“எங்கள் கிராமத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்திலும் வேலை கிடைப்பது அரிதாக உள்ளது” என்றார் ஜங்கம் தனலட்சுமி. மேலும், ”அனைத்து விவசாய நிலங்களும் மீன் வளர்ப்புக் குளங்களாக மாற்றப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.
ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின், தமிரிசா கிராமப்பகுதியில் உள்ள குக்கிரமமான அங்கேன்னகுடம் பகுதியில், 40 வயதுடைய தனலட்சுமி(முகப்பு படத்தில் உள்ளவர்) வசித்து வருகிறார். இவர் விவசாய வேலைகளுக்கு செல்வதற்காகத் தினந்தோறும் ஏறத்தாழ 60 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது. அதற்காக அவரது தினக்கூலியான 200 ரூபாயில், நான்கில் ஒரு பங்கை ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிப்பதற்காகவே செலவழித்து வருகிறார். இந்தக் சிறுகிராமத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஏறத்தாழ 450 பேர் வசித்து வருகின்றனர்.
“அவ்வளவு தூரம் பயணித்தும், ஏப்ரலில் 10 நாட்களும், ஆகஸ்டில் 10 நாட்களும், விவசாய வேலைகள் உச்சத்தில் இருக்கும் டிசம்பர் மாதத்தில் 10 நாட்களும் ஆக மொத்தமாக வருடத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலைக்கிடைக்கிறது.” என தனலட்சுமியின் அண்டைவீட்டாரன 60 வயதுடைய கண்டா சரோஜா கூறினார். இதனால் விவசாய வேலையின் வழியாக இந்த குக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வருடத்திற்கு 5,000-6,000 வரை மட்டுமே வருமானம் ஈட்ட முடிகிறது. இதன் காரணமாக பலர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், “கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு முன்னர், இந்தக் கிராமத்தில் 150 குடும்பங்கள் இருந்தன. தற்போது 60 குடும்பங்கள் இருப்பதே அரிது.” என கூறிய சரோஜா, “சிலர் குடிவாடா, விஜயவாடா மற்றும் ஹைதராபாத் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பிறர் வேலை தேடுவதற்காக அவர்களது உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்.
அங்கேன்னகுடம், நந்திவாடா மண்டல் பகுதியில் உள்ள ஊராகும். இதில் ஏறத்தாழ 36,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நந்திவாடா பகுதியில் மீன் வளர்ப்பின் மூலமாக கிடைக்கும் அதிக வருவாயின் காரணமாக ஆந்திர பிரதேச மாநிலத்திலேயே இரண்டாவது (விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அச்சுதபுறம் மண்டல் பகுதிக்கு அடுத்து) அதிக தனிநபர் வருமானம் ஈட்டக்கூடிய பகுதியாக உள்ளது. இங்குள்ள மீன்கள் மீன்வளர்ப்பு செயலாக்க அலகுகளில்(aqua processing units)பயன்படுத்தப்படுகிறது மற்றும் கிழக்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2014-15 ஆண்டின், மாநில தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, நந்திவாடா பகுதியில் தனிநபர் ஆண்டு வருவாய் ருபாய் 308,371 ஆகும். இதேவேளையில், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளவர்களின் மொத்த வருமானம் அதே ஆண்டில் ருபாய் 140,628 ஆகும்.
ஆனால்,கடந்த 2001 மற்றும் 2011 ஆண்டுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்திலேயே இந்த மண்டல் பகுதியில் மட்டும் தான், 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை குறைந்ததன் காரணமாக, மண்டல் பரிஷத் பிராந்தியத் தொகுதி இடங்களும் (மக்கள் தொகை எண்ணிக்கையை பிரதிபலிக்கும் வகையில்) 12 லிருந்து 11 ஆக குறைந்துள்ளது.
இதுகுறித்து விளக்கிக் கூறிய தனலட்சுமியின் சகோதரரும், விவசாயக்கூலியுமான ஜங்கம் யஹோசுஹா, “பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, எங்கள் கிராமத்தில் சுமார் 370 ஏக்கர் விவசாயநிலம் இருந்தது. அந்த நிலங்களில் பெரும்பாலானவை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கம்மா மற்றும் யாதவா சாதியைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களுக்கு சொந்தமானது. இதேவேளையில், தலித்துகள் வெறும் 50 ஏக்கர் நிலத்தை மட்டுமே சொந்தமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நிலவுடமையாளர்கள் உடனடியாக பணம் சம்பாதிப்பதற்காக விவசாய நிலங்களை மீன்வளர்ப்புக் குளங்களாக மாற்றியதன் காரணமாக மண் வளம் குன்றி, நீர் மாசுபாடு ஏற்பட்டதன் காரணமாக நாங்களும் நிலங்களைக் மீன்வளர்ப்புக் குளங்களாக மாற்றவேண்டிய அழுத்தம் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டார்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு சொந்தமான இந்த ஐம்பது ஏக்கர் நிலமும் கூட, அவர்களுக்கு இருந்த பணத்தேவையைப் பயன்படுத்தி நிலவுடைமையாளர்களால் மிகக்குறைவான தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து கூறிய யஹோசுகா,”எங்கள் குக்கிராமத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட மிஞ்சவில்லை. இதனால் ஏற்பட்ட பணி அழுத்தத்தின் காரணமாக, நாங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அப்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா கிராமங்களும் எங்கள் கிராமத்தைப் போன்று இதே வழியை பின்பற்றியதால், இந்தப்பகுதியிலே வேலைவாய்ப்புகள் கணிசமாகக் குறைந்து, வேறு இடங்களுக்கு புலம்பெயரும் நிலை ஏற்பட்டது” என்று கூறினார்.
இந்தப் பகுதியில் வேலைகள் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மிகஅதிகம்: 100 ஏக்கர் விவசாய நிலமானது வருடத்திற்கு கிட்டதட்ட 11,000-12000 வேலை நாட்களை வழங்கியுள்ளது. இதேவேளையில், 1௦௦ ஏக்கர் மீன்வளர்ப்புக் குளத்தினால் வருடத்திற்கு 1,000 வேலை நாட்கள் மட்டுமே கிடைத்துள்ளது.(வேலை நாட்கள் என்பது உழைக்கும் நபர்களின் எண்ணிகையை வேலை நாட்களால் பெருக்குவதாகும்)
அன்கேன்னகுடம் பகுதி மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்புக்குள்ளான ஒரே தலித்துகள் குடியிருப்பன்று :இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவு பெற்ற ஆந்திர பிரதேச மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்பட்டாளர் ,28,முரலா ராஜேஷ்,”எங்கள் கணிப்பின் படி நந்திவாடா மண்டல் பகுதியில் உள்ள 32,000 ஏக்கர் மொத்த நிலப்பகுதியில், 28,000 ஏக்கர் நிலப்பகுதி மீன்வளர்ப்புக் குளமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாதவையே” என்று குறிப்பிட்டார். இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்கள் ஆந்திர மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கம்மா சமூகத்தினருக்கு சொந்தமானவை. இந்த சமுகத்தைத் தொடர்ந்து இதர நிலங்கள் ரெட்டி,கபூ,ராஜகா மற்றும் யாதவா சமுகத்திற்கு சொந்தமானவையாகவும் உள்ளன. தற்போது அவர்களின் வருமானம் என்பது முழு முழுக்க மீன்வளர்ப்பைச் சார்ந்தே உள்ளது.
தனலட்சுமியின் மகன் அஜய்,20, யாதவா சமுகத்தைச் சேர்ந்தவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கம்மா சமூகத்தினருக்கு சொந்தமான மீன்வளர்ப்புக் குளத்தில் பணிபுரிந்து வருகிறார். இங்கு காலை 7 மணி முதல் மதியம் 1 வரை பணிபுரிந்து வரும் அவருக்கு மாத ஊதியமாக 7,500 ரூபாய் கிடைக்கிறது. இதன் மூலமாக ஐந்து பேரைக் கொண்ட அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. “10 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூன்று வேலையும் உணவருந்தினோம். தற்போது, இரு வேளை உணவிற்கே இந்த பணம் போதுமானதாக இல்லை” என்று கூறினார் தனலட்சுமி.
இதுவே நந்திவாடா பகுதி முழுவதும் உள்ள தலித் குடும்பங்களைச் சார்ந்த வயதில் மூத்த பலரின் கதைகளாகும். இந்தப் பகுதியில் 1990களின் துவக்கத்தில் வரத் துவங்கிய மீன்வளர்ப்புக் குளங்கள், வேகமெடுத்து பின் 2000களின் வாக்கில் அப்பகுதி முழுவதும் பரவியுள்ளது. ஹனுமானாபுடி கிராமத்திற்கு அருகில் வசித்து வரும் தலித் சமுகத்தைச் சார்ந்த கைப்பெண்ணான,55,கந்தம்மா 2000 ஆம் ஆணடின் துவக்கம் வரை அப்பகுதியில் விவசாயத் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர்,“நான் ஒரு நாளைக்கு 100 ருபாய் சம்பளத்தில், வருடத்திற்கு கிட்டத்தட்ட 200 நாட்கள் வேலைக்குச் சென்று வந்தேன். ஆனால், மீன்வளர்ப்புக் குளங்கள் அதிகரித்ததன் காரணமாக, வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் நான் வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், என் உடல்நலன் அதற்கு ஒத்துழைக்கவில்லை...” என்றுக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அவரது மகன் சந்துரு அவரைப் பார்த்துக் கொள்கிறார். அவர் ஹைதராபாத்தில் உள்ள வெல்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சந்துரு அவரது அம்மா கந்தம்மாவிற்கு உதவுவதற்காக 7 வது படிக்கும் போதே தனது படிப்பை நிறுத்திவிட்டு, அவரும் விவசாயத் தொழிலாளராக வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அந்த வேலையும் மீன்வளர்ப்புக் குளங்களால் காணமல் போன நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் ஹைதராபாத் நகருக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர்,”தற்போது நான் 12,௦௦௦ ருபாய் சம்பாதிக்கிறேன். அதில் பாதியை என் அம்மாவுக்கு அனுப்புகிறேன்” என்றார்.
ஹனுமானாபுடி கிராமத்தில் வசிக்கும் வசந்த ராவ், சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தப்பகுதியில் விவசாயத் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது குடும்பத்தை நடத்துவதற்கு அவரது மகனையே சார்ந்துள்ளார். “இரண்டு மகன்கள் குடிவாடா(இங்கிருந்து அருகில், ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம்) பகுதியில் பணிபுரிகின்றனர். மூன்றாம் மகன் ஹைதராபாத்தில் பணிபுரிகிறான்,” என்று கூறிய அவர், இந்தக் கிராமத்தில் உள்ள 50 தலித் குடும்பங்களில் குறைந்தபட்சம் 30 குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகள் இந்த இரண்டு இடங்களுக்கு வேலைகளுக்காக இடம்பெயர்ந்துள்ளனர் என வசந்த ராவ் குறிப்பிட்டார்.
இந்த மண்டல் பகுதியில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ள வேளையில் மக்கள் தொகைக் குறைந்துள்ளது குறித்து சந்து ஆச்சிரியம் அடையவில்லை. இதுகுறித்து கூறுகையில், “பெண்கள் வேலைக்கு செல்லமுடிவதில்லை( அருகில் ஊதியம் கிட்டும் எந்த கூலி வேலையும் கிடைக்காததால், அவர்கள் வீட்டைக் கவனித்துக் கொள்கின்றனர்). ஆண்களும் ஒருவேளை நல்ல உடல் நலனோடு வேலைதேடி அருகில் உள்ள கிராமங்களுக்கு பயணிக்க முடிந்தால் எப்பொழுதாவது வேலைக் கிடைகிறது. மகள்களும் திருமணம் ஆகி அவர்களின் புகுந்த வீட்டிற்கு சென்றுவிட்டனர். மகன்களும் குடிவடாவிற்கும், ஹைதரபாத் பகுதிக்கும் கீழ்த்தரமான வேலைகள் செய்வதற்கும், ஆட்டோ ரிக்சாக்கள் ஓட்டுவதற்கும், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளராகவும் பெயிண்டர்களாகவும் பணிபுரிவதற்கும் சென்று தங்கள் பெற்றோருக்கு சம்பாதித்தப் பணத்தைத் திருப்பி அனுப்புகிறார்கள், அதே நேரத்தில் அவர்களே பரிதாபகரமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். இதுபோன்றொதொரு சூழலில், இந்த மண்டல் பகுதியின் மக்கள் தொகை ஏன் குறையாது?” என்று கேள்வி எழுப்பினார்.
சந்துவின் நண்பர் மட்டுபள்ளி ஜோசப் வேலைக்கிடைக்கும் போதெல்லாம் மீன்வளர்ப்புக் குளங்களில் பணிபுரிகின்றார். அவர் கிராமத்திலேயே தங்கி இருந்து தனது பெற்றோரை பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்( MGNREGA [Mahatma Gandhi National Rural Employment Guarantee Act] நிறைவேற்றப்படாவிட்டால் அதன் நோக்கம் தான் என்ன? இந்த சட்டத்தின் கீழ் சில நாட்களாவது வேலை கொடுக்கக் கோரி நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டோம், ஒரு தடவை அல்ல, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து(2005) கேட்கிறோம். ஒருநாள், நானும் மற்றவர்களைப் போன்று எனது பெற்றோரை இந்தக் கிராமத்திலேயே விட்டு விட்டு, வேறு நகரத்திற்கு வேலைக்காகச் செல்லும் நிலையும் கூட ஏற்படக்கூடும்” என்று கூறிய ஜோசப்பின் முகத்தில் வலியும், கோபமும் பட்டவர்த்தனமாக தெரிந்தது.
இதேவேளையில், மீன்வளர்ப்புக் குளங்கள் அந்தக் குக்கிராமத்தில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களை மாசுபடுத்தியுள்ளது, மேலும் பாசன கால்வாய்கள் மற்றும் சிற்றாறுகள் போன்ற பிற மேற்புற நீர் ஆதாரங்களையும் மாசுபடுத்தியுள்ளது. ''பஞ்சாயத்து குழாயில் இருந்து வரும் குடிநீர் பசுமையாக காட்சியளிக்கிறது. ஆனால், நாங்களோ 20 லிட்டர் குடிநீர் கேனை ரூ.15 கொடுத்து வாங்குகிறோம். [தமிரிசா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து]. மேலும், ஒரு மாதத்திற்கு குறைந்தது 20 கேன்களாவது தேவைப்படுகிறது. இந்த சூழலில், இங்குள்ள தலித்துகள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில், இங்குள்ள நிலவுடைமை சாதியினர் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தப்புவார்களா?” என சரோஜா கேள்வி எழுப்பினார்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்.