போஜ்புரிக்கும் பங்க்ளாவுக்கும் இந்திக்கும் மாறி மாறி வாடிக்கையாளர்களை கையாளுகிறார் மீனா யாதவ். கொல்கத்தாவின் பல கலாசார மையமான லேக் மார்க்கெட்டில் வழி கேட்டு நிற்கும் புதியவர்களுடனும் நண்பர்களுடனும் கூட அவர் பேசுகிறார். “கொல்கத்தாவில் மொழி பிரச்சினை இல்லை,” என்கிறார் அவர், புலம்பெயர் தொழிலாளராக அன்றாடம் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசுகையில்.

“பிகாரி மக்கள் பிகாரில்தான் இருப்பார்கள் என சொல்வது சுலபம். கடினமான உழைப்பு எல்லாவற்றையும் செய்வது நாங்கள்தான். சுமை தூக்கிகள், நீர் தூக்கிகள், கூலிகள் அனைவரும் பிகாரிகள்தான். வங்காளிக்கான விருப்பத்துக்குரிய விஷயம் இது அல்ல. நியூ மார்க்கெட், ஹவுரா, சீல்தா போன்ற பகுதிகளுக்கு சென்று பாருங்கள். பிகாரிகள் கடினமான சுமைகள் தூக்குவதை பார்க்க முடியும். கடின உழைப்பு செலுத்தினாலும் அவர்களுக்கு போதுமான மரியாதை கிடைப்பதில்லை. பிகாரிகள் அனைவரையும் பாபு என அழைப்பார்கள். ஆனால் அவர்கள் கீழ்த்தரமாக பார்க்கப்படுகிறார்கள். மாம்பழத்தின் தசைப்பகுதி வங்காள பாபுக்களுக்கும் உள்ளிருக்கும் கொட்டை எங்களுக்கும் அளிக்கப்படுகிறது,” என்கிறார் அவர் ஒரு கணம் தாமதித்து.

மொழிகளுக்கு இடையிலும் அடையாள அரசியலுக்கும் ஊடாகவும் மீனா யாதவ் சாமர்த்தியமாக நகருகிறார்.

”சென்னையிலிருக்கும்போது (தொடர்பு கொள்ள) நாங்கள் சவால்களை சந்தித்தோம்,” எனத் தொடர்கிறார் அவர். “இந்தி அல்லது போஜ்புரி மொழிகளுக்கு அவர்கள் பதிலுறுவதில்லை. அவர்களோ எங்களுக்கு தெரியாத மொழியில் பேசுவார்கள். ஆனால் இங்கு அப்படியில்லை,” என்கிறார் மீனா. “ஒரு பிகாரி மொழி என எதுவும் இல்லை. வீட்டில் நாங்கள் 3-4 மொழிகள் பேசுவோம். சில நேரங்களில் போஜ்புரி, சில நேரங்களில் இந்தி, சில நேரங்களில் தர்பாங்கியா(மைதிலி), சில நேரங்களில் பங்க்ளா மொழிகளை பேசுகிறோம். ஆனால் தர்பாங்கியா பேசுகையில்தான் எங்களுக்கு வசதியாக இருக்கிறது,” என்கிறார் பிகாரின் சப்ராவை சேர்ந்த 45 வயது சோள வியாபாரி.

“நாங்கள் ஆரா மற்றும் சப்ரா போலியும் பயன்படுத்துவோம். எந்த பிரச்சினையும் இல்லை. எந்த மொழி பேச விரும்பினாலும் நாங்கள் அதில் பேசிக் கொள்வோம்,” என்கிறார் அவர், பல மொழி பேசும் ஆச்சரியப்படத்தக்க லாவகத்தில். எனினும் பல மொழிகள் பேசும் இயல்பு அவரின் தனித்திறன்களில் ஒன்று என ஏமாற்றிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

PHOTO • Smita Khator

தெற்கு கொல்கத்தா லேக் மார்க்கெட் பகுதியில் சோளம் விற்கும் பிகாரின் புலம்பெயர் தொழிலாளரான மீனா யாதவ், போஜ்புரி, பங்க்ளா, மைதிலி மற்றும் இந்தி ஆகிய மொழிகளுக்கு இடையில் லாவகமாக மாறிக் கொள்கிறார். அவர் ஆரா மற்றும் சப்ரா போலி மொழியிலும் பேசுகிறார்

‘உலகை அதன் பன்முகத்தன்மையினூடாக வெளிப்படுத்தும் வழிகளில் கொண்டாடப்பட வேண்டும்’ என யுனெஸ்கோவின் (சர்வதேச தாய்மொழி நாள் நடத்தும் அமைப்பு) தலைமை இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார்.  மீனாவை பொறுத்தவரை பிரச்சினை எளிமையானது. முதலாளிகள், வேலை கொடுப்பவர்கள், வாடிக்கையாளர்கள், புழங்கும் சமூகத்தினர் பேசும் மொழியை அவர் கற்றுக் கொள்ள வேண்டும். “பல மொழிகள் தெரிந்திருப்பது நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் பிழைப்பின் காரணமாகதான் அவற்றைக் கற்றுக் கொண்டோம்,” என்கிறார் அவர்.

இந்த சர்வதேச தாய்மொழி நாளில் பாரி, மீனா போன்ற ஏழை புலம்பெயர் தொழிலாளர்களிடம் பேசியது. சொந்த நாட்டிலேயே வெளியாட்கள் போல் வாழத் தலைப்பட்டு, பிறந்த மொழியிலிருந்து பிரிக்கப்பட்டவர்கள் அவர்கள்.  நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து பாதுகாத்து அவர்கள் உருவாக்கும் மொழிப் பிரபஞ்சத்துக்குள் நுழைய முயற்சித்திருக்கிறோம்.

அசாமின் கச்சார் மாவட்டத்திலுள்ள பொர்க்கோலா ஒன்றியத்தின் வீட்டுக்கு திரும்பும்போது, புனேவின் புலம்பெயர் தொழிலாளரான ஷங்கர் தாஸ் ஒரு வித்தியாசமான சவாலை எதிர்கொள்கிறார். ஜரைல்தாலா கிராமத்தில் வளரும்போது அவர் வங்க மொழி பேசும் மக்களால் சூழப்பட்டிருந்தார். எனவே மாநில மொழியான அசாமியை அவர் கற்றுக் கொள்ளவே இல்லை. இருபது வயதுகளில் இருக்கும்போது அவர் கிளம்பினார். புனேவிலிருந்து பதினைந்து வருடங்களில் அவர் இந்தி மொழியை நன்றாக பேசுகிறார். மராத்தி மொழியைக் கற்றுக் கொண்டார்.

“எனக்கு மராத்தி நன்றாக தெரியும். புனேவின் எல்லா திக்குகளுக்கும் பயணித்திருக்கிறேன். ஆனால் எனக்கு அசாமி மொழி தெரியாது. என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசத் தெரியாது,” என்கிறார் 40 வயது நிறைந்தவர். கோவிட் காலத்தில் பட்டறை வேலையை இழந்ததும் அசாமுக்கு திரும்பி வேலை தேட வேண்டிய கட்டாயம் அவருக்கு உருவானது. அவரது கிராமமான ஜரைல்தலாவில் வேலை கிடைக்காததால், அவர் குவஹாத்திக்கு சென்றார். அசாமி மொழி தெரியாமல் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

மீனாவை பொறுத்தவரை பிரச்சினை எளிமையானது. 'பல மொழிகள் தெரிந்திருப்பது நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் பிழைப்பின் காரணமாகதான் அவற்றைக் கற்றுக் கொண்டோம்,' என்கிறார் அவர்

காணொளி: பிகாரை சேர்ந்த மீனா யாதவும் ஜார்கண்டை சேர்ந்த பிரஃபுல் சுரினும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர்

“இங்கு மொழி தெரியாமல் பேருந்து கூட ஏற முடியாது. வேலை கொடுப்பவரிடம் பேசுவதையெல்லாம் யோசித்தே பார்க்க முடியாது,” என்கிறார் அவர். “புனேவுக்கு திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறேன். வேலையும் கிடைக்கும். மொழிப் பிரச்சினையும் இருக்காது.” அவருடைய வீடு இருக்கும் இடத்தில் அவருக்கான பிழைப்பு இல்லாமல் போய்விட்டது.

குவஹாத்தியிலிருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாட்டின் தலைநகரில் 13 வயது பிரஃபுல் சுரின் பள்ளியில் நீடிப்பதற்காக இந்தி கற்றுக் கொள்ள சிரமப்படுகிறார். அப்பா விபத்தில் உயிரிழந்தபிறகு, ஜார்கண்டின் கும்லாவிலுள்ள பகண்டோலி கிராமத்தின் வீட்டிலிருந்து புவாவுடன் (தந்தையின் சகோதரி) செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டு 1,300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புது தில்லியின் முனிர்கா கிராமத்தை அவர் வந்தடைந்தார். “இங்கு வந்தபோது தனிமையாக உணர்ந்தேன்,” என்கிறார் அவர். “முண்டாரி மொழி யாருக்கும் தெரியவில்லை. அனைவரும் இந்தி மொழிதான் பேசினர்.”

நகரத்துக்கு இடம்பெயர்வதற்கு முன் கிராமத்துப் பள்ளியில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் சில எழுத்துகளை அவர் கற்றுக் கொண்டார். எனினும் தன்னை வெளிப்படுத்தும் அளவுக்கு அவர் கற்றுக் கொள்ளவில்லை. தில்லியில் இரண்டு வருட காலம் படித்ததாலும் புவா அனுப்பிய ட்யூஷன் வகுப்புகளாலும் அவரால் தற்போது “பள்ளியிலும் நண்பர்களுடன் விளையாடுகையிலும் ஓரளவு இந்தி பேச முடிகிறது,” என்கிறார் அவர். “ஆனால் வீட்டில் நான் புவாவிடம் முண்டாரியில்தான் பேசுகிறேன். அதுவே என் தாய்மொழி.”

தில்லியிலிருந்து 1,100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சட்டீஸ்கரில் 10 வயது ப்ரிதி சேர்க்கப்பட்டிருக்கும் பள்ளியில் தொடர அவருக்கு விருப்பம் இல்லை. பெற்றோருடன் வசிக்கும் அவர், தனக்கு தெரிந்த மொழியிடமிருந்து தூரத்தில் இருக்கிறார்.

40 வயது லதா போயும் கணவரான 60 வயது சுரேந்திர போயும் மலுவா கோண்ட் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒடிசாவின் கெண்டுபரா கிராமத்திலிருந்து ராய்ப்பூருக்கு அவர்கள், தனியார் பண்ணை வீடு பராமரிப்பு வேலை செய்ய வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டீஸ்கரி மொழி பேசத் தெரியும். உரிமையாளர்களிடம் பேச முடிகிறது. “20 வருடங்களுக்கு முன் வாழ்வாதாரம் தேடி இங்கு நாங்கள் வந்தோம்,” என்கிறார் லதா. “என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒடிசாவில் இருக்கின்றனர். அனைவரும் ஒடியா பேசுவார்கள். ஆனால் என் குழந்தைகளுக்கு அம்மொழி எழுதவோ படிக்கவோ தெரியாது. பேச மட்டுமே தெரியும். வீட்டில் நாங்கள் அனைவரும் அம்மொழியில்தான் பேசுவோம். எனக்கும் கூட ஒடியா மொழி வாசிக்கவோ எழுதவோ தெரியாது. பேச மட்டுமே தெரியும்.” அவர்களின் இளைய மகள் ப்ரிதிக்கு இந்தி கவிதைகள் பிடிக்கும். ஆனால் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை.

PHOTO • Pankaj Das
PHOTO • Nirmal Kumar Sahu
PHOTO • Nirmal Kumar Sahu

பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு மராத்தி பேச முடிகிற புனேவின் ஷங்கர் தாஸுக்கு (இடது) சொந்த மாநிலத்தில் அசாமி மொழி தெரியாததால் வேலை கிடைக்கவில்லை. லதா போயும் (வலது) அவரது மகளான ப்ரிதி போயும் (நடுவே) சட்டீஸ்கரில் வசிக்கும் ஒரிசாவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள். தற்போதைய பள்ளியில் வகுப்பு நண்பர்கள் கிண்டல் செய்வதால் ப்ரிதிக்கு அங்கு படிக்க விருப்பமில்லை

“வகுப்பு நண்பர்களுடன் சட்டீஸ்கரி மொழி பேசி சமாளித்து விடுகிறேன். எனினும் இங்கு நான் படிக்க விரும்பவில்லை,” என்கிறார் அவர். “ஏனெனில் என் பள்ளி நண்பர்கள் என்னை ‘ஒடியா-தொடியா’ என சொல்லி கிண்டல் செய்கிறார்கள். தொடியா என்றால் சட்டீஸ்கரி மொழியில் விஷமற்ற, கூச்சம் நிறைந்த பாம்பு என அர்த்தம். பட்டியல் பழங்குடி இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தால், ஒடிசாவிலிருக்கும் விடுதியுடன் கூடிய அரசுப் பள்ளிக்கு ப்ரிதியை அனுப்ப பெற்றோர் விரும்புகின்றனர்.

பெற்றோரின் அருகாமை, நிலம், மொழி எல்லாவற்றிலிருந்தும் இளம் வயதிலேயே பிரிவதுதான் ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளரின் வாழ்க்கையாகவும் இருக்கிறது.

21 வயது நாகேந்திர சிங் 8 வயதில் வேலை தேடி வீட்டை விட்டு கிளம்பினார். ஒரு கிரேன் கருவி நிறுவனத்தில் சுத்தப்படுத்தும் பணியாளராக சேர்ந்தார். உத்தரப்பிரதேசத்தின் ஜகதிஷ்பூர் கிராமம்தான் சொந்த ஊர். அங்கு மக்கள் போஜ்புரி பேசுவார்கள். “இந்தியிலிருந்து அம்மொழி வித்தியாசமானது,” என விளக்குகிறார் அவர். “நாங்கள் போஜ்புரி பேசத் தொடங்கினால், உங்களால் புரிந்து கொள்ள முடியாது.” அவர் குறிப்பிடும் ‘நாங்கள்’ என்பது உடன் வசிக்கும் மூவரையும் வடக்கு பெங்களூரின் கட்டுமான தளத்தில் பணிபுரியும் சக ஊழியர்களையும் பெயிண்டர்களையும் குறிக்கிறது. 26 வயது அலி, 18 வயது மனிஷ் மற்றும் நாகேந்திரா ஆகியோர் கிராமம், வயது, மதம் மற்றும் சாதி ஆகியவற்றால் பிரிந்திருக்கின்றனர். ஆனால் போஜ்புரி மொழியால் இணைந்திருக்கின்றனர்.

வீடுகளையும் மொழிகளையும் அவர்களின் பதின்வயதுகளிலேயே கிராமங்களில் விட்டுவிட்டு வந்து விட்டனர். “திறமை இருந்தால் பிரச்சினை இல்லை,” என்கிறார் அலி. “நான் தில்லி, மும்பை, ஹைதராபாத், சவுதி அரேபியாவுக்கு கூட சென்றிருக்கிறேன். என் கடவுச்சீட்டை நான் உங்களுக்குக் காட்ட முடியும். ஆங்கிலமும் இந்தியும் அங்குதான் நான் கற்றுக் கொண்டேன்.” அது நேர்ந்த விதம் சுலபமானது என்றபடி நாகேந்திராவும் உரையாடலில் பங்கெடுக்கிறார். “எங்கெல்லாம் வேலை இருக்கிறதோ அங்கெல்லாம் நாங்கள் செல்வோம். ஊரைச் சேர்ந்த ஒருவர் எங்களை அழைப்பார். நாங்களும் செல்வோம்,” என்கிறார் அவர்.

“இந்த மாமாவை போல் பலர் இருக்கின்றனர்,” என தமிழ் மட்டுமே தெரிந்த மதுரையை சேர்ந்த 57 வயது சக ஊழியர் சுப்ரமண்யத்தை சுட்டிக் காட்டுகிறார் நாகேந்திரா. “நாங்கள் சைகை மொழியை பின்பற்றுகிறோம். அவரிடம் ஏதேனும் நாங்கள் சொல்ல விரும்பினால் தச்சரிடம் சொல்வோம். அவர் மாமாவிடம் தகவலை சொல்வார். ஆனால் எங்களுக்குள் போஜ்புரியில் பேசிக் கொள்வோம். அறைக்கு மாலையில் சென்றதும் உணவை நான் சமைத்துவிட்டு, போஜ்புரி பாடல்களை கேட்கத் தொடங்குவேன்,” என்கிறார் அவர், தனக்கு பிடித்த பாடல்களை எங்களுக்கு போட்டுக் காட்ட தன் செல்பேசியை எடுத்தபடி.

PHOTO • Pratishtha Pandya
PHOTO • Pratishtha Pandya

வடக்கு பெங்களூரில் வசிக்கும் பெயிண்டர்களான நாகேந்திர சிங்கும் (இடது) அப்பாஸ் அலியும் (வலது) வயதால், கிராமத்தால், மதத்தால் பிரிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பேசும் போஜ்புரி மொழியால் இணைந்திருக்கின்றனர்

PHOTO • Pratishtha Pandya
PHOTO • Pratishtha Pandya

இடது: தமிழ்நாட்டின் சுப்ரமண்யமும் உத்தரப்பிரதேசத்தின் மனிஷும் கட்டுமான தளத்தில் பூச்சு வேலை செய்யும் பணியில் ஒன்றாக பணிபுரிகின்றனர். பேசிக் கொள்ள அவர்கள் சைகை மொழியை பயன்படுத்துகின்றனர். வலது: தனக்கென செய்த உணவை நாகேந்திர சிங் உண்டு கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் கிராமத்தின் ருசியை இழந்த உணர்வு கொள்கிறார்

பரிச்சயமான உணவு, பாடல்கள், விழாக்கள், நம்பிக்கைகள் என நம் பண்பாட்டுடன் நாம் பொருத்திக் கொள்ளும் எல்லாமும் மொழி ரீதியான அனுபவங்களாகவே நம்மை வந்து சேர்கின்றன. எனவே தாய் மொழி குறித்து பேச பாரி சொன்னபோது பலரும் தங்களின் பண்பாடு சார்ந்த உரையாடல்களுக்குள் சென்று விட்டனர்.

பிகாரின் பர்தாபூர் கிராமத்தை விட்டு வந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆனபோதும் மும்பையில் வீட்டுப் பணியாளராக வேலை பார்க்கும் 39 வயது பசந்த் முகியாவின் மனம், மைதிலி என மொழிப்பெயரை சொனந்தும் வீட்டு உணவு மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் நினைவுகளில்தான் அளவளாவுகிறது. “எனக்கு சட்டு (வறுக்கப்பட்ட பயிறில் உருவாக்கப்படும் மாவு), சுரா அல்லது போகா ஆகிய உணவு மிகவும் பிடிக்கும்,” என்கிறார் அவர். மும்பையில் அந்த உணவு வகைகள் அவருக்கு கிடைப்பதில்லை என சொல்லிவிட்டு ‘என் கிராமத்தின் ருசியை நான் இழந்து கொண்டிருக்கிறேன்,” என்கிறார். உணவு தொடர்பை பசந்த் பேசுகிறார். “எங்கள் ஊரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் மதியத்துக்கு கிச்சடியும் மாலை சிற்றுண்டிக்கு புஜாவும் சாப்பிடுவோம். புஜா என்பது தட்டையாக்கப்பட்ட அரிசி, வறுத்த கடலை, வறுத்த உளுந்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, கடுகு எண்ணெய் மற்றும் மசாலா ஆகியவை கலக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மும்பையில் சனிக்கிழமை எப்போது வருகிறது என்று கூட எனக்கு தெரிவதில்லை,” என்கிறார் அவர் ஏக்கப் புன்னகையுடன்.

அவர் மனதில் வரும் இன்னொரு விஷயம் ஹோலி பண்டிகையை கிராமத்தில்  கொண்டாடும் முறை. “ஒரு நண்பர்களின் குழு உங்கள் வீட்டுக்குள் எந்த அறிவிப்புமின்றி அந்த நாளில் நுழையும். வண்ணங்களுடன் பயங்கரமாக நாங்கள் விளையாடுவோம். பிறகு உண்ண மல்புவா (ஹோலிக்காக மைதா, சர்க்கரை, பால் போன்றவற்றை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை) இருக்கும். ஹோலி பாடல்களான ஃபகுவா பாடுவோம்,” என்கிறார் பசந்த். சொந்த மொழியின்றி அவர் விவரிக்கும் அவரின் சொந்த ஊர் காட்சிகள் கண் முன்னே விரிகிறது.

“விழாவை நம்மூரில் நம் மொழி பேசும் மக்களுடன் சேர்ந்து கொண்டாடுவதென்பது முற்றிலும் வேறொரு அனுபவம்,” என கலங்குகிறார் அவர்.

அலகாபாத்தின் அமிலாவோதி கிராமத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ராஜு. அப்படிதான் அவர் அழைக்கப்பட விரும்புகிறார். அவரும் இந்த கூற்றை ஏற்றுக் கொள்கிறார். கடந்த 30 வருடங்களாக அவர் பஞ்சாபில்தான் வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். அஹிர் சமூகத்தை சேர்ந்த அவர், வீட்டில் அவாதி மொழியில் பேசுவார். அமிர்தசரஸ்ஸுக்கும் முதன்முறையாக வந்தபோது சிரமப்பட்டிருக்கிறார். “ஆனால் இப்போது பஞ்சாபி எனக்கு சரளமாக வரும். அனைவருக்கும் என்னை பிடிக்கும்,” என்கிறார் அவர் சந்தோஷமாக.

PHOTO • Swarn Kanta
PHOTO • Swarn Kanta

மும்பையில் இருபது வருடங்களுக்கும் மேலாக வீட்டுப் பணியாளராக வேலை பார்க்கும் பசந்த் முக்கியா சொந்த ஊரின் ஒலிகளையும் பாடல்களையும் இழந்த உணர்வில் இருக்கிறார். தாய்மொழி மைதிலி என சொன்னதும் அவரின் மனம் வீட்டுணவின் நினைவுகளில் திளைக்கிறது

PHOTO • Kamaljit Kaur
PHOTO • Kamaljit Kaur

அலகாபாத்தின் அமிலாவோதியை சேர்ந்த ராஜு பஞ்சாபின் பட்டி டவுனில் பழம் விற்கிறார். பஞ்சாபி மொழியை சரளமாக பேசுகிறார். கிராமத்தில் கொண்டாடப்பட்ட விழாக்களை இழந்ததாக கருதுகிறார்

எனினும் பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டத்தின் பட்டி டவுனில் இருக்கும் இந்த பழ வியாபாரி விழாக்களை தவற விடுவதாக நினைக்கிறார். பணிச்சுமை கிராமத்துக்கு செல்ல முடியாதபடிக்கு அவரை தடுக்கிறது. “என் சொந்த விழாவை இங்கும் நான் கொண்டாட முடியாது,” என்கிறார் அவர். “100 பேர் கொண்டாடும் விழாவில் ஒருவர் பங்கேற்கலாம். ஆனால் இருவரும் நால்வரும் மட்டுமே கொண்டாடும் விழாவுக்கு யார் வருவாரென சொல்லுங்கள்?”

நாட்டின் மறுமூலையில் ராஜஸ்தானிலிருந்து கேரளாவுக்கு வேலை தேடிக் கணவருடன் சென்ற 38 வயது ஷபனா ஷேக்கும் அதே கேள்வியைத்தான் கேட்கிறார். “எங்களின் விழாக்களை எங்களின் கிராமத்தில் கொண்டாடுவோம். அதில் எந்த கூச்சமும் எங்களுக்கு இருக்காது. ஆனால் அவற்றை எப்படி நாங்கள் கேரளாவில் கொண்டாடுவது?” என அவர் கேட்கிறார். “தீபாவளி கேரளாவில் பிரமாதமாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் ராஜஸ்தானில் நாங்கள் அகல் விளக்குகள் வைப்போம். அழகாக இருக்கும்,” என்கிறார் அவர். அவரின் கண்களுக்கு நினைவுகள் ஒளியூட்டுகின்றன.

மொழி, பண்பாடு மற்றும் நினைவு ஆகியவற்றுக்கு இடையிலான உறவு, நாம் பேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமும் சரியாக பிணைக்கப்பட்டிருந்தது. வீடுகளிலிருந்து தொலைதூரங்களில் வாழும் நிலையிலும் கூட, அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான பிரத்யேக வழிகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

60 வயதுகளில் இருக்கும் மஷரு ரபாரிக்கு நிரந்தர முகவரி என எதுவுமில்லை. நாக்பூர், வார்தா, சந்திரப்பூர் அல்லது யவத்மால் ஆகியப் பகுதிகளின் ஏதொவொரு நிலத்தில் இருப்பார். மத்திய விதர்பாவின் மேய்ப்பரான அவர் குஜராத்தின் கச்ச்சை சேர்ந்தவர். “ஒரு வகையில் பார்த்தால் நான் வர்ஹாதி,” என சொல்லும் அவர், வெள்ளை தலைப்பாகையும் வேட்டியும் மேல் ஆபரணங்களும் கொண்ட ரபாரி உடை தரித்திருந்தார். விதர்பாவின் உள்ளூர் பண்பாட்டில் மூழ்கியிருந்த அவர் சமயங்களில் வட்டார வழக்கு மற்றும் வார்த்தைகளை பயன்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார். ஆனாலும் அவரின் நிலத்தை சேர்ந்த பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை கொண்டிருக்கிறார். நிலம்தோறும் செல்லும் அவரின் ஒட்டகங்களின் முதுகுகளில் கட்டப்பட்டிருக்கும் பொதிகளுக்குள் நாட்டுப்புறக் கதைகளும் சொந்த ஊர் அறிவும், பாடல்களும் விலங்குலகை பற்றிய பாரம்பரிய அறிவும் சூழலறிவும் இன்னும் பலவும் அடங்கியிருக்கின்றன.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Rajeeve Chelanat

இடது: கச்ச்சை சேர்ந்த மஷ்ரு ரபாரி, விதர்பாவின் பருத்தி வயல்களில் வசிக்கிறார். தன்னை வர்ஹாதி என சொல்லிக் கொள்கிறார். வலது: ஷபனா ஷேக் (இடது ஓரம்) ராஜஸ்தானை சேர்ந்தவர். கணவர் முகமது அல்வர் (வலது) மற்றும் மகள் சானியா ஷேக் (நடுவே) ஆகியோருடன் கேரளாவில் வசிக்கிறார். கிராமத்தின் தீபாவளி ஒளியை இழந்ததாக அவர் கருதுகிறார்

தோண்டும் கருவியை இயக்குபவர் ஷனால்லுவா ஆலம். 25 வயதாகும் அவர் ஜார்க்கண்டை சேர்ந்தவர். தற்போது கர்நாடகாவின் உடுப்பியில் வாழ்கிறார். பணியிடத்தில் இந்தி சரளமாக பேசுபவர் அவர் மட்டும்தான். அவரது மொழி மற்றும் மக்களுடனான பிணைப்பு செல்பேசியின் வழியாகவே நேர்கிறது. குடும்பத்துடனும் நண்பர்களுடனும் இந்தியிலோ ஜார்க்கண்டின் வடக்கு சோட்டா நாக்பூர் மற்றும் சந்தல் பர்கானா பகுதிகளில் பேசப்படும் கோர்த்தா மொழியிலோ அவர் பேசுகிறார்.

23 வயது சோபின் யாதவ் ஜார்க்கண்டை சேர்ந்த இன்னொரு இளம் புலம்பெயர் தொழிலாளர் ஆவார். அவரும் குடும்பத்துடன் தொடர்பை பேண செல்பேசியை சார்ந்திருக்கிறார். அவர் “கிரிக்கெட் வீரர் தோனி வீட்டிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்,” மஜ்கவோன் கிராமத்திலிருந்து சென்னைக்கு சில வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்தவர். சென்னையின் ஓர் உணவகத்தில் பணிபுரியும் அவருக்கு இந்தி பேசும் வாய்ப்பு மிகக் குறைவு. ஒவ்வொரு மாலை நேரத்திலும் மனைவியுடன் செல்பேசியில் பேசும்போது மட்டும்தான் அவர் தாய்மொழியை பயன்படுத்துகிறார். “இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ப்படங்களை நான் செல்பேசியில் பார்க்கிறேன். சூர்யா எனக்கு பிடித்த நடிகர்,” என்கிறார் அவர் தமிழ்மொழி பற்றி பேசுகையில்.

“இங்கு இந்தியோ, உருது மொழியோ போஜ்புரியோ எந்த மொழியும் எடுபடாது. ஆங்கில மொழி கூட பயன்படாது. இதயத்தின் மொழி மட்டுமே பயன்படும்,” என்கிறார் வினோத் குமார். பிகாரின் மோதிகரி கிராமத்தை சேர்ந்த 53 வயது மேஸ்திரியான அவர், கஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்தின் பட்டான் ஒன்றியத்திலுள்ள சஜித் கனி சமையலறையில் மதிய உணவு உண்டு கொண்டிருக்கிறார். சாஜித் அவரை வேலைக்கு வைத்திருப்பவர். “வீட்டு உரிமையாளர் அவரின் பணியாளருடன் அமர்ந்து உண்ணுகிறார். வேறெங்கேனும் இதை நீங்கள் பார்த்ததுண்டா?” என சாஜித்தை சுட்டிக்காட்டி வினோத் கேட்கிறார். “என் சாதி கூட அவருக்கு தெரியாது என நினைக்கிறேன். சொந்த ஊரில் நான் தொட்டால், பிறர் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். ஆனால் இங்கு சொந்த சமையலறையில் எனக்கு உணவு போட்டு, அருகே அமர்ந்து இவர் உண்ணுகிறார்.”

கஷ்மீருக்கு வினோத் வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. “1993ம் ஆண்டில் நான் கஷ்மீருக்கு முதன்முதலாக தொழிலாளராக வந்தேன்.  கஷ்மீரைப் பற்றி அதிகம் எனக்கு தெரியாது. அப்போதெல்லாம் ஊடகங்கள் இப்போதிருப்பதை போல் கிடையாது. செய்தித்தாள்களில் தகவல்கள் வந்திருந்தாலும் எனக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. ஒப்பந்தக்காரரிடமிருந்து அழைப்பு வந்தால் போதும். வருமானம் ஈட்ட நாங்கள் கிளம்பிவிடுவோம்,” என அவர் விளக்குகிறார்.

PHOTO • Shankar N. Kenchanuru
PHOTO • Rajasangeethan

இடது: ஜார்க்கண்டை சேர்ந்த ஷனாவுல்லா ஆலம் கர்நாடகாவின் உடுப்பியில் தோண்டும் கருவியை இயக்கும் பணியைச் செய்கிறார். அவர் இந்தி அல்லது கோர்த்தா மொழிகளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுகையில் பயன்படுத்துகிறார். வலது: ஜார்க்கண்டை சேர்ந்த சோபின் யாதவ் சென்னையில் பணிபுரியும் உணவகத்தில் தமிழில் பேசுகிறார். மனைவியுடன் செல்பேசியில் பேசும்போது இந்தியில் பேசுகிறார்

“அனந்த்நாக் மாவட்டத்தில் நான் அப்போது வேலை பார்த்தேன்,” என அவர் நினைவுகூறுகிறார். “நாங்கள் வந்தடைந்தபோது திடீரென எல்லாமும் மூடப்பட்டது. சில நாட்களுக்கு வேலை இல்லை. கையில் நயா பைசாவும் இல்லை. ஆனால் இங்கிருக்கும் கிராமவாசிகள் எனக்கும் எங்கள் அனைவருக்கும் உதவினர். மொத்தமாக 12 பேர் வந்திருந்தோம். எங்களுக்கு உணவளித்தனர். எந்த உள்நோக்கமும் இன்றி, யார் இப்படி உதவுவாரென சொல்லுங்கள்?,” எனக் கேட்கிறார் அவர். நாகரிகம் கருதி மறுத்தும் கூட பொருட்படுத்தாமல், அவர் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஒரு சிக்கன் துண்டை சாஜித், வினோத்தின் தட்டில் வைக்கிறார்.

“கஷ்மீரி மொழியில் ஒரு வார்த்தை கூட எனக்கு தெரியாது,” என்கிறார் வினோத். ஆனால் அனைவரும் இங்கு இந்தியை புரிந்து கொள்கின்றனர். இதுவரை நல்லவிதமாக இருக்கிறது.”

“போஜ்புரி மொழி (தாய்மொழி) என்ன ஆனது,” என அவரிடம் கேட்டோம்.

“என்ன ஆனது?” என பதிலுக்கு கேட்கிறார். “என் கிராமத்தை சேர்ந்தவர்கள் வரும்போது நாங்கள் போஜ்புரி பேசுவோம். இங்கு யார் என்னுடன் போஜ்புரி பேசப் போகிறார்? நீங்கள் சொல்லுங்கள்?,” எனக் கேட்கிறார். பிறகு புன்னகைத்து, “சாஜித் பாய்க்கு கொஞ்சம் என் தாய்மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறேன். சொல்லுங்கள் சாஜித் பாய்… நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”

“திக் பா (நான் நன்றாக இருக்கிறேன்),” என பதிலுரைக்கிறார் சாஜித்.

”சின்ன சின்ன தவறு அவ்வப்போது வரும். ஆனால் அடுத்த முறை வாருங்கள். அவர் ரிதேஷின் (போஜ்புரி நடிகர்) பாடல் ஒன்றை பாடி காட்டுவார்!”

இக்கட்டுரைக்கான பங்களிப்பை முகமது கமார் தப்ரெஸ் தில்லியிலிருந்தும் ஸ்மிதா கடோர் மேற்கு வங்கத்திலிருந்தும் பிரதிஷ்தா பாண்டியா மற்றும் ஷங்கர் என். கெஞ்சனூர் ஆகியோர் கர்நாடகாவிலிருந்தும் ராஜசங்கீதன் தமிழ்நாட்டிலிருந்தும் நிர்மல் குமார் சாகு சட்டீஸ்கரிலிருந்தும் அசாமிலிருந்து பங்கஜ் தாஸும் கேரளாவிலிருந்து ராஜீவ் செலானத்தும் ஜெய்தீப் ஹர்திகர் மற்றும் ஸ்வர்னா கந்தா ஆகியோர் மகாராஷ்டிராவிலிருந்தும் கமல்ஜீத் கவுர் பஞ்சாபிலிருந்தும் வழங்கியிருக்கின்றனர். ஆசிரியர் குழுவை சேர்ந்த மேதா கலே, ஸ்மிதா கடோர், ஜோஷுவா போதிநெத்ரா மற்றும் சன்விதி ஐயர் ஆகியோரின் உதவியுடன் பிரதிஷ்தா பாண்டியா தொகுத்திருக்கிறார். புகைப்படத்தொகுப்பை பினைஃபர் பருச்சாவும் காணொளி படத் தொகுப்பை ஷ்ரெயா கத்யாயினியும் செய்திருக்கின்றனர்

முகப்பு படம்: லபானி ஜங்கி

தமிழில் : ராஜசங்கீதன்

PARI Team
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan