பத்து நாட்களுக்கு முன்தான் திருமணத்தை தவிர வேறு வழி கிடையாது என உணர்ந்தார் ரேகா. ஒரு 15 வயது பெண்ணால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எதிர்த்தார். பெற்றோர் அவரின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. “அவள் மேலே படிக்க வேண்டுமென சொல்லி அழுதாள்,” என்கிறார் அவரின் தாய் பாக்யஸ்ரீ.
30 வயதுகளில் இருக்கும் பாக்யஸ்ரீயும் அவரின் கணவர் அமரும் குழந்தைகளுடன் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திலுள்ள வறிய கிராமத்தில் வசிக்கின்றனர். ஒவ்வொரு வருட நவம்பர் மாதத்தின்போதும் மேற்கு மகாராஷ்டிரா அல்லது கர்நாடகாவுக்கு கரும்பு வெட்ட அவர்கள் இடம்பெயருவார்கள். ஆறு மாதங்களுக்கு தொடரும் கடுமையான வேலைக்கு இருவரும் 80,000 ரூபாய் வருமானம் பெறுவார்கள். அவர்களுக்கென நிலம் ஏதும் இல்லை. கரும்பு வெட்டுவது மட்டும்தான் அவர்களின் குடும்பத்துக்கு இருக்கும் ஒரே வருமானம். தலித் சமூகமான மடாங் சாதியை சேர்ந்தவர்கள்
பெற்றோர் இடம்பெயரும் வேளைகளில் ரேகாவையும் 12 மற்றும் 8 வயதுகளில் இருக்கும் சகோதரர்களையும் பாட்டி பார்த்துக் கொள்வார் (கடந்த வருட மே மாதத்தில் அவரும் இறந்துவிட்டார்). கிராமத்துக்கு வெளியே இருக்கும் அரசுப் பள்ளியில் அவர்கள் படித்தனர். பெருந்தொற்று காரணமாக மார்ச் 2020-ல் பள்ளிகள் மூடப்பட்டபோது 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரேகா வீட்டில் முடங்க நேர்ந்தது. 500 நாட்கள் கடந்துவிட்டன. பீட் மாவட்டத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
”பள்ளிகளை திறக்க கொஞ்ச காலமாகும் என்பது எங்களுக்கு புரிந்தது,” என்கிறார் பாக்யஸ்ரீ. “பள்ளி திறந்திருந்தபோது ஆசிரியர்களும் குழந்தைகளும் இருந்தனர். கிராமத்தில் நடமாட்டம் அதிகமிருந்தது. பள்ளி மூடப்பட்டபிறகு, அவளை தனியே விட முடியாது. பாதுகாப்பு இருக்காது.”
எனவே பாக்யஸ்ரீயும் அமரும் ரேகாவை 22 வயது ஆதித்யாவுக்கு கடந்த வருட ஜூன் மாதம் மணம் முடித்து வைத்தனர். அந்த குடும்பம் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிராமத்தில் இருந்தது. அவர்களும் குறிப்பிட்ட காலத்துக்கு இடம்பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள்தாம். நவம்பர் 2020ல், கரும்பு வெட்டும் காலம் தொடங்கவிருந்தபோது ரேகாவும் ஆதித்யாவும் மேற்கு மகாராஷ்டிராவுக்கு இடம்பெயர்ந்தனர். ரேகாவின் பெயர் மட்டும் பள்ளியின் பதிவேட்டில் அப்படியே இருந்தது.
ரேகா வும் அவருக்கும் இளைய வயதில் உள்ள பெண்களும் பெருந்தொற்றின் காரணமாக திருமணத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். மார்ச் 2021-ல் வெளியான யுனிசெஃப்ஃபின் அறிக்கை யின்படி பத்தாண்டுகள் முடியும்போது மேலதிகமாக ஒரு கோடி பெண் குழந்தைகள் சர்வதேச அளவில் குழந்தை மணப்பெண்களாகும் ஆபத்தில் இருப்பார்கள். மூடப்பட்ட பள்ளிகள், அதிகரிக்கும் வறுமை, பெற்றோர் மரணங்கள் மற்றும் இன்ன பிற கோவிட் பாதிப்புகளால் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் வாழ்க்கை இன்னும் சிரமத்துக்குள்ளாகும் என்கிறது அவ்வறிக்கை.
கடந்த பத்து வருடங்களில் குழந்தை திருமணம் செய்து கொண்ட பெண் குழந்தைகளின் விகிதம் 15 சதவிகிதம் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் 2.5 கோடி குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டதாகவும் யுனிசெஃப் அறிக்கை குறிப்பிடுகிறது. சமீப காலமாக நேர்ந்த வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தாக பெருந்தொற்று மாறியிருக்கிறது.
மகாராஷ்டிர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஏப்ரல் 2020லிருந்து ஜூன் 2021 வரை 780 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டதாக பதிவு செய்திருக்கிறது. அது குறைவான எண்ணிக்கை என்கின்றனர் தங்டேயும் காம்ப்ளேயும்
2015ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரை குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 4 சதவிகிதம் குறைந்திருக்கிறது. 2015-16ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 4 , 20லிருந்து 24 வயதிலிருக்கும் 26 சதவிகித பெண்கள் 18 வயதாகும் முன்னமே திருமணம் செய்திருக்கின்றனர் என கண்டுபிடித்திருக்கிறது. 2019-20ம் ஆண்டுக்கான அறிக்கை யில் அது 22 சதவிகிதமாகி இருந்தது. 18தான் சட்டம் அனுமதிக்கும் பெண்களுக்கான திருமண வயது. அதே நேரத்தில் 25-29 வயதில் இருக்கும் ஆண்களில் வெறும் 10.5 சதவிகிதம் பேர்தான் 21 வயதுக்கு முன் திருமணம் செய்திருக்கின்றனர். 21 என்பது ஆண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது.
குழந்தை மற்றும் பதின்வயது திருமணங்கள் தொற்றுகாலத்தில் அதிகரிப்பதற்கான தரவுகள் இருக்கும் நிலையிலும் மாநில அரசு அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை பொறுத்தவரை மாநில அரசின் கவனமெல்லாம் அவர்களின் இணைய வழிக் கல்வியை பற்றிதான் இருக்கிறது என்கிறார் 34 வயது செயற்பாட்டாளரான தட்வாஷில் காம்ப்ளே. இணைய வழிக் கல்வியும் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் நல்ல இணையத் தொடர்பு போன்ற விஷயங்கள் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு மட்டுமே வாய்க்கிறது.
மகாராஷ்டிராவின் கிராமப்புற குடும்பங்களில் வெறும் 18.5 சதவிகித குடும்பங்களில் மட்டும்தான் இணையத் தொடர்பு இருப்பதாக 2017-18 ஆண்டுக்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. கிராமப்புற மகாராஷ்டிராவை சேர்ந்த 17 சதவிகித பேருக்கு (ஐந்து வயதுக்கு மேற்பட்டோரில்) மட்டுமே இணையம் பயன்படுத்தும் திறன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. அதே விகிதம் பெண்களை பொறுத்தவரை 11 சதவிகிதமாக இருக்கிறது.
இணையம் இல்லாத பெரும்பாலான குழந்தைகள் விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வறுமையும் பொருளாதார பாதுகாப்பின்மையும் அங்கு ஏற்கனவே பெண்களை குழந்தை திருமணத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கின்றன. மூடப்பட்ட பள்ளிகள் அச்சூழலை இன்னும் மோசமாக்கி இருக்கின்றன பீட் மாவட்டத்தை போல்.
20லிருந்து 24 வயதான பீட் பெண்களில் 44 சதவிகித பேர் 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்துவிட்டதாக 2019-20ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார அறிக்கை கூறுகிறது. அதற்கு முக்கியமான காரணம் புலம்பெயர் வேலையை அதிகமாக மக்கள் சார்ந்திருப்பதுதான். பஞ்சமும் விவசாய நெருக்கடியும் நிலவும் மாவட்டமென்பதால் ஒரு காலகட்டத்தில் இடம்பெயர்ந்து கரும்பு வெட்டும் வேலையை செய்து திரும்புவது போன்ற வேலைகளையே அங்கு மக்கள் அதிகம் சார்ந்திருக்கின்றனர்.
கரும்பு வெட்டும் வேலைகளுக்கு ஆட்கள் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் திருமணமான தம்பதியை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவருக்கு ஆதரவாக ஒருவர் உழைப்பார்கள் என நினைக்கிறார்கள். ஒருவர் கரும்பு வெட்டினால், அடுத்தவர் அவற்றை கட்டி ட்ராக்டரில் ஏற்றும் வேலையை செய்யலாம். தம்பதியை ஒரு குழுவாக நடத்துவார்கள். அப்போதுதான் தொடர்பில்லாத இரண்டு தொழிலாளர்களை கையாளுவதில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். திருமணத்துக்கு பிறகு கணவனுடன் பயணித்து பெண்ணும் சம்பாதிக்க முடியும். அந்த வகையில், கணவருடன் பெண் பாதுகாப்பாக இருப்பாரென பெற்றோர் கருதுகின்றனர். அவர்களின் பொருளாதார சுமையும் குறைகிறது.
பெருந்தொற்று காலத்தில் பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருக்கும் பெற்றோர், வீட்டிலிருக்கும் அவர்களின் குழந்தையை இரண்டு வகைகளில் கையாளுகிறார்கள் என்கிறார் தட்வஷில் காம்ப்ளே. “ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தை தொழிலாளராக ஆக்குகிறார்கள். பெண் குழந்தையாக இருந்தால், குழந்தை திருமணம் செய்து வைக்கிறார்கள்.” குழந்தைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் காம்ப்ளே பல குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க உதவியிருக்கிறார்.
பீட் தாலுகாவின் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் அஷோக் தாங்டேவுடன் இணைந்து கோவிட் தொற்று தொடங்கிய மார்ச் 2020லிருந்து 100 குழந்தை திருமணங்களை காம்ப்ளே நிறுத்தியிருக்கிறார். “அவர்களை பற்றி தகவல் கிடைத்ததால்தான் எங்களால் நிறுத்த முடிந்தது,” என்கிறார் 53 வயது தாங்க்டே. “எத்தனை குழந்தை திருமணங்கள் தெரியாமல் நடந்தன என தெரியவில்லை.”
பெருந்தொற்று காலத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததும் கூட குழந்தை திருமணங்கள் நடப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. “மணமகன்கள் வீட்டில் அதிக வரதட்சணை கேட்பதில்லை,” என்கிறார் தாங்டே. திருமணங்கள் மலிவாகிவிட்டன என்றும் சொல்கிறார். “குடும்பத்துக்கு நெருக்கமானவர்களை மட்டும் அழைத்து திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம். ஏனெனில் பெரிய கூடுகைகளுக்கு அனுமதி கிடையாது.”
மறுபக்கத்தில் உயிர்பயத்தையும் பெருந்தொற்று அதிகரித்திருக்கிறது. தாங்கள் இறந்துவிட்டால் மகள்களின் வாழ்க்கை என்னாகும் என்கிற கவலை பெற்றோருக்கு அதிகரித்திருக்கிறது. ”இவை எல்லாவற்றாலும் குழந்தை திருமணங்கள் அதிகரித்திருக்கின்றன. சில பெண் குழந்தைகளுக்கு 12 வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்படுகிறது,” என்கிறார் தாங்க்டே.
மகாராஷ்டிர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஏப்ரல் 2020லிருந்து ஜூன் 2021 வரை 780 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டதாக பதிவு செய்திருக்கிறது. அது குறைவான எண்ணிக்கை என்கின்றனர் தங்டேயும் காம்ப்ளேயும். பீட் மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் கணக்கான 40 ஐ சுட்டிக் காட்டுகிறார்கள். அவர்கள் இருவரும் அந்த காலகட்டத்தில் தடுத்து நிறுத்திய திருமணங்களின் எண்ணிக்கை அதை விட அதிகம்.
குறைக்கப்பட்ட எண்ணிக்கையுமே கூட குழந்தை மற்றும் பதின்வயதினர் திருமணங்கள் பெருந்தொற்று காலத்தில் அதிகரிப்பதையே காட்டுகிறது. ஜனவரி 2019 தொடங்கி செப்டம்பர் 2019 வரை 187 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டதாக மாநில அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கோவிட் 19 பரவத் தொடங்கிய பிறகு தடுக்கப்படும் குழந்தை திருமணங்களின் மாதாந்திர விகிதம் 150 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
திருமணங்களை நிறுத்தவென தகவல் கொடுப்பவர்களை சார்ந்திருக்கிறார்கள் காம்ப்ளேயும் தாங்டேயும். “கிராமத்தின் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் எங்களுக்கு தகவல் கொடுப்பார்கள்,” என்கிறார் காம்ப்ளே. “ஒரே கிராமத்தில் வசிப்பதால் அவர்களுக்கு பயம் இருக்கிறது. திருமணம் நடத்தும் குடும்பங்களுக்கு தெரிய வந்தால், அவர்களின் வாழ்க்கைக்கு தொந்தரவு ஏற்படும்.”
கிராமத்துக்குள் இருக்கும் பூசல்களும் பங்காற்றும் என்கிறார் தாங்க்டே. ”எதிர்முகாமில் இருக்கும் நபர் கூட தகவலை நமக்கு சொல்லுவார். சில சமயங்களில் திருமணமாகவிருக்கும் இளம்பெண்ணை காதலிக்கும் இளைஞர் எங்களுக்கு தகவல் கொடுப்பார்.”
துப்பு கிடைப்பது திருமணத்தை தடுப்பதற்கான முதல் நடவடிக்கை மட்டும்தான். சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட பல வழிகளை பயன்படுத்தி தப்பிக்க பார்ப்பார்கள். “நாங்கள் மிரட்டப்பட்டிருக்கிறோம். தாக்கப்பட்டிருக்கிறோம்,” என்கிறார் காம்ப்ளே. “பலர் லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எப்போதும் காவலர்களுக்கு சொல்லி விடுவோம். சிலர் உடனே சரணடைந்து விடுவார்கள். பிறர் சண்டை போட செய்யாமல் போக மாட்டார்கள்.”
அக்டோபர் 2020ல், 16 வயது ஸ்மிதாவுக்கு நடக்கவிருந்த திருமணத்தை பற்றிய தகவல் திருமணத்துக்கு ஒருநாள் முன்பு கிடைத்தது. அந்த நாளன்று இருவரும் சம்பவ இடத்துக்கு சடங்குகள் தொடங்கும் முன்பே சென்றடைந்தனர். ஆனால் பெண்ணின் தந்தை வித்தால் திருமணத்தை நிறுத்த மறுத்தார். “’அவள் என் மகள். நான் அவளை என்ன வேண்டுமானாலும் செய்வேன்” எனக் கத்தினார்,” என்கிறார் தாங்டே. “என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள அவருக்கு கொஞ்ச நேரம் ஆனது. அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, அவர் மீது புகார் கொடுத்தோம்.”
ஸ்மிதா நன்றாக படிக்கும் மாணவி என்கிறார் அவரின் உறவினர் கிஷோர். “ஆனால் அவரின் பெற்றோர் பள்ளிக்கு செல்லவில்லை. எனவே அதன் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியவில்லை. பெருந்தொற்றின் காரணமாக அன்றாடம் இரு வேளை சாப்பாட்டுக்கு கூட அவர்கள் திண்டாடினர்.” 30 வயதுகளில் இருக்கும் வித்தாலும் அவரின் மனைவி பூஜாவும் செங்கல் சூளைகளில் பணிபுரிகின்றனர். இருவரும் சேர்ந்து நான்கு மாதங்கள் உழைத்தால் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். “கூலி வேலையும் இல்லாமல் போய்விட்டது. ஸ்மிதாவுக்கு திருமணம் செய்துவிட்டால், ஒருவருக்கு இரு வேளை சாப்பாடு தேடும் சிரமம் இல்லாமல் குறையும்,” என்கிறார் கிஷோர்.
காம்ப்ளேவுக்கும் தாங்டேவுக்கும் ஒரு சவால் இருந்தது. சம்பந்தப்பட்ட குடும்பம் மீண்டும் திருமணம் நடத்த முயலக் கூடாது என்கிற சவால். “திருமணம் நிறுத்தப்பட்ட பெண் குழந்தை பள்ளிக்கு வருகிறாரா என்பதை எங்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் உறுதிபடுத்துவார்கள். நாங்களும் விசாரிப்போம். ஆனால் பள்ளிகள் இப்போது மூடப்பட்டிருந்ததால் அதையும் கண்டுபிடிப்பது கஷ்டமாகி விட்டது.”
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வித்தால் காவல்நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும். “எங்களால் அவரை நம்ப முடியவில்லை,” என்கிறார் தாங்டே. அவர் மீண்டும் தன் மகளை திருமணம் செய்து கொடுக்க முயலுவார் என்கிற பயம் அவர்களிடம் இருக்கிறது.
திருமணம் நிறுத்தப்பட்ட பிறகு ஸ்மிதா கிஷோர் வீட்டில் மூன்று மாதம் தங்கினார். அச்சமயத்தில் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்ததாக கிஷோர் சொல்கிறார். “அவள் அதிகம் பேசவில்லை. அவளுக்கான வேலைகளை அவளே பார்த்துக் கொண்டாள். செய்தித்தாள் படித்தாள். வீட்டில் எங்களுக்கு உதவினாள். சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள அவள் எப்போதும் விரும்பியதில்லை.”
குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகளை பேசி பல ஆய்வுகள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக குழந்தை திருமணங்கள் ஏற்படுத்தும் பிரசவகால மரணங்களை பற்றி ஆய்வுகள் வந்திருக்கின்றன. குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய வாரியம், 2011ம் ஆண்டின் தரவுகளை அடிப்படையாக வைத்து வெளியிட்ட அறிக்கை யில், 10 முதல் 14 வரையிலான வயதுகளில் இருக்கும் பெண்குழந்தைகளின் பிரசவகால மரணங்கள், 20-24 வயதான பெண்களுக்கு நேர்வதை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமென குறிப்பிடப்படுகிறது. சத்துக்குறைபாடான தாய்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் சத்துக்குறைபாடாக பிறப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
ரேகாவை பொறுத்தவரை அவர் பலவீனமாக இருந்ததால் கணவன் வீட்டார் அவரை பெற்றோரிடம் திருப்பி அனுப்பி விட்டார்கள். “ஜனவரி 2021ல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கணவனுடன் சென்றுவிட்டு, அவள் திரும்ப வந்துவிட்டாள்,” என்கிறார் பாக்யஸ்ரீ.
கரும்பு வெட்டுவதும் 25 கிலோ மூட்டைகளை தலையில் தூக்குவதும் எடை குறைவாக இருக்கும் ரேகாவுக்கு கடினமாக இருந்திருக்கிறது. “முதுகொடியும் கூலி வேலையை அவளால் செய்ய முடியவில்லை. அது அவளுடைய கணவனின் வருமானத்தையும் பாதித்தது,” என்கிறார் பாக்யஸ்ரீ. “எனவே கணவரின் வீட்டில் திருமணத்தை ரத்து செய்துவிட்டு, அவளை திரும்ப அனுப்பிவிட்டார்கள்.”
திரும்பி வந்தபிறகு கொஞ்ச காலத்தை வீட்டிலேயே ரேகா கழித்தார். “திருமணம் ஆன சில மாதங்களில் ஒரு பெண் வீட்டுக்கு திரும்ப வந்துவிட்டால் கிராமத்தில் இருக்கும் மக்கள் கேள்விகள் கேட்கின்றனர். எனவே அவளை பெரும்பாலும் உறவினரின் வீட்டில் தங்க வைத்திருக்கிறேன்,” என்கிறார் அவரின் தாய்.
கரும்பு வெட்டும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் பாக்யஸ்ரீயும் அமரும் இடம்பெயர தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ரேகாவுக்கான அடுத்த கட்டமும் திரும்ப தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒரே வித்தியாசம், இம்முறை ரேகா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மீண்டும் திருமணம் செய்துகொள்ள அவர் ஒப்புக் கொண்டுவிட்டார்.
குழந்தைகள் மற்றும் உறவினர் ஆகியோரின் பெயர்கள் கட்டுரையில் மாற்றப்பட்டிருக்கின்றன.
இக்கட்டுரை, சுயாதீன இதழியலுக்கென புலிட்சர் மையம் அளிக்கும் செய்தியாளர் மானியத்தில் எழுதப்பட்ட தொடரின் ஒரு பகுதி.
தமிழில் : ராஜசங்கீதன்