யமுனா ஜாதவை பார்க்கும் போது இரண்டு நாட்கள் தூக்கம் தொலைத்தவராக தோன்றவில்லை. புன்முறுவலுடன் முஷ்டியை உயர்த்தி `லால் சலாம்` என்று சொல்லி  `இந்த இரு நாட்களுக்காக நாங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்` என்கிறார் அவர்.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம் துட்கோவன் என்னும் கிராமத்திலிருந்து வெறும் 6 மணி நேரத்திற்க்கு முன்னர் தான் தில்லி வந்தடைந்துள்ளார். `நவம்பர் 27ம் தேதி நாங்கள் நாசிக்கிலிருந்து ரயிலில் பயணிக்க துவங்கினோம். முன்பதிவு செய்ய இயலாத நிலையில் வாசல் அருகில் அமர்ந்தவாறுதான் தில்லி வரை பயணித்தோம். 24 மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்தவாறே பயணித்ததால் கடுமையான முதுகுவலி ஏற்பட்டுள்ளது` என்றார்.

நவம்பர் 29ம் தேதி அன்று குளிர் வாட்டும் அதிகாலை நேரத்தில் தில்லி வந்தடைந்த பல்லாயிரகணக்கான விவசாயிகளில் யமுனாவும் ஒருவர். 200க்கும் அதிகமான விவசாயிகள் சங்கங்கள் இணைந்த அமைப்பான `அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு` நாடு முழுவதிலிருந்தும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. விவசாயிகளை பெருந்துயருக்குள்ளாக்கியுள்ள காரணங்களை குறித்து விவாதிக்கவும் தீர்வு காணவும் 21 நாட்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரை நடத்தக் கோரி இப்பேரணி நடைபெறவுள்ளது.

PHOTO • Shrirang Swarge
PHOTO • Shrirang Swarge
PHOTO • Shrirang Swarge

நிலப் பட்டா இல்லாத நிலை, தண்ணீர் பற்றாக்குறை, பயிர் காப்பீட்டில் மோசடி, மற்றும் கடன் தள்ளுபடி போன்றவை மகராஷ்டிராவிலிருந்து வந்திருந்த விவசாயிகளின் பிரச்னைகளாக இருந்தது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முக்கிய தலைவரான அஜித் நாவ்லே கூறுகையில், `தில்லியில் சங்கமித்துள்ள விவசாயிகளில் 3000 பேர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தவர்கள்`, என்றார். இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலியாக ரூ.150/ பெறும் விவசாய தொழிலாளர்களாவர்.

தேசம் முழுவதும் தொடர்ந்து அதிகரிக்கும் விவசாய நெருக்கடியால் தன்னை போன்றோரின் வருமானம் நேரடியாக பாதிப்பதாக சொல்கிறார் கையில் செங்கொடியை பிடித்துக்கொண்டே சிவப்பு நிற உடையில் இருந்த யமுனா. `விவசாய நிலங்களில் விவசாய பணிகள் அதிகமாக நடைபெறும் போதுதான் எங்களுக்கு வேலையும், வருமானமும் கிடைக்கும்`, என்கிறார். `தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் பருவமழைக்கு பிந்தைய சாகுபடிக்கான பணிகள் எதுவும் துவங்கவில்லை. அதனால் எங்களுக்கு வேலை எதுவும் கிடைப்பதில்லை`, என வருந்துகிறார்.

நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீ பாலா சாகிப்ஜி குருத்வாராவில்தான் பெரும்பாலான விவசாயிகள் ஓய்வெடுத்தனர். அங்கு தயாரிக்கப்பட்டிருந்த காலை சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு பேரணிக்கு தயாராகியிருந்தனர். மகாராஷ்டிராவின் கங்காவரே கிராமத்திலிருந்து பேரணிக்கு வந்துள்ள துல்ஜாபாய் படாங்கே உணவிற்காக பாக்ரியும் சட்னியும் எடுத்து வந்ததாகவும், முதல் நாள் இரவுக்கு அது போதுமானதாக இருந்தது எனவும் ஆனால் இரண்டாவது நாளுக்கு போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்தார். `எங்கள் பயண செலவாக ரூ.1000/ வைத்திருந்தோம். நாசிக் ரயில் நிலையம் வந்தடைய ரிக்க்ஷாவிற்கு செலவு செய்தோம். இந்த பேரணிக்கு வருவதால் 5 நாட்களுக்கு வேலைக்கு (கூலியும் கிடைக்காது) செல்ல இயலாது என அறிந்து தான் இங்கு வந்துள்ளோம். இந்த பேரணி மத்திய அரசை திரும்பிப் பார்க்க வைப்பதாக இருக்கும். ஏற்கனவே மும்பையில் ஒரு வெற்றிகரமான பேரணியை நடத்தினோம். இங்கும் அவ்வாறே நடத்துவோம்`, என கூறினார்.

பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் நாசிக் பகுதியில் `வன உரிமைகள் அமலாக்க சட்டம்(2006)` அமலில் இல்லை என்பது கவனிக்க வேண்டிய கவலைக்குரிய செய்தியாகும். இந்த சட்டம் பழங்குடி மக்களுக்கு அவர்கள் பல ஆண்டுகளாக சாகுபடி செய்யும் நிலத்தின் மீது உரிமை வழங்க வழிவகை செய்கிறது. பல ஆண்டுகளாக தாங்கள் உழுது, விவசாயம் செய்யும் நிலத்தின் மீது இதுவரை எந்த உரிமையும் இல்லை என்பதை கவலையோடு தெரிவித்தார். `எனக்கு சொந்தமாக அதிக அளவிலான நிலம் இல்லை, மற்ற விவசாயிகளின் நிலத்தில் வேலை செய்கிறேன்`, என்கிறார் 35 வயதான இந்த பெண் விவசாய தொழிலாளி. `எங்கள் நிலத்தின் மீதான உரிமையை நாங்கள் இழந்து விட்டால், எங்கள் வாழ்வாதாரத்திற்கு எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகும்`, என கவலையோடு கூறுகிறார்.
PHOTO • Shrirang Swarge
PHOTO • Shrirang Swarge

நாசிக் மாவட்டம் கங்காவரே கிராமத்திலிருந்து வந்துள்ள துல்ஜாபாய் படாங்கே மற்றும் தேவ்ராம் பாங்க்ரே. “இந்த பேரணி, ஒரு செய்தி. மும்பையில் இதை செய்தோம். இதை மீண்டும் செய்வோம்” என்கிறார் அவர்.

பழங்குடி பகுதிகளில் அல்லாது பிற பகுதிகளிலிருந்து தில்லி நோக்கி பயணித்து வந்துள்ள மகாராஷ்டிரா விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை, நீர்பாசன வசதிகளின் குறைபாடுகள், நடைமுறை சாத்தியமில்லாத பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியன குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அகமது நகர் மாவட்டம் அம்பேவங்கன் கிராமத்தை சேர்ந்த 70 வயதான தேவ்ராம் பாங்க்ரே, `களத்தில் எந்த முன்னெற்றமும் ஏற்படவில்லை`, என்கிறார். மதியம் 12.30 மணியளவில் பேரணி தில்லியின் முக்கிய வீதிகளில் பயணித்துக் கொண்டிருந்தது. `பயிர் காப்பீட்டு தொகையானது சாகுபடி துவங்கும் ஜூன் மாதத்தில் எந்த விவசாயியையும் சென்றடைவதில்லை. இந்த காலத்தில் தான் விவசாயிகளுக்கு பணத்தின் தேவை அதிகமாக இருக்கும். விவசாயிகளிடம் தேவையான அளவு பணம் இல்லையென்றால் அவர்களது நிலங்களில் பணி செய்ய தேவையான விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நிலை உருவாகும். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறைக்கு அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மோடியும் அவரது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் மீதான எங்கள் கோபம் இந்த பேரணியின் மூலம் அவர் அறியட்டும்`, என்றார்.

செங்கொடிகளை கையிலேந்தி, சிவப்பு வண்ண உடையணிந்த விவசாயிகளின் பேரணி தில்லி வீதிகளில் பயணிக்கும் போது `மோடி அரசே!! தூக்கத்திலிருந்து விழித்திடு!!` என்னும் கோஷம் தெருக்களெங்கும் எதிரொலிக்கிறது. விவசாயிகளின் வலிமையான கோஷங்களை கேட்டவாறு பார்வையாளர்களும், பயணிகளும் ஆச்சர்யத்துடன் கடந்து செல்கின்றனர்.

ஒழுக்கமாகவும், வலிமையாகவும் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு 9 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ராம் லீலா மைதானம் நோக்கி பேரணி முன்னேறி சென்று கொண்டிருந்தது. பேரணி துவங்கி 5 கிலோமீட்டர் தூரம் கடந்த நிலையில் ஓரிடத்தில் மட்டும் ஒய்வெடுத்தனர் விவசாயிகள். மாலை 4.30 மணிக்கு பேரணி ராம்லீலா மைதானத்தை வந்தடைந்தது.

PHOTO • Shrirang Swarge
Farmers at Ramlila Maidan
PHOTO • Shrirang Swarge

இடது: “எனது அப்பா நான் போலிஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று விரும்பினார், அதற்காக உழைப்பேன்” என்கிறார் கிருஷ்ணா. வலது: ராம்லீலா மைதானில் முதல் நாள் நிறைவுறுகிறது

பேரணியில் கலந்து கொண்டவர்களில் பல வயது பிரிவினரும், ஆண்களும் பெண்களும், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 18 வயது மட்டுமேயான கிருஷ்ண கோட் நாசிக் மாவட்டம் பிம்பிள்கோன் கிராமத்தை சேர்ந்தவர். அவரது தந்தை நிவ்ருதி மார்ச் மாதம் நாசிக் முதல் மும்பை வரை நடைபெற்ற 180 கிலோ மீட்டர் தூர விவசாயிகள் நெடும் பயணத்தில் பங்கேற்றவர். `பேரணி முடிந்து வீடு திரும்பிய அப்பாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சு வலி இருப்பதாக இரு நாட்களுக்கு பின் எங்களிடம் கூறினார். மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது எக்ஸ்-ரே எடுக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் அதை செய்யும் முன்னர் அப்பா இறந்துவிட்டார்` என கையில் செங்கொடியோடும், முதுகுபையுடனும் கலந்து கொண்ட கிருஷ்ணா தெரிவித்தார். அவரது தாயார் சோனா பாய் தற்போது விவசாய தொழிலாளியாகவும், தங்கள் சிறு விவசாய நிலத்தை கவனித்தும் வருகிறார். `நான் விவசாய தொழிலில் ஈடுபட விரும்பவில்லை. எனது தந்தை நான் காவல்துறை பணியில் சேர வேண்டும் என விரும்பினார். நான் அதற்கு தொடர்ந்து முயற்சிப்பேன்`, என்றார்.

கணவனை இழந்த சோனா பாய் தனது மகனை தில்லி பேரணியில் கலந்து கொள்வதை முழுமனதோடு அனுமதிக்கவில்லை. `நீ தில்லி பேரணிக்கு ஏன் செல்லவிரும்புகிறாய் என அம்மா கேட்டபோது, அப்பேரணியில் நான் ஒரு அங்கமாக விரும்புகிறேன் என கூறினேன். அதற்கு அவர் கவனமாக இரு என மட்டும் கூறினார்`, என புன்முறுவலோடு தெரிவித்துவிட்டு கோரிக்கைகளை முழக்கமாகவும், மனதில் நம்பிக்கையையும், கையில் செங்கொடியுடனும் கடந்து சென்றார் அந்த 18 வயது இளைஞன்.

தமிழில்: நீலாம்பரன்

Parth M.N.

২০১৭ সালের পারি ফেলো পার্থ এম. এন. বর্তমানে স্বতন্ত্র সাংবাদিক হিসেবে ভারতের বিভিন্ন অনলাইন সংবাদ পোর্টালের জন্য প্রতিবেদন লেখেন। ক্রিকেট এবং ভ্রমণ - এই দুটো তাঁর খুব পছন্দের বিষয়।

Other stories by Parth M.N.
Translator : Neelambaran A

Neelambaran A is a post graduate in Engineering and had taught in Engineering colleges of Tamil Nadu for thirteen years. Now works for NewsClick as a Journalist and is interested in politics, labour and rural agrarian issues.

Other stories by Neelambaran A