நோசுமுதீன் அழுது கொண்டிருந்தார். அவர் முதல்முறையாக தனது வீட்டிலிருந்து தொலைதூரம் - 10 முதல் 12 கிலோ மீட்டர்- அவரது பெற்றோரை விட்டுவிட்டு செல்கிறார். ஏழு வயதில் அது மிகவும் கடினமாக இருந்தது. "நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன், அழுகவும் செய்தேன். வீட்டையும் எனது குடும்பத்தினரையும் விட்டு பிரிகிறேன் என்ற எண்ணமே கண்ணீரை வரவழைத்தது", என்று அவர் நினைவு கூர்ந்தார்.

அவர் ஒரு ரக்கல் (கால்நடை பராமரிப்பாளர்) வேலைக்கு அனுப்பப்பட்டார். "எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது, எனது பெற்றோருக்கு வேறு வழியே இல்லை", என்று 41 வயதாகும் நோசுமுதீன் ஷேக் கூறுகிறார். "எங்களுக்கு உணவளிக்கப் போதுமான உணவு அவர்களிடம் இல்லை. நாங்கள் பல நாட்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே உண்டோம் அதுவும் வயலில் என்ன விளைகிறதோ அதையே உண்டோம். அந்த காலத்தில் எங்களது கிராமத்தில் ஒரு சில குடும்பத்தாலேயே இரண்டு வேளை உணவைப் பெற முடிந்தது". இதில் கல்வி என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது : "அந்த நேரத்தில் நான் பள்ளிக்குச் செல்வதைப் பற்றி சிந்திக்கவே முடிந்ததில்லை. எங்களது குடும்பத்தின் நிலையே மிகவும் மோசமாக இருக்கும் போது, நான் எப்படி பள்ளிப்படிப்பை பற்றி சிந்திக்க முடியும்?"

அதனால் அவர் அசாமின் (அப்போதைய) துப்ரி மாவட்டத்தில் உள்ள உரார்புய் கிராமத்திலுள்ள தங்களது எளிமையான ஓலைக் குடிசையை விட்டுவிட்டு மனுல்லபரா கிராமத்திற்கு பேருந்தில் சென்றார், பேருந்தில் 7 பசு மாடுகள் மற்றும் 12 பைகா (4 ஏக்கர்) நிலம் வைத்திருப்பவர்களுக்கான மூன்று ரூபாய் டிக்கெட் எடுத்து பயணித்தார். "ரக்கலாக வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அந்த வயதிலேயே நான் நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. சில நேரங்களில் எனக்கு போதிய உணவும் வழங்கப்படவில்லை அல்லது மீதியிருந்த உணவே வழங்கப்பட்டது. நான் பசியால் அழுதிருக்கிறேன்", என்று நோசுமுதீன் நினைவு கூர்ந்தார். "ஆரம்பத்தில், எனக்கு சம்பளம் என்று எதுவும் வழங்கப்படவில்லை, சாப்பாடும், தூங்குவதற்கு இடமும் மட்டுமே கொடுக்கப்பட்டது. எனது முதலாளிக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 - 120 மோன் அரிசி கிடைக்கும். நான்கு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டு மோன் அரிசி வழங்க ஆரம்பித்தார்" - அதாவது சுமார் 80 கிலோ, மார்ச் முதல் நவம்பர் வரையிலான விவசாய பருவத்தின் முடிவில் அது வழங்கப்பட்டது.

அசாம் மற்றும் மேகாலயாவின் எல்லையில் உள்ள கிராமங்களில் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை குடும்பத்தில் உள்ள சிறுவர்களை ரக்கலாக வேலைக்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கால்நடை பராமரிப்பு 'பணியில் அமர்த்தப்படுவதற்கு' பணக்கார விவசாயிகளுக்கு அவர்களின் பெற்றோர்களால் 'கொடுக்கப்பட்டனர்'. இந்த வழக்கத்தினை உள்ளூரில் பெட்பாட்டி என்று அழைத்தனர் ('வயிற்றுக்கு உணவளித்தல்' என்பது இதன் பொருள்).

Nosumuddin starts preparing crunchy jalebis before dawn. Recalling his days as a cowherd, he says: ‘I would get tired working all day, and at night if not given enough food or given stale food, how would you feel? I felt helpless’
PHOTO • Anjuman Ara Begum

நோசுமுதீன் விடிவதற்கு முன்பே மொறுமொறுப்பான ஜிலேபிகளைத் தயாரிக்க தொடங்குகிறார். அவர் தான் மாடு மேய்த்த நாட்களை நினைவு கூர்ந்து: நான் நாள் முழுவதும் வேலை செய்வதால் சோர்வடைந்து இருப்பேன் மேலும் இரவில் போதுமான உணவு கொடுக்கப்பட்டாவிட்டால் அல்லது பழைய உணவு கொடுக்கப்பட்டால் , எப்படி இருக்கும் உங்களுக்கு? நான் இயலாதவனாக உணர்ந்தேன்'

நோசுமுதீனின் இரண்டு இளைய சகோதரர்களும் தங்கள் சொந்த ஊரான உரார்புயிலேயே ரக்கலாக வேலைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது தந்தை உசேன் அலி (கடந்த மாதம் தனது 80வது வயதில் காலமானார்) ஒரு நிலமற்ற விவசாயி, அவர் 7- 8 பைகா நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் பகிர்வு முறையில் நெல் பயிரிட்டு வந்தார். (அவரது தாயார் நோசிரான் கத்தூன் ஒரு இல்லத்தரசி அவர் 2018 ஆம் ஆண்டு காலமானார்).

நோசுமுதீன் கடின உழைப்பாளி. ஒரு ரக்கலாக அவரது நாள் அதிகாலை நான்கு மணிக்குத் துவங்கும். ' நான் காலை பிரார்த்தனை நேரத்தில் எழுந்திருப்பேன்' என்று அவர் கூறுகிறார். அவர் வைக்கோலையும், கடுகுப் புண்ணாக்கையும் தண்ணீரையும் கலந்து தீவனமாக கொடுப்பார், மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்வார், மேலும் நில உரிமையாளரின் சகோதரர்களுடன் சேர்ந்து மாடுகளை நெல் வயலுக்கு ஓட்டிச் செல்வார். அங்கு அவர் புற்களை சுத்தம் செய்து மாடுகளுக்கு தண்ணீர் காண்பிப்பது மற்றும் பிற வேலைகளையும் செய்வார். பகல் நேர உணவு வயலுக்கே அனுப்பி வைக்கப்படும். அறுவடை நேரத்தில் சில நாட்கள் இருட்டும் வரை கூட வேலை செய்வார். "நான் நாள் முழுவதும் வேலை செய்வதால் சோர்வடைந்து இருப்பேன் மேலும் இரவில் போதுமான உணவு கொடுக்கப்பட்டாவிட்டால் அல்லது பழைய உணவு கொடுக்கப்பட்டால், எப்படி இருக்கும் உங்களுக்கு? நான் இயலாதவனாக உணர்ந்தேன்".

பெரும்பாலும், பழைய துணியில் செய்யப்பட்ட தலையணை மற்றும் மாட்டு தொழுவத்தில் உள்ள ஒரு மூங்கில் கட்டிலில் வைக்கோல் போட்டு அதன் மீது தூங்கும்போது பல இரவுகளில் அவர் அழுதபடியே இருந்திருக்கிறார்.

ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது கிராமத்திற்கு செல்வதற்கு அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நான் இரண்டு முதல் மூன்று நாட்கள் தங்க முடியும். நான் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறும் போது எனக்கு சோகமாக இருக்கும்", என்று அவர் கூறினார்.

நோசுமுதீனுக்கு 15 வயதாக இருந்தபோது அவரது தந்தை இவரது முதலாளியை மாற்றினார். இம்முறை அவர் மனுல்லபரா கிராமத்தில் உள்ள ஒரு தொழிலதிபரான விவசாயின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார் அவரிடம் 30 -35 பைகா நிலங்கள், ஒரு துணிக்கடை மற்றும் பிற தொழில்களும் இருந்தது. "மற்றொரு புதிய இடத்திற்கு மீண்டும் செல்லும்போது எனக்கு வீட்டை பற்றிய நினைவு ஏற்பட்டு நான் மீண்டும் அழுதேன். சோதா பெபாரி (புதிய முதலாளி) என்னை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி இரண்டு ரூபாயை பரிசாகக் கொடுத்தார். நான் அதில் பின்னர் சாக்லேட் வாங்கினேன். அது எனக்கு மகிழ்ச்சியளித்தது. சில நாட்களுக்குப் பிறகு நான் நன்றாக உணர்ந்தேன் மேலும் அந்த இடத்திற்கு என்னை பழகிக்கொண்டேன்.

மீண்டும், உணவு, மாட்டுத்தொழுவத்தில் தூங்கும் இடம் மற்றும் அறுவடை காலத்தின் முடிவில் இரண்டு மூட்டை அரிசி, 400 ரூபாய் பணம் ஆகியவை எனது 'வருடாந்திர சம்பளமாக' வழங்கப்பட்டது. அவருடைய தினசரி வேலை கால்நடைகளை மேய்ப்பது, மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்வது ஆகியவையாகும். ஆனால் வாழ்க்கை இப்போது நோசுமுதீனுக்கு கொஞ்சம் சிறப்பாக அமைந்தது. இப்போது அவருக்கு 15 வயது, வேலையை அவரால் திறம்பட செய்ய முடிந்தது. மேலும் அவரது முதலாளியும் கனிவானவர் என்று கூறினார்.

Two decades ago, marriage opened for him the opportunity to learn from his wife Bali Khatun's family the skill of making sweets
PHOTO • Anjuman Ara Begum
Two decades ago, marriage opened for him the opportunity to learn from his wife Bali Khatun's family the skill of making sweets
PHOTO • Anjuman Ara Begum

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு அவரது மனைவி பாலி கத்தூனின் குடும்பத்தினரிடமிருந்து இனிப்புகள் செய்யும் திறனை கற்றுக் கொள்ளும் வாய்ப்பைத் திருமணம் ஏற்படுத்தித் தந்தது

இப்போது அவருக்கு வழங்கப்படும் உணவில் சூடான சாதம், காய்கறிகள், மீன் அல்லது கறி வழங்கப்படுகிறது - பழைய முதலாளி வழங்கியது போல பழைய சாதம் வழங்கப்படுவதில்லை. "நான் அவர்களுடன் சந்தைக்குச் சென்றால் எனக்கு ரசகுல்லா வாங்கி தருவார்கள். ஈகை பண்டிகைக்கு புதிய துணிகள் வாங்கி தருவார்கள். நான் அவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினரை போல உணர்ந்தேன்".

ஆனால் இவரது தந்தை இவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருந்தார். நோசுமுதீனுக்கு அப்போது வயது சுமார் 17, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்னொரு குடும்பத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார், ஆனால் இந்த முறை அவரது சொந்த கிராமமான உரார்புய்க்கே அனுப்பப்பட்டார். கிராம பஞ்சாயத்து தலைவர் அவரை 1,500 ரூபாய் பணம் மற்றும் அறுவடை பருவத்தின் முடிவில் வழக்கமான

இன்னொரு வருடமும் கழிந்தது.

நான் பல நேரம் இப்படி எனது வாழ்நாள் முழுவதும் அடிமையாகவே இருந்து விடுவேன் என்று நினைத்ததுண்டு. ஆனால் எனக்கு வேறு வழியில்லை என்று நோசுமுதீன் கூறினார். ஆனாலும் அவர் நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டார் தன்னால் சொந்தமாக ஒரு தொழில் துவங்க முடியும் என்ற கனவை அவர் வளர்த்தார். 1990களில் தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் புலம்பெயர்வதை அவர் கவனித்தார், இப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின. இளம் சிறுவர்கள் இனியும் ரக்கல்களாக வேலை செய்ய விரும்பவில்லை, மேலும் அவர்கள் நகரங்களில் உள்ள தேநீர் கடைகள் அல்லது உணவகங்களில் மாதத்திற்கு 300 முதல் 500 ரூபாய் சம்பாதித்து வீட்டுக்கு 'பெரும்' பணத்துடன் திரும்ப முடிந்தது.

புதிய வானொலிகளை கேட்பதையும், பளபளப்பான கைக்கடிகாரங்கள் அணிவதையும் பார்த்து நோசுமுதீன் அமைதியற்றவராக இருந்தார். சிலர் சைகைகள் கூட வாங்கினார். "அவர்கள் அமிதாப்பச்சன் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி போன்ற பளபளப்பான நீண்ட பேன்டு அணிந்து ஆரோக்கியமாக காணப்பட்டனர்", என்று அவர் நினைவு கூர்ந்தார். "அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க நான் அவர்களிடம் கேள்விகளைக் கேட்பேன். பின்னர் அவர்களுடன் நானும் செல்ல முடிவு செய்தேன்".

நோசுமுதீன் தனது கிராமத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேகாலயாவில் இருக்கும் பாக்மாரா நகரத்தில் இருக்கும் வேலைகளை பற்றி அறிந்தார். அவர் ரகசியமாக பயண வழி பற்றி விசாரித்து ஒரு திட்டத்தை உருவாக்கினார். "நான் பதற்றமாக இருந்தேன் ஆனால் உறுதியாக இருந்தேன். நான் என் வீட்டில் யாருக்கும் எதுவும் தெரிவிக்கவில்லை, ஒருவேளை தெரியப்படுத்தினால் அவர்கள் என்னை பின் தொடர்ந்து என்னை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவார்கள் என்று நான் கவலைப்பட்டேன்".

ஒருநாள் காலை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக நோசுமுதீன் ஓடத் துவங்கினார். நான் வெளியில் வேலை செய்வது பற்றி பேசிக்கொண்டிருந்த ஒரு இளைஞனுடன் சென்றேன். நாங்கள் ஹட்சிங்கிமாரி நகரப் பேருந்து நிறுத்தத்தை அடையும்வரை ஓடினோம்". அங்கிருந்து பாக்மாரா செல்வதற்கு ஒன்பது மணி நேரம் ஆனது. "நான் எதுவும் சாப்பிடவில்லை. 17 ரூபாய் டிக்கெட் கொடுப்பதற்கு போதுமான பணம் கூட என்னிடம் இல்லை. பாக்மாரா சென்ற பிறகு எனது கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞனிடம் கடன் வாங்கித்தான் நான் அதையே கொடுத்தேன்".

நான் பல நேரம் இப்படி எனது வாழ்நாள் முழுவதும் அடிமையாகவே இருந்து விடுவேன் என்று நினைத்ததுண்டு. ஆனால் எனக்கு வேறு வழியில்லை என்று நோசுமுதீன் கூறினார். தன்னால் சொந்தமாக ஒரு தொழில் துவங்க முடியும் என்ற கனவை அவர் வளர்த்தார்

காணொளியில் காண்க: மாயாவின் பாடல் , இனிப்பு ரசகுல்லா துண்டு

வெறும் பாக்கெட் மற்றும் வெறும் வயிற்றோடு அவரது கனவு இலக்கில் நோசுமுதீன் ரோமோனி டீ கடைக்கு முன்னால் பேருந்திலிருந்து இறங்கினார். தனியாக கண்களில் பசியோடு வந்து இறங்கும் இளைஞனை உள்ளே வரும்படி டீ கடையின் முதலாளி சைகை செய்தார்.நோசுமுதீனுக்கு உணவு வழங்கப்பட்டது, தங்குவதற்கு இடமும் அளிக்கப்பட்டது மேலும் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்யும் வேலையும் கொடுக்கப்பட்டது.

அந்த முதல் நாள் இரவு நோசுமுதீனுக்கு அழுகையான இரவாக இருந்தது. தனது கிராமத்தில் முன்னாள் முதலாளியிடம் இருந்து தனக்கு கிடைக்க வேண்டிய 1000 ரூபாய் சம்பளத்தை நினைத்து அழுதார். அந்த நேரத்தில் அதுதான் அவருடைய ஒரே கவலையாக இருந்தது. எனக்கு மிகவும் சோகமாக இருந்தது. நான் கடினமாக உழைத்தும் இவ்வளவு பெரிய தொகை வீணாகிப் போனது".

மாதங்கள் கடந்தன. அவர் தேநீர் கோப்பைகளையும் தட்டுகளையும் சுத்தம் செய்ய கற்றுக் கொண்டார். மேலும் அவர் சூடான டீ தயாரிப்பதையும் கற்றுக்கொண்டார். அவருக்கு மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது அது அனைத்தையும் சேமித்து வைத்தார். நான் 1,500 ரூபாய் சேமித்தவுடன் இதுதான் எனது பெற்றோரை சந்திக்க சரியான தருணம் என்று உணர்ந்தேன். இந்தப் பணம் அவர்களுக்கு உதவும் என்பது எனக்கு நன்கு தெரியும். மேலும் நான் வீட்டிற்கு திரும்பிச் செல்வதற்கு விரும்பினேன்".

வீட்டிற்கு வந்தவுடன் நான் சேமித்து வைத்த மொத்த பணத்தையும் எனது அப்பாவிடம் கொடுத்தேன். நீண்ட கால குடும்ப கடன் ஒன்றை அடைப்பதற்கு அது பயன்பட்டது மேலும் குடும்பத்தினர் அவர் வீட்டை விட்டு ஓடியதை மன்னித்துவிட்டனர்.

ஒரு மாதத்திற்குப் பிறகு நோசுமுதீன் பாக்மாராவிற்கு திரும்பினார் மேலும் அவர் வேறொரு டீக்கடையில் பாத்திரம் கழுவுவதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார். விரைவிலேயே அவர் சர்வராக பணிவுயர்த்தப்பட்டார், அவர் இப்போது டீ, இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் - பூரி குருமா, பராத்தா, சமோசா, ரசமலாய், ரசகுல்லா மற்றும் பலவற்றை, காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பரிமாற வேண்டியிருந்தது. அந்த உணவகத்தில் சர்வர்கள் அனைவரும் அங்கேயே தங்கியிருந்தனர்.

அவர் இங்கு நான்கு வருடங்கள் வேலை செய்தார், தொடர்ந்து வீட்டிற்கு பணம் அனுப்பினார். 4,000 ரூபாய் சேமித்த பிறகு அவர் வீட்டிற்கு திரும்ப முடிவு செய்தார்.

அவர் தனது சேமிப்பு பணத்தில் இருந்து ஒரு காளை மாட்டினை வாங்கி குத்தகைக்கு எடுத்த நிலத்தில் உழ ஆரம்பித்தார். அது ஒன்றுதான் அவரது கிராமத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு. உழுவது, விதைப்பது, சுத்தம் செய்வது என்று அவர் நாள் முழுவதும் வயலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.

Nosumuddin usually made rasogollas in the afternoon or evening – and stored them. But his small (and sweet) world abruptly came to a halt with the lockdown
PHOTO • Anjuman Ara Begum
Nosumuddin usually made rasogollas in the afternoon or evening – and stored them. But his small (and sweet) world abruptly came to a halt with the lockdown
PHOTO • Anjuman Ara Begum

நோசுமுதீன் வழக்கமாக பிற்பகல் அல்லது மாலை வேளையில் ரசகுல்லாக்களை செய்து அவற்றை சேமித்து வைத்தார். ஆனால் அவரது சிறிய (இனிப்பான) உலகம் ஊரடங்கில் திடீர் நிறுத்ததிற்கு வந்தது

ஒருநாள் காலை ஹலோய் (அல்வா போன்ற இனிப்பு தயாரிப்பாளர்கள்) அவர் வேலை செய்யும் வயல் வழியாக சென்று கொண்டிருந்தனர். "நான் அவர்களிடம் பெரிய அலுமினிய பாத்திரங்களில் என்ன கொண்டு போகிறார்கள் என்று கேட்டேன். அவர்கள் ரசகுல்லா என்று கூறினர். நான் இது ஒரு லாபகரமான வியாபாரம் என்பதை அறிந்தேன். நான் ரசகுல்லா தயாரிக்கப்பட்ட ஒரு டீக்கடையில் வேலை செய்தும் அவற்றை எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்தினேன்".

நோசுமுதீன் இப்போது 'சீராக வாழ' விரும்பினார். "என் வயது இளைஞர்கள் (20களின் முற்பகுதியில் இருப்பவர்கள்) திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். நான் எனக்கான ஒரு வாழ்க்கை துணையை கண்டுபிடித்து, வீடு கட்டி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்பினேன்". அவர் ஒரு விவசாயின் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஒரு பெண்ணை விரும்பினார். பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் அப்பெண்ணை அவர் பார்ப்பார். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பெண்ணிடம் போய் கூறினார். அது மோசமாக முடிந்தது. அந்தப் பெண் அங்கிருந்து ஓடி மறுநாள் முதல் வேலைக்கு வருவதையே நிறுத்திவிட்டார்.

"நான் அவரை மீண்டும் சந்திக்க காத்திருந்தேன், ஆனால் அப்பெண் வரவே இல்லை", என்று அவர் நினைவு கூர்ந்தார். "பிறகு நான் என் மைத்துனரிடம் பேசினேன் அவர் எனக்கு ஒரு பொருத்தமான பெண்ணை தேடத் துவங்கினார்". இப்போது சுமார் 35 வயதாகும், ஹலோயியின் மகளான பாலி கத்தூனுடன் அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. (பின்னர் அவர் தனது முதல் காதல், அவரது மனைவியின் சித்தி என்பதை அறிந்தார்.)

இனிப்பு தயாரிக்கும் திறனை அவரது மனைவியின் குடும்பத்திடமிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பை திருமணம் அவருக்கு வழங்கியது. அவரது முதல் தனி முயற்சியில் அவர் மூன்று லிட்டர் பாலை பயன்படுத்தி - 100 ரசகுல்லா செய்தார், ஒரு ரசகுல்லாவை ஒரு ரூபாய்க்கு வீடு வீடாக விற்றதில், அவருக்கு 50 ரூபாய் லாபம் கிடைத்தது.

அது விரைவில் அவரது வழக்கமான வருமான ஆதாரமாக மாறியது. காலப்போக்கில், அது அவரது குடும்பத்தின் கடன்களை அடைப்பதற்கும் தொடர்ச்சியான வெள்ளம் அல்லது வறட்சியால் விவசாயத்தில் ஏற்பட்ட இழப்புகளை சீர் செய்யவும் உதவியது.

'I walk to nearby villages to sell, sometimes I walk 20-25 kilometres with a load of about 20-25 kilos of sweets'
PHOTO • Anjuman Ara Begum
'I walk to nearby villages to sell, sometimes I walk 20-25 kilometres with a load of about 20-25 kilos of sweets'
PHOTO • Anjuman Ara Begum

'நான் அருகிலுள்ள கிராமங்களுக்கு நடந்தே விற்க செல்கிறேன், சில நேரங்களில் சுமார் 20 - 25 கிலோ இனிப்பை சுமந்து கொண்டு 20 - 25 கிலோ மீட்டர் தூரம் கூட நடக்க வேண்டியிருக்கும் '

2005இல் நோசுமுதீனுக்கு 25 வயதாக இருந்த போது, தனது கிராமத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மேகாலையாவின் தென்மேற்கு காரோ மாவட்டத்திலிருக்கும் எல்லை நகரமான மகேந்திரகஞ்சுக்கு பயணித்தார். அங்கு இனிப்பு வியாபாரம் நன்றாக நடக்கும் என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அந்நகரத்தில் ஒரு அந்நியராக அதைச் செய்வது எளிதல்ல. அந்த காலகட்டத்தில் தொடர் கொள்ளைகள் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி இருந்தது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தனர். வாடகைக்கு ஒரு இடத்தை கண்டு பிடிப்பதற்கே நோசுமுதீனுக்கு மூன்று மாதங்களானது. மேலும் அவரது இனிப்புகளுக்கான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனது.

அவருக்கு எந்த மூலதனமும் இல்லை கடனில் தான் இந்த தொழிலை துவங்கினார், ஒத்திவைக்கப்பட்ட கட்டணத்தில் அனைத்து பொருட்களையும் வாங்கினார். அவரது மனைவி பாலி கத்தூன் 2015 ல் மகேந்திரகஞ்சுக்கு வந்தார். இப்போது அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன - அவர்களது மகள் ராஜ்மினா கத்தூனுக்கு இப்போது 18 வயது மற்ற இரண்டு மகன்களான 17 வயதாகும் ஃபரிதுல் இஸ்லாம் மற்றும் 11 வயதாகும் சோரிஃபுல் இஸ்லாம் ஆகிய இருவரும் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக நோசுமுதீனுக்கு மாதம் சுமார் 18,000 முதல் 20,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இக்குடும்பத்தின் வியாபாரம் விரிவடைந்துள்ளது. அவரும் பாலி கத்தூனும் ரசகுல்லாவுடன் ஜிலேபிகளும் செய்து வருகின்றனர்.

நோசுமுதீன் பருவத்தைப் பொறுத்து வாரத்தில் ஆறு அல்லது ஏழு நாட்கள் வியாபாரம் செய்வார். அவரும் பாலி கத்தூனும் மதியம் அல்லது மாலை வேளையில் 5 லிட்டர் பால் மற்றும் 2 கிலோ சர்க்கரை பயன்படுத்தி 100 ரசகுல்லாக்காளை தயார் செய்து சேமித்து வைக்கின்றனர். விடிவதற்குள் அவர்கள் ஜிலேபிகளையும் தயார் செய்கின்றனர் ஏனென்றால் அதை புதிதாக விற்க வேண்டும். பிறகு நோசுமுதீன் அந்த இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீடு வீடாக அல்லது கிராமங்களில் இருக்கும் டீ கடைகளில் விற்று மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு திரும்புவார்.

ஆனால் அவரது சிறிய (இனிப்பான) உலகம் மார்ச் 2020ல் கோவிட் காரணமாக போடப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கில் திடீர் நிறுத்ததிற்கு வந்தது. அடுத்த சில வாரங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவர்களிடம் எஞ்சியிருந்த அரிசி, பருப்பு, கருவாடு மற்றும் மிளகாய் தூளை வைத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். அவர்களின் நில உரிமையாளர் மேலும் அரிசி மற்றும் காய்கறிகளை இருப்பு வைக்க உதவினார் (நோசுமுதீன் மகேந்திரகஞ்சில் புலம்பெயர் தொழிலாளி என்பதால் அவர் தனது குடும்ப அட்டையை பயன்படுத்தி அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண பொருட்களை பெற முடியாது).

சில நாட்கள் கழித்து அவர் தனது வீட்டிற்கு அருகில் இருப்பவர்களுக்கு வீட்டிலேயே இருந்து சலித்துப் போனவர்களுக்கு தனது ரசகுல்லாக்களை செய்து விற்று அதன் மூலம் 800 ரூபாய் சம்பாதித்தார். அதைத் தவிர அவருக்கு வேறு எந்த வருமானமும் இல்லை.

Nosumuddin's income is irregular during the pandemic period: 'Life has become harder. But still not as hard as my childhood...'
PHOTO • Anjuman Ara Begum
Nosumuddin's income is irregular during the pandemic period: 'Life has become harder. But still not as hard as my childhood...'
PHOTO • Anjuman Ara Begum

பெருந்தொற்று காலத்தில் நோசுமுதீனின் வருமானம் சீரற்றுப் போனது: 'வாழ்க்கையே கடினமாகிவிட்டது. ஆனாலும் அது என் குழந்தை பருவத்தை போல கடினமாகவில்லை...'

ஊரடங்கில் ஒரு மாதம் கடந்துவிட்டது. ஒருநாள் மதியம் அவரது நில உரிமையாளர் ஜிலேபி சாப்பிட விரும்பினார். நோசுமுதீன் தன்னிடமிருந்த பொருட்களை வைத்து அதை தயார் செய்தார். விரைவில் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஜிலேபிகள் கேட்க ஆரம்பித்தனர். நோசுமுதீன் அருகில் இருக்கும் ஒரு மொத்த மளிகைக் கடைக்காரரிடமிருந்து கொஞ்சம் மாவு, சர்க்கரை மற்றும் பாமாயிலை கடனாக வாங்கினார். அவர் தினமும் மதியம் ஜிலேபிகள் தயார் செய்து விற்று அதன் மூலம் நாளொன்றுக்கு 400 - 500 ரூபாய் சம்பாதித்தார்.

ஏப்ரல் மாதத்தில் ரமலான் மாதம் துவங்கிய போது அவரது ஜிலேபிகளுக்கான தேவை அதிகரித்தது. ஊரடங்கின் போது காவல் சோதனைச் சாவடிகள் இருந்தபோதிலும், வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை - கவனமாக முகக்கவசம் அணிந்து, சரியாக கைகளைக் கழுவி - சில கிராமங்களில் தான் விற்பனை செய்ததாகக் கூறினார். இவையெல்லாம் ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் கடன்களை சமாளிக்க உதவியது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் அவர் தனது வழக்கமான வியாபாரமான ரசகுல்லாக்கள் மற்றும் ஜிலேபிகளை செய்யத் துவங்கினார். இருப்பினும் அவரது வருமானம் அவரது தந்தை, மனைவி மற்றும் மகள் எதிர்கொள்ளும் தீவிரமற்ற ஆனால் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சனைகளுக்கு செலவிடப்படுவதாக அவர் கூறுகிறார்.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் நோசுமுதீன் அசாமிலுள்ள அவரது கிராமமான உர்ரார்புயியில் சொந்த வீடு ஒன்றை கட்டத் துவங்கினார். இதுவும் அவரது சேமிப்பிலிருந்து ஒரு பெரும் பகுதியை எடுத்துக் கொண்டது.

பின்னர் 2021ல் ஊரடங்கு வந்தது. நோசுமுதீனின் தந்தை உடல்நலமில்லாமல் இருந்தார் (ஜூலை மாதம் காலமானார்). அவரது வியாபாரம் இப்போது அடிக்கடி தடைபட்டுப் போனது. "இந்த பெருந்தொற்று காலத்தில் எனது வருமானம் சீராக இல்லை", என்று அவர் கூறுகிறார். "நான் அருகிலுள்ள கிராமங்களுக்கு நடந்தே விற்க செல்கிறேன் சில நேரங்களில் சுமார் 20 - 25 கிலோ இனிப்பை சுமந்து கொண்டு 20 - 25 கிலோ மீட்டர் தூரம் கூட நடக்க வேண்டியிருக்கும் மேலும் வாரத்தில் ஆறு முதல் ஏழு நாட்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் இப்போது 2 -3  நாட்கள் மட்டுமே வியாபாரம் நடைபெறுகிறது. நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன். வாழ்க்கையே கடினமாகிவிட்டது. ஆனாலும் அது என் குழந்தை பருவத்தை போல கடினமாகவில்லை. அந்தக் காலத்தைப் பற்றி யோசித்தால் இப்போதும் எனக்கு அழுகை வரும்".

ஆசிரியரின் குறிப்பு: நோசுமுதீன் ஷேக் அவரது குடும்பத்தினருடன் 2015ஆம் ஆண்டிலிருந்து மகேந்திரகஞ்சிலிருக்கும் எனது பெற்றோருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு தங்கி இருந்தார். எப்போதும் சிரித்துக்கொண்டே எனது பெற்றோருக்கு உதவுவார் மேலும் அவ்வபோது எங்களது சமயலறை தோட்டத்தையும் கவனித்துக்கொள்கிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Anjuman Ara Begum

অঞ্জুমান আরা বেগম আসামের গুয়াহাটি ভিত্তিক মানবাধিকার গবেষক তথা ফ্রিল্যান্স সাংবাদিক।

Other stories by Anjuman Ara Begum
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose