புருசோத்தம் இராணா இந்த ஆண்டு பருத்தியை அறுவடைசெய்ய முயன்றார்; ஆனால் மழை குறைவாகவே பெய்ததால் பயிர் கருகிப்போனது. முரிபகல் வட்டத்தில் உள்ள அவரின் டுமெர்பரா கிராமத்தில் அரசாங்கம் நிலையான பாசன வசதியையும் ஆழ்துளைக் கிணறையும் அமைத்துத்தர வேண்டும் என்றார் அவர். இப்போதும் வறட்சி நீடிக்கின்ற பொலாங்கிர்(மக்கள்தொகை கணக்கெடுப்பில் பலாங்கிர்) மாவட்டத்தில் உள்ளது, இந்த ஊர்.
”என் (கூட்டுக்)குடும்பப் பிரிவினையில் என் குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைத்தது; அது, இன்னும் என் தாத்தா பெயரிலேயே இருக்கிறது. எனக்கு ஆறு மகன்கள்; ஆனால், ஒருவரும் விவசாயம் செய்வதில்லை. மும்பை(மகாராஷ்டிரம்), குஜராத் போன்ற இடங்களில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலைசெய்கிறார்கள்.” என்றார், டெல்லி பேரணியில் கலந்துகொண்ட 65 வயது இராணா.
அதே ஊரைச் சேர்ந்த ஜுகா இராணா(57)வும் பேரணியில் பங்கேற்றார். பாசனநீர் போதாமல் அவருடைய 1.5 ஏக்கர் வயல் நெற்பயிர்கள் முழுவதும் காய்ந்துபோயின. பயிர்க்காப்பீடாக ஜுகாவுக்கு ரூ.6ஆயிரம் மட்டும் கிடைத்தது. இது குறைந்தபட்சம்கூட போதுமானது அல்ல என முறையிடுகிறார் அவர்.
இந்தப் பேரணியில் கடலோர ஒதிசா பகுதி மக்களையும் சந்தித்தேன். பூரி மாவட்டம், தெலங்கா வட்டம், சிங்கபெரகம்பூர் புர்பாபாத் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு பெகரா(மேலே உள்ள முகப்புப் படத்தில் மையத்தில் இருப்பவர்) என்னிடம், ” எங்களுக்கென எந்த நிலமும் இல்லை; மற்றவர் நிலங்களில் வேலைசெய்தே வாழ்க்கையை ஓட்டுகிறோம்.” என்றார். ஊரில் வேலை கிடைக்கும்போது நாள் ஒன்றுக்கு அவர் ரூ.200 சம்பாதிப்பார். 45 வயதாகும் அவர் தன் ஊர்க்காரர்களுடன் டெல்லிக்கு பேரணிக்காக வந்திருந்தார். அவர்கள் அனைவருமே நிலமற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உழவுத் தொழிலாளர்கள் ஆவர்.
”ஊரிலுள்ள சில சக்திபடைத்தவர்கள் (முன்னைய இந்திரா வீட்டுவசதித் திட்டம், இப்போதைய பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டம் மூலம்)இரண்டுமூன்று வீடுகள் கட்டிக்கொண்டார்கள். ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு ஒற்றை வீடுகூட இன்னும் கிடைக்கவில்லை.” என்று ஆதங்கப்பட்டார், ஒதிசாவிலிருந்து பேரணிக்கு வந்திருந்த செயற்பாட்டாளர்களில் ஒருவரான சசி தாஸ்.
பொலாங்கிர் மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான காந்தபஞ்சியிலிருந்து வந்திருந்தார், மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான பிசுனு சர்மா( கருப்பு ஸ்வெட்டர் அணிந்திருப்பவர், கீழே 2ஆவது படத்தில் இருப்பவர்). அவரிடம் பேசுகையில், “ இந்திய உழவர்களின் தேவைகளையும் பிரச்னைகளையும் புரிந்துகொள்வதற்காக இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருக்கிறேன். (உழவர்கள் பற்றிய) சுவாமிநாதன் குழு அறிக்கை குறிப்பிட்ட விவகாரங்களின் உண்மைத்தன்மைதான் என்ன என்பதையும் அறிய விரும்பினேன். இந்த விவகாரம் குறித்து நான் ஏராளமாக தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வறட்சியால் பயிர்கள் காய்ந்து பறிபோன பொலாங்கிரிலிருந்து நான் வந்திருக்கிறேன். இங்கு வந்து பார்த்தால் உழவர்கள் இன்னும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்வதை உணரமுடிந்தது.” என்றார் பிசுனு.
டெல்லி பேரணியால் தீர்வுகள் ஏற்படும் என நம்பிக்கையோடு சொன்னார். “ எங்கள் பகுதியிலிருந்து நிறைய பேர் புலம்பெயர்ந்துவருகின்றனர். இங்கு உழவர்களுடன் பேசியதில், இவை முழுக்க விவசாயம்சார்ந்த பிரச்னைகள் என்பது புரிந்தது. வேளாண்மைப் பிரச்னைகள் உரியபடி கண்டுகொள்ளப்படாவிட்டால் புலப்பெயர்வும் அத்துடன் இணைந்த மற்ற பிரச்னைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.” என அழுத்தமாகக் கூறினார், பிசுனு.
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்