்களும் வனத்துறை இணையதளத்தில் உள்ளது என என்னிடம் கூறினர். ஆனால் தால்கான் மக்களுக்கான அல்லது இடையக மற்றும் மையப் பகுதிகளில் வாழும் கிராமத்தினரின் மீள்குடியேற்ற நடைமுறைகளுக்கான எந்த தகவல்களும் அந்த இணையதளத்தில் இல்லை.

“புலிகள் பாதுகாப்பு திட்டத்தை தயாரிக்கும் போது, விவசாயம், வாழ்வாதாரம், வளர்ச்சி மற்றும் புலிகள் அதிகமாகவுள்ள காட்டில் அல்லது புலிகள் காப்பகத்தில் வாழும் மக்களின் விருப்பங்களையும் மாநில அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்” எனவும் வன உயிர் (பாதுகாப்பு) சட்டம் பிரிவு 38 (V)ல் கூறப்பட்டுள்ளது.

One of the two handpumps present within Sarathpura Hamlet, Tara Village, Amanganj tehsil, Panna District. The handpumps dry up in summers and the women have to use the one present in the main village, which takes almost 2-3 hours of their day in summer.
PHOTO • Saurav Verma
Sarathpura Hamlet, Tara Village, Amanganj tehsil, Panna District
PHOTO • Saurav Verma

வேலை, ரேஷன் பொருட்கள், பள்ளிகள் போல், இந்தப் புதிய கிராமத்தில் தண்ணீரும் பிரச்சனையாக இருக்கிறது; இரண்டு அடிபம்புகளும் கோடை காலாத்தில் வறண்டு விடுகிறது. இதனால் அருகிலுள்ள தாரா கிராமத்திற்கு மணிக்கணக்காக நடந்து சென்று பெண்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்

இதுவும் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. சரத்புராவிற்குச் செல்வதால் ஆதிவாசிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர்களின் வாழ்க்கை சுற்றுச்சூழல் அமைப்போடு பிண்ணப்பட்டுள்ளது. தல்கானில் பாபுலால் குடும்பத்தினர் தங்களுக்குரிய ஐந்து ஏக்கர் நிலத்தில் உளுந்தும் சோளமும் பயிரிடுவார்கள். கோடை காலத்தில் மற்ற குடும்பங்கள் போல் இவர்களும் மஹூவா பூக்கள் (சாராயம் காய்ச்சுவதற்கு), தெண்டு இலைகள் (பீடி செய்வதற்கு), சிரோஞ்சி விதைகள் (கீர் செய்வதற்கு) ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்கிறார்கள். பான் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாக இருக்கும் கைர் அல்லது பாக்கு மரத்தின் பட்டையை சேகரித்து விற்பனை செய்வது குயாந்தர் சமூகத்தின் பாரம்பர்ய தொழிலாகும். இதுபோன்ற பாரம்பர்ய வாழ்வாதாரங்களை இடமாற்றம் சிதைத்துள்ளது. தற்போது, வேலை கிடைக்கும் சமயத்தில், அருகிலுள்ள தாரா கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்தோ அல்லது அமன்காஞ்ச் தாலுகாவில் கட்டுமான வேலை செய்தோ தினசரி ரூ. 200-250 வரை வருமானம் ஈட்டுகிறார். இங்கு தினசரி ஊதியத்தை ஒப்பந்தாரர்களே நிர்ணயிக்கிறார்கள்.

தெண்டு, மஹூவா, சிரோஞ்சி என எல்லாஅம் காட்டில் எங்களுக்கு கிடைத்தது. கோடை காலத்தில் இவற்றை சேகரித்து விற்பனை செய்வோம். இப்போது விறகுக்கட்டையை எடுக்கக் கூட ரேஞ்சர்கள் எங்களை காட்டிற்குள் விடுவதில்லை எனக் கூறுகிறார் பாபுலாலின் தாயார் ஷோபா. தல்கானில் தங்கள் விவசாய நிலத்தை இழந்த பிறகு, பரத் குயாந்தரும் அவருடைய இரு சகோதரர்களும் சரத்புராவில் ஐந்து ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்துள்ளனர். அதில் உளுந்து, கோதுமை, சோளம் பயிரிட்டுள்ளார்கள். விவசாயத்தைக் கவனித்துக் கொண்டும் அமன்காஞ்ச் மற்றும் பன்னா நகரத்தில் கிடைக்கும் கட்டுமான வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார் பாரத். இவரது சகோதரர்கள் டெல்லி, சோனிபட் போன்ற நகரங்களில் கட்டுமான வேலை செய்து வருகிறார்கள். செப்டம்பர் மாதம் அறுவடை நிறைவடைந்ததும், இவர்களைப் போல் தல்கானில் உள்ள பலரும் தினசரி கூலி வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்கின்றனர்.

Anganwadi of Tara Village, Amanganj tehsil, Panna District
PHOTO • Maithreyi Kamalanathan
The old ration card of Shoba Rani issued in 2009
PHOTO • Maithreyi Kamalanathan

இடது: சரத்புராவில் உள்ள சிறு குழந்தைகளுக்கு தாரா கிராமத்தில் உள்ள அங்கன்வாடி தூரமாக உள்ளது. வலது: ஷோபா ராணியின் பழைய ரேஷன் அட்டை; அவரால் புதிய அட்டையை இன்னும் வாங்க முடியவில்லை

சரத்புரா மக்களுக்கு இருக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனை, இந்தக் கிராமம் எந்த பஞ்சாயத்தின் கீழும் வருவதில்லை. ஆனாலும் மீள்குடியேற்றம் நடந்த உடனேயே தாரா கிராமப் பஞ்சாயத்தோடு இணைக்கப்பட்டது. இதானால் ரேஷன் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. ஷோபா ராணியிடம் 2009-ம் ஆண்டு வழங்கப்பட்ட அவரது குடும்பத்தின் பழைய ரேஷன் அட்டை உள்ளது. “கடந்த ஒன்பது வருடங்களாக அரசாங்கத்திடம் இருந்து எந்த ரேஷன் பொருளையும் நாங்கள் பெறவில்லை” என அவர் கூறுகிறார். மாதத்திற்கு நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசியும் கோதுமையும் அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இங்குள்ள குடும்பங்கள் அமன்காஞ்சில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள். இது அவர்களின் மிதமான வருமானத்தில் பெரிய பள்ளத்தை உருவாக்குகிறது. “பலமுறை நான் படிவத்தை (ரேஷன் அட்டை பெறுவதற்காக ) நிரப்பிக் கொடுத்துள்ளேன். ஆனால் எந்தப் பயனும் இல்லை. எதுவும் நடக்கவில்லை” என்கிறார் ஷோபா.

பஞ்சாயத்தின் ஒரு பகுதியாக இல்லாததன் காரணமாக அங்கன்வாடியிலிருந்து எந்த பஞ்சிரியும் (0-5 வயதுள்ள குழந்தைகளுக்கான உணவுப் பொட்டலங்கள் ) சரத்புராவிற்குக் கிடைப்பதில்லை. “தல்கான் குழந்தைகளுக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. அரிதான சமயத்தில் தேவைக்கு அதிகமாக பஞ்சிரி வரும்போது அவர்களுக்கு கொடுப்போம். இல்லையேல், கொடுப்பதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை” எனக் கூறுகிறார் தாரா கிராமப் பஞ்சாயத்து தலைவர் கீதா அதிவாசி (தனது துணைப்பெயரை இப்படித்தான் பயன்படுத்த அவர் விரும்புகிறார்)

இங்கிருந்து தாரா கிராமம் 1.5கிமீ தூரமாக இருப்பதால் பல குழந்தைகள் அங்கன்வாடிக்கு கூட செல்வதில்லை. ஒருசில பெரிய குழந்தைகள் அங்குப் பள்ளிக்குச் சென்றாலும், ஒட்டுமொத்தமாக கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாரத்தின் தாயாரான பியாரி பாய் குயாந்தர் (மேலே முகப்பு படத்தில் இருப்பவர். தன்னுடைய பேரக் குழந்தைகளோடு வீட்டிற்கு வெளியே இருப்பவர் ), 50, காலியான இடத்தைச் சுட்டி காட்டி, “எதிர்காலத்தில் நான் பஞ்சாயத்து தலைவரானால் இங்குதான் அங்கன்வாடி கட்டுவேன்” என்கிறார்.

இதற்கிடையில், வெளியேற்றமும் காட்டிலுள்ள தங்கள் மூதாதையர் கிராமத்தின் நினைவுகளும் சரத்புரா மக்களின் மனதில் தொடர்ந்து நிழலாடுகிறது.

தமிழில்: வி கோபி மாவடிராஜா

Maithreyi Kamalanathan

মৈত্রেয়ী কমলানাথন মধ্যপ্রদেশের পান্নায় বুন্দেলখণ্ড অ্যাকশন ল্যাবের প্রজেক্ট কোশিকার জনসংযোগ বিভাগের প্রধান।

Other stories by Maithreyi Kamalanathan
Translator : V Gopi Mavadiraja

V Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V Gopi Mavadiraja