தனது முதல் தொகுதி கேழ்வரகு நிராகரிக்கப்பட்ட போது ஜெயராம் சாகிரி ஏமாற்றம் அடைந்தார். "அது சுத்தமாக இல்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்", என்று தெரிவித்தார் அவரது தானியத்தில் உமி இருந்தது.
2019ஆம் ஆண்டு ஜனவரியில் ஜெயராம் கோராபுட் மாவட்டத்தின் சிமிலிகுடா வட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பாதா தேமாவிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டுலி கிராமத்தில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கிற்கு தலா 50 கிலோ எடையுள்ள 12 மூட்டைகளை எடுத்துச் சென்றார். அவரது கிராமத்தில் உள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு மற்றும் தக்காளி, வெள்ளரி போன்ற காய்கறிகள் ஆகியவற்றை தலா ஒரு ஏக்கர் நிலத்திலும் மீதமுள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் யூகலிப்டஸ் மரங்களையும் பயிரிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு காரிப் பருவத்தில், அதாவது செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் 65 வயதாகும் ஜெயராம் தனது கேழ்வரகினை குறைந்தபட்ச ஆதாரவு விலையில் (MSP) விற்க குண்டுலியில் உள்ள பெரிய அளவிலான விவசாய பல்நோக்கு கூட்டுறவு சங்கத்துடன் (LAMPS) ஒப்பந்தம் செய்துகொண்டார்.
ஆனால் இந்த ஆண்டு அது சுமார் 20 - 22 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் LAMPS ஒரு கிலோவுக்கு 29 ரூபாய் வழங்குகிறது என்று அவர் கூறினார். 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு காரிப் பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு 2896 ரூபாய் வழங்கியது - அதுவும் 2017 ஆம் ஆண்டுக்கான காரிப் பருவத்திற்கான விலையான 1900தில் இருந்து அதிகரித்துள்ளது.
மாநில வேளாண்மை துறையின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் குழு LAMPS (இது ஒடிசாவின் பழங்குடியினர் மேம்பாட்டு கூட்டுறவு கார்ப்பரேஷன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது) மூலமாகவும், இப்படி அரசாங்கத்தின் கூட்டுறவுத் துறையின் ஆரம்ப வேளான் கடன் சங்கத்தின் மூலமாகவும் மொத்தமாக இவ்வளவு கேழ்வரகை வாங்குவது இதுவே முதல் முறை.
இந்த கொள்முதல் ஒடிசா அரசாங்கத்தின் சிறுதானியங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக குறிப்பாக ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கூட்டுறவுத்துறை வெளியிட்ட வழிகாட்டுதலில் "சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை கருத்தில் கொண்டு மாநில அரசு பொதுவிநியோக திட்டம் (PDS), ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ICDS) மற்றும் ஒடிசா மாநிலத்தின் மதிய உணவு திட்டம் (MDM) ஆகியவற்றில் சிறுதானியங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது", என்று கூறியுள்ளது.
கேழ்வரகு புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியமாக அறியப்படுகிறது. ஒடிசாவில் உள்ள பல விவசாய குடும்பங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் கேழ்வரகின் ஒரு பகுதியை தாங்கள் நுகர்வதற்கும் மீதமுள்ளவற்றை சந்தையிலும் விற்பனை செய்து வருகின்றனர். ஜெயராமின் 45 வயதாகும் மகன் தைதிரியும் அவரது மனைவி நபீனா சாகிரியும் அவர்களது கூட்டு குடும்பத்திற்குச் சொந்தமான மற்றொரு நிலத்தில் கேழ்வரகினை பயிரிட்டு வருகின்றனர். "ஒன்றரை ஏக்கர் நிலத்தில் இருந்து எங்களுக்கு 10 குவிண்டால் கேழ்வரகு கிடைத்தது. எங்களது குடும்பத்திற்கு 2 குவிண்டால் கேழ்வரகு போதுமானது மீதமுள்ளவற்றை நாங்கள் சந்தையில் விற்பனை செய்து விடுவோம்", என்று நபீனா கூறுகிறார். நபீனா உள்ளூரில் செய்யப்படும் கஞ்சி மற்றும் சாகு, ஒண்டா, பிதா மற்றும் மண்ரு போன்ற கேக் வகைகளை கேழ்வரகில் இருந்து தனது குழந்தைகளுக்காக தயார் செய்கிறார்.
இந்த சத்தான தானியத்தை ஊக்குவிப்பதில் மாநில அரசு ஏற்படுத்தியுள்ள புது முயற்சியின் ஒரு பகுதியாக LAMPAS ஆல் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. இது ஒரு கவர்ச்சிகரமான விலை. எனவே ஜெயராம் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து விளைவித்த 8 குவிண்டால் கேழ்வரகிலிருந்து 6 குவிண்டால் கேழ்வரகினை விற்பனை செய்வதற்கு தயார் செய்தார். LAMPAS உடன் பதிவுசெய்த விவசாயிகளிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 1.2 குவிண்டால் கேழ்வரகு மட்டுமே வாங்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் ஏக்கரின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை - மேலும் ஜெயராம் அணுகிய அலுவலர் தவறுதலாக அவரது பெயரில் ஐந்து ஏக்கர் நிலத்தை பதிவு செய்துள்ளார்.
ஒருவழி போக்குவரத்திற்கு மட்டுமே மூட்டை ஒன்றுக்கு எனக்கு 20 ரூபாய் செலவானது என்று அவர் கூறுகிறார். போக்குவரத்திற்காக ஆட்டோவிற்கு மட்டுமே கிட்டத்தட்ட அவர் 500 ரூபாய் செலவழித்துள்ளார் - அது ஒரு குவிண்டால் கேழ்வரகிற்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஆறில் ஒரு பங்கு - ஆனால் ஒரு கிலோ கூட விற்பனையாகவில்லை.
பாதா தேமாவில் இருந்து கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தொலைவில் வசித்து வரும் 42 வயதாகும் சுக்தேப் சில்பாதியா தனது ஒன்றரை குவிண்டால் கேழ்வரகுடன் தயாராக இருந்தார். கோராபுட் மாவட்டத்திலுள்ள போய்பரிகுடா வட்டத்தில் இருக்கும் பலிகுடா கிராமத்தில் அவருக்கு 7 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஒரு ஏக்கர் மேட்டு நிலத்தில் கேழ்வரகினை விளைவிக்கிறார், மீதமுள்ள நிலத்தில் நெல், தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், பாகற்காய் போன்ற காய்கறிகளை விளைவிக்கிறார். சுக்தேப் தனது கிராமத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள போய்பரிகுடா வட்டத்தின் கொள்முதல் மையத்திற்கு கேழ்வரகில் எடுத்துச் சென்றார்.
அவரது மூட்டைகளும் நிராகரிக்கப்பட்டன - கேழ்வரகு சுத்தமாக இல்லை என்று கொள்முதல் ஊழியர்கள் தெரிவித்தனர். ஜெயராம் மற்றும் சுக்தேப் ஆகியோருக்கு தங்களது கேழ்வரகு நன்றாகத்தான் இருந்தது. அவர்கள் நீண்ட காலமாக தங்களது தானியங்களை இவ்வாறு தான் பதப்படுத்தி வருகிறார்கள், அப்படித்தான் உள்ளூர் சந்தையில் வணிகர்களிடம் விற்பனையும் செய்கிறார்கள்.
கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கான நியாயமான சராசரங்கள் என்னும் தரவின் படி 2018 - 19 ஆம் ஆண்டிற்கான காரிப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல் (டிசம்பர் முதல் மார்ச் வரை) என்ற தலைப்பில் கூட்டுறவுத் துறையின் வழிகாட்டுதலின்படி தானியங்கள் தித்திப்பாகவும், கடினமானதாகவும், சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்; மேலும் பூஞ்சைகள் இல்லாமலும், அந்துப்பூச்சிகள், புனி நாற்றம் அடிக்காமலும், எலியோட்டி மற்றும் வட்டுப் பருப்பு ஆகியவற்றின் கலப்பு இல்லாமலும், வண்ணமயமான வேறு பொருட்கள் இல்லாமலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கலவை இல்லாமலும், வேறு ஏதும் கசடுகளோ, உணவு தானியங்களோ அல்லது சேதமடைந்த தானியங்களோ கலப்பில்லாமல் மேலும் தானியத்தின் ஈரப்பதமும் குறிப்பிட்ட அளவிற்குள் இருக்க வேண்டும்.
ஆனால் இங்குள்ள விவசாயிகள் சுத்தமான தானியமாக கருதுவது இந்த கொள்முதல் குறிப்பில் அரசாங்கம் வகுத்துள்ள தூய்மை தரத்துடன் பொருந்தவில்லை
அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் பயிர்களை பாரம்பரிய முறையில் கதிரடிக்கின்றனர் - அதாவது அளவினை பொருத்து ஆட்டோ, டிராக்டர் அல்லது கால்நடைகளை குவிக்கப்பட்ட அறுவடையின் மீது ஏற்றி செய்கின்றனர். ஒருவேளை அறுவடையின் அளவு குறைவானதாக இருந்தால் ஒரு மரக் குச்சியை பயன்படுத்தி நன்றாக அறுவடையின் மீது அடிக்கின்றனர். இறுதியில் தானியமானது தண்டிலிருந்து பிரிந்து விடுகிறது மற்றும் ஒரு மெல்லிய வெள்ளை அடுக்கான உமி மட்டுமே ஒட்டிக் கொண்டுள்ளது. "இந்த உமி தான் தானியத்தின் ஆயுளை நிர்ணயிக்கிறது. உமியுடன் வைத்திருந்தால் ஒன்று இரண்டு வருடங்களுக்கு கூட தானியத்தை நம்மால் சேமிக்க முடியும். இல்லையெனில் தானியம் ஈரப்பதத்தை ஈர்த்து அதில் பூஞ்சைகள் வளர்ந்துவிடும். உமியை நீக்கிவிட்டால் அத்தானியத்தை 6 முதல் 12 மாதங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்", என்று கூறுகிறார் சுக்தேப்.
பாரம்பரிய கதிரடிக்கும் முறை மற்றும் பதப்படுத்தும் முறை மாநில வழிகாட்டுதலுடன் பொருந்தவில்லை என்பது தான் ஜெயராம் மற்றும் சுக்தேப் ஆகியோரின் தானியங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம்.
"விவசாயிகள் தங்களது கிராமங்களுக்கு விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கு பதிலாக குண்டுலியிலேயே அதை பதப்படுத்துங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது அவர்களது நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும்", என்று குண்டுலியில் உள்ள LAMPS இன் கிளை பொறுப்பாளரான ரமணா கூறுகிறார்.
சுக்தேப் தனது சொந்த சிறிய அரிசி அரைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தினார் இது ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 100 கிலோ கிராம் அரிசியை பதப்படுத்தும், தானியத்தை மீண்டும் பதப்படுத்தவும் அது மிகவும் நேர்த்தியானதாக மாறிவிட்டது. நாங்கள் எனது அரவை இயந்திரத்தில் எனது தானியத்தில் உமியை நீக்க முயற்சி செய்து பார்த்தோம் வெற்றிகரமாக அது நீக்கிவிட்டது. தானியங்களை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு ஏற்றதாக நாங்கள் மாற்றி விட்டோம் என்று அவர் கூறுகிறார்.
பல விவசாயிகள் கொண்டு வந்த தானியங்களை தகுதி நீக்கம் செய்ய காரணமாக இருந்த கடுமையான வழிகாட்டுதலோடு கூடுதலாக கேழ்வரகினை ஊக்குவிக்கும் மாநில அரசின் திட்டமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகரமாதக இல்லை. (மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில்) 14 மாவட்டங்களில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தாலும் சுந்தர்கர், மல்கங்கிரி, ராயகடா, கஜபதி, நௌபதா, களகண்டி, கந்தமால் மற்றும் கோராபுட் ஆகிய எட்டு மாவட்டங்களில் மட்டுமே டிசம்பர் 2018 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரையிலான கொள்முதல் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.
இவற்றில் சுந்தர்கர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட கேழ்வரகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்றும் மற்ற ஏழு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் பொது வினியோகத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்றும் மாநில அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் நிச்சயமாக உமி இருக்கக்கூடாது என்ற வழிகாட்டுதலின் விளைவாகவும், எட்டு மாவட்டங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதாலும் மற்றும் ஒரு ஏக்கருக்கு 1.2 குவிண்டால் என்ற உச்சவரம்பு இருப்பதாலும், டிசம்பர் 2018 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை உள்ள காரிப் சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான மொத்த கொள்முதல் 17, 985 குவிண்டால் மட்டுமே இது LAMPS இப்பருவத்தில் கொள்முதல் செய்வதற்கு நிர்ணயித்திருந்த 185,000குவிண்டால் அளவில் வெறும் 10 சதவிகிதமே. LAMPS மற்றும் PACS இடம் பதிவு செய்த 26,495 விவசாயிகளில் வெறும் 5,740 விவசாயிகள் மட்டுமே கேழ்வரகினை விற்பனை செய்துள்ளனர்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி ஒடிசாவுக்கு ஆண்டுக்கு 21 லட்சம் டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்படுகிறது இதில் அரிசி மற்றும் கோதுமை மற்றும் சிறுதானியங்களான அரிசிசோளம், கம்பு, மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு ஆகியவை பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் பிற திட்டங்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஒதுக்கப்பட்ட தானியங்களை மாநிலங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசிடம் இருப்பதாக இச்சட்டம் கூறுகிறது, ஆனால் தானியங்கள் பல்வேறு மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள் மூலம் வாங்கப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டில் மத்திய அரசின் உணவு தானியக் கிடங்கில் சிறு தானியங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது அதாவது அரிசிக்கு எதிராக 0.58% சிறுதானியங்களும், கோதுமைக்கு எதிராக 0.39 சதவிகிதமும் மற்றும் நெல்லுக்கு எதிராக 1 சதவீதமும் இருந்தது. கொள்முதல் செய்யப்பட்ட சிறுதானியங்களில் மக்காச்சோளம் மட்டுமே மிக அதிகமான அளவை பிடித்திருந்தது.
இதுவரை ஒடிசா அரசும் எந்த ஒரு சிறு தானியங்களையும் பரவலாக வாங்கவில்லை இருப்பினும் மற்ற சிறு தானியங்களை விட மாநிலத்தில் அதிக அளவு கேழ்வரகு உற்பத்தி செய்யப்படுகிறது 2016 - 17 ஆம் ஆண்டில் ஒடிசாவில் 121,000 டன் கேழ்வரகு உற்பத்தி செய்யப்பட்டது 3,444 டன் அரிசிச்சோளம் 1,130 டன் கம்பும் உற்பத்தி செய்யப்பட்டது என்று மாநில வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தி இயக்குனரகத்தின் தரவு தெரிவிக்கின்றது).
இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காகவே கேழ்வரகு கொள்முதல் துவக்கப்பட்டு இருந்தது ஆனால் இதுவரை வாங்கிய 17, 985 குவிண்டால் கேழ்வரகு மாநிலத்தின் மொத்த தேவையில் அதாவது 21 லட்சம் டன்களில் வெறும் 0.085% சதவிகிதம் மட்டுமே.
LAMPS உடன் பதிவு செய்த விவசாயிகள் ஏக்கருக்கு 1.2 குவிண்டால் என்ற கொள்முதல் உச்சவரம்பு அவர்கள் ஏராளமான கேழ்வரகினை வெளி சந்தையில் விற்க வேண்டி இருக்கும் என்கிறது. பல சந்தர்ப்பங்களில் ஒரு ஏக்கரில் விளைவிக்கப்படும் கேழ்வரகின் அளவிலிருந்து 1.2 குவிண்டால் என்பது மிகக் குறைவாகவே உள்ளது என்று கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த பொட்டங்கி வட்டத்திலுள்ள மேல் கேலா குடா குக்கிராமத்தில் வசித்து வரும் 45 வயதாகும் கடபா சமூகத்தைச் சேர்ந்த ஆதிவாசியான சாது அயல் கூறுகிறார். 2018 ஆம் ஆண்டு ஜூலை - நவம்பர் காரிப் பருவத்தில் அயல் தனது அரை ஏக்கர் நிலத்தில் கேழ்வரகினை விதைத்து 6 குவிண்டால் அறுவடை செய்தார்.
ஜெயராமும் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 8 குவிண்டால் கேழ்வரகு அறுவடை செய்தார் ஆனால் ஒரு ஏக்கருக்கு பதிலாக உள்ளூர் LAMPS அதிகாரி ஐந்து ஏக்கர் என்று படிவத்தில் குறிப்பிட்டு விட்டார் நாங்கள் எங்களது தேவைக்காக இரண்டு குவிண்டால் கேழ்வரகை வைத்திருந்தோம் மீதமிருந்த 6 குவிண்டால் கேழ்வரகினை LAMPS இல் விற்றோம் என்று ஜெயராம் கூறினார். அவரது கேழ்வரகினை ஒரு ஆலையில் சுத்தம் செய்த பிறகு குண்டுலி கிராமத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு மீண்டும் வந்தார், அங்கு அவர் விற்க வேண்டியதை விட ஐந்து மடங்கு அதிகமாக விற்றுவிட்டார்.
தமிழில்: சோனியா போஸ்