களிமண்ணும் செங்கலும் வைத்து கட்டப்பட்ட இரண்டு அறை கொண்ட தனது வீட்டில் அமர்ந்திருக்கிறார் லீலாபாய் மெமான். அருகில் அவரது இரண்டு மகள்களும் பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். தினமும் 19 மணி நேரம் உழைக்கும் அவருக்கு இதுதான் சற்று ஓய்வான தருணம்.
ஆறு நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் 2 மணி வரை அரசாங்கம் நடத்தும் அங்கன்வாடியில் இருப்பார் லீலாபாய். ஏற்கனவே ஏழு மணி நேரம் வேலை செய்து விட்டு தான் அங்கன்வாடிக்கு வருவார். இரவு 10 மணிக்கே தனது வேலையை முடிப்பார் லீலாபாய்.
காலை 3 மணிக்கு எழுந்ததும் முதல் வேலையாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிணற்றுக்குச் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார். “குறைந்தது 20 குடங்கள் தேவைப்படும். எனது மகள்களும் உதவி செய்வார்கள்” என்கிறார் லீலாபாய். இவருடைய கனவரும் உதவி செய்கிறார். குடும்பமாக கிணற்றுக்கு குறைந்தது நான்கு முறை செல்கிறார்கள். இதற்காக நான்கு மணி நேரத்தை செலவழிக்கிறார்கள்.
புனே மாவட்டத்தின் அம்பேகான் தாலுகாவில் உள்ள இவர்களின் கிராமமான பாலோட், ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஜூன் வரை வறண்டு விடும். 464 மக்களை (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) கொண்ட இந்த கிராமத்தில், பெரும்பாலோனோர் கோலி மகாதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் தண்ணீர் தேவைக்காக ஒரு கிணற்றையே சார்ந்திருக்கிறார்கள். கிணறு வறண்டதும், தண்ணீருக்காக தனியார் வாகனங்களையே பெரிதும் நம்பியுள்ளார்கள்.
லீலாபாய் மற்றும் அவரது கணவர் பகுவிற்கும் மொத்தம் ஒன்பது குழந்தைகள். மூத்தவளுக்கு 23 வயது, கடைசி மகனுக்கு 4 வயதாகிறது. “வயதான காலத்தில் ஆண் பிள்ளை மட்டுமே ஆதரவாக இருப்பான் என குடும்பத்தில் அனைவரும் கூறினர். அதனால் எனக்கு 8 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். எல்லா குழந்தைகளை வளர்ப்பதற்கும் அவர்களது கல்விக்காக ஆகும் செலவையும் எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஆனால் வேறு என்ன செய்ய? என் உதவிக்கு யாரும் வரவில்லை. ஒரு மகனாவது கண்டிப்பாக இருக்க வேண்டும் என எங்கள் சமூகத்தில் கருதுகிறார்கள்” என்கிறார் லீலாபாய்.
தண்ணீர் பிடித்த பிறகு, சமயலறை வேலைகளை தொடங்குகிறார் லீலாபாய். இந்த கிராமத்தில் உள்ள பல வீடுகளைப் போல, இவரது வீட்டு வாசற் கதவும் தாழ்வாகவே உள்ளது. வீட்டிற்குள் செல்ல வேண்டுமானால் குனிந்து தான் செல்ல முடியும். உள்ளே, தரையும் சுவரும் சாணத்தால் பூசப்பட்டுள்ளது. மூலையில் மூன்றுகண் அடுப்பும், சில மண் பாண்டங்களும் சில பாத்திரங்களும் உள்ளன. அருகிலுள்ள கொட்டகையில் இரண்டு எருமை மாடுகள் நிற்கின்றன.
“குடும்பத்தில் உள்ள 11 பேருக்கும் நான் தான் சமைக்க வேண்டும், மாடுகளுக்கு உணவளிக்க வேண்டும், சாணத்தை அகற்ற வேண்டும்” என்கிறார் லீலாபாய். தினமும் இரு வேலை சமைக்கிறார். பொதுவாக திணை அல்லது கம்பு மாவால் செய்த ரொட்டி, காய்கறி மற்றும் சாதம், இவையே சாப்பாடு. இதை செய்யவே லீலாபாய்க்கும் அவரது மகள்களுக்கும் மூன்று மணி நேரம் ஆகும்.
அங்கன்வாடியில் இருந்து திரும்பி வந்ததும், இரவு 7 மணி வரை தனது இரண்டு ஏக்கர் வயலில் வேலை பார்ப்பார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கதிரடிப்பது, பள்ளம் தோண்டுவது, களையெடுப்பது மற்றும் நாற்று நடுவது என எல்லா வேலைகளையும் நானே செய்வேன். வயலை உழுவதோடு தண்ணீரை சேமிக்க அணை கட்டும் வேலைகளை என் கனவர் செய்வார். நவம்பர் மாதத்திற்குள் இந்த வேலைகள் அனைத்தையும் முடித்து விடுவோம். இதிலிருந்து 4 முதல் 6 மூட்டை அரிசி கிடைக்கும். (இது வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே, விற்பதற்கு அல்ல). ஆனால் எங்கள் குடும்பத்திற்கு இது போதாது”.
“எங்கள் வயலில் விளைவதை மட்டுமே வைத்து நாங்கள் வாழ முடியாது. அதனால் மற்றவர்களின் வயல்களிலும் வேலை பார்க்கிறோம். ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்கும். ஆனால் இந்த வேலை ஒரு மாதத்திற்கு மட்டுமே இருக்கும்” என்கிறார் லீலாபாயின் கனவர் பகு மெமானே. டிசம்பர் மாதம் வயலில் அறுவடை முடிந்தது முதல், பருவமழை தொடங்கும் ஜூன் – ஜூலை மாதம் வரை கிராமத்தில் தண்ணீரும் வயல் வேலைகளும் இருக்காது. இந்த சமயத்தில் கிராமத்தில் உள்ள சில குடும்பங்கள் கம்பு போன்ற பயிர்களை பயிரிடுவார்கள். லீலாபாயும் அவரது கனவரும் இவர்களின் வயல்களில் தினசரி சம்பளத்திற்கு வேலை பார்ப்பார்கள்.
மார்ச்-மே மாதங்களில் பாலோட்டிலுள்ள உள்ள மற்ற பெண்களைப் போல லீலாபாயும் கடுக்காய் மரங்களிலிருந்து நாளொன்றுக்கு 10- 15 பழங்கள் வரை சேகரிப்பார். ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் இவை உலர வைக்கப்பட்டபின் 3, 4 கிலோவாகிவிடும்
வாரத்திற்கு இரண்டு முறை, காட்டிற்குள் பத்து கிலோ மீட்டர் நடந்து சென்று 7 முதல் 10 கிலோ எடையுள்ள விறகை கொண்டு வருகிறார் லீலாபாய். இதற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாகும். தினசரி தேவைக்கு போக, மற்ற விறகுகள் பருவமழை காலத்திற்கு சேமித்து வைக்கிறார்கள்.
மார்ச் முதல் மே மாதம் வரை, பாலோட் கிராமத்தில் உள்ள மற்ற பெண்களைப் போல லீலாபாயும் கடுக்காய் மரங்களில் உள்ள பழங்களை சேகரிப்பார். இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயனபடுத்தப்படுகிறது. மார்ச் மாதங்களில், தனது அங்கன்வாடி பணிகளை முடித்த பிறகு இந்த பழங்களை சேகரிக்க செல்வார் லீலாபாய். ஏப்ரல், மே மாதங்களில் அங்கன்வாடி மூடியிருக்கும் சமயத்தில், வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது மகள்களோடு சேர்ந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பழங்களை சேகரிப்பார்.
தினமும் இவர்கள் 10 முதல் 15 கிலோ பழங்களை சேகரிப்பார்கள். பிறகு தனியாக பிரித்து, உலர வைக்கப்படும் இந்த பழங்கள் 3 அல்லது 4 கிலோ எடையாக குறைந்துவிடும். மருத்துவ குணம் நிறைந்த இந்த சிறிய பழத்திற்கு ஒரு கிலோவுக்கு 120 ரூபாய் வரை உள்ளூர் வியாபாரிகள் கொடுப்பார்கள். அதேசமயம் மே மாதத்தில் ஒரு கிலோ பெரிய பழத்திற்கு வெறும் 10 ரூபாய் மட்டுமே கொடுப்பார்கள். இதன் மூலம் மூன்று மாதத்தில் ரூ.20,000 முதல் 30,000 வரை குடும்பத்திற்கு பணம் கிடைக்கும்.
அங்கன்வாடி பணிக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் என்றாலும், 3-4 மாதத்திற்கு ஒருமுறை தான் லீலாபாய்க்கு இந்த சம்பளம் கிடைக்கிறது. “மளிகை பொருட்கள், குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவு போன்ற எங்கள் தேவைகளுக்கு இந்த பணத்தை செலவழிப்போம். ஆனால் இந்த தொகை போதாது. நாங்கள் அதிகமாக வேலை செய்ய விரும்பினாலும் இங்கு எந்த வேலையும் இல்லை” என்கிறார் லீலாபாய்.
தற்போது 40 வயதாகும் லீலாபாய், கடந்த 30 வருடங்களாக ஓயாமல் தினசரி இந்த வேலைகளை செய்து வருகிறார். “எனக்கு 13 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள் என் பெற்றோர்கள். நான் தொடர்ந்து படிக்க விரும்பினேன். அதனால் என் கனவரோடும் மாமியாருடன் வாழ்ந்த போதும் பள்ளிக்குச் சென்றேன். 1994-ம் ஆண்டு பத்தாம் வகுப்பை முடித்தேன். ஆனால் என் கனவரை விட நான் அதிகமாக படித்து விடக்கூடாது என்று என்னை மேலும் படிக்க அனுமதிக்கவில்லை (என் கனவர் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்). அதன்பிறகு நான் படிக்கவே இல்லை”.
2016-ம் ஆண்டு முதல் இரண்டு அரசு சாரா நிறுவனங்கள் பாலோட் கிராமத்தில் பெரியோர்களுக்கான கல்வியறிவு வகுப்பை நடத்தினர். பல மணி நேரம் வேலை செய்த பிறகும், கிராம பெண்களுக்கு தன்னார்வலராக கற்றுக் கொடுக்க முன்வந்தார் லீலாபாய். பெரும்பாலும் இந்த வகுப்புகள் யாராவது ஒருவர் வீட்டில் நடைபெறும். வீட்டு வேலைகள் இருப்பதால் வகுப்புகளுக்கு வருவதற்கு தயக்கம் காட்டும் பெண்களுக்கு, அவர்கள் வீட்டிற்கே சென்று கற்றுக் கொடுப்பார் லீலாபாய். இதுவரை 30 பெண்களுக்கு வாசிக்கவும் தங்கள் பெயரில் கையெழுத்து போடவும் கற்றுக் கொடுத்துள்ளார்.
இத்தனை ஆண்டுகால கடுமையான உழைப்பால், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முயற்சித்து வருகின்றனர் லீலாபாயும் அவரது கனவரும். இவர்களது மூத்த மகளான பிரியங்கா, 23, பி.காம் முடித்து அரசாங்க வேலைக்கு முயற்சித்து வருகிறார். சமீபத்தில் திருமணமான இவர், அலிபாக் நகரில் வசித்து வருகிறார். 20 வயதான பரிமளா, மகராஷ்டிரா போலிஸ் துறையில் காவலராக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் பணி நியமன ஆணை வரவில்லை. 18 வயதாகும் பரிமளா, பாரோட்டிலிருந்து 50கிமீ தொலைவிலுள்ள மஞ்சார் கிராமத்தில் பி.ஏ படித்து வருகிறார். 16 வயதான ஷர்மிளா 2018-ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் 78 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார். மற்ற மகள்களான நிமலா ஒன்பதாம் வகுப்பும், கௌரி ஆறாம் வகுப்பும், சமிக்ஷா ஒன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்களது ஒரே மகனான ஹர்ஷல் – 4 வயது – லீலாபாய் பணியாற்றும் அங்கன்வாடிக்கு செல்கிறான்.
“ஒரு பெற்றோராக என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் உடல்நலத்தையும் என்னால் கொடுக்க முடியாமல் போய் விடக்கூடாது என கவலைப்படுகிறேன். என்னைப் போல் அவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற உணர்வு எப்போதும் எனக்கு உள்ளது. அவர்கள் நன்றாக படித்து, வேலைக்கு சென்றால் மட்டுமே எங்கள் சூழ்நிலை மாறும். என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் தூக்கமே வருவதில்லை. ஆனால் அடுத்த நாள், என்னை புதுப்பித்து கொண்டு அவர்களுக்காக மறுபடியும் வேலை செய்ய தொடங்குகிறேன்” என்கிறார் லீலாபாய்.
இந்த கட்டுரைக்காக பாலோட் கிராமத்திற்கு செல்லுமாறு எனக்கு பரிந்துரைத்த கிரன் மோகே மற்றும் சுபாஷ் தோரட் இருவருக்கும், கிராமத்தை சுற்றிப் பார்க்க உதவிய அமோல் வாக்மாருக்கும் எனது நன்றிகள்.
தமிழில்:
வி. கோபி மாவடிராஜா