"எல்லோரும் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நாங்களும் அதையே செய்கிறோம்", என்று ஒருவித நிச்சயமற்ற தன்மையுடன் கூறுகிறார் ரூபா பிரிகாகா.

'இது' ஒரு மரபணு மாற்றப்பட்ட (GM)  பிடி பருத்தி விதைகள், இப்போது அதை உள்ளூர் சந்தையிலோ அல்லது ஒருவரின் சொந்த கிராமத்திலேயே கூட எளிதாக வாங்க முடிகிறது. தென்மேற்கு ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மற்றும் இவரது கிராமத்திலும் உள்ள அவரைப் போன்ற எண்ணற்ற பிற விவசாயிகளே அந்த 'எல்லோரும்' என்பவர்கள்.

"அவர்களுக்கு கை மேல் பணம் கிடைக்கிறது", என்று அவர் கூறுகிறார்.

பிரிகாகா 40 களில் இருக்கும் ஒரு கோண்டு ஆதிவாசி விவசாயி. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும், இவர் மலைச் சரிவை - 'டோங்கர் சாஸிற்கு' - 'மலை வேளாண்மை' - (இடம்பெயரும் விவசாய முறை) தயார் செய்கிறார். பல நூற்றாண்டுகளாக பிராந்திய விவசாயிகளால் பட்டை தீட்டப்பட்ட மரபுகளைப் பின்பற்றி, கடந்த ஆண்டு குடும்ப அறுவடையில் இருந்து சேமித்த விதைகளை பிரிகாகா விதைப்பார். இவை   பல வகை உணவு பயிர்களை கொடுக்கும்: தினை மற்றும் கேழ்வரகு போன்ற சிறு தானியங்களையும், துவரை மற்றும் கருப்பு உளுந்து போன்ற பருப்பு வகைகளையும், அத்துடன் பாரம்பரிய வகை காராமணி, கருஞ்சீரகம் மற்றும் எள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

இந்த ஜூலை மாதம் முதன்முறையாக, பிரிகாகா பிடி பருத்திக்கு மாறினார். அந்த சமயம் தான் நாங்கள் அவரைச் சந்தித்தோம். அப்போது அவர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ரசாயனம் கலந்த விதைகளை பிஷமகட்டக் வட்டத்திலுள்ள அவரது கிராமத்தில் மலைச் சரிவில் உள்ள தனது வயலில் விதைத்துக் கொண்டிருந்தார். ஆதிவாசிகளின் இடம்பெயர் விவசாய முறையில் இந்தப் பருத்தியின் ஊடுருவல் வியக்கத்தக்கதாய் இருந்தது. எனவே அவரிடமே அதைப் பற்றி கேட்டோம்.

"மஞ்சள் போன்ற பிற பயிர் வகைகளும் நல்ல பணத்தை ஈட்டித் தருகின்றன", என்று பிரகாகா ஒப்புக்கொள்கிறார். "ஆனால் அதை யாரும் செய்யவில்லை. எல்லோரும் தினையை (சிறுதானியம்) விட்டுவிட்டு பருத்தியையே பின் தொடர்கிறார்கள்", என்று கூறினார்.

ராயகடா மாவட்டத்தில் பருத்தியின் கீழ் உள்ள பகுதி வெறும் 16 ஆண்டுகளில் 5,200 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 2002 - 03 ஆம் ஆண்டில் பருத்தியின் கீழ் வெறும் 1631 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டில் 86,907 ஏக்கராக  இருக்கிறது என்று மாவட்ட விவசாய அலுவலகம் தெரிவிக்கிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ராயகடா, கோராபுட் பிராந்தியத்தின் ஒரு பகுதி. இது உலகின் சிறந்த உயிரினப் பன்மை வள மையங்களில் ஒன்று.தவிர இது பல்வேறு வகையான நெற்பயிர்களை கொண்ட வரலாற்றுப் பகுதி. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 1959ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இப்பகுதியில் 1,700 க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்தன. அது இப்போது வெறும் 200 ஆக குறைந்துள்ளது. சில ஆராய்ச்சியாளர்கள் இதையே நெல் சாகுபடியின் பிறப்பிடமாக கருதுகிறார்கள்.

Adivasi farmers are taking to GM cotton, as seen on this farm in the Niyamgiri mountains.
PHOTO • Chitrangada Choudhury
But many are reluctant to entirely abandon their indigenous food crops, such as pigeon pea. They sow this interspersed with cotton, thus feeding agri-chemicals meant for the cotton plants to their entire farm.
PHOTO • Chitrangada Choudhury

நியாம்கிரி மலைகளில் உள்ள ஆதிவாசி விவசாயிகள் (இடது) GM பருத்தி வகையினை கையில் எடுத்துள்ளனர் (அதன் இளஞ்சிவப்பு விதைகள் வலதுபக்கம் உள்ள பெட்டியில் உள்ளது) இருப்பினும் துவரை (வெள்ளை கிண்ணத்தில் விதைகள் இருக்கின்றன) போன்ற பாரம்பரிய  உணவு பயிர் வகைகளை பலர் கைவிட தயங்குகின்றனர். இவை பருத்தியுடன் விதைக்கப்படுகிறது, மேலும்  பருத்தி செடிகளுக்கான வேளாண் இரசாயனங்கள் மொத்த நிலத்திலும் ஊடுருவி இருக்கிறது.

இங்குள்ள கோண்டு ஆதிவாசிகள், பெரும்பாலும் தற்சார்பு விவசாயிகளாகவே இருக்கின்றனர்.  இவர்கள் வேளாண் - வனவியல் தொடர்பான நவீன நடைமுறைகளுக்கு பெயர் பெற்றவர்கள். இன்றும் கூட இந்தப் பகுதியில் உள்ள மரகத பச்சையான படிமுறை வயல்களிலும், மலைப்பகுதியில் உள்ள பண்ணைகளிலும் உள்ள பல கோண்டு குடும்பங்கள் நெல் மற்றும் சிறுதானிய வகைகள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கின்றனர். ராயகடாவிலுள்ள லாப நோக்கற்ற  அமைப்பான வாழும் பண்ணைகள் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் 36 சிறு தானியங்களையும், 250 வன உணவுகளையும் ஆவணப்படுத்தி உள்ளது.

இங்குள்ள பெரும்பாலான ஆதிவாசி விவசாயிகள் ஒன்று முதல் ஐந்து ஏக்கர் வரையிலான தனி நபர் அல்லது பொது சொத்து பண்ணைகளில் வேலை செய்கின்றனர்.

அவர்களின் விதைகள் பெரும்பாலும் வளர்க்கப்பட்டு சமூகத்திற்குள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட செயற்கை உரங்கள் அல்லது வேளாண் ரசாயனங்களை அவர்கள் பயன்படுத்துவதே இல்லை.

இருப்பினும் ராயகடாவில் நெல்லுக்கு அடுத்தபடியாக இப்பகுதியின் முதன்மை பாரம்பரிய உணவுப் பயிர்களான சிறுதானியங்களை முந்தி, இரண்டாவது அதிகம் பயிரிடப்பட்ட பயிராக பருத்தி மாறியுள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள 4,28,947 ஏக்கர் நிலத்தில் ஐந்தில் ஒரு பங்கில் பருத்தி விளைவிக்கப்படுகிறது. பருத்தியின் விரைவான இந்த விரிவாக்கம் இந்த நிலம் மற்றும் விவசாய - சுற்றுச்சூழல் அறிவில் மூழ்கி இருக்கும் இந்த மக்களை மாற்றியமைக்கிறது.

பருத்தி, இந்தியாவின் மொத்த பயிர் பரப்பளவில் சுமார் 5 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் பூசணக் கொல்லிகளின் மொத்த அளவில் 36 முதல் 50 சதவீதம் வரை இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியா முழுவதும் விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் கடன் தொல்லைகள் ஆகியவற்றுடன் மிகப்பெரிய தொடர்பு கொண்ட ஒரு பயிர்.

இங்கு இருக்கும் நிலவரம் 1998 மற்றும் 2002 ஆம் ஆண்டிற்கு இடையே உள்ள விதர்பாவை நினைவுபடுத்துகிறது - இந்த புதிய அதிசயமான விதையின் மீதான ஆரம்பகட்ட உற்சாகம் (பின்னர் சட்டவிரோதமாக கருதப்பட்டது) மற்றும் பெரும் லாபங்களைப் பற்றிய கனவுகள், அதைத் தொடர்ந்து நீரின் மீதான அதன் குழப்பமான விளைவுகள், செலவுகள் மற்றும் கடன்களில் ஏற்பட்ட பெரும் அதிகரிப்பு மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அழுத்தங்கள் ஆகியன. பின்னர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நாட்டில் விவசாயிகள் தற்கொலைகளின் மையமாக விதர்பா விளங்கியது. அந்த விவசாயிகள் பெருமளவில் Bt பருத்தியை விளைவிப்பவர்களாக இருந்தார்கள்.

*****

நாங்கள் நிற்கும் இந்த கடை 24 வயதான கோண்டு இளைஞர் சந்திர குத்ருகா-விற்கு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சொந்தமானது. விடுதி மேலாண்மையில் பட்டம் பெற்று புவனேஸ்வரில் இருந்து திரும்பிய அவர், இந்த ஜூன் மாதம் நியாம்கிரி மலையில் உள்ள தனது கிராமமான ருககுடாவில் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இந்தக் கடையை துவங்கினார். உருளைக்கிழங்கு, வெங்காயம், பொரித்த தின்பண்டங்கள், இனிப்புகள் - ஆகியவற்றை விற்பனை செய்யும் மற்ற கிராமக் கடைகளை போலவே இது தோற்றமளித்தது.

ஆனால் மற்ற கடைகளை போலல்லாமல் -  அவரது கடையில் பரபரப்பாக விற்பனையாகும் பொருள் கல்லாப் பெட்டியின் கீழ் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பளபளப்பான சாக்குப் பையில் மகிழ்ச்சியான விவசாயிகளின் படங்கள் மற்றும் 2000 ரூபாய் நோட்டின் படங்கள் பொறித்த பல வண்ணப் பாக்கெட்டுகளில் பருத்தி விதைகள் இருக்கிறது.

குத்ருகாவின் கடையிலுள்ள விதை பாக்கெட்டுகளில் பெரும்பகுதி சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது.  சில பாக்கெட்டுகளில் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை. அவற்றுள் பல ஒடிசாவில் விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை. அவரது கடையும் விதைகள் மற்றும் வேளாண் ரசாயனங்கள் விற்க உரிமம் இல்லாததே.

கடையின் இருப்பில் உள்ள விற்கப்பட வேண்டிய விதைகளுடன் சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான கிளைபோசேட் அட்டை பெட்டியில் பச்சை மற்றும் சிவப்பு நிற பாட்டில்களில் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் வெளியான உலக சுகாதார அமைப்பின் அறிக்கை ஒன்று கிளைபோசேட் 'மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக இருக்கலாம்' என்று குறிப்பிட்டது (பின்னர் தொழில்துறை அழுத்தத்தின் காரணமாக WHO அதிலிருந்து முரண்பட்டது). இது பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திராவிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் பல புற்றுநோய் நோயாளிகளால் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

In Kaliponga village, farmer Ramdas sows BT and HT cotton, days after dousing their lands with glyphosate, a broad spectrum herbicide
PHOTO • Chitrangada Choudhury
In Kaliponga village, Ramdas' wife Ratnamani sows BT and HT cotton, days after dousing their lands with glyphosate, a broad spectrum herbicide
PHOTO • Chitrangada Choudhury

கலிபொங்கா கிராமத்தில் விவசாயிகளான ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ரத்னமணி ஆகியோர் தங்கள் நிலத்தில் BT மற்றும் HT பருத்தியை விதைத்த சில நாட்களுக்குப் பிறகு களைக்கொல்லியான கிளைபோசேட் -யை பயன்படுத்துகின்றனர்.

ராயகடாவில் உள்ள விவசாயிகளுக்கு இவை எதுவும் தெரியவில்லை. கிளைபோசேட் 'காசா மரா' என்று அழைக்கப்படுகிறது - அதன் பொருள் 'புல் அழிப்பான்' - அவர்களது வயல்களில் உள்ள களைகளை விரைவாக அழிக்கும் என்று கூறி விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் இது ஒரு அகல நிரல் களைக்கொல்லி ஆகும், இது மரபணு மாற்றப்பட்ட தாவரங்களைத் தவிர மற்ற அனைத்து தாவரங்களையும் கொல்லும். பருத்தி விதைகளை போகிற போக்கில் எங்களுக்கு காட்டிய குத்ருகா இது கிளைபோசேட் தெளிப்பதில் இருந்து தப்பிக்கும் என்று கூறினார். இத்தகைய 'களைக்கொல்லி சகிப்புத்தன்மை' கொண்ட அல்லது 'HT விதைகள்' இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களில் ஏற்கனவே 150 விதை பாக்கெட்டுகளை விவசாயிகளுக்கு விற்றுவிட்டேன், என்று கூறினார் குத்ருகா. "நான் மேலும் விதைகளை ஆர்டர் செய்து இருக்கிறேன். அவை நாளை இங்கு வந்து சேரும்", என்கிறார்.

தொழில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

"ராயகடாவில் விளைவிக்கப்படும் பருத்தியில் இன்று சுமார் 99.9% பிடி பருத்திதான். பிடி அல்லாத விதைகள் கிடைப்பதில்லை", என்று மாவட்டத்தில் பயிர் சாகுபடியை கவனித்த ஒரு அதிகாரி, அதிகாரபூர்வமற்ற தகவலாக எங்களிடம் கூறினார். "அதிகாரப்பூர்வமாக, Bt பருத்தி ஒடிசாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது அங்கீகரிக்கப்படவுமில்லை, தடை செய்யப்படவும் இல்லை", என்றும் கூறினார்.

ஒடிசா மாநிலத்தில் பிடி பருத்தியை வெளியிட அனுமதித்ததற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. மத்திய வேளாண் அமைச்சகத்தின் 2016 ஆம் ஆண்டின் பருத்தி நிலை அறிக்கையில்  ஒடிசாவில் பிடி பருத்தியின் புள்ளி விவரத்தில் பிடி பருத்தி பயன்பாட்டில் இல்லை என்று காட்டுகிறது. இதன் மூலம் அரசாங்கங்கள் அதன் இருப்பை ஒப்புக்கொள்ளவில்லை என்பது புலனாகிறது. "என்னிடம் HT பருத்தி பற்றிய தகவல்கள் இல்லை” என்று மாநில வேளாண் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் தொலைபேசியில் எங்களிடம் கூறினார். " பிடி பருத்தியைப் பொருத்த வரையில் இந்திய அரசாங்கத்தின் கொள்கை எதுவோ அதுவே எங்கள் கொள்கை. ஒடிசாவிற்கு என்று எங்களிடம் தனியாக எதுவும் இல்லை”,என்கிறார் அவர்.

இந்த அணுகுமுறை கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நியாம்கிரி மலையிலுள்ள குத்ருகாவின் கடையில் தெளிவாக தெரிந்ததைப் போல, அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோத விதைகள் மற்றும் வேளாண் – வேதிப்பொருட்கள் மற்றும் பிடி, HT விதைகளின் வர்த்தகம்  ராயகடாவின் பகுதிகளில் வேகமாக ஊடுருவி வருகிறது.

பேராசிரியர் ஷஹீத் நயீம்  சமீபத்தில் சொன்னது போல உலகளவில் வேளாண் - இரசாயனங்கள் மண்ணின் நுண்ணுயிரிகளை அழித்து, மண்ணின் வளத்தை அரித்து நிலம் மற்றும் நீரில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எண்ணற்ற வாழ்விடங்களையும் பாதித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சூழலியல், பரிணாம வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் உயிரியல் துறையின் தலைவரான நயீம், "இந்த எல்லா உயிரினங்களுமே முக்கியமானவை. ஏனென்றால் அவை கூட்டாக ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குகின்றன. அவை நமது நீர் மற்றும் காற்றில் இருந்து மாசுபாடுகளை அகற்றுகின்றன, நமது மண்ணை வளப்படுத்துகின்றன, பயிர்களுக்கு ஊட்டம் அளிக்கின்றன மேலும் நமது பருவநிலை அமைப்புகளையும் ஒழுங்கு படுத்துகின்றன", என்று கூறுகிறார்.

*****

"இது எளிதில் நடந்து விடவில்லை, அவர்களை (ஆதிவாசி விவசாயிகளை) பருத்திக்கு மாற்றுவதற்கு நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது", என்று பிரசாத் சந்திர பாண்டா கூறுகிறார்.

'கப்பா பாண்டா' - அதாவது 'பருத்தி பாண்டா' - என்று அவர் தனது வாடிக்கையாளர்களாலும், மற்றவர்களாலும் அழைக்கப்படுகிறார். ராயகடாவில் பிஷமகட்டக் தாலுகாவில் உள்ள காமக்கியா ட்ரேடர்ஸ் என்ற அவரது விதை மற்றும் ரசாயன கடையில் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பாண்டா 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடையை துவங்கினார். அதே நேரத்தில் அவர் மாவட்ட வேளாண் துறையில் விரிவாக்க அதிகாரியாக பணி செய்து கொண்டிருந்தார். 37 ஆண்டுகள் பணி செய்த பிறகு 2017 இல் ஓய்வு பெற்றார். ஒரு அரசாங்க அதிகாரியாக கிராமவாசிகளை பருத்திக்காக "பின்தங்கிய விவசாயத்தை" கைவிடும்படி வற்புறுத்தினார். விதைகள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய வேளாண் ரசாயனங்களை விற்கும் அவரது கடை அவரது மகன் சுமன் பாண்டுவின் பெயரில் உரிமம் பெற்றிருக்கிறது.

Top left and right-GM cotton seeds marketed to Adivasi farmers lack mandatory labelling, are sold at prices beyond official caps, and are in most cases, do not list Odisha as among the recommended states for cultivation. 
Bottom left-IMG_2727-GM cotton seeds marketed to Adivasi farmers lack mandatory labelling, are sold at prices beyond official caps, and in most cases, do not list Odisha as among the recommended states for cultivation.  
Bottom right-Prasad Chandra Panda-Former government agriculture officer Prasad Chandra Panda at his seeds and inputs shop in Bishamakatak on a July evening.
PHOTO • Chitrangada Choudhury

ராயகடாவில் ஆதிவாசி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் GM பருத்தி விதை பாக்கெட்டுகள் அவசியம் இருக்க வேண்டிய லேபிள்கள் இல்லாமல்  அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. சட்டவிரோத களைக்கொல்லிக்கு சகிப்புத்தன்மை கொண்ட விதைகளாகவும் அவை இருக்கலாம். இந்த விதைகளின் சாகுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட மாநில பட்டியலில் வழக்கமாக ஒடிசாவின் பெயர் இடம் பெறுவதில்லை. கீழ் வலது: பி.சி பாண்டா அங்கீகரிக்கப்படாத விதைகளை விற்பதில்லை என்று கூறுகிறார். சமீபத்தில் ஓய்வு பெற்ற விவசாய அதிகாரி 25 ஆண்டுகளாக பிஷமகட்டக்கில் விதை மற்றும் விவசாய உள்ளீட்டு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

பாண்டா இதில் எந்த முரண்பாடையும் பார்க்கவில்லை. "அரசாங்க கொள்கைகள் பருத்தியை விவசாயிகளுக்கு ஒரு பணப்பயிராக அறிமுகப்படுத்தின. பயிருக்கு சந்தை உள்ளீடுகள் தேவை, அதனால் நான் ஒரு கடையை நிறுவினேன்", என்று கூறுகிறார்.

பாண்டாவின் கடையில் நாங்கள் நடத்திய இரண்டு மணி நேர உரையாடலின் போது, விவசாயிகள் விதைகளையும், ரசாயனங்களையும் தொடர்ந்து வந்து வாங்கியபடி இருந்தனர். எதை வாங்க வேண்டும், எப்போது விதைக்க வேண்டும், எவ்வளவு தெளிக்க வேண்டும் மற்றும் பலவற்றைப் பற்றி அவருடைய ஆலோசனையை நாடியபடி இருந்தனர். அவர் ஒவ்வொருவருக்கும் பிசிறில்லாத அதிகார தொனியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர்களைப் பொறுத்தவரை அவர் நிபுணத்துவம் பெற்றவர், விரிவாக்க அதிகாரி, அவர்களின் ஆலோசகர் ஆகிய அனைத்துமாக இருப்பவர். அவருடைய கட்டளையே அவர்களின் 'தேர்வாக' இருந்தது.

பாண்டாவின் கடையில் மீண்டும் மீண்டும் பார்த்த (மக்கள் அவரை நம்பும்) காட்சிகள் நாங்கள் சுற்றுப்பயணம் செய்த பருத்தி வளரும் கிராமங்கள் அனைத்திலும் இருந்தன. 'சந்தை' பருத்தி பயிருக்கு அப்பால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

பண்ணை நிலம் முழுவதும் பருத்தி விளைச்சலுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் தங்கள் வீட்டுத் தேவைகள் அனைத்தையும் சந்தையில் இருந்தே வாங்க வேண்டியிருக்கிறது என்று விஞ்ஞானியும் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து பாதுகாக்கும் ஆய்வாளருமான தேபல் தேப் எங்களிடம் கூறினார். 2011 முதல் ராயகடாவை மையமாகக்கொண்டு தேப் பிரசித்தி பெற்ற பழமையான நெல் வகைகளை பாதுகாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். உழவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறார்.

"வேளாண்மை தொடர்பான மற்றும் வேளாண்மை அல்லாத தொழில்கள் பற்றிய பாரம்பரிய அறிவு மிக வேகமாக மறைந்து வருகிறது", என்று அவர் கூறினார்.  எந்த கிராமத்திலும் குயவர்களும் இல்லை, தச்சர்களும் இல்லை, நெசவாளர்களும் இல்லை. அனைத்து வீட்டுப் பொருட்களும் சந்தையில் இருந்து வாங்கப்படுகிறது, மேலும் அதில் பெரும்பாலானவை - குடம் முதல் பாய் வரை - அனைத்தும் பிளாஸ்டிக்கால் ஆனவை, அதுவும் தொலைதூர நகரங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. பெரும்பாலான கிராமங்களில் இருந்து மூங்கில் மறைந்து விட்டது, அத்துடன் அவர்களின் மூங்கில் கைவினையும் அழிந்துவிட்டது. அவற்றுக்கு பதில் காட்டில் கிடைக்கும் விறகு மற்றும் விலையுயர்ந்த கான்கிரிட் இடம்பெற்றிருக்கிறது. ஒரு கம்பத்தை அமைப்பதற்குக் கூட கிராம மக்கள் காட்டில் இருந்து மரங்களை வெட்ட வேண்டியிருக்கிறது. லாபத்தின் கவர்ச்சி காரணமாக மக்கள் அதிகமாக சந்தையை சார்ந்திருப்பதால் சூழலும் அதிகமாக அழிந்து வருகிறது", என்று அவர் கூறுகிறார்.

*****

"கடைக்காரர் இதெல்லாம் நல்லவை என்று கூறினார்", என்று ராம்தாஸ் (அவர் தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) கடையில் இருந்து கடன் வாங்கிய 3 பாக்கெட் பிடி பருத்தி விதைகளை காண்பித்து நம்பிக்கையின்றி எங்களிடம் கூறினார். கோண்டு ஆதிவாசி விவசாயியான இவரை நியாம்கிரி மலையின் அடிவாரத்தில் உள்ள பிஷமகட்டக் வட்டத்திலுள்ள  அவரது கிராமமான  கலிபொங்காவிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது நாங்கள் சந்தித்தோம். கடைக்காரரின் ஆலோசனை ஒன்றே அந்த விதை பாக்கெட்டுகளை தான் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்று எங்களிடம் கூறினார்.

அவர் அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தார்? "நான் இப்போது பணம் கொடுத்திருந்தால் தலா ரூபாய் 800 கொடுத்திருக்க வேண்டும். என்னிடம் 2,400 ரூபாய் இல்லை. எனவே கடைக்காரர் என்னிடம் அறுவடை நேரத்தில் 3,000 ரூபாய் பெற்றுக் கொள்வார். ஆனால் ஒரு பாக்கெட்டின் விலை 800 ரூபாய் தான் 1,000 ரூபாய் அல்ல, அப்படி இருக்கும் பட்சத்தில் அது  மிகவும் விலை உயர்ந்த ரகமான:  போல்கார்ட் II Bt பருத்தி விதையின் நிர்ணயிக்கப்பட்ட விலையான 730 ரூபாயை விட மிகவும் அதிகமாக இருக்கும்” என்று கூறுகிறார்.

பிரிகாகா, ராம்தாஸ், சுனா மற்றும் பிற விவசாயிகள் எங்களிடம் அவர்கள் முன்பு பயிரிட்ட எதையும் போல் பருத்தி இல்லை என்று கூறினார்கள்: 'எங்கள் பாரம்பரிய பயிர்கள் வளர்வதற்கு எதுவும் தேவையில்லை', என்றும் கூறினர்.

காணொளியில் காண்க: உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி தொடர்ந்து கவனித்துக் கொள்வீர்களோ அதைப்போல பருத்தியை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ராம்தாஸ் வாங்கிய பாக்கெட்டுகள் எதிலும் அச்சிடப்பட்ட விலையோ, உற்பத்தி அல்லது காலாவதி தேதியோ, நிறுவனத்தின் பெயரோ அல்லது தொடர்பு விவரங்களோ எதுவும் இல்லை. அவர்கள் ஒரு பெரிய பருத்தி காய்ப்புழுவின் மீது '×' போட்டு வைத்திருந்தனர், ஆனால் அதில் பிடி விதைகள் என்று அச்சிடப்படவில்லை. பாக்கெட்டுகளில் 'HT' என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும்  கடைக்காரர் அவரிடம் சொன்னதால், "இந்தப் பயிரில் 'காசா மரா (களைக்கொல்லி) தெளிக்கப்படலாம்", என்று ராமதாஸ் நம்புகிறார்.

ஜூலை மாதத்தில் 15 நாட்களுக்கும் மேலாக நாங்கள் பேட்டி கண்ட ஒவ்வொரு விவசாயியையும் போலவே களைக்கொல்லி தாங்கும் விதைகள் இந்தியாவில் அனுமதிக்கப் படுவதில்லை என்பதை பற்றி ராமதாசுக்கு தெரியவில்லை. நிறுவனங்கள் பெயரிடப்படாத விதைகளை விற்க முடியாது என்பதோ அல்லது பருத்தி விதைகளின் விலை அதிகபட்ச விலை நிர்ணயத்திற்கு உட்பட்டது என்பதையோ அவர் அறிந்திருக்கவில்லை. விதை பாக்கெட்டுகள் மற்றும் வேளாண் ரசாயன பாட்டில்களில் உள்ள எழுத்துக்கள் எதுவும் ஒடியாவில் இல்லாததால் இங்குள்ள விவசாயிகளுக்கு - அவர்கள் வாசிக்க தெரிந்தவராக இருந்தாலும் - உற்பத்தியாளர்கள் என்ன உரிமை கோருகின்றனர் என்பது பற்றி தெரியவில்லை.

ஆனாலும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அவர்களை பருத்தியை நோக்கியே ஈர்க்கிறது.

"நாங்கள் இதை வளர்த்தால் ஒரு தனியார் ஆங்கில வழி பள்ளியில் எனது மகனின் ஒரு ஆண்டு கட்டணத்திற்கு தேவையான பணத்தை என்னால் சம்பாதிக்க முடியும்" - இதுதான் பிஷமகட்டக் வட்டத்திலுள்ள கேரண்டிகுண்டா கிராமத்தில் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு தலித் குத்தகை விவசாயியான ஷியாம்சுந்தர் சுனாவின் நம்பிக்கை.  அவரது கோண்டு ஆதிவாசி மனைவி கமலா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளான எலிசபெத் மற்றும் ஆஷிஷ் ஆகியோருடன் பருத்தி விதைகளை விதைப்பதில் மும்முரமாக இருந்தபோதுதான் அவரை  கண்டுபிடித்தோம். சுனா தான் அறிந்தவரையில் அனைத்து விதமான வேளாண் - வேதிப் பொருட்களையும் தனது விதைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறார். "சில்லரை விற்பனையாளர் பருத்தி நன்றாக வரும் என்று என்னிடம் கூறியுள்ளார்", என்று அவர் விளக்குகிறார்.

பிரிகாகா, ராம்தாஸ், சுனா மற்றும் பிற விவசாயிகள் எங்களிடம் அவர்கள் முன்பு பயிரிட்ட எதையும் போல் பருத்தி இல்லை என்று கூறினார்கள். "எங்கள் பாரம்பரிய பயிர்கள் வளர்வதற்கு எதுவும் தேவையில்லை - உரமும் இல்லை பூச்சிக்கொல்லிகளும் இல்லை", என்று பிரிகாகா கூறினார். ஆனால் பருத்தியைப் பொருத்தவரை, "ஒவ்வொரு பாக்கெட்டும் கூடுதலாக 10,000 ரூபாய் செலவு பிடிக்கிறது”  என்று ராமதாஸ் கூறினார். இந்த விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றுக்கு உங்களால் செலவிட முடிந்தால் மட்டுமே அறுவடை காலத்தில் உங்களால் சிறிது வருமானம் பார்க்க முடியும். இதை உங்களால் செய்ய முடியாது என்றால்... நீங்கள் உங்களின் எல்லா பணத்தையும் இழப்பீர்கள். உங்களால் அதை செய்ய முடிந்தால் மற்றும் நிலையான வானிலையுடன் அனைத்து விஷயங்களும்  நன்றாக மாறினால் - அதன் பின்னர் அதை (அறுவடையை) நீங்கள் 30,000 - 40,000 ரூபாய்க்கு விற்கலாம்", என்று கூறுகிறார்.

விவசாயிகள் பணம் சம்பாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பருத்திக்கு மாறினால் கூட அதன் மூலம் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்று சொல்வதற்கு பெரும்பாலானவர்களால் முடியவில்லை.

ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உள்ளீட்டு சில்லரை விற்பனையாளரின் வழியாக விற்க வேண்டி இருக்கும். அவர் தனது செலவுகளை அதிக வட்டி போட்டு ஈடு செய்து விட்டு, மீதம் இருப்பதை அவர்களிடம் கொடுத்துவிட்டு செல்வார். "நான் குன்பூரில் உள்ள வர்த்தகரிடமிருந்து 100 பாக்கெட்டுகளை கடனாக ஆர்டர் செய்திருக்கிறேன்", என்று சந்திர குத்ருகா எங்களிடம் கூறினார். "அறுவடை நேரத்தில் நான் அவருக்கு திருப்பி செலுத்துவேன். விவசாயிகள் செலுத்தும் வட்டியை நாங்கள் பிரித்துக் கொள்வோம்", என்று கூறினார்.

PHOTO • Chitrangada Choudhury

மேல் வரிசை: ஜூலை நடுப்பகுதியில் முதல்  முறையாக ஆதிவாசி விவசாயியான ரூபா பிரிகாகா கரஞ்சகுடா கிராமத்தில் உள்ள மலைப்பாங்கான தனது இடத்தில் சந்தையில் இருந்து வாங்கி வந்த GM பருத்தி விதைகளை விதைத்து இருந்தார். கீழ் இடது: நந்தா சர்க்காவும் அவரது குடும்பத்தினரும் கலிபொங்கா கிராமத்தில் உள்ள அவர்களது 2 ஏக்கர் நிலத்தில் 4 பாக்கெட் பிடி பருத்தியை விதைத்து இருந்தனர். கீழ் வலது: ஷியாம்சுந்தர் மற்றும் கமலா ஆகியோர் கேரண்டிகுண்டா கிராமத்தில் உள்ள குத்தகை விவசாயிகள். அவர்கள் சமீபத்தில் பிடி பருத்தியை பயிரிட ஆரம்பித்திருக்கின்றனர்.  இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிக்க அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.

விவசாயிகளின் பயிர்கள் விளையவில்லை என்றால் அல்லது அவர்களால் நீங்கள் விற்ற பாக்கெட்டுகளுக்குக் கடன் பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் என்ன செய்வது?  அது பெரிய ஆபத்தாகி விடாதா ?

"என்ன ஆபத்து?" என்று சிரித்தபடி அந்த இளைஞர் கேட்டார். "விவசாயிகள் எங்கே போவார்கள்? அவர்களின் பருத்தி என் மூலம் தான் வர்த்தகருக்கு விற்கப்படுகிறது. அவர்கள் தலா 1-  2 குவிண்டால் அறுவடை செய்தால் போதும் அதிலிருந்து எனது நிலுவைத் தொகையை நான் மீட்டெடுத்துக் கொள்வேன்", என்று கூறுகிறார்.

இதில் சொல்லப்படாதது என்னவென்றால் விவசாயிகளுக்கு எதுவுமே இல்லாமல் போகக்கூடும் என்பதுதான்.

ராயகடாவிடம் இருந்து அதன் பல்லுயிர் தன்மையும் அபகரிக்கப்படும். பேராசிரியர் நயீம் கூறியது போல உலக அளவில், பயிர் பன்முகத் தன்மையை நீக்குவது என்பது உணவு பாதுகாப்பை ஆபத்திற்கு உள்ளாகும் மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு ஏற்ப தகவமைக்கும் திறனையும் குறைத்து விடும். பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவை ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் எச்சரிக்கிறார் : "குறைந்த பசுமை மற்றும் குறைந்த உயிரியல் ரீதியான வேறுபாடுகள் கொண்ட ஒரு கிரகம் வெப்பமானதாகவும் வறண்டதாகவும் இருக்கும்", என்கிறார்.

ராயகடாவின் ஆதிவாசி விவசாயிகள் பிடி பருத்தியின் ஒற்றைப் பயிர் முறைக்காக இந்த பல்லுயிர் தன்மையை கைவிடுவதால் ஒடிசாவின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் நீண்ட கால மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. இரண்டிலும் அது நெருக்கடியை தூண்டுகிறது. தனிப்பட்ட குடும்பத்தின் நிலை மற்றும் பருவ நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரிகாகா, குத்ருகா, ராம்தாஸ் மற்றும் பருத்தி பாண்டா ஆகியோர் இந்த மாற்றத்தில் சிக்கியிருக்கும் கதாபாத்திரங்களாக இருக்கின்றனர்.

"தெற்கு ஒடிசா ஒருபோதும் பாரம்பரியமாக பருத்தி வளரும் பகுதி அல்ல. அதன் பலமே அதன் பல பயிர்கள் விளைவிக்கும் முறை தான்", என்று கூறுகிறார் தேபல் தேப். "இந்த வணிக ஒற்றை முறை பருத்தி விளைவித்தல், இதன் பயிர் பன்முகத்தன்மை,  மண்ணின் அமைப்பு,  வீட்டு வருமானத்தின் ஸ்திரத்தன்மை,  விவசாயிகளின் சுதந்திரம் மற்றும்  இறுதியாக, உணவு பாதுகாப்பு ஆகியவற்றை மாற்றியுள்ளது". இது விவசாயத் துயரங்களுக்கான ஒரு தவறான செயல்முறையாக தெரிகிறது என்று கூறுகிறார்.

ஆனால் இந்தக் காரணிகள், குறிப்பாக நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இவை அனைத்தும் பல்லுயிர் இழப்பு, நீர் மற்றும் ஆறுகளைப் பொறுத்தவரையில் சொல்லும் செய்தி   - இன்னொரு நீண்டகால பெரிய அளவிலான செயல் முறைகளிலும் தங்களை அவர்கள் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடும். இந்த பகுதியில் பருவநிலை மாற்றத்திற்கான விதைக்கள் விதைக்கப்படுவதை பார்க்க முடிகிறது

முகப்பு புகைப்படம்: கலிபொங்கா கிராமத்தில் விவசாயிகளான ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ரத்னமணி ஆகியோர் தங்கள் நிலத்தில் பிடி மற்றும் HT பருத்தியை விதைத்த சில நாட்களுக்குப் பிறகு, ஒரு  அகல நிரல் களைக்கொல்லியான கிளைபோசேட் -யை பயன்படுத்துகின்றனர். (படம்: சித்ரங்கதா சௌத்ரி)

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழில்: சோனியா போஸ்

Reporting : Chitrangada Choudhury

চিত্রাঙ্গদা চৌধুরী একজন স্বাধীনভাবে কর্মরত সাংবাদিক, এবং পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার কোর গ্রুপের সদস্য।

Other stories by চিত্রাঙ্গদা চৌধুরি
Reporting : Aniket Aga

Aniket Aga is an anthropologist. He teaches Environmental Studies at Ashoka University, Sonipat.

Other stories by Aniket Aga
Editor : P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Series Editors : P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Series Editors : Sharmila Joshi

শর্মিলা জোশী পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) পূর্বতন প্রধান সম্পাদক। তিনি লেখালিখি, গবেষণা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত।

Other stories by শর্মিলা জোশী
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose