இராதாபாயும் சிம்னாபாயும் காஜலும் மதிய உணவுக்குப் பிறகு ஓய்வுகொள்கின்றன. சதாரா மாவட்டத்தின் மஸ்வாட் தீவன முகாமில் மதியத்தில்கூட குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் பாதாம் மட்டும் இரண்டு நாள்களாக அமைதியில்லாமல், வழக்கம்போல சாப்பிடமுடியாதபடி இருக்கிறது.
நான்கும் முகாமுக்கு வந்து கிட்டத்தட்ட 20 நாள்கள் ஆகிவிட்டன. சதாரா மாவட்டத்தில் உள்ள தங்களின் வலாய் கிராமத்திலிருந்து 16 கிமீ தொலைவுமே அவை நடந்தே வந்துசேர்ந்தன. கடுமையான தீவனத் தட்டுப்பாடு அவற்றுக்கு பெரும் துன்பமாகிவிட்டது. ஏனென்றால், அதுதான் அவற்றுக்கான முதன்மையான ஊட்டச்சத்து ஆதாரம்.
ஆகவே, லட்சுமி கலேல் (40), அவரின் இணையர் பரமேசுவர் அண்ணா கலேல் (60) இருவரும், தங்களின் இரண்டு எருமைகள், ஒரு மாடு, ஒரு காளைமாடு ஆகிய (முறையே) இராதாபாய், சிம்னாபாய், காஜல், பாதம் ஆகியவற்றுடன் - மஸ்வாத் முகாமுக்கு நடையாகவே வந்தனர். "இவற்றைக் கொண்டுவர 800 - 1,000 ரூபாய் ஆகும். எங்களால் அந்த அளவுக்கு செலவிடமுடியாது. ஆகையால், நாங்கள் நடக்க முடிவுசெய்தோம்.” என்கிறார், முகாம் கிடங்கிலிருந்து தங்கள் மாடுகளுக்கு கரும்புத்தாழ்களை வாங்கிக்கொண்டுவரும் இலட்சுமி.
பிளாஸ்டிக் விரிப்புகளால் ஆன குடிலில் அமர்ந்திருந்த அவர், தன்னையும் மாடுகளையும் முகாமில் விட்டுவிட்டு, பரமேஷ்வர் வீடு திரும்பிவிட்டார் என்கிறார். “இங்கே மூன்று இரவுகள் வெட்டவெளியில்தான் தூங்கவேண்டியிருந்தது. பிறகு, என் மருமகன், புதிய சுற்றத்தார் உதவியோடு எங்களின் நான்கு மாடுகளுக்காக ஒரு கொட்டகையையும் இந்த கூடாரத்தையும் அமைத்தேன்.” எனும் இலட்சுமி, இந்த உதவிக்கு ஈடாக அவர்களுக்கு அவ்வப்போது மதிய உணவோ தேநீரோ தயாரித்துத் தருகிறார்.
அவர்கள் முகாமுக்கு வந்ததிலிருந்தே, ஐந்து ஆண்டுகளான இராதா, மூன்று ஆண்டுகளான சிம்னா ஆகிய இரண்டு எருமைகள், மூன்று ஆண்டுகளான சாம்பல் - வெள்ளை மாடு காஜல், அதன் ஒரே காளையான ஐந்து ஆண்டு சாம்பல் - வெள்ளை பதாம் ஆகியவை, இலட்சுமிக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. "மாடுகள் தின்கின்றன; இளைப்பாறியபடி இருக்கின்றன." என்கிறார், அவர்.
“இங்கு வந்ததிலிருந்தே தனியாக இருக்கிறேன். என் இணையர் எங்களை இங்கே விட்டுவிட்டுச் சென்று மூன்று வாரங்கள் ஆகிவிட்டன…எனக்கு இரண்டு மகன்கள். ஒருவன் புனேவில் ஒரு பால்பண்ணையில் வேலைசெய்கிறான். மற்றவன் எங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்காக காரத்வரை கூட்டிச்சென்றுள்ளான். அவனுடைய இணையரும் ஒரு குழந்தையும் (பேரன், 18 மாத அஜிங்க்யா) வீட்டில் இருக்கிறார்கள். எங்கள் வீடு, தொலைவிலிருக்கும் மலைப்பகுதியில் இருக்கிறது; இப்போது வறட்சி காரணமாக, களவு பெருத்துவிட்டது. அதனால்தான் என் இணையர் மீண்டும் ஊருக்குப் போய், எங்களை முகாமுக்கு அனுப்பினார்.”என விவரிக்கிறார், இலட்சுமி.
2018 அக்டோபர் 31 அன்று, மகாராஷ்டிரத்தின் 26 மாவட்டங்களில் 151 வட்டாரங்கள் வறட்சிபாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன. அதில் 112 வட்டாரங்கள் கடும் வறட்சியை எதிர்கொண்டுள்ளன. மாண்டேஷ் பகுதியின் அனைத்து வட்டாரங்களும் இப்பட்டியலில் உள்ளன. சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த மாண், கட்டவ் ஆகிய வட்டங்கள் மாண்டேஷ் பகுதியில் உள்ளன. சாங்லி மாவட்டத்தில் ஜாட், அட்பாடி, காவத்தேமகங்கல் ஆகிய வட்டங்களும் சோலாப்பூர் மாவட்டத்தில் சங்கோல்,மல்சிராஸ் ஆகியவையும் உள்ளன. மாண்டேசில் உள்ள 70 ஊர்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,600 பேர், தங்களின் 8,000 மாடுகளுடன் மஸ்வாட் தீவன முகாமில் தங்கியுள்ளனர். (
’தீவனத்துக்காகப் பிரிக்கப்பட்ட குடும்பங்கள்’
கட்டுரையைக் காண்க)
2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மஸ்வாத்தை மையமாகக் கொண்ட மாண்தேஷி அறக்கட்டளையால் இந்தத் தீவன முகாம் தொடங்கப்பட்டது. (மாண் தேஷி மகிலா சகாகரி வங்கிக்கு ஆதரவு தருவதுடன், நிதிநல்கைக்கு அப்பாலும் இந்த அமைப்பு செயல்படுகிறது.) தற்போதைய நிலவரத்தில் மட்டுமல்ல, அதிகரித்துவரும் வறட்சியையும் எதிர்கொள்ளும் கிராமங்களுக்கு, இந்த மட்டிலான முதல் தீவன முகாம் இது. முகாமில், தீவனமும் தண்ணீரும் தருகிறார்கள். ஒரு நாளைக்கு பெரிய மாடுகளுக்கு 15 கிலோ பசுந்தீவனம், ஒரு கிலோ மாட்டுத்தீவனமும் 50 லிட்டர் தண்ணீரும் கிடைக்கும். மாண்டேஷ் அறக்கட்டளை தந்த மரக்கொம்புகளையும் பச்சைப்பாயையும் கொண்டு மாட்டுக்காரர்கள் மாட்டுக் கொட்டில்களை அமைக்கின்றனர். " நோய்வாய்ப்பட்ட மாடுகளை மட்டும், அவற்றால் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக முகாமுக்கு வெளியே இடம்மாற்றிவிடுகிறோம். முகாமில், இரண்டு கால்நடை மருத்துவர்களும் பணியாற்றுகிறார்கள்." என்கிறார் முகாமின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இரவீந்திர விர்கர். முகாமில் மக்களுக்கான அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன. காட்டாக, ஒவ்வொரு ‘வார்டுக்கும்’ தண்ணீர் பீப்பாய்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரண்டாவது / மூன்றாவது நாளன்றும் ஒரு தொட்டிவண்டி மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இத்துடன், குடிநீருக்காக தனியாகவும் ஒரு தொட்டி உள்ளது.
இலட்சுமியின் குடில், அவர் தூங்குவதற்கு போதுமானதாக இருக்கிறது. கிடைமட்டமான கம்பத்தில் கட்டப்பட்ட ஒரு சரத்தில், அவருடைய இரண்டு சேலைகளும் இருக்கின்றன. அதிலேயே, தேயிலை, சர்க்கரை, தீப்பெட்டி மற்றும் பயறுகள் உள்பட்ட சில மளிகைப்பொருள்களைக் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பையும் தொங்கவிடப்பட்டுள்ளது. மூன்று கற்களைக் குவித்து அடுப்பாக்கியிருக்கிறார், இந்த அடுப்புக்கு அடுத்டு சிறிது விறகையும் தீவனங்களையும் சேர்த்துவைத்திருக்கிறார். தேநீர் தயாரிக்கவோ உணவைச் சூடாக்கவோ இது போதும். “ எனக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிடுகிறது..” என்கிறார் இலட்சுமி. ஆனால், நாங்கள் அவரைச் சந்தித்தபோது, வீட்டு உணவுக்காக இரண்டு நாள்கள் காத்துக்கொண்டு இருந்தார். அவரின் மருமகனுடைய சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு சமாளித்தார். “அவர்கள் இன்று சாப்பாடு அனுப்பவில்லை என்றால், நான் வீட்டுக்கு ஒரு நடை போய்விட்டு வரவேண்டும். சில நாள்களுக்கு முன்னர், என் மருமகள் கொஞ்சம் சோளரொட்டிகளைத் தந்துவிட்டாள்.. காய்கறி, பருப்பு இல்லாமல். என் மாடுகளைப் போலவே, நானும் தீவனத்தைத்தான் சாப்பிடவேண்டும்போலத் தெரிகிறது. என் பெயர் இலட்சுமி (செல்வ தெய்வம்).. ஆனால் என் தலைவிதியைப் பாருங்கள்… ” என சலித்துக்கொள்கிறார், இலட்சுமி.
சதாரா மாவட்டத்தின் மாண் வட்டத்தில் உள்ள இலட்சுமியின் ஊரான வலாய், (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன்படி) 382 வீடுகளையும் 1,700 மக்களையும் கொண்டது. கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில் கரும்பு வெட்டுவதற்காக இந்த ஊர்க்காரர்களில் பாதிப் பேர் அங்கு போய்விடுவார்கள். தீபாவளிக்குப் பிறகு (அக்டோபர் / நவம்பர்) கிளம்புபவர்கள், சந்திர நாள்காட்டியின் முதல் நாளான பத்வாவையொட்டி (மார்ச் / ஏப்ரல்) ஊருக்குத் திரும்புவார்கள். ஆனால் இந்த ஆண்டு நான்காவது மாதம் ஆகியும் (மே / ஜூன்) யாரும் திரும்பிவரவில்லை.” என்று கூறுகிறார், 70 வயதான யஷ்வந்த் தோண்டிபா சிண்டே. மாண் வட்டத்தின் பனவன் கிராமத்தைச் சேர்ந்த, பல விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி களவீரரான இவர், தன் நான்கு மாடுகளையும் முகாமுக்கு கொண்டுவந்திருக்கிறார்.
நாங்கள் பேசுகையில், ” குடிநீர் அவ்வளவுதான்” என்று இலட்சுமி கூறுகிறார்; முகாமில் உள்ள தண்ணீர்த்தொட்டியிலிருந்து கொஞ்சம் தண்ணீரைப் பிடித்துவந்து, ஒரு வெள்ளைநிற கலனில் வைத்துக்கொள்கிறார். இதற்கிடையில், சிண்டே இலட்சுமிக்காக ஒரு நண்பரிடம் நான்கு லிட்டர் தண்ணீர் கேட்கிறார். அதற்கு ஈடாக இலட்சுமி கருந்தேநீர் செய்து, இரும்பு கோப்பையில் வழங்குகிறார். இதைப் போன்ற நெருக்கடியான கட்டத்தில் தோழமையான உறவு, அனைவருக்கும் உதவியாக இருக்கிறது.
இலட்சுமி, (மகாராஷ்டிராவில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள) லோனாரி சாதியைச் சேர்ந்தவர். பல தலைமுறைகளாக உப்பு மற்றும் கரியை உற்பத்திசெய்யும் சமூகம், இது. மாண்டேசின் சில பகுதிகளில் உவர் மண்ணிலிருந்து உப்பு எடுக்கப்பட்டது. வலாய் கிராமத்திலும் அதைச் சுற்றிலும் இந்த சாதியைச் சேர்ந்த குடும்பங்கள் மாடு வளர்ப்பில் ஈடுபடுகின்றன; ஆனால், பாலை விற்பனைசெய்வதில்லை. "கன்றுக்குட்டிக்கும் எங்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கும்தான் பால். பாலை நாங்கள் பணமாக்குவதில்லை. இதனால்தான் சினை மாடுகளையோ எருமைகளையோ பலர் விற்றுவிட்டு (அவற்றுக்கு அதிக பணம் கிடைக்கிறது); புதிதாக மாடு வாங்குகின்றனர்” என்று காரணத்தைக் கூறுகிறார், இலட்சுமி. ஆனால், தங்கள் குடும்பம் அப்படிச் செய்யவில்லை எனும் அவர், காஜல் அடுத்த 10 நாள்களில் கன்றை ஈனக்கூடும் என்கிற தகவலையும் கூறுகிறார்.
அவருடைய மாடுகளுக்கு வைத்துள்ள பெயர்களைப் பற்றி கேட்கையில், " உள்ளூர் கில்லர் இன மாடுகள், காளைகள், எருமைகளுக்கு மட்டும்தான் நாங்கள் பெயர்வைப்போம். ஜெர்சி மாடுகளுக்கு எப்போதும் பெயர்சூட்டுவதில்லை. என் மகன் தன் எல்லா ஆடுகளுக்குமே பெயர் சூட்டியிருக்கிறான். அந்தப் பெயர்களைக் குறிப்பிடும்போது அவன் சொல்வதற்கு ஏற்ப அவை நடந்துகொள்கின்றன."” என்று பதிலளித்தார், இலட்சுமி.
இலட்சுமியின் குடும்பத்துக்கு வலாயில் 10 ஏக்கர் வறண்ட நிலம் இருக்கிறது. அதில், அவர்கள் முதன்மையாக சோளம், கம்பு, மக்காச்சோளம், வெங்காயம் ஆகியவற்றைப் பயிர்செய்கிறார்கள். அவர்கள் குழாய்க் கிணறு வைத்திருக்கிறார்கள்; ஆனால், அது 2018 கோடையில் வறண்டுபோய்விட்டது. இரண்டு ஆண்டுகளாக நீடித்த வறட்சி என்பது, அவர்களுக்கு சோள விளைச்சலே இல்லை; குறைந்த அளவே கம்பு மகசூல், 2018-ல் தரமான வெங்காயமே இல்லை என்று பொருள். “எங்களுக்கு 2- 3 ஏக்கருக்குமேல் இருந்திருக்கவில்லை. இருந்த ஆடுகளை விற்று இந்த நிலத்தை வாங்கியது என் மாமியார் தான்… 7 ஏக்கர் நிலத்தை அவர் இப்படித்தான் வாங்கினார்.” என்று கூறும் இலட்சுமி, தன் கூடாரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர்த்தொட்டியிலிருந்து 15 லிட்டர் பானையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டே பேசுகிறார். அவர் இப்படி ஒரு நாளில் 3 - 4 முறை நடக்கிறார். " மாடுகளுக்கு நம் வீட்டு வாசலில் தண்ணீர் கிடைக்கும். அதேவசதியை நாம் எப்படி பெறுவது?" எனச் சொல்லியபடி சிரிக்கிறார். (‘ ஆடு-மாடுகள், பறவைகள் இரண்டுக்கும் நிறைய தண்ணீர் தேவை’ பார்க்கவும்)
மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜனவரி கடைசியில், இலட்சுமியின் இணையர் பரமேஷ்வர் மதியம் 2:30 மணியளவில் முகாமுக்கு வருகிறார். கொஞ்சம் புதிய வெந்தயம், கத்திரிக்காய், மிளகாய் மற்றும் சில காய்கறிகள், தேயிலைத் தூள், சர்க்கரை, பஃப் செய்யப்பட்ட கோதுமை சிவ்டா, வறுத்த வெங்காய பாஜியா ஆகியவை மஸ்வாட் சந்தையில் விற்கப்படுகின்றன. சில சிற்றுண்டிகள் அவர்களின் பேரனுக்கானவை. இலட்சுமி தனக்காக சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதமுள்ள அனைத்தையும் கட்டி, வலாயிலுள்ள அவர்களின் வீட்டிற்கு பரமேஷ்வர் எடுத்துச்செல்ல வசதியாக பைக்குள் மீண்டும் வைக்கிறார்.
கேரட்டின் தலைப்பகுதிகளை கவனமாக ஒரு செய்தித்தாளில் சிப்பமிடுகிறார். மீதமுள்ள பாதி நறுக்கிய கேரட்டைத் தனக்காக வைத்துக்கொண்டு, வீட்டிற்கு எடுத்துச்செல்ல பரமேஷ்வரிடம் கொடுத்துவிடுகிறார். வீட்டின் அருகில் தம் மருமகள் கேரட் நடவேண்டுமென அவருக்கு விருப்பம். “ இவை சமையலறைக் கழிவுநீரில்கூட வளரும். இராதாவும் சிம்னாவும் தின்பதற்கு கொஞ்சம் பச்சை கிடைக்கும்.” என்று ஆவலையும் கூறுகிறார், இலட்சுமி. "இந்த நேரத்தில் மழைபெய்தால், எங்கள் பயிர்கள்கூட வளரும்; எங்களுக்கு சாப்பிட ஏதாவது கிடைக்கும்."
......... " தீவன முகாமோடு பழகிவிட்டது. எல்லா மாடுகளோடும் சூழ வீட்டில் இருப்பதைப் போலவே தோன்றுகிறது. சிறு பிள்ளைகள் சுற்றியிருப்பதைப் போலவே நான் உணர்கிறேன். நேரம் ஓடிவிடுகிறது..." என்கிறார் இலட்சுமி.
தமிழில்: தமிழ்கனல்