ஞாயிறு காலை 10.30 மணி.
ஹனி வேலைக்கு
தயாராகிக் கொண்டிருந்தார்.
கண்ணாடிக்கு முன்
நின்று உதட்டுச்
சாயம் பூசிக்
கொண்டார். “இது
என் ஆடைக்கு
பொருத்தமாக இருக்கும்,”
எனச் சொல்லிவிட்டு
7 வயது குழந்தைக்கு
உணவு கொடுக்கச்
சென்றார். கண்ணாடி
இருந்த மேஜையில்
சில முகக்கவசங்களும்
ஹெட்செட்டும் தொங்கின.
ஒப்பனை பொருட்கள்
மேஜை மீது
கிடந்தன. மறுபக்க
சுவரில் மாட்டப்பட்டிருந்த
கடவுள் மற்றும்
உறவினர் படங்களை
கண்ணாடி பிரதிபலித்துக்
கொண்டிருந்தது.
புது தில்லியின்
மங்கோல்புரி பகுதியில்
தங்கியிருக்கும் ஓரறை
வீட்டிலிருந்து 7-8 கிலோமீட்டர் தொலைவில்
இருக்கும் விடுதியில்
ஒரு வாடிக்கையாளரை
பார்க்க ஹனி
(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)
கிளம்பிக் கொண்டிருந்தார்.
32 வயதான அவர்
ஒரு பாலியல்
தொழிலாளி. தலைநகரில்
இருக்கும் நங்க்லோய்
ஜாட் பகுதியில்
வேலை பார்த்தார்.
பூர்விகம் ஹரியானாவின்
கிராமப்புறம். “பத்து
வருடங்களுக்கு முன்னால்
வந்தேன். இப்போது
இங்குதான் இருக்கிறேன்.
தில்லிக்கு வந்ததிலிருந்து
என் வாழ்க்கை
துயரங்களால் நிரம்பிக்
கொண்டிருக்கிறது.”
என்ன மாதிரியான
துயரங்கள்?
”நான்கு
கருச்சிதைவுகள் என்பது
மிகப் பெரிய
விஷயம்! எனக்கென
உணவு கொடுக்கவோ
பார்த்துக் கொள்ளவோ
மருத்துவமனைக்கு கூட்டிச்
செல்லவோ கூட
யாருமில்லாத போது
அது நிச்சயமாக
மிகப் பெரிய
விஷயம்,” என்கிறார்
ஹனி புன்னகையுடன்.
சுயமாகவே வெகுதூரம்
அவர் கடந்து
வந்த பயணத்தை
புன்னகை அர்த்தப்படுத்தியது.
“இந்த
வேலையை நான்
செய்வதற்கு அதுதான்
முக்கிய காரணம்.
நான் சாப்பிடவும்
வயிற்றிலிருந்த என்
குழந்தைக்கு உணவு
கொடுக்கவும் பணம்
இருக்கவில்லை. ஐந்தாவது
முறையாக கருத்தரித்திருந்தேன்.
இரு மாத
கர்ப்பத்திலேயே கணவர்
என்னை விட்டுச்
சென்றுவிட்டார். உடல்நலக்குறைவால்
ஏற்பட்ட தொடர்
சிக்கல்களால் என்னுடைய
முதலாளியும் என்னை
வேலை விட்டு
அனுப்பிவிட்டார். ப்ளாஸ்டிக்
குடுவைகள் செய்யும்
வேலை. மாதத்துக்கு
10000 ரூபாய் ஊதியம்
கிடைத்துக் கொண்டிருந்த
வேலை,” என்கிறார்
அவர்.
பெற்றோர் ஹனியை
15 வயதிலேயே ஹரியானாவில்
மணம் முடித்து
கொடுத்தனர். அவரும்
கணவரும் கொஞ்ச
காலத்துக்கு அங்கேயே
இருந்தனர். கணவர்
டிரைவராக வேலை
பார்த்தார். 22 வயதான
போது அவர்கள்
தில்லிக்கு இடம்பெயர்ந்தனர்.
அங்கு வந்த
பிறகு, கணவர்
அடிக்கடி காணாமல்
போனார். “பல
மாதங்களுக்கு அவர்
சென்று விடுவார்?
எங்கே என
தெரியாது. இப்போதும்
அவர் அதை
செய்கிறார். ஆனால்
எதையும் சொல்வதில்லை.
பிற பெண்களுடன்
சென்று விடுவார்.
பணம் தீர்ந்தபிறகு
திரும்ப வருவார்.
உணவு விநியோகிக்கும்
வேலை செய்கிறார்.
பெரும்பாலான பணத்தை
அவருக்கே செலவு
செய்து கொள்வார்.
எனக்கு நான்கு
முறை கருச்சிதைவு
ஏற்பட அதுவே
முக்கியக் காரணம்.
எனக்கான மருந்துகளை
வாங்கி வர
மாட்டார். சத்தான
உணவும் கொடுக்க
மாட்டார். மிகவும்
பலவீனமாக இருந்தேன்,”
என்கிறார் அவர்.
மங்கோல்புரியில் மகளுடன் வாழ்கிறார் ஹனி. மாதவாடகையாக 3500 ரூபாய் கொடுக்கிறார். கணவர் அவர்களுடனே வசிக்கிறார். ஆனால் அவ்வப்போது காணாமல் போய் விடுகிறார். “என் வேலை போன பிறகு வாழ்ந்துவிட முயன்றேன். முடியவில்லை. அப்போதுதான் கீதாக்கா பாலியல் தொழிலை அறிமுகம் செய்தார். முதல் வாடிக்கையாளரையும் கொண்டு வந்தார். இந்த வேலையை செய்யத் தொடங்கிய போது எனக்கு 25 வயது. ஐந்து மாதம் கர்ப்பமாகவும் இருந்தேன்,” என்கிறார் அவர். பேசிக்கொண்டே மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். ஹனியின் குழந்தை தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். மாதக்கட்டணம் 600 ரூபாய். ஊரடங்கு காலத்தில், ஹனியின் செல்ஃபோனை பயன்படுத்தி அவர் இணைய வழியில் பாடம் படிக்கிறார். வாடிக்கையாளர்கள் அழைக்க பயன்படும் அதே செல்ஃபோன்.
“பாலியல் தொழில்தான் எனக்கு தேவைப்படும் வாடகைப்பணத்தையும் உணவு மற்றும் மருந்துகளுக்கான பணத்தையும் கொடுக்கிறது. ஆரம்பத்தில் ஒரு மாதத்துக்கு 50000 ரூபாய் வரை வருமானம் ஈட்டினேன். அப்போது நான் இளமையாகவும் அழகாகவும் இருந்தேன். இப்போது எடை கூடிவிட்டேன்,” என்கிறார் சிரித்தபடி ஹனி. “குழந்தை பெற்ற பிறகு இந்த வேலையை விட்டு விடலாமென நினைத்தேன். வீட்டுவேலைக்கோ பெருக்கும் வேலைக்கோ கூட சென்றுவிட நினைத்தேன். ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது.
“என்னுடைய கர்ப்ப காலத்தில் நான் அதிக வருமானம் ஈட்ட விரும்பினேன். ஏனெனில் இன்னொரு கருச்சிதைவு நேர்ந்துவிடக் கூடாது என விரும்பினேன். பிறக்கவிருந்த குழந்தைக்கு நல்ல மருந்துகளும் சத்துணவும் கொடுக்க விரும்பினேன். அதனால்தான் ஒன்பதாவது மாதத்தில் கூட நான் பாலியல் தொழில் செய்தேன். ரொம்ப வலி கொடுத்தது. ஆனால் எனக்கு வேறு வழி இருக்கவில்லை. அதனால் பிரசவத்தின்போது சிக்கல்கள் நேருமென்பதை நான் அறிந்திருக்கவில்லை,” என்றார் ஹனி.
”கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்கள் பாலியல் உறவுகளை கொண்டிருப்பது கர்ப்பத்தை பாதிக்கும்,” என்கிறார் லக்னவ்வை சேர்ந்த மருத்துவர் நீலம் சிங். “சவ்வு கிழிந்து பாலுறவு நோய் தொற்றில் பாதிக்கப்படலாம். குறைபிரசவம் ஏற்படலாம். குழந்தைக்கும் பாலுறவு தொற்றுநோய் வரலாம். அதே போல் கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில் உடலுறவு கொண்டால் கருச்சிதைவு ஏற்படலாம். பாலுறவு தொழிலில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லை. ஒருவேளை கர்ப்பம் ஆனாலும் தொடர்ந்து வேலைக்கு செல்கிறார்கள். விளைவாக கருச்சிதைவு ஏற்பட்டு அவர்களின் இனவிருத்தி திறனுக்கே பாதிப்பு ஏற்படலாம்.”
”தாங்க முடியாத அரிப்பு மற்றும் வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றபோது என் தொடைகளிலும் அடிவயிற்றிலும் ஒவ்வாமை இருப்பது கண்டறியப்பட்டது. பெண்ணுறுப்பில் வீக்கம் இருந்தது. ஏற்பட்ட வலியாலும் அடுத்து வரவிருக்கும் செலவு பற்றிய கவலையாலும் என்னை நானே கொன்றுவிட விரும்பினேன்.” எனக்கு பாலியல் நோய் வந்திருப்பதாக மருத்துவர் கூறினார். “ஆனால் ஒரு வாடிக்கையாளர் எனக்கு ஆதரவாக இருந்தார். பொருளாதார உதவியும் செய்தார். நான் செய்யும் வேலையை பற்றி மருத்துவரிடம் சொல்லவில்லை. அது ஒரு பிரச்சினையாக மாறும் வாய்ப்பு இருந்தது. என் கணவரை சந்திக்க வேண்டுமென அவர் சொல்லியிருந்தால், வாடிக்கையாளர் எவரையாவது அழைத்து சென்றிருப்பேன்.
”அந்த மனிதருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய சிகிச்சைக்கான பாதி செலவை அவர்தான் செய்தார். அப்போதுதான் இந்த வேலையை தொடருவது என நான் முடிவெடுத்தேன்,” என்கிறார் ஹனி.
”ஆணுறையின் முக்கியத்துவத்தை பல நிறுவனங்கள் அவர்களுக்கு சொல்கின்றன,” என்கிறார் தேசிய பாலியல் தொழிலாளர்களுக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிரன் தேஷ்முக். “ஆனாலும் பெண் பாலியல் தொழிலாளிகளிடம் கருச்சிதைவை விட கருக்கலைப்புகள் சகஜமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு சென்றாலும் அவர்களின் தொழில் தெரிந்ததும் மருத்துவர்களும் புறக்கணித்து விடுகிறார்கள்.”
மருத்துவர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?
”அவர்கள் பெண் நோய் மருத்துவர்கள்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் தேஷ்முக். “முகவரியை கேட்டு எந்த பகுதியிலிருந்து அப்பெண்கள் வருகிறார்கள் என தெரிந்து கொண்டதும் அவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். பிறகு (கருக்கலைப்புக்கான) தேதிகள் கொடுக்கின்றனர். அந்த தேதிகளில் வராமல் ஒத்திப் போடுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது என சொல்லி விடுகிறார்கள். ’நான்கு மாதம் கடந்துவிட்டதால் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம்’ என சொல்லி விடுகிறார்கள்.”
சில பெண்கள் அரசு மருத்துவனைகளின் உதவியையே நாடுவதில்லை. ஐநா சபையின்
அறிக்கை
யின்படி கிட்டத்தட்ட “பாலுறவு தொழிலாளிகளில் 50% பேர் (ஒன்பது மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி) அரசு சுகாதார நிலையங்களின் சேவைகளை பெறுவதில்லை”. அவப்பெயர், பொதுப்புத்தி மற்றும் பிரசவ காலம் முதலியவை முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
“குழந்தைப் பெறும் திறனுடன் நேரடித் தொடர்பு கொண்டது இத்தொழில்,” என்கிறார் அஜீத் சிங். பாலியல் தொழிலுக்கென கடத்தப்படுவதை எதிர்த்து வாரணாசியில் 25 வருடங்களாக போராடும் குடியா சன்ஸ்தா இயக்கத்தின் நிறுவனராகவும் இயக்குநராகவும் இருப்பவர். பெண்களுக்கு உதவும் பல நிறுவனங்களோடும் இயங்கும் சிங், “75-80 சதவிகித பாலியல் தொழிலாளிகள் இனவிருத்தி திறன் தொடர்பான ஏதோவொரு பிரச்சினையை கொண்டிருக்கிறார்கள்,” என்கிறார்.
“எல்லாவித வாடிக்கையாளர்களும் எங்களுக்கு இருக்கின்றனர்,” என்கிறார் நங்லோய் ஜாட்டில் இருக்கும் ஹனி. “எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் தொடங்கி காவலர்கள் வரை, மாணவர்கள் தொடங்கி ரிக்ஷா இழுப்பவர்கள் வரை, அனைவரும் எங்களிடம் வருகின்றனர். இளமைக்காலத்தில் அதிகப் பணம் கொடுப்பவரிடம் மட்டும்தான் நாங்கள் சென்றோம். வயது அதிகரித்தபிறகு நாங்கள் தேர்ந்தெடுப்பதை நிறுத்திக் கொண்டோம். இந்த மருத்துவர்கள் மற்றும் காவலர்களுடன் நாங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்துகொள்ள வேண்டும். அவர்களின் உதவி எப்போது தேவைப்படும் என உங்களுக்கு தெரியாது.”
தற்போது அவருடைய மாத வருமானம் என்ன?
“ஊரடங்கு காலத்தை தவித்து பார்த்தால், மாதத்துக்கு 25000 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். இது தோராயமான கணக்குதான். வாடிக்கையாளரை பொறுத்து வருமானம் மாறும். முழு இரவையும் அவர்களுடன் கழிக்கிறோமா அல்லது சில மணி நேரங்கள் மட்டும் கழிக்கிறோமா என்பதையும் பொறுத்து வருமானம் மாறும்,” என்கிறார் ஹனி. “வாடிக்கையாளர்கள் மீது சந்தேகம் இருந்தால் நாங்கள் விடுதிகளுக்கு செல்வதில்லை. எங்கள் இடத்துக்குதான் வரச் சொல்வோம். ஆனால் என் விஷயத்தில், அவர்களை நங்க்லோய் ஜாட்டில் இருக்கும் கீதாக்காவின் வீட்டுக்கு அழைத்து வருவேன். ஒவ்வொரு மாதமும் சில இரவுகளும் சில பகல்களும் இங்கு தங்கி விடுகிறேன். வாடிக்கையாளர் கொடுப்பதில் பாதியை அவர் எடுத்துக் கொள்வார். அதுதான் அவருக்கான கமிஷன்.” எவ்வளவு என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் ஒரு முழு இரவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 1000 ரூபாய் வாங்குவதாக அவர் சொல்கிறார்.
40 வயதுகளில் இருக்கும் கீதாதான் அப்பகுதியின் பாலியல் தொழிலாளிகளை கவனித்துக் கொள்கிறார். அவரும் இத்தொழிலில் இருக்கிறார். ஆனால் பிரதானமாக அவரின் இடத்தை பிற பெண்களுக்கு வழங்கி அதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை பெறுவதில் வாழ்க்கையை ஓட்டிக் கொள்கிறார். “தேவை இருக்கும் பெண்களை இந்த வேலைக்கு அழைத்து வருகிறேன். அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை எனில், என் இடத்தை கொடுக்கிறேன். அவர்களின் வருமானத்திலிருந்து 50 சதவிகிதம் எடுத்துக் கொள்கிறேன்,” என்கிறார் கீதா.
“என் வாழ்க்கையில் நிறைய பார்த்துவிட்டேன்,” என்கிறார் ஹனி. “ஒரு ப்ளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்தது தொடங்கி, கணவர் விட்டு சென்றதால் வேலை பறிபோனதும் இப்போது இந்த பெண்ணுறுப்பு தொற்று நோய் வந்து, மருந்துகள் எடுத்து அதோடே வாழ வேண்டியது வரை பல விஷயங்களை சந்தித்துவிட்டேன். வாழ்க்கை முழுக்க இது இப்படிதான் இருக்கப் போகிறதென நினைக்கிறேன்.” இப்போது அவரின் கணவரும் ஹனி மற்றும் மகளுடன் வாழ்கிறார்.
அவருக்கு இந்த தொழிலை பற்றி தெரியுமா?
“நன்றாகவே தெரியும்,” என்கிறார் ஹனி. “அவருக்கு எல்லாமே தெரியும். பொருளாதார தேவைக்காக இப்போது அவர் என்னை சார்ந்திருக்கிறார். சொல்லப்போனால், இன்று என்னை அவர்தான் விடுதிக்கு கொண்டு போய் விடப் போகிறார். ஆனால் என் பெற்றோருக்கு (அவர்கள் ஒரு விவசாயக் குடும்பம்) இதை பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தெரிந்து கொள்வதையும் நான் விரும்பவில்லை. அவர்கள் மிகவும் வயதானவர்கள். ஹரியானாவில் இருக்கிறார்கள்.”
”1956ம் ஆண்டின் பரத்தமை தடுப்புச் சட்டத்தின்படி (Immoral
Traffic (Prevention) Act, 1956), 18 வயதுக்கு மேல் இருக்கும் எவரும் ஒரு பாலியல் தொழிலாளியின் வருமானத்தை சார்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம்,” என்கிறார் புனேவை சேர்ந்த சட்ட உதவியாளரான ஆர்த்தி பாய். “வளர்ந்த குழந்தைகளும் இணையர்/கணவர், பெற்றோர் என எவரும் பாலியல் தொழில் செய்பவரின் வருவாயை சார்ந்திருக்க முடியாது. அப்படியொருவர் இருக்கும் பட்சத்தில் ஏழு வருடம் வரை சிறைத்தண்டனை அவருக்கு கிடைக்கலாம்.” ஆனால் ஹனி கணவரை எதிர்க்க விரும்பவில்லை.
”ஊரடங்கு முடிந்து இப்போதுதான் முதல் வாடிக்கையாளரை சந்திக்கப் போகிறேன். மிக குறைவான பேர்தான் இந்த காலத்தில் வந்தனர்,” என்கிறார் அவர். “இந்த தொற்றுக்காலத்தில் வருபவர்களை நம்ப முடியாது. முன்பெல்லாம் ஹெச்ஐவி மற்றும் பாலியல் நோய்கள் வருவதிலிருந்து நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியிருந்தது. இப்போது கொரோனாவும் சேர்ந்துவிட்டது. மொத்த ஊரடங்கும் ஒரு பெரும் சாபமாக கழிந்தது. வருமானமே இல்லை. எல்லா சேமிப்பும் கரைந்துவிட்டது. எனக்கான மருந்துகள் கூட (தோல் நோய்க்கான க்ரீம்கள்) இரண்டு மாதங்களாக வாங்கவில்லை. உணவுக்கு கூட பணமின்றி சிரமப்பட்டுவிட்டோம்,” என்கிறார் ஹனி. கணவரை அழைத்து விடுதிக்கு தன்னை பைக்கில் கொண்டு சென்று விடுமாறு சொல்கிறார்.
முகப்பு ஓவியத்தை அந்தர ராமன் வரைந்திருக்கிறார். பெங்களூருவின் சிருஷ்டி கலை, வடிவம் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஒளித்தொடர்பு படித்து சமீபத்தில் பட்டதாரி ஆனவர். கருத்துப்படங்களும் எல்லா வடிவங்களில் கதை சொல்வதும் அவரின் ஓவியம் மற்றும் வடிவப் பயிற்சியில் செல்வாக்கு செலுத்தும் விஷயங்கள்.
PARI-யும்
CounterMedia Trust-ம் இணைந்து கிராமப்புற இந்திய இளம்பெண்களை பற்றிய செய்திகளை சேகரிக்கும் இந்த திட்டம் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு சாமானியர்களின் வாழ்க்கைகளின் வழியாக விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைச் சூழல்களை ஆவணப்படுத்துகிறது.
இந்த கட்டுரையை மீண்டும் பதிப்பிக்க வேண்டுமா?
[email protected]
மற்றும்
[email protected]
மின்னஞ்சல்களுக்கு எழுதுங்கள்.
தமிழில்: ராஜசங்கீதன்