சந்தையில் இருந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பும் பயணம் முதுகு ஒடிக்கிற அளவுக்குக் கடுமையானது. பெண்கள் இரவில் பட்பேடா நகரில் தங்குவார்கள். பின்பு காலையில் நடக்கத் துவங்கி, பொழுது சாய்வதற்குள் ராஜ்னைரி எனும் மலையுச்சியில் உள்ள சிறு கிராமத்தை அடைவார்கள். ஒர்ச்சா வாரச் சந்தைக்குச் செல்ல கரடுமுரடான பாதையில் இரு நாட்கள் நடக்க நேர்ந்ததைப் போல, ஹாட் எனப்படும் வாரச்சந்தையில் இருந்து வீடு திரும்ப இரு நாட்கள் ஆகும்.
இந்தப் பயணத்தில் அபூஜ் மரியா பழங்குடியினப் பெண்கள் வெறுங்காலோடு நடந்து மத்திய இந்தியாவின் வனங்கள் நிறைந்த சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தின் புழுதிப் பாதைகளைக் கடப்பார்கள். இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும், மாவோயிஸ்ட் கொரில்லாக்களுக்கும் இடையே மோதல்கள் மிகுந்த பகுதியின் அபூஜ்மத்தில் இவர்கள் வாழ்கிறார்கள். நான்காயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இப்பகுதி பரவியுள்ளது. இந்த மோதல்கள் மக்களை அச்சத்துக்கும், சந்தேகத்துக்கும் ஆளாக்கி இருக்கிறது. அதனால் அவர்களின் குறிப்பான அடையாளங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்து இருக்கிறோம்.
ஒர்ச்சாவின் பரபரப்பான வாரச்சந்தையில் சில பெண்களிடம் பேசினோம். அவர்கள் தனித்துவமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். தங்களின் ரவிக்கையைச் சுற்றி துண்டு போன்ற ஒரு துணியைச் சுற்றிக்கொண்டு, பளபளக்கும் வெண்ணிற உலோகத்தையோ, வெள்ளியையோ நகையாக அணிந்து கொண்டிருந்தார்கள். சிலர் தங்களின் தோளின் தூளியில் குழந்தைகளைத் தாங்கி நடப்பார்கள். ஆண்கள் சட்டையும், இடுப்பை சுற்றி லுங்கியும் அணிந்து காணப்படுகிறார்கள். சட்டையும், பேண்ட்டும் அணிந்திருப்பவர்கள் உள்ளூர் அரசு அதிகாரிகளோ, வெளியூர்க்காரர்களோ, வியாபாரிகளோ, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களோ ஆவார்கள்.
கோண்டி மொழியில் பெண்கள் முதலில் வெட்கப்பட்டுக் கொண்டே எங்களிடம் பேசுகிறார்கள். எங்களுக்குத் துணையாக வந்த இரண்டு கோண்டி பழங்குடியின சிறுவர்கள் உரையாடலை இந்தியில் மொழி பெயர்த்து சொல்கிறார்கள். தங்களின் வீடுகளில் இருந்து விற்பதற்காக மூங்கில் துடைப்பங்கள், சரோலி விதைகள், புளி, உள்ளூர் வாழை, தக்காளி முதலிய வனத்தில் விளைந்த பொருட்களை விற்க சிறிய அளவுகளில் கொண்டு வருவதாகச் சொன்னார்கள்.
பட்டுப்புழு கூடுகளையும் விற்பதற்குக் கொண்டு வருகிறார்கள். அபூஜ்மத்தில் பட்டுப்புழு கூடுகள் ஏராளமாக உள்ளன; சத்தீஸ்கரின் வடக்கு சமவெளியின் பிலாஸ்பூர், ராய்கர், கோர்பா ஆகிய பகுதிகளில் புகழ்பெற்ற கோசா பட்டின் மூலப்பொருள் இந்தப் பட்டுப்புழு கூடுகளே ஆகும்.
இந்தப் பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் ஐம்பது ரூபாயில் பெண்கள் எண்ணெய், சோப்பு, மிளகாய், உப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், பிற அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை வாங்குகிறார்கள். மிகக் குறைந்த அளவுக்கே விற்பனை பொருட்களைக் கொண்டு வருவது போல அவர்களின் சிறிய தோள் பை தாங்குகிற அளவுக்கு மிகக் குறைந்த அளவுக்கே இப்பொருட்களை அவர்கள் வாங்குகிறார்கள்.
ஒர்ச்சா சந்தையில் அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் வேர்கள், பச்சிலைகள், காட்டுப் பழங்கள் மட்டுமே கிடைப்பதில்லை. மலிவான அலைபேசிகள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், மேசை விளக்குகள், தேடு விளக்குகள் ஆகியவையும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சமயங்களில் மினி-இன்வெர்ட்டரும் மின்சாரம் இல்லாத மாத் பகுதியின் பல்வேறு கிராமங்களுக்குப் பயன்படும் வகையில் விற்கப்படுகிறது.
தொலைதூர மலைப்பகுதிகளில் அலைபேசி இணைப்புகள் எடுக்காது என்பதால், ஆதிவாசிகள் அலைபேசிகளைப் புகைப்படங்கள், காணொளிகள் எடுக்கவும், இசை கேட்கவும், டார்ச்சாகவும் பயன்படுத்துவதாக உள்ளூர் கடைக்காரர் சொல்கிறார்.
அபூஜ்மத் என்றால் புரியாத/புதிரான மலை என்று பொருள். இந்த மலை மேற்குப்பகுதியில் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் துவங்கி, சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் வரை தெற்கிலும், கிழக்கில் பஸ்தார் மாவட்டம் வரையும் பரவியுள்ளது. கோண்ட், முரியா, அபூஜ் மரியா, ஹல்பா முதலிய பல்வேறு பழங்குடியின மக்களின் வசிப்பிடமாக இம்மலை உள்ளது. அதிகாரப்பூர்வ, தனிப்பட்ட கணக்கெடுப்புகள் அபூஜ் மரியா மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
மலைப்பாங்கான பகுதியாக, சிற்றோடைகள் அடர்ந்த காடுகளால் இப்பகுதி நிரம்பியுள்ளது. மக்கள் அன்பும், விருந்தோம்பலும் மிகுந்தவர்களாக உள்ளார்கள். எனினும், இப்பகுதியில் பயணிப்பதோ, வாழ்வதோ சவாலானது. பிபிசியின் செய்தியாளராக அபூஜ்மத்தில் இயங்கிய சுவோஜீத் பக்சி, “மழையால் இப்பகுதி வெளியுலகத்தை விட்டு நான்கு மாதங்களுக்குத் தொடர்பிழந்து காணப்படும். அந்தக் காலங்களில் வயிற்றுப் போக்கால் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது... மக்கள் வருடம் முழுக்க மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் எந்தச் செயல்படும் பள்ளியையும் நான் பார்த்ததே இல்லை. அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதே இல்லை. சமயங்களில் அடிப்படை மருத்துவ உதவிகள் நகர்ந்து கொண்டிருக்கும் மாவோயிஸ்ட் குழுக்கள், உள்ளூர் மருத்துவச்சிகளால் தரப்படும்.” என்கிறார்.
காவல்துறை செயல்பாடுகளுக்கு எல்லைப்பகுதிகளில் வாழும் மக்கள் அஞ்சுகிறார்கள். “கிராமங்கள் அற்புதமானவை என்று மானுடவியல் அறிஞர்களின் பழைய நாட்குறிப்புகள் வேண்டுமானால் சொல்லலாம். உண்மை வாழ்க்கை அதுவல்ல.” என்கிறார் பக்சி.
அபூஜ்மத் நோக்கி செல்லும் சாலைகள் ஒர்ச்சாவுடன் முடிகின்றன. உள்ளூர் பழங்குடியினர் இந்தப் பரந்து விரிந்த பகுதியின் ஒரே சந்தையான ஹாட்டை அடைய எழுபது கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்கிறார்கள். இந்தச் சந்தைகளிலே ஆதிவாசிகள் பொது விநியோக முறையில் தங்களுக்கு வரவேண்டிய ரேஷன் பொருட்கள், பள்ளி மாணவர்கள் தங்களுடைய மதிய உணவுக்குத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தாங்களே இங்குப் பெற்றுக் கொள்கிறார்கள்.
சில காலத்துக்கு முன்வரை ராமகிருஷ்ண மடத்தின் தன்னார்வலர்கள் இந்தப் பகுதிக்கு வந்து ஆதிவாசிகளுக்கு உணவு தானியங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அரசாங்கம் அதை நிறுத்தி விட்டது. சந்தைக்கு வரும் பெரும்பாலான பிள்ளைகள் ஊட்டச்சத்து இல்லாதவர்களாகத் தெரிகிறார்கள். உள்ளூர் பழங்குடியின ஆசிரமத்தின் சிறுமிகள் காய்கறிகள் வாங்குவதைக் காண்கிறோம். அபூஜ்மத் முதலிய தொலைதூர சிற்றூர்களில் இருந்து பெற்றோர்களோடு வரும் சிறுவர்களுக்குத் துணையாக இருக்கும் UNICEF தன்னார்வலர்களைக் காண முடிகிறது. அவர்கள் இந்தச் சந்தை கூடுகிற பொழுது தாங்கள் செய்ய வேண்டிய உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். மற்ற காலங்களில் எட்ட முடியாத அந்தக் கிராமங்களை அடைந்து, சோதனை செய்வது சாத்தியமில்லை என்பதால் இப்படிப்பட்ட ஏற்பாடு என்கிறார்கள்.
ஒர்ச்சா ஹாட்டில் இன்னுமொரு ஈர்ப்பு மிகுந்த பொருள் கிடைக்கிறது: அரிசி சாராயம்-லோண்டா. சுல்பி, தாடி, மஹுவா முதலிய உள்ளூர் சரக்குகள் லோண்டா சந்தை எனும் பகுப்பில் கிடைக்கிறது.
கிராமத்தினர் நாள் முடிவில் இளைப்பாறவும், மது அருந்தவும் இந்தச் சந்தையே உகந்த இடமாக உள்ளது. பெரியோரும், சிறியோரும் மதுவை தங்களின் குடும்ப உறுப்பினர்களோடு சரி சமமாகக் கூடிக் குடித்துச் சோகமும், களிப்பும் நிறைந்த நினைவுகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
என்னைப்போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு ஹாட் போன்ற மக்கள் கூடும் சந்தைகள் மற்ற இடங்களில் சேகரிக்க முடியாத பல்வேறு தகவல்களான விவசாய உற்பத்தி, இறக்குமதியாகும் பொருட்கள், விற்பது, வாங்குவது, பரிவர்த்தனை செய்வது, பிழைப்பது என்று மாறிக்கொண்டே இருக்கும் மக்களின் திறன்கள் ஆகியவற்றை அறிய உதவுகிறது.
ருச்சி வர்ஷ்நேயா கலிபோர்னியாவில் உள்ள உடல்நல சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். ஐ.ஐ.டி. ரூர்க்கியில் பொறியியல் பட்டமும், ஜாம்ஷெட்பூரின் XLRI-யில் மேலாண்மையில் பட்டமும், பால்டிமோரின் ஜான்ஸ் ஹாப்கின்ஸில் பொது நலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். Asha for Education அமைப்புக்கு நிதி திரட்டுவதில் ஈடுபடுவதோடு, PARI, Kaavyalaya.org ஆகிய அமைப்புகளில் தன்னார்வலராக செயல்படுகிறார்.