ஒரு லிட்டர் கழுதை பாலுக்கு 7 ஆயிரம் ரூபாயா? ஒரு லிட்டர் ஏதாவது ஒன்றுக்கு? பைத்தியக்காரத்தனமாக உள்ளது. ஆனால், குஜராத் மாநிலம் சவுராஷ்டிராவில் ஹலாரி கழுதைகளின் பாலின் விலைதான் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாத செய்தித்தாளின் தலைப்புச் செய்தியாக இருந்தது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இது உண்மையாக இருந்தது. வழக்கமாக இந்த விலை கிடைக்கும் என்று நீங்கள் எண்ணினால், குஜராத்தின் ஹராலி வளர்க்கும் சமுதாயத்தினர் உங்களை பார்த்து சிரிப்பார்கள்

இந்த வகை பால் இந்த விலை விற்பதற்கு காரணம், அதில் அரிதான மருத்துவ குணங்கள் இருப்பதால் என்பது தெரிகிறது. குஜராத்தில் அதிகபட்சமாக லிட்டர் ரூ.125க்கு விற்கப்பட்டு வருகிறது. அதுவும் ஆராய்ச்சிக்காக ஒரு நிறுவனத்தினர் வந்து குறிப்பிட்ட அளவில் மட்டுமே  பெற்றுச்செல்கிறார்கள்.

நான் இங்கே சவுராஷ்டிராவில் இருந்தபோது, அந்த பத்திரிக்கையின் தலைப்புச்செய்தியை தொடர்ந்து சென்றேன். ராஜ்கோட் மாவட்டத்தின் பருத்தி தரிசு வயலில், நான் கோலாபாய் ஜீஜீபாய் பர்வாடை சந்தித்தேன். தனது 60 வயதுகளில் மேய்ச்சல் விலங்குகள் வளர்த்து வருகிறார். அவர் தேவ்பூமி துவாரகா மாவட்டம் பந்த்வாட் வட்டம் ஜாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக ஆண்டுதோறும் குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து செல்லும்போது நான் வழியில் சந்தித்தேன். செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் மந்தையையுடன் 5 ஹலாரி வகை கழுதைகளையும் வளர்த்து வருகின்றனர்.

“ரேபரி மற்றும் பர்வாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஹலாரி இன கழுதைகளை வளர்த்து வருகிறார்கள்“ என்று கோலாபாய் கூறினார். “அவர்களிலே சில குடும்பத்தினர் மட்டுமே பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்கிறார்கள். இந்த விலங்குகள் அழகாக இருக்கும். ஆனால், வாழ்வாதாரத்திற்கு உதவாது. அவை ஒரு வருமானமும் தராது“ என்கிறார். கோலாபாயும், அவரது 5 சகோதரர்களும் சேர்ந்து 45 கழுதைகள் வைத்துள்ளனர்.

மேய்ச்சல் விலங்குகள் வளர்க்கும் நாடோடிகளின் வருமானத்தை கணக்கிடுவது மிகவும் குழப்பமான ஒன்றாகும். அவர்களுக்கு நிலையான வருமானம் இல்லை.   குறிப்பிட்ட அளவு என்றும் சொல்லி விட முடியாது. மற்றவர்கள் செய்வதுபோல் வழக்கமான மாத செலவுகள் அவர்களுக்கு இருக்காது, உதாரணமாக,  மின்சாரம் மற்றும் பெட்ரோல் போன்ற செலவுகள் இல்லை. ஆனால், புஜ்ஜில் உள்ள தொண்டு நிறுவனமான சஜீவன் மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 5 பேர் கொண்ட ஒரு மேய்ச்சல் விலங்குகள் வளர்க்கும் குடும்பத்தினரின், மொத்த வருமானம் மந்தையின் அளைவைப்பொறுத்து, ஆண்டொன்றுக்கு, ரூ.3 முதல் 5 லட்சம் வரை இருக்கும். நிகர வருமானம் (அனைத்து செலவுகளுக்குப்பின்னர்) ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த வருமானம், ஆடுகளில் பால் மற்றும் ரோமங்களை விற்பதன் மூலம் கிடைப்பதாகும்.

கழுதைகள்  மிக குறைவான வருமானத்தையே  ஈட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் வருமானம் குறைந்து வருவதால், மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள், ஹலாரி இன கழுதைகள் வளர்ப்பதை கடினமாக கருதுகின்றனர்.

PHOTO • Ritayan Mukherjee

தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள ஜம்பர் கிராமத்தில் கோலாபாய் ஜீஜீபாய் தனது ஹராலி கழுதைகளை கட்டிப்போடுவதற்கு முயற்சி செய்கிறார்

மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த ரமேஷ் பாட்டி கூறுகையில், “மந்தையின் சராசரி அளவு, அதை வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அளைவைப் பொறுத்தது. 4 சகோதரர்கள் உள்ள குடும்பமெனில், அனைவரும் வளர்ப்பவர்களாக இருந்தால், 30 முதல் 45 கழுதைகள் இருக்கும். இவர்கள் இந்த விலங்குகளை அகமதாபாத்தில் தீபாவளிக்குப் பின்னர் நடைபெறும் ஆண்டு சந்தையில் விற்கின்றனர். புலம்பெயர் சமுதாய மக்கள் கழுதைகளை பொதி சுமக்கும் விலங்காக உபயோகிப்பார்கள். 4 அல்லது 5 பெண் வைத்திருப்பார்கள்.

வளர்ப்பாளர்கள் அண்மைக்காலம் வரை கழுதை பாலுக்கு சந்தையை பார்த்தது கிடையாது. கழுதை பால் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஒன்று கிடையாது. அவை கறவை விலங்குகள் கிடையாது. 2013-14ம் ஆண்டு டெல்லியில் துவங்கிய ஆர்கானிக்கோ என்ற நிகழ்வில், கழுதைப்பாலை பயன்படுத்தி அழகுசாதன பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்னும் இந்தியாவில் அதற்கு முறையான சந்தை கிடையாது.“ என்று பாட்டி கூறுகிறார்.

ஹலாரி கழுதைகள் சவுராஷ்டிராவின் உள்நாட்டு இனமாகும். அதன் பெயர் ஹலர் என்பதிலிருந்து வந்ததாகும். ஹலர் என்பது மேற்கு இந்தியாவின் தற்போதைய மாவட்டங்களான ஜாம்நகர், தேவ்பூமி துவாரகா, மோர்பி மற்றும் ராஜ்கோட் ஆகியவற்றுடன் தொடர்புடைய வரலாற்று பகுதியாகும். நான் அந்த இனம் குறித்து ரமேஷ் பாட்டியிடம் இருந்தே தெரிந்துகொண்டேன். இந்த கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட சக்தி வாய்ந்த கழுதைகள் வெள்ளை நிறத்தில் உள்ளன. ஒரு நாளில் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக்கூடியவை. இவை புலம்பெயர் மேய்ச்சல் விலங்கு வளர்ப்பவர்கள் மற்றும் இழுவை வண்டிகள் வைத்திருப்பவர்களுக்கு பொதி சுமக்கும் விலங்குகளாக பயன்படும்.

தேசிய விலங்குகள் மரபணு வளங்கள் மையம் , குஜராத், ஹலாரி கழுதைகளை முதன்முறையாக உள்நாட்டு கழுதை இனம் என்று பதிவு செய்து அங்கீகரித்துள்ளது. தேசிய அளவில், ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டி கழுதைக்கு அடுத்ததாக ஹலாரி கழுதை, குஜராத்தின் காச்சசிக்கு முன்னதாக உள்ளது.

2019ம் ஆண்டு நடத்தப்பட்ட கால்நடைகள் கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக எச்சரிக்கிறது. அதன் எண்ணிக்கை 2012ம் ஆண்டில் உள்ள 3,30,000லிருந்து 1,20,000மாக, இழப்பு 62 சதவீதமாக உள்ளது. குஜராத்தில் இது ஹலாரி கழுதைகள் மற்றும் அதை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையில் நன்றாக தெரிகிறது.

கடந்த 5 ஆண்டுகளில், அனைத்து வகை கழுதைகளின் எண்ணிக்கை 40.47 சதவீதம் குறைந்துள்ளது என 2018ம் ஆண்டு சஜீவனால் துவங்கப்பட்ட ஆய்வு காட்டியது. ஹலாரியைப் பொறுத்தவரையில், குஜராத்தில் உள்ள 11 தாலுக்காக்களில், கழுதைகள் எண்ணிக்கை கடந்த 2015ம் ஆண்டில் 1,112லிருந்து 2020ம் ஆண்டு 662ஆக குறைந்துவிட்டது மற்றும் அதனை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதே காலகட்டத்தில், 254 முதல் 189 ஆக குறைந்துள்ளது.

PHOTO • Ritayan Mukherjee

மங்காபாய் ஜடாபாய் பர்வாட், ஜாம்பூரில் தனது ஹலாரிகளின் மந்தையை கவனித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நடோடிகள் வாழ்க்கை முறையில் நடந்துகொண்டிருக்கிற மாற்றங்கள் குறித்த ஆழமான புரிதல் உள்ளது

எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம்? “கழுதைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் எங்கே உள்ளன?“ என்று விரக்தியுடன் கேட்கிறார் மங்காபாய் ஜடாபாய் பர்வாட், ஜம்பர் கிரமத்தில் வசிக்கும். 50 வயதுகளின் இறுதியில் உள்ள ஒருவர். “பெரும்பாலான மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக மாறிவிட்டன. எல்லா இடங்களிலும் விவசாயம் பெருகிவிட்டது. காட்டில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதில் சட்டத்தடை உள்ளது. ஹலாரி ஆண் கழுதைகளை பராமரிப்பது மிகக்கடினமான ஒன்றாகும். அவை தவறான மனோபாவம் கொண்டவை. எண்ணிக்கை வேகமாக உயராது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

மாறிவரும் பருவ நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் ஒழுங்கற்ற மழைப்பொழிவுகள் கால்நடை வளர்ப்பாளர்களை பாதிக்கின்றன. சவுராஷ்டிராவில் இந்தாண்டு அதிகரித்த மழைப்பொழிவால், அதிகளவிலான வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் கொல்லப்பட்டன. “இந்தாண்டு மழையால் எனது 50 சதவீத ஆடுகள் இறந்துவிட்டன“ என்று ஜம்பர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ஹமிர் ஹஜா புத்தியா கூறுகிறார். “ஜீலை மாதத்தில் பல நாட்கள் மழை நீடித்தது. முதலில் எனது ஒரு ஆடு கூட பிழைக்காது என்றே எண்ணினேன். கிருஷ்ணனுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அதில் பாதி பிழைத்தது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

“முன்பு எல்லா காலமும் சமநிலையில் இருந்தது“ என்று ரூராபாய் கன்ஹாபாய் சத்கா கூறினார். இவர் பாவ் நகர் மாவட்டம், கதாடா வட்டத்தைச் சேர்ந்த, பண்டாரியா கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர். “அதிக மழையும், அதிக வெப்பமும் இருக்கக்கூடாது. அது மேய்ச்சலுக்கு எளிதாக இருக்கும். தற்போது ஒரு நேரத்தில் திடீரென அதிக மழைப்பொழிகிறது. எனது வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் இறக்கின்றன. இதனால், மற்ற விலங்குகளிடம் இருந்து வரும் வருமானம் குறைவதால், எங்களுக்கு அதிகளவில் ஹலாரிகள் வைத்து பராமரிக்க முடிவதில்லை. புலம் பெயர்ந்து செல்லும் ஊர்களில், போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததால், உடல் நலன் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் போய்விடுவது மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்களுக்கு மற்றுமொரு சிரமமாக உள்ளது.

சில குடும்பங்கள் எளிதாக தங்கள் கழுதை மந்தைகளை விற்றுவிட்டன. “இளந்தலைமுறையினர் கழுதை மேய்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை“ என்று போர்பந்தர் வட்டம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பராவடா கிராமத்தைச் சேர்ந்த சமுதாய தலைவர் மற்றும் ஹலாரி வளர்ப்பவரும், 64 வயதான ராணாபாய் கோவிந்த் பாய் கூறுகிறார். “இடம் பெயர்ந்து செல்லும்போது, வண்டியிழுப்பதை தவிர வேறு என்ன பயன்கள் இந்த கழுதைகளின் மூலம் உள்ளது. இப்போதெல்லாம் நாங்கள் அதை சிறிய டெம்போ வைத்தே செய்துவிடுகிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார். (மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களில் சென்று பொருட்ளை வைப்பதற்கு சிறிய டெம்போவை வாடகைக்கு எடுத்துக்கொள்கின்றனர். இதனால், அவர்கள் தங்கள் மந்தைகளை கவனமாக அழைத்துச் செல்ல முடியும்)

“கழுதை வளர்ப்பது சமூகத்தில் இழுக்காகவும் உள்ளது. யாருக்கு கேட்கத்தோன்றும், கழுதைகள் செல்கின்றன பார் என்ற வார்த்தைகளை? இதை யாரும் மற்றவர்களிடம் இருந்து கேட்பதற்கு விரும்பமாட்டார்கள்“ என்று ராணாபாய் கூறுகிறார். அவரின் சொந்த மந்தையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 28 லிருந்து 5 ஆக குறைந்துவிட்டது. அவர் நிறைய ஹலாரிகளை விற்றுவிட்டார். அதற்கு அவரால் பராமரிக்க முடியாதததும், அவருக்கு பணம் தேவைப்பட்டதும் காரணங்களாகும்.

அகமதாபாத்தில் மாவட்டம், தோல்கா தாலுகாவில் உள்ள வவுதாவில் நடக்கும் சந்தையில் ஹலாரிகள் ரூ.15 முதல் 20 ஆயிரம் வரை விற்கப்படும். அதை வாங்குபவர்கள் மாநிலத்திற்கு உள்ளிருந்தும், வெளியேயிருந்தும் வருவார்கள். மற்ற நடோடிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது பொதி சுமப்பதற்கும், மலை மற்றும் சுரங்கங்களில் வண்டி இழுப்பதற்கும் வாங்கிச்செல்கின்றனர்.

அதனால், ஒரு லிட்டர் கழுதை பால் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற செய்தியில் என்ன பரபரப்பு உள்ளது? உள்ளூர் செய்தித்தாளில், ஜாம் நகரின் துரூல் வட்டத்தில் உள்ள மோட்டா கராடியா கிராமத்தில் ஒரு லிட்டர் கழுதைபாலின் விலை ரூ.7 ஆயிரம் என்ற செய்தியில் தொடங்கியது. மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பாளரான வஸ்ரம்பாய் தேதாபாய்க்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. அவர், இதுவரை கழுதை பால் இந்த விலைக்கு விற்றதும் இல்லை. அவ்வாறு நான் கேள்விபட்டதும் இல்லை என்று நிருபர்களிடம் கூறினார்.

‘விலங்குகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், நாங்களே ஊசி போட்டு விட வேண்டியுள்ளது.‘

காண்க வீடியோ: மக்கள் இப்போது எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள்

வஸ்ரம்பாய் கூறுகையில், இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரு நபர், அவரிடம் இருந்து ஹலாரி கழுதைகளின் பாலை வாங்குவதற்காக வந்தார் என்றார். ஜாம் நகரின் மல்தாரிகள் பெரும்பாலும் கழுதைப்பாலை உபயோகப்படுத்த மாட்டார்கள். (மல்தாரி என்ற வார்த்தைக்கு குஜராத்தியில் மல் என்றால் கால்நடைகள், தாரி என்றால் பாதுகாவலர், அதாவது மாடுகளை வளர்த்து பராமரிப்பவர் என்ற பொருள் அதிலிருந்து இந்த வார்த்தை தோன்றியது). சில நேரங்களில் மருத்துவ காரணங்களுக்காக, குழந்தைகளின் உடல் நல பாதிப்புகாக கேட்டால், அவர்கள் இலவசமாகவே பாலை கொடுத்துவிடுவார்கள். ஆனால் மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த நபர் எதற்காக வாங்கினார் என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. வஸ்ரம்பாய் கழுதை பாலை கறந்து கொடுத்தார். அதை வாங்கியவர் அதற்கு ரூ.7 ஆயிரம் கொடுத்தார். அதை ரொக்கமாகவே வஸ்ரம்பாயின் கையில் கொடுத்துவிட்டார். அவரே வியந்து, செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

இந்த செய்தியுடன் நிறைய நிருபர்கள் கரேடியாவிற்குள் இறங்கினர். ஆனால், அவ்வளவு விலை கொடுத்து ஒரு லிட்டர் பாலை வாங்கியதற்கான காரணத்தை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை.

பசுக்களைப் போலன்றி, கழுதைகள் அரிதாகவே இனப்பெருக்கம் செய்யும். “ஒரு கழுதை ஒரு நாளில் ஒரு லிட்டர் பால் மட்டுமே கொடுக்கும்“ என்று பாட்டி கூறுகிறார். “ஒரு லிட்டர் பாலே அதிகபட்சமாகக் கிடைக்கும். அது இங்குள்ள பசு கொடுக்கும் பாலைவிட 10 மடங்கு குறைவு. அதுவும் குட்டியிட்டு 5 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே பால் கொடுக்கும்“ என்று அவர் மேலும் கூறினார். எனவே மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்களுக்கு கழுதைபால் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதே தெரியாது.

ஆகஸ்ட் மாதத்தில், தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையம், குஜராத்தின் மகேசனா மாவட்டத்தில் இருந்து சில ஹலாரி கழுதைகளை தனது செம்மறி ஆடுகள் பண்ணைக்கு ஆராய்ச்சிக்காக எடுத்துச்சென்றது. அம்மையத்தின் அறிக்கையில், “ஹலாரி கழுதை பாலில் வயதாவதை தடுக்கும் திறன் மற்றும் உடலுக்குத் தேவையான ஆன்ட் ஆக்ஸிடன்டுகள் மற்ற கால்நடைகளின் பாலைவிட இதில் அதிகம் உள்ளது“ என்று கூறுவதை சஜீவன் குறிப்பிடுகிறது.

இந்த அறிக்கை பாலின் புகழை அதிகரித்துவிட்டது. ஹலாரி கழுதை வளர்ப்பவர்கள் மத்தியில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கழுதை இனம் குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாட்டியிடம் கேள்விகள் சந்தேகங்கள் கேட்கப்படுகின்றன. இதற்கிடையில், ஆத்விக் போன்ற நிறுவனங்கள், ஒட்டகப்பாலுக்கு ஆயிரம் லிட்டம் பண்ணை உருவாக்கியதுபோல், கழுதைபாலுக்கு 100 லிட்டர் பண்ணை உருவாக்கும் சிந்தனையில் உள்ளன. “கழுதை பால் அழகுசாதன பொருட்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. கிரேக்கம், அரேபியம் (எகிப்து) போன்ற நாடுகளின் இளவரசிகள் கழுதையின் பாலில் குளித்துள்ளனர். இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் அழகுசாதன பொருட்கள் துறையில் கழுதை பாலுக்கான சந்தை அதிகரித்துள்ளது“ என்று பாட்டி மேலும் கூறினார்.

பண்ணை வந்தாலும், விலை ரூ. 7 ஆயிரம் வரை உயருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. “அண்மையில் மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்களிடம் இருந்து, ஆராய்ச்சிக்காக 12 முதல் 15 லிட்டர் வரை பால் வாங்கிச்சென்றனர். அவர்கள் ரூ.125ஐ லிட்டருக்கு வழங்கினர்“ என்று அவர் கூறுகிறார்.

கழுதை வளர்ப்பவர்கள் பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் தொகை கிடையாதுதான்.

PHOTO • Ritayan Mukherjee

சவுராஷ்ட்ராவின் வெண்மை நிற ஹலாரி கழுதைகள் வலிமையான தசைகள் கொண்டவை, மேய்ச்சல் விலங்குகள் மேய்ப்பவர்களுக்கு இடம்பெயரும்போது பொதிகளை சுமந்துகொண்டு, 30 முதல் 40 கிலோ மீட்டர் வரை பயணிக்கக்கூடியவை

PHOTO • Ritayan Mukherjee

கோலபாய் ஜீஜீபாய் மற்றும் ஹமீர் ஹாஜா புதியாவும் சகோதரர்கள், இருவரும் 25 ஹலாரி கழுதைகளை வளர்க்கின்றனர். இதுவே மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள் வைத்திருக்கும் கழுதைகளில் அதிக எண்ணிக்கையாகும்

PHOTO • Ritayan Mukherjee

ராஜ்கோட் மாவட்டம் துராஜி கிராமத்தில் வசிக்கும் சன்னாபாய் ருடாபாய் பர்வாட். புலம்பெயர் பர்வாட் சமுதாயத்தினர் உள்நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகளை, கழுதையுடன் வளர்த்து வருகின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

ஹலாரியில் பால் கறப்பது எப்படி என்பதை சன்னாபாய் ருடாபாய் பர்வாட் நம்மிடம் செய்து காட்டுகிறார். இந்த பால் நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதாக நம்பப்படுகிறது. நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது

PHOTO • Ritayan Mukherjee

மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள் (அல்லது மால்தாரி, மால் என்றால் குஜராத்தியில் கால்நடைகள் மற்றம் தாரி என்றால் பாதுகாவலர்கள் மற்றும் வளர்ப்பவர்கள் என்று பொருள்) ஆலமரத்தின் இலைகளிலிருந்து தேநீர் தயாரித்து பருகுகிறார்கள். அவர்கள் பாலிதீன் இல்லாத, இயற்கையுடன் இயந்த வாழ்வு வாழ்கின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

போர்பந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த பராவாடா கிராமத்தில் உள்ள ராணாபாய் கோவிந்த்பாய் பர்வாட் புகழ்பெற்ற ஹலாரி கழுதை வளர்ப்பவர்கள். அவர் 20க்கும் மேற்பட்ட கழுதைகளை விற்றுவிட்டார். இப்போது அவரின் மந்தை 5ஆக சுருங்கிவிட்டது

PHOTO • Ritayan Mukherjee

ஜிக்னேஷ் மற்றும் பாபேஷ் பர்வாட், பர்வாட் சமுதாயத்தின் இளம் தலைமுறையினர், ஜாம்நகரில் படிப்பதைவிட பழமையான அவர்களின் வாழ்க்கை முறையையே பின்பற்ற விரும்புகின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

ஜிக்னேஷ் மற்றும் பாபேஷ் பர்வாட், பர்வாட் சமுதாயத்தின் இளம் தலைமுறையினர், ஜாம்நகரில் படிப்பதைவிட பழமையான அவர்களின் வாழ்க்கை முறையையே பின்பற்ற விரும்புகின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

பாவ்நகர் மாவட்டம் பந்தாரியா கிராமத்தைச் சேர்ந்த சாமாபாய் பர்வாட் மரச்சட்டத்தை கழுதையின் மீது வைக்கிறார். இதில்தான் கழுதை பொதிகளை வைத்து சுமக்கிறது. வளைவான சட்டம் கழுதையின் வயிற்றுப்பகுதியில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது

PHOTO • Ritayan Mukherjee

காஞ்ச் மாவட்டத்தில் உள்ள பண்ணையில் அழகிய விலங்குகள் போட்டியில் நன்றாக வளர்ந்த கழுதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

PHOTO • Ritayan Mukherjee

சமுதாயத்தில் மூத்தவர் சாவாபாய் பர்வாட், ராஜ்கோட் மாவட்டம் சின்சிட் கிராமத்தில் வசிப்பவர், ஒருகாலத்தில் பெரியளவில் ஆடுகள், கழுதைகள், எருமைகள் மந்தை வைத்திருந்தார். மேய்ச்சல் நிலங்கள் குறைந்த பின்னர் எருமைகளை வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் விற்றுவிட்டார்

PHOTO • Ritayan Mukherjee

தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் ஹமீர் ஹாஜா புதியா. அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளுடன் வயல்களில் உள்ளார்

PHOTO • Ritayan Mukherjee

ஹமீர் ஹாஜா இரவு நேர பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்கிறார். சரியாக கட்டப்படாவிட்டால் கழுதைகள் ஓடிவிடும் என்று அவர் கூறுகிறார்

PHOTO • Ritayan Mukherjee

மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள் வழக்கமாக இடம்பெயரும்போது எடுத்துவரும் போர்வைகளுடன் வெளியிலேயே படுத்து உறங்குவார்கள். வயல்வெளிகளிலும், சாலையோரங்களில் அவர்கள் அமைக்கும் தற்காலிக கொட்டகைகள் நாஸ் என்று அழைக்கப்படுகிறது

PHOTO • Ritayan Mukherjee

ஹலாரி ஒரு அழகான, நல்ல குணம் கொண்ட ஒரு இனம். மென்மையான கண்களுடையவை. ‘இவை அழகானவை. ஆனால் வாழ்வாதாரத்திற்கு உதவாது என்று ஐம்பர் கிராமத்தைச் சேர்ந்த கோலாபாய் ஜீஜீபாய் பரத்வாட் கூறுகிறார்

தமிழில்:  பிரியதர்சினி R.

Ritayan Mukherjee

ঋতায়ন মুখার্জি কলকাতার বাসিন্দা, আলোকচিত্রে সবিশেষ উৎসাহী। তিনি ২০১৬ সালের পারি ফেলো। তিব্বত মালভূমির যাযাবর মেষপালক রাখালিয়া জনগোষ্ঠীগুলির জীবন বিষয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী দস্তাবেজি প্রকল্পের সঙ্গে যুক্ত।

Other stories by Ritayan Mukherjee
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.