மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (MPSC) நுழைவுத் தேர்வில் தான் வென்றது தெரிய வந்த சில மணி நேரத்தில் பீட் என்ற இடத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள சோலாப்பூருக்கு வண்டியில் அழைத்துச் செல்லும்படி நண்பரை கேட்டுக்கொண்டார் சந்தோஷ் காடே. அவரது வயது 25. அந்தப் பசுமையான கரும்புத் தோட்டத்துக்கு சென்று சேர்ந்தவுடன் மூங்கில், வைக்கோல், தார்ப்பாய் கொண்டு அமைக்கப்பட்டிருந்த ‘கோப்’  என்று அழைக்கப்படும் குடிலைத் தேடிப் போனார். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் குடிலை அவர் கிழித்தெறிந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வருடத்தின் 6 மாத கால கரும்பு வெட்டும் பருவத்தில் கரும்புவெட்டும் தொழிலாளிகளான அவரது பெற்றோர் தங்கி வந்த குடில் அது.

“தேர்வு முடிவு வெளியான பிறகு NT-D (நாடோடிப் பழங்குடிகளில் உட்பிரிவு), பிரிவில் நான் முதலிடத்தில் வந்திருப்பதாக தெரியவந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட இனி என் அப்பாவும் அம்மாவும் கரும்பு வெட்டும் தொழிலாளிகளாக வேலை செய்யவேண்டியதில்லை என்பதில் கிடைத்த மகிழ்ச்சியே மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்கிறார் காடே. தம்முடைய 3 ஏக்கர் மானாவாரி நிலத்தை ஒட்டியுள்ள வீட்டின் அகன்ற தாழ்வாரத்தில் பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி அவர் இதைக் கூறுகிறார்.

சந்தோஷ்  காடேவின் வெற்றிச் செய்தி வந்தபோது அந்த இடத்தில் கண்ணீரும் வெடிச்சிரிப்பும் கலந்து பரவின. கடந்த 30 ஆண்டுகளாக வறட்சிப் பாதிப்புக்கு உள்ளாகும் பட்டோடாவில் இருந்து சோலாப்பூர் மாவட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் மகன்தான் காடே. ஸ்வர்காவ்ன் காட் பகுதியில் இருந்து 90 சதவீத குடும்பங்கள் தம்முடைய குடும்பத்தைப் போல கரும்பு வெட்டுவதற்காக, மேற்கு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுக்கு இடம் பெயர்கின்றன என்று அவர் கூறுகிறார்.

வஞ்சாரி சமுதாயத்தை சேர்ந்தவரான சந்தோஷ் காடே, மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றார். மாநில அளவிலான தர வரிசையில் பொதுப்பிரிவில் 16வது இடம் பிடித்த அவர் NT-D பிரிவில் முதலிடம் பிடித்தார்.

“எனது பெற்றோரின் ஆண்டாண்டு கால போராட்டத்தின் பலன் இது. அவர்களது வாழ்க்கை விலங்குகளின் வாழ்க்கையைப் போல இருந்தது,” என கூறுகிறார் காடே அறுவடைக் காலத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று விவரித்து. “அதை தடுத்து நிறுத்துவதும், கரும்பு வெட்டுவதற்காக இடம் பெயரத் தேவையில்லாத அளவுக்கு ஒரு நல்ல வேலையைத் தேடுவதுமே என் முதல் இலக்காக இருந்தது,” என்கிறார் அவர்.

Khade’s family’s animals live in an open shelter right next to the house
PHOTO • Kavitha Iyer

காடே குடும்பத்துக்கு சொந்தமான கால்நடைகள் அவர்கள் வீட்டை அடுத்துள்ள ஒரு திறந்த கொட்டகையில் வசிக்கின்றன

இந்திய சர்க்கரை ஆலைத் தொழில் துறையின் ஆண்டு உற்பத்தி மதிப்பு சுமார் 80 ஆயிரம் கோடி என்றும், நாடு முழுவதும் 700 சர்க்கரை ஆலைகள் இருப்பதாகவும் 2020-ல் வெளியான நிதி ஆயோக் அறிக்கை ஒன்று கூறுகிறது.

மகாராஷ்டிராவில் இந்த தொழிற்சாலைகளை இயங்க வைக்கிறவர்கள் அம்மாநிலத்தில் உள்ள 8 லட்சம் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் மராத்வாடா பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்களுக்கு மொத்தமாக ஒரு தொகை முன்பணமாக தரப்படுவது அங்கு வாடிக்கை. இந்த தொகையை ‘உச்சால்’ என்று அங்கு குறிப்பிடுகிறார்கள். இந்த சொல்லுக்கு நேரடிப் பொருள் ‘தூக்குவது’ என்பதாகும். 6 முதல் 7 மாத காலம் நீடிக்கும் ஒரு கரும்பு வெட்டும் பருவத்துக்கு ஒரு தம்பதிக்கு ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் முன்பணம் தரப்படும்.

வேலை செய்யும் சூழ்நிலையும், வாழும் சூழ்நிலையும் மிகவும் மோசம்: ஆலைக்கு, வாடி வதங்காத, பசுமையான கரும்புகள் செல்லவேண்டும் என்பதற்காக வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு கண் விழித்து, முந்தைய நாள் செய்த காய்ந்த உணவையே சாப்பிட்டு வேலை செய்ததாக கூறினார் காடேவின் தாய் சரஸ்வதி. தங்களுக்கு கழிப்பறைகள் இருந்ததில்லை என்று கூறிய அவர், தண்ணீர் எடுப்பதற்கு நீண்ட தூரம் நடக்கவேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார். 2022ல், தான் சென்றுகொண்டிருந்த மாட்டு வண்டி மீது மணல் ஏற்றிய டிப்பர் லாரி மோதியதில், வண்டியில் இருந்து கீழே விழுந்த சரஸ்வதிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பல விடுமுறை நாட்களில், பெற்றோருக்கு உதவும் வகையில் கரும்புக் கழிகளை கட்டுவது அல்லது மாட்டுத் தீவனமாக விற்கப்படக்கூடிய கரும்பு சோகையை கட்டுவது, எருதுகளைப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளை செய்தார் காடே.

“முதல் நிலை அலுவலராக வரவேண்டும் என்று நினைக்கும் பல இளைஞர்களுக்கு வசதியான அலுவலகம், நல்ல சம்பளம், நல்ல நாற்காலி, சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய கார் என்று பல கனவுகள் இருக்கும். எனக்கு அந்தக் கனவுகள் எல்லாம் இல்லை. எனக்கிருந்த ஒரே கனவு, என் பெற்றோருக்கு மனிதர்களுக்கு உரியதைப் போன்ற ஒரு வாழ்வைத் தருவதுதான்,” என்கிறார் அவர்.

கோபிநாத் முண்டே கரும்பு வெட்டும் தொழிலாளர் கழகத்தை 2019ம் ஆண்டு உருவாக்கியது மகாராஷ்டிரா அரசு. 2023-24 நிதியாண்டில் இந்த கழகம் மேற்கொள்ளவேண்டிய நலத்திட்டங்களுக்காக ரூ.85 கோடி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது அரசாங்கம்.

*****

Santosh Khade and his mother, Saraswati, in the small farmland adjoining their home
PHOTO • Kavitha Iyer

தங்கள் வீட்டை ஒட்டியுள்ள ஒரு விளைநிலத்தில் தன் அம்மாவுடன் சந்தோஷ் காடே

காடே தொடக்கப்பள்ளியில் படித்தபோது, அவரும், இரண்டு சகோதரிகளும், ஒன்று விட்ட சகோதர சகோதரிகளும் ஆண்டுக்கு 6 மாதம் தங்கள் தந்தைவழி பாட்டி கவனிப்பில் வாழ்ந்தனர். பள்ளியில் இருந்து வீடு திரும்பி, நிலத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் அவர்கள் படிப்பார்கள்.

பரம்பரையாக தாங்கள் செய்வதைப் போன்ற கடும் உடலுழைப்புப் பணிக்கு தங்கள் பிள்ளையும் போகக்கூடாது என்று நினைத்த அவரது பெற்றோர், காடேவை 5ம் வகுப்பில் அகமது நகரில் உள்ள ‘ஆஷ்ரம் ஷாலா’ பள்ளியில் சேர்த்தனர். இது அரசாங்கம் நடத்தும் இலவச உறைவிடப் பள்ளியாகும். குறிப்பாக நாடோடிப் பழங்குடி பிள்ளைகளுக்காக நடத்தப்படும் அப்பள்ளியில் எல்லா வகை மாணவர்களும் பயிலுகின்றனர்.

“நாங்கள் ஏழைகள். ஆனால், எங்கள் பெற்றோர் என்னை கொஞ்சம் செல்லமாக வளர்த்தனர். எனவே அகமது நகர் விடுதியில் தனியாக தங்குவது எனக்கு சிரமமாக இருந்தது. 6, 7 வகுப்புகளில் படோடா நகரில் உள்ள ஒரு விடுதிக்கு என்னை மாற்றினார்கள்.”

இந்த விடுதி ஊருக்கு அருகில் இருந்த நிலையில், தன்னுடைய விடுமுறை நாட்களை ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சின்ன சின்ன வேலைகளை செய்தும், கொஞ்சம் பருத்தி விற்பனை செய்தும் செலவிட்டார் காடே. இப்படி சம்பாதித்த பணத்தை வைத்து தங்கள் பெற்றோர் வாங்கித் தர சிரமப்பட்ட பேக், புத்தகங்கள், ஜியாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களை தாமே வாங்கிக் கொண்டார்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது மாநில அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கேற்று அரசாங்க வேலை வாங்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

“உண்மையில், வேறு தொழிற்படிப்பு எதுவும் படிப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை. புலம் பெயர்ந்து செல்லும் 6 மாத காலத்துக்கு என் பெற்றோர் சம்பாதித்தது ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரைதான். ஆனால் ஏதேனும் தொழிற்படிப்பில் சேர்ந்திருந்தால் அதற்கு 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டிருக்கும். மகராஷ்டிரா அரசுப்பணித் தேர்வாணையத் தேர்வு எழுத முடிவு செய்ததுகூட அதற்கு செலவு குறைவு என்ற காரணத்தால்தான். அதற்கு கட்டணம் ஏதும் கட்டத் தேவையில்லை. தனியாக எந்தப் படிப்பிலும் சேர்வது அவசியமில்லை. லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. யாருடைய சிபாரிசும் தேவையில்லை. இதுதான் வேலை பெறுவதற்கான மிகவும் சாத்தியமான வழிமுறையாக இருந்தது. கடுமையான உழைப்பின் அடிப்படையில் மட்டுமே இந்த தேர்வில் ஒருவர் வெல்ல முடியும்,” என்கிறார் காடே.

பட்டப்படிப்புக்காக பீட் நகரம் சென்ற அவர், படிக்கும்போதே அரசுப் பணித் தேர்வுக்கு தயார் செய்ய முடிவு செய்தார். “எனக்கு கால அவகாசம் இல்லை. பட்டப்படிப்பு முடிக்கும் அதே ஆண்டில் அரசுப் பணித் தேர்விலும் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பினேன்,” என்கிறார் காடே.

Left: Behind the pucca home where Khade now lives with his parents and cousins  is the  brick structure where his family lived for most of his childhood.
PHOTO • Kavitha Iyer
Right: Santosh Khade in the room of his home where he spent most of the lockdown period preparing for the MPSC entrance exam
PHOTO • Kavitha Iyer

இடது: பெற்றோர் மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களோடு தற்போது காடே வாழும் சிமெண்ட் வீட்டுக்குப் பின்னால் உள்ள அவர்களது பழைய வீடு.

வலது: பொதுமுடக்க காலத்தில் தங்கள் வீட்டின் இந்த அறையில் இருந்துதான் பெரும்பாலான நேரம் அரசுப் பணித் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார் காடே

அதுவரை அவர்களது குடும்பம், ஸ்வர்காவ்ன் காட் பகுதியில் உள்ள, தாழ்வாக கட்டிய, தகரம் வேய்ந்த மண் வீட்டில்தான் வசித்து வந்தது. அந்த வீடு இப்போது அவர்கள் வாழும் புதிய சிமெண்ட் வீட்டுக்குப் பின்புறம் உள்ளது.  காடே கல்லூரிக்கு சென்ற நிலையில், புதிதாக சிமெண்ட் வீடு கட்டத் திட்டமிட்டது அவரது குடும்பம். தனது கல்வியை முடித்து விரைவாக வேலை வாங்கவேண்டும் என்ற அவசரத்தை உணர்ந்ததாக கூறுகிறார் அவர்.

2019ல் தன்னுடைய பட்டப்படிப்பு முடிந்த நிலையில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் பிற மாணவர்களோடு புனே நகரில் ஒரு விடுதியில் தங்கியிருந்த காடே, நூலகங்களில் நாட்களை செலவிட்டார். நண்பர்களோடு நேரம் செலவிடுவது, வெளியே சுற்றுவது, தேநீர் அருந்தச் செல்வது ஆகியவற்றை தவிர்க்கும் ஓர் இளைஞராக அவர் இருந்தார்.

“பொழுது போக்குவதற்காக நாங்கள் அங்கே செல்லவில்லை,” என்கிறார் அவர்.

புனே நகரில் கஸ்பா பேத் என்ற பழைய குடியிருப்புப் பகுதியில் உள்ள நூலகத்துக்கு செல்லும்போது தமது செல்பேசியை அறையிலேயே விட்டுவிட்டுச் செல்வார் காடே. அதிகாலை 1 மணி வரை அவர் அங்கே படிப்பார். முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களுக்கு விடை எழுதிப் பயிற்சி செய்வார். நேர்முகத்  தேர்வுக்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வார். கேள்வித் தாள்களைத் தயாரிப்பவர்களின், நேர்முகத் தேர்வை நடத்துகிறவர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ள முயல்வார்.

சராசரியாக ஒரு நாளில் 500-600 கொள்குறி வினாக்களுக்கு (தரப்பட்ட பல விடைகளில் சரியான விடையை தேர்வு செய்வது) விடை தந்து பயிற்சி செய்வார்.

2020 ஏப்ரல் 5ம் தேதி நடக்கவிருந்த முதல் எழுத்துத் தேர்வு, கோவிட் பெருந்தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. “இதனால் கிடைத்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்,” என்று கூறுகிறார். ஸ்வர்காவ்ன் காட் பகுதியில் உள்ள தங்களது புதிய வீட்டுக்குத் திரும்பிய அவர், கிட்டத்தட்ட முழுமையாக சிமெண்ட்டில் கட்டிய அந்த வீட்டின் ஓர் அறையை தனக்கான படிக்கும் அறையாக மாற்றிக்கொண்டார்.

ஒருவழியாக 2021 ஜனவரியில் மகாராஷ்டிர அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய முதல்நிலைத் தேர்வினை எழுதி அதில் கட் – ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் 33 மதிப்பெண்கள் அதிகம் பெற்று மெயின்ஸ் எனப்படும் முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றார். ஆனால், கோவிட் இரண்டாவது அலையால், அந்த முதன்மைத் தேர்வும் தாமதமானது.

அந்த காலக்கட்டத்தில் காடேவுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு துயரம் நேர்ந்தது. “32 வயதான எனது ஒன்றுவிட்ட அண்ணன் கோவிட் நோய் தாக்கி இறந்தார். மருத்துவமனையில் என் கண் முன்னே அவர் இறந்தார். எங்கள் விளைநிலத்தில் அவரது இறுதிச் சடங்குகளை நடத்தி முடித்தோம்,” என்று நினைவு கூர்கிறார்.

அதன் பிறகு 15 நாள் தனிமைப்படுத்தல் காலத்தில் மனம் தளர்ந்திருந்த காடே, குடும்பத்தின் ஒரே படித்த இளைஞனாகிய தாம் வீட்டில் இருக்கவேண்டும், அது தனது பொறுப்பு என்று நினைத்தார்.  பெருந்தொற்று காலம், வாழ்வாதாரங்களை அழித்து, வருவாயை பாதித்தது. அரசுப் பணித் தேர்வு முயற்சியையை கைவிட்டுவிடலாமா என்று அவர் யோசித்தார்.

“இப்போது இந்த முயற்சியைக் கைவிட்டால், கரும்பு வெட்டும் தொழிலையே நம்பியிருக்கும் ஊர் மக்கள் மத்தியில் ஏதேனும் ஒரு நல்ல வாழ்க்கையைப் பெறுவதற்கான நம்பிக்கை அற்றுப்போய்விடும் என்ற எண்ணம்தான் கடைசியில் என் மனதில் நின்றது,” என்கிறார் அவர்.

*****

Santosh Khade with one of the family’s four bullocks. As a boy, Khade learnt to tend to the animals while his parents worked
PHOTO • Kavitha Iyer

தனது குடும்பத்துக்கு சொந்தமான நான்கு எருதுகளில் ஒன்றுடன் சந்தோஷ் காடே. தான் சிறுவனாக இருந்தபோது, தன்னுடைய பெற்றோர் வேலையாக இருக்கும் நேரங்களில், மாடுகளை பராமரிக்கக் கற்றுக் கொண்டார் காடே

2021 டிசம்பர் மாதம் நடந்த முதன்மை தேர்வினை எழுதி, நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்ற அவர், 2022ம் ஆண்டு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்று பெற்றோருக்கு வாக்குறுதி அளித்தார்.

ஆனால் பதற்றத்திலும் குழப்பத்திலும் நேர்முகத் தேர்வில் சொதப்பிவிட்டார் அவர். “பதில் தெரிந்த கேள்விகளுக்கு கூட தெரியாது என்று கூறிவிட்டேன்”.  0.75 மதிப்பெண் வித்தியாசத்தில் அவர் வெற்றியைத் தவறவிட்டார். 2022ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வுக்கு அப்போது 10 நாட்கள்தான் இருந்தன. “என் மனம் மரத்துப் போயிருந்தது. என்னுடைய பெற்றோர் கரும்பு வெட்டப் போயிருந்தார்கள். அப்பாவை அழைத்து என்னால் என்னுடைய வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை என்று கூறினேன்”.

அப்போது என்ன நடந்தது என்பதை கூறும் போது காடே உணர்ச்சி வசப்படுகிறார். போலியோவால் கால்களை இழந்த, எழுத்தறிவு இல்லாத, அரசுப் பணி தேர்வு நடைமுறை பற்றியோ, அது எவ்வளவு போட்டி நிறைந்தது என்பது பற்றியோ எதுவும் தெரியாத தன்னுடைய தந்தை தன்னை திட்டுவார் என்று அவர் நினைத்தார்.

“ஆனால் ‘பாவ்ட்யா (காடேவை அழைக்க அவரது பெற்றோர் பயன்படுத்தும் செல்லப்பெயர்) உனக்காக இன்னும் ஐந்து ஆண்டுகள் நான் கரும்பு வெட்டுவேன்’ என்று அவர் கூறினார். எனவே அரசாங்க அதிகாரி ஆவதற்கான என்னுடைய முயற்சியை என்னால் கைவிட முடியவில்லை. அதற்குப் பிறகு ஊக்கமளிக்கும் எந்த பேச்சும் எனக்கு தேவைப்படவில்லை”.

புனேவில், தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மீண்டும் நூலகத்துக்குச் சென்றார் காடே. இந்த முறை முதன்மைத் தேர்வில் அவருக்கு 700க்கு 461 மதிப்பெண் கிடைத்தது. முந்தைய முறை அவர் எடுத்தது 417 தான். எனவே நேர்முகத் தேர்வில் 100க்கு 30-40 மதிப்பெண் பெற்றால்கூட அவருக்குப் போதும் என்ற நிலை இருந்தது.

2022 ஆகஸ்ட் மாதம் நடக்கவேண்டிய நேர்முகத் தேர்வு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதனால், மீண்டும் கரும்பு வெட்ட முன்பணம் வாங்குவது என அவரது பெற்றோர் முடிவு செய்தனர். “எதாவது ஒன்றை உறுதி செய்துகொண்டுதான் அடுத்த முறை அவர்களைப் பார்க்கவேண்டும் என்று அந்த நாளில் சபதம் செய்துகொண்டேன்.”

2023 ஜனவரியில் நேர்முகத் தேர்வினை முடித்த நாளில், வெற்றி பெற்றுவிடமுடியும் என்பது அவருக்கு கிட்டத்தட்ட நம்பிக்கையாகத் தெரிந்தது. தந்தையை  அழைத்து இனிமேல் கரும்பு வெட்டும் அரிவாளை எடுக்காதீர்கள் என்று கூறினார். முன் பணத்தை திருப்பித் தருவதற்கு பணம் கடன் வாங்கிக் கொண்டு சோலாப்பூர் சென்றார். பெற்றோரின் உடைமைகளையும், அவர்களது இரண்டு எருதுகளையும் சரக்கு வண்டியில் ஏற்றி ஊருக்கு திருப்பி அனுப்பினார்.

“அவர்கள் வேலைக்கு கிளம்பிச் சென்ற நாள் என் வாழ்வின் கருப்பு நாள். அவர்களை மீண்டும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிய நாள் என் வாழ்க்கையின் மிகுந்த மகிழ்ச்சியான நாள்,” என்கிறார் அவர்.

தமிழில்: அ.தா.பாலசுப்ரமணியன்

Kavitha Iyer

কবিতা আইয়ার দুই দশক জুড়ে সাংবাদিকতা করছেন। ২০২১ সালে হারপার কলিন্স থেকে তাঁর লেখা ‘ল্যান্ডস্কেপস অফ লস: দ্য স্টোরি অফ অ্যান ইন্ডিয়ান ড্রাউট’ বইটি প্রকাশিত হয়েছে।

Other stories by Kavitha Iyer
Editor : Priti David

প্রীতি ডেভিড পারি-র কার্যনির্বাহী সম্পাদক। তিনি জঙ্গল, আদিবাসী জীবন, এবং জীবিকাসন্ধান বিষয়ে লেখেন। প্রীতি পারি-র শিক্ষা বিভাগের পুরোভাগে আছেন, এবং নানা স্কুল-কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে শ্রেণিকক্ষ ও পাঠক্রমে গ্রামীণ জীবন ও সমস্যা তুলে আনার কাজ করেন।

Other stories by Priti David
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan