மே 1ம் தேதி, சர்வதேச உழைப்பாளர்கள் தினம், கோண்டியாவின் பெண் தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், நாங்கள் இதை மீண்டும் பிரசுரிக்கிறோம். இந்த கட்டுரை முதலில் 2007ம் ஆண்டு ஜனவரி 27 அன்று இந்து பத்திரிக்கையில் பிரசுரமானபோது இருந்ததைவிட பெரியளவில் அவர்கள் முன்னேறவில்லை.
ரேவன்டாபாய் காம்ப்ளி, தனது 6 வயது மகனுடன் சில மாதங்களாக பேசவில்லை. இத்தனைக்கும் அவர்கள் திரோராவில் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். புரிபாய் நாக்பூரியும் தனது மூத்த மகனை, சில நேரங்களில் அவர் அதிகாலை எழுந்துவிட்டால் மட்டுமே பார்க்கிறார். இவர்கள் இருவரும் மஹாராஷ்ட்ராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள இப்பகுதியிலிருந்து ஒவ்வொரு வாரமும் தினமும் ரூ.30 கூலிக்காக ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் நூற்றுக்கணக்கான பெண்களில் அடங்குவர். அவர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருப்பார்கள்.
நாம் அந்தப்பெண்களுடன் சேர்ந்து அவர்களின் வீட்டில் இருந்து ரயில் நிலையம் சென்றபோது மணி காலை 6. அதில் பெரும்பாலானோர் எழுந்து ஏற்கனவே 2 மணி நேரமாகிவிட்டது. “நான் சமையல், துணி துவைத்தல், வீடு பெருக்குதல் மற்றும் சுத்தம் செய்தல் என அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டேன்“ என உற்சாகமாக கூறுகிறார் புரிபாய். “எனவே நாம் இப்போது பேசலாம்“ என்கிறார் அவர். நாங்கள் வந்தபோது அவர் வீட்டில் இருந்த வேறு ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. “கொஞ்சம் கஷ்டம்தான். அவர்கள் சோர்வாக இருப்பார்கள்“ என்று அவர் கூறுகிறார். புரிபாயும்தான் சோர்வாக இருப்பாரே? என்றால், “ஆமாம், என்ன செய்வது? எங்களுக்கு வேறு வழி இல்லையே“ என்கிறார்.
அந்த ரயில் நிலையத்தில் இருந்த மற்ற பெரும்பாலான பெண்களுக்கும் வேறு வழியில்லைதான். ஒருவகையில் இது வழக்கமான ஒன்றல்ல. அவர்கள் அனைவரும் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்பவர்கள் கிடையாது. அவர்கள் எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு சென்று வேலை செய்யும் பணியாள்ரகள். அவர்கள் நகரில் இருந்து கிராமப்புறங்களுக்கு வேலைக்காக செல்கின்றனர். இது அவர்களை ஊர்புறத்தில் உள்ள நகரான திரோரா, அந்த வட்டத்தின் தலைடைமயிடம், இங்கிருந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக தினமும் கிராமங்களுக்கு செல்லும் விவசாய கூலித்தொழிலாளர்களாக்கியுள்ளது. அவர்கள் தினமும் 20 மணி நேரம் வீட்டிலிருந்து வெளியே நேரம் செலவிடுகின்றனர். அவர்களுக்கு வார இறுதிநாட்கள் விடுமுறை கிடையாது. திரோராவிலும் வேலை இல்லை. “பீடித்தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர் இங்கு வேலை இல்லை“ என்று மகேந்திரா வால்டே கூறுகிறார். இவர் கோண்டியாவில் உள்ள விவசாயிகள் சபையின் மாவட்ட செயலாளர். “அவர்களுக்கு இங்கு வேலை தேடிக்கொள்வது முடியாத காரியம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பெரும்பாலான பெண்கள் ரயில் நிலையத்தில் இருந்து 5 முதல் 6 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறார்கள். “எனவே நாங்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருக்க வேண்டும்“ என்று புரிபாய் கூறுகிறார். அவர் 40களின் இறுதியில் இருக்கலாம். “நாங்கள் எங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, காலை 7 மணியளவில் ரயில் நிலையத்திற்கு நடந்து செல்வோம். அப்போதுதான் ரயில் வரும், நாங்கள் கூட்டமாக அதில் ஏறுவோம். அது கிராமப்புற நாக்பூரில் உள்ள சால்வா வரை செல்லும். இந்த 76 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு 2 மணி நேரம் ஆகும். ரயில் நிலையத்தின் நடைமேடையிலும், ரயிலிலும் நிறைய பெண்கள் உள்ளனர். அரை தூக்கத்திலும், வெறித்த கண்களுடனும், பசியிலும் அமர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் ரயிலில் கீழே அமர்ந்தும், ரயில் பெட்டியினுள் சுவரில் சாய்ந்துகொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வருவதற்குள் கொஞ்சம் தூங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாக்பூர் மாவட்டம் மவுதா வட்டத்தில் உள்ளது சால்வா, அங்கு 105 வீடுகள் உள்ளன. 500 பேருக்கு குறைவானவர்களே உள்ளனர்.
“நாங்கள் வீட்டிற்கு இரவு 11 மணிக்கு வருவோம்“ என்று ரேவன்டாபாய் கூறுகிறார். அவருக்கு 20 வயதுக்கு மேல் இருக்கலாம். “நாங்கள் தூங்குவதற்கு நள்ளிரவாகிவிடும். பின்னர் அடுத்த நாள் காலை 4 மணிக்கு அனைத்தும் துவங்கும். நான் கிளம்பும் நேரத்தில் விழிக்காத, நான் வீடு திரும்பும் நேரத்தில் தூங்கிவிடும் எனது 6 வயது குழந்தையை நான் நீண்ட நாட்களாக பார்க்கவில்லை“ என்று கூறி சிரிக்கிறார். “சில சிறு குழந்தைகள் அவர்களின் தாயை பார்க்கும்போது அவர்களுக்கு அடையாளம் கூட தெரியாது“ என்று அவர் மேலும் கூறுகிறார். அவர்களின் குழந்தைகளை படிக்க வைக்க முடியாததால், அவர்கள் பள்ளிகளிலே இடையில் நின்றவர்களாக இருப்பார்கள் அல்லது நன்றாக படிக்காத மாணவர்களாக இருப்பார்கள். “எங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கோ அல்லது உதவுவதற்கோ வீடுகளில் ஆட்கள் இருக்கமாட்டார்கள. இதனால் இளம் வயது குழந்தைகள் அவர்களே ஏதாவது வேலைக்கு செல்வார்கள்“ என்று புரிபாய் கூறுகிறார்.
“அவர்கள் எப்போதுமே பள்ளியில் நன்றாக படிக்க மாட்டார்கள்“ என்று லதா பாபன்கர் கூறுகிறார். இவர் திரோராவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர். “அவர்களை யார் குற்றஞ்சொல்ல முடியும்?“ என்கிறார். மஹாராஷ்ட்ர அரசை குறை சொல்ல முடியும் என்று தோன்றும். இந்த குழந்தைகள் நன்றாக படிக்காமல் போவது பள்ளிக்கு பாதகமாக அமைந்து, பள்ளிக்கு ஒதுக்கப்படும் நிதியை இழக்கும். அவர்களுக்கு உதவ முற்படும் ஆசிரியர்களுக்கு எதிராகவும் நல்ல தேர்வு முடிவுகளை தரவில்லையென்றும் மாறும். இதனால், அவர்கள் தொடர்ந்து பள்ளி செல்ல முடியாமல் செய்துவிடும்.
ஆடும் ரயில் பெட்டியின் கீழே அமர்ந்திருக்கும் சகுந்தலாபாய் அகஷிக்கு 50 வயது இருக்கும். அவர் இந்த வேலையை 15 ஆண்டுகளாக செய்து வருகிறார். பண்டிகை மற்றும் பருவமழைக்காலங்களில் மட்டுமே இவர்கள் செல்லமாவட்டார்கள். “சில வேலைகளுக்கு எங்களுக்கு ரூ.50 கூட கிடைக்கும். ஆனால் அது அரிதாகவே கிடைக்கும் பெரும்பாலும் ரூ.25 முதல் ரூ.30 கூலி கிடைக்கும்“ என்று அவர் கூறுகிறார். எங்களுக்கு எங்கள் நகரில் வேலைகள் இல்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.
நகரின் பொருளாதார ஆதாரமாக இருந்து பணம் வழங்கிய அங்கிருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. ஊர்ப்புற சிறுநகரங்கள் அனைத்து அழிந்துகொண்டு வருகின்றன. பெரும்பாலும் இந்த பெண்கள் அனைவரும் கடந்த காலங்களில் வருமானத்திற்காக பீடி தொழிற்சாலையையே நம்பியிருந்தனர். “அதுபோன பின்னர் எங்களின் வாழ்க்கை முடிந்துவிட்டதை போலானது“ என்று புரிபாய் கூறுகிறார். “பீடித்தொழிற்சாலை எங்கு வேண்டுமானாலும் துவங்கக்கூடிய தொழிற்சாலையாகும். அது குறைந்த விலைக்கு தொழிலாளர்களை தேடும்“ என்று நாகராஜ் கூறுகிறார். இவர் மெட்ராஸ் வளர்ச்சிக்கல்வி மையத்தை சேர்ந்தவர். அந்தத்துறையில் பணியாற்றியவர். “அது விரைவாக இடம்பெயர்ந்துவிடும். அதனால் அதை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் அழிவைக்கொடுப்பதாக இருக்கும். கடந்த 15 ஆண்டுகளாக இதை பார்த்துவிட்டோம். பெரும்பாலான பீடி தொழிற்சாலைகள் கோண்டியாவில் இருந்து உத்ரபிரதேசம் மற்றும் சட்டிஸ்கருக்கு இடம்பெயர்ந்துவிட்டது“ என்று கிசான் சபையின் பிரதீப் பாபன்கர் கூறுகிறார்.
“நாங்கள் ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க மாட்டோம். ஒருமுறை சென்றுவருவதற்கு நாங்கள் சம்பாதிக்கும் ரூ.30 ஐவிட கூடுதலாக தேவைப்படும். நாங்கள் மாட்டிக்கொண்டால் பரிசோதனை செய்பவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்து தப்பித்துக்கொள்வோம். டிக்கெட் கட்டணம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. எங்களால், அந்த தொகை கொடுத்து டிக்கெட் வாங்க முடியாது என்று தெரிந்தும் தட்டிப்பறிக்கின்றனர்“ என்று ஒரு பெண் கூறினார்.
“எனது மூத்த மகன் என்னை ரயில் நிலையத்தில் தனது சைக்கிளில் கொண்டு வந்து இறக்கிவிடுவார்“ என்று புரிபாய் கூறுகிறார். “பின்னர் அவர் அங்கேயே இருந்து எந்த தொகை கிடைத்தாலும் அதற்கு ஏதாவது வேலை செய்வார். எனது மகள் வீட்டில் சமையல் வேலைகளை கவனித்துக்கொள்கிறார். எனது இரண்டாவது மகன் அவரது சகோதரருக்கு சாப்பாடு எடுத்து வருவார். சுருக்கமாக கூறினால், ஒருவரின் கூலிக்காக 3 பேர் வேலை செய்கின்றார்கள். அவர் கணவர் உட்பட அவர் குடும்பத்தில் உள்ள 5 பேரும் சேர்ந்து ஒரு நாளைக்கு ரூ.100க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். சில நாட்களில் இரண்டு பேர் எதுவுமே ஈட்டியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையும் இல்லை.
ரயில் நிலையத்தில் கூலித்தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் வழி முழுவதும் நிற்கிறார்கள். அவர்கள் குறைந்த கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள்,
காலை 9 மணிக்கு சல்வாவை சென்றடைகிறோம். ஒரு கிலோ மீட்டரில் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வயலுக்கு செல்ல வேண்டும். இடையில் நிலத்தின் சொந்தக்காரர் பிரபாகர் வஞ்சாரேவின் வீட்டில் நின்று வேலை குறித்து பேசுகிறார்கள். புரிபாய் தனது தலையில் தண்ணீர் பாத்திரைத்தை வைத்துக்கொண்டு வேகமாக நடந்து செல்கிறார். நாமும் அவரை முந்தி செல்கிறோம்.
அவர்கள் வேலை செய்யும் நிலத்தின் சொந்தக்காரரும் பிரச்னையில் இருந்தது பரிதாபமான ஒன்று. வேளாண் பிரச்னைகள் வஞ்சாரோவை கடுமையாகவே தாக்கின. அவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலமும், குத்தகைக்கு 10 ஏக்கர் நிலமும் உள்ளது. “செலவு அதிகரித்துவிட்டது. நாங்கள் பெரும்பாலும் எதுவும் சம்பாதிக்கவில்லை“ என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார். இந்த பெண்கள் வேலைக்கு வருவதால், அந்த ஊரின் தொழிலாளர்கள் விரக்தியில் புலம்பெயர்ந்து எங்கோ சென்றுவிட்டனர்.
இது கிழக்கு விதர்பபா, பருத்தி பயிரிடும் பகுதியில் இருந்து தூரத்தில் உள்ளது வஞ்சாரே நெல், மிளகாய் மற்றும் வேறு சில பயிர்களை நடுகிறார். தற்போது, அவருக்கு பெண்கள் களையெடுக்கும் வேலைக்கு தேவைப்படுகிறார்கள். அவர்கள் மாலை 5.30 மணி வரை வேலை செய்கிறார்கள். ஒரு மணி நேரம் கழித்து ரயில் நிலையத்திற்கு வருகிறார்கள்.
“ஆனால், ரயில் இரவு 8 மணிக்குதான் வருகிறது“ என்று புரிபாய் கூறுகிறார். “எனவே நாங்கள் திரோராவை இரவு 10 மணியளவில்தான் சென்றடைகிறோம். “அவர்கள் குடும்பத்தினர் அவர்கள் வீடு திரும்பும் தாமதமான இரவு நேரத்தில் தூங்கியிருப்பார்கள். மீண்டும் காலை கிளம்பும் வேலையிலும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். “என்ன குடும்ப வாழ்க்கை இது?“ என்று ரேவன்டாபாய் கேட்கிறார்.
அவர்கள் வீடுகளை அடையும்போது, அவர்கள் கிட்டத்தட்ட 170 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்கள். இதையே ரூ.30 சம்பாதிப்பதற்காக தினமும் செய்கிறார்கள். “நாங்கள் சாப்பிடவும், தூங்கவும் வீட்டை இரவு 11 மணிக்கு சென்றடைவோம்“ என்று புரிபாய் கூறுகிறார். பின்னர் 4 மணி நேரம் கழித்து, மீண்டும் எழுந்து இதேபோல் ஓட வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
தமிழில் : பிரியதர்சினி R.