இன்னொரு டாக்சி ஓட்டுநரிடமிருந்து ஷிவ்புஜன் பாண்டேக்கு தொலைபேசி அழைப்பு வந்ததும் அவசரமாக ஒரு தட்கல் டிக்கெட் எடுத்து ஜுலை 4ம் தேதி மிர்சாப்பூரிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு ரயிலேறினார்.
அடுத்த நாள் மும்பை அடைந்தார். பரபரப்பாக திரும்பிச் சென்றபோதும் 63 வயது ஷிவ்புஜனால் அவருடைய டாக்சியை காப்பாற்ற முடியவில்லை.
மும்பை சர்வதேச விமானநிலையத்தால் அவரின் டாக்சி ஏலமிடப்பட்டு விட்டது. தொற்றுக்காலத்தில் பல மாதங்களாக யாரும் வராமல் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தால் 42 டாக்சி கேப்களை விமானநிலையம் ஏலம் விட்டிருக்கிறது.
ஷிவ்புஜன் தன் வாழ்வாதாரத்தை இழந்தார். 1987ம் ஆண்டிலிருந்து அவர் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார். 2009ம் ஆண்டில் கறுப்பு-மஞ்சள் மாருதி ஆம்னி ஒன்றை வங்கிக் கடனில் வாங்கினார்.
“இதைச் செய்வதால் அவர்களுக்கு என்னக் கிடைத்தது?” என ஒரு மதியவேளையில் சகார் விமான நிலைய நடைபாதையில் நின்றுகொண்டு கோபமாகக் கேட்டார். “என் முழு வாழ்க்கையும் இந்த வேலையைத்தான் செய்திருக்கிறேன். இப்போது அவர்கள் எங்களிடம் இருக்கும் கொஞ்சத்தையும் எடுத்துக் கொண்டார்கள். இந்த நேரத்தில் அவர்கள் எங்களுக்குச் செய்யும் மோசமான காரியம் இது.”
இதே தண்டனை சஞ்சய் மாலிக்கும் நேர்ந்தது. அவரின் வேகன் ஆர் வாகனம் மார்ச் 2020லிருந்து வடக்கு மும்பையிலுள்ள அன்னவாடியின் பெரிய வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஜுன் 29, 2021 இரவு, அவரின் வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு நண்பர் அத்தகவலை அடுத்த நாள் தெரிவித்தார். “என்ன நடந்தது என எனக்குப் புரியவில்லை,” என்கிறார் 42 வயது சஞ்சய்.
கிட்டத்தட்ட 1000 டாக்சி கேப்கள் இங்கு மார்ச் 2020-ல் ஊரடங்கு தொடங்கும் முன் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக சொல்கின்றனர் அவரும் பிற கேப் ஓட்டுநர்களும். “வேலை நேரங்களில் எங்களின் டாக்சிகளை எடுத்துவிட்டு வேலை முடிந்தபிறகு அதே இடத்தில் டாக்சியை நிறுத்தி விடுவோம்,” என்கிறார் அங்கே பல ஆண்டுகளாக டாக்சி நிறுத்திய சஞ்சய். வாகனம் நிறுத்துமிடங்கள் சங்கங்களின் வழியாகக் கிடைப்பதாக ஓட்டுநர்கள் சொல்கின்றனர். அவர்களிடமிருந்து விமான நிலைய நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதில்லை. அதற்கு பதிலாக ரூ.70-ஐ பயணிகளின் கட்டணத்துடன் சேர்த்து வசூலித்து விடுகிறது.
மார்ச் 2020-ன் தொடக்கத்தில் சகோதரியின் திருமண வேலைகளுக்காக அவுரங்காபாத்துக்கு எலெக்ட்ரீசியன் பணி செய்யும் தம்பியுடன் சஞ்சய் சென்றிருக்கிறார். சில நாட்களில் ஊரடங்கு தொடங்கியிருக்கிறது. மும்பைக்கு திரும்ப முடியவில்லை.
இவற்றுக்கிடையில் அவருடைய டாக்சி, அன்னவாடி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ”இது போல எதையும் நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை,” என்கிறார் அவர். “அது ஊரடங்கு காலகட்டம். நான் வேறு விஷயங்களை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.”
ஜனவரி 2020ல் திருமணத்துக்கு வாங்கியக் கடனுக்கு பிணையாக டாக்சி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு காலத்தை சமாளிக்க, சேமிப்பையும் அவர்களுக்கிருந்து சிறு விவசாய நிலத்தின் நெல் மற்றும் கோதுமை ஆகிய பயிர்களையும் சிறு சிறு கடன்களையும் குடும்பம் சார்ந்திருந்தது.
சஞ்சயின் சகோதரியின் திருமணம் டிசம்பர் 2020 வரை தள்ளிப் போனது. கிராமத்திலேயே அவர் தங்க நேரிட்டது. மார்ச் 2021ல் திரும்பி வர நினைத்திருந்ததும் இரண்டாம் அலையால் தள்ளிப் போனது. மே மாதத்தின் இறுதீல்தான் சஞ்சயும் அவரின் குடும்பமும் மும்பைக்கு திரும்பினர்.
ஜூன் 4ம் தேதி டாக்சியை எடுக்க அவர் சென்றபோது அன்னவாடி வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலாளிகள் கேட்டை திறக்க விமான நிலைய நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று வரும்படி அவரிடம் கூறினர். அடுத்த நாள், ஜூன் 5ம் தேதி, தான் ஊரிலில்லாததை விளக்கி, டாக்சி எடுப்பதற்கான அனுமதி கேட்கும் கடிதத்தை சஞ்சய் விமான நிலைய அலுவலகத்தில் கொடுத்தார். அதை நகல் கூட எடுத்திருக்கவில்லை. டாக்சியை இழப்பாரென அவர் கற்பனை செய்திருக்கவில்லை.
3-4 முறை அவர் மீண்டும் விமான நிலைய அலுவலகத்துக்கும் வாகன நிறுத்தத்துக்கும் சென்றார். இதைச் செய்ய அவரால் உள்ளூர் ரயில் பிடிக்க (ஊரடங்கு காரணத்தால்) முடியவில்லை. பேருந்தில்தான் செல்ல வேண்டும். அதுவும் குறைக்கப்பட்ட சேவைகளால் அதிக நேரம் எடுத்தது. ஒவ்வொரு முறையும் திரும்பி வருமாறு அவருக்கு சொல்லப்பட்டது. பிறகு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அவருடைய டாக்சி ஏலம் விடப்பட்டதாக சொல்லப்பட்டது.
சஞ்சயும் இன்னொரு டாக்சி ஓட்டுநரும் ஜூன் 30ம் தேதி புகாரளிக்க சகார் காவல் நிலையத்துக்கு சென்றனர். “நோட்டீஸ் அனுப்பியபோதே நீங்கள் வாகனத்தை எடுத்திருக்க வேண்டும். சட்டப்பூர்வமாகதான் இது நடந்திருக்கிறது என அவர்கள் சொன்னார்கள்,” என்கிறார் சஞ்சய். “ஆனால் எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. என்னுடைய பக்கத்துவீட்டுக்காரர்களிடமும் விசாரித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்திருந்தால், டாக்சியை நான் எடுத்திருக்க மாட்டேனா?”. இத்தகைய ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் ஊரடங்குச் சூழலை விமான நிலைய அதிகாரிகள் யோசிக்க மாட்டார்களா எனக் கேட்கிறார் அவர்.
“என்னுடைய தந்தை இந்த வாகனத்தை அவரின் ஊதியத்திலிருந்து வாங்கினார். எல்லா வருடங்களுக்குமான தவணைகளை அவர் கட்டியிருக்கிறார்,” என நினைவுகூர்கிறார் சஞ்சய். தந்தைக்கு வயதான காரணத்தால் 2014ம் ஆண்டில் டாக்சியை ஓட்டத் துவங்குவதற்கு முன் அவர் ஒரு மெக்கானிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
டாக்சிகள் ஏலமிடப்படுவதற்கு முன் அவற்றை சஞ்சயும் ஷிவ்புஜனும் பார்க்கவில்லை. உத்தரப்பிரதேசத்திலிருந்து திரும்பி வர, ஷிவ்புஜனுக்கு ரயில் நேரங்களை பார்க்கக் கற்றுக் கொடுத்த கிருஷ்ணகாந்த் பாண்டே அவரின் டாக்சி கொண்டு செல்லப்படுவதை பார்த்தார். 2008ம் ஆண்டில் இண்டிகோ காரை 4 லட்ச ரூபாய்க்கு அவர் வாங்கினார். 54 மாதங்களுக்கு தவணைகள் கட்டி அக்கடனை அடைத்தார்.
“இரவில் நான் இங்கு இருந்தேன். என்னுடைய டாக்சியையும் பிறவற்றையும் கொண்டு செல்வதை பார்த்தேன். வெறுமனே நின்று பார்த்துக் கொண்டிருக்கதான் முடிந்தது. என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை,” என்கிறார் 52 வயது கிருஷ்ணகாந்த் ஜூன் 29ம் தேதி இரவை குறிப்பிட்டு. நாங்கள் அன்னவாடி வாகன நிறுத்தத்துக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அங்கு கேட்டின் மீது பெரிய பலகை இருந்தது: ‘இந்த நிலம் விமான நிலைய அதிகாரத்தால் மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனத்துக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.’
டாக்சி எடுத்துச் செல்லப்பட்டதை குறித்து சகர் காவல் நிலையத்தில் கிருஷ்ணகாந்த் புகார் கொடுக்கச் சென்றபோது அங்கு யாரும் அவரை பொருட்படுத்தவில்லை என்கிறார் அவர். உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அவரின் ஊரான லாவிலிருந்து மார்ச் 2021-ல் திரும்பியபோது வாகன நிறுத்தத்தில் டாக்சியை எடுப்பதற்கு அதன் எஞ்சினை பழுது பார்க்க வேண்டிய சூழல். “ஒரே இடத்தில் இயக்கப்படாமல் இருந்ததால் அதன் இயக்கம் நின்றுவிட்டது,” என்கிறார் அவர். “ஆனால் எஞ்சினை சரி செய்ய என்னிடம் பணமில்லை. அதற்கு நான் பணம் சேமிக்க வேண்டியிருந்தது. ஒரு வருடமாக சவாரியும் இல்லை.”
மார்ச்சிலிருந்து அக்டோபர் 2020 வரை கிருஷ்ணகாந்த் மும்பையில் இருந்தார். கடந்த வருடம் ஜுலையிலிருந்து ஆகஸ்ட் வரை பணிபுரிய முயன்றார். ஆனால் விமானநிலையப் பகுதி கடும் பாதுகாப்புக்குள் இருந்தது. நவம்பர் மாதம் லாவுக்கு அவர் சென்றுவிட்டு இந்த வருட மார்ச்சில் மும்பை திரும்பினார். கொஞ்ச நாட்களிலேயே அடுத்த ஊரடங்கு தொடங்கியது. அவரால் வேலை செய்ய முடியவில்லை. அவரின் டாக்சி அன்னவாடி வாகன நிறுத்ததிலேயே இருந்தது.
*****
ஏலம் விடுவதை தவிர்க்க முடியாது என்கிறது மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம். “பாதுகாப்புக் காரணங்களுக்காகதான் இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது. விமான நிலையம் என்பது மிகவும் முக்கியமான இடம். ஒரு வருடத்துக்கு மேலாக அந்தப் பக்கம் வராமலேயே ஒருவர் டாக்சியை அங்கு நிறுத்தி வைக்க முடியாது,” என்கிறார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரந்தீர் லம்பா. “அரசின் இடம்தான் விமான நிலையத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக்கான பொறுப்பும் எங்களுக்குதான் உண்டு.”
அதிக நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 216 டாக்சிகளின் ஓட்டுநர்களுக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக லம்பா சொல்கிறார். இரண்டு நோட்டீஸ்கள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டன. ஒன்று டிசம்பர் 2020லும் அடுத்தது பிப்ரவரி 2021லும். “டாக்சிகளின் உரிமையாளர்கள் யார், அவர்களின் முகவரிகள் என்ன முதலிய தகவல்களை அறிய நாங்கள் ஆர்டிஓவை அணுகினோம். ஒரு பொது அறிவிப்பும் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது,’ என்கிறார் அவர்.
ஆர்டிஓ, காவல்துறை, டாக்சி சங்கங்கள் எல்லாவற்றுக்கும் எல்லா தகவல்களும் தெரிவிக்கப்பட்டன என உறுதிப்படுத்துகிறார் டாக்டர் லம்பா. “எல்லாரையும் நாங்கள் அணுகி, எல்லா முறைகளையும் பின்பற்றினோம்.”
சஞ்சய் அனுப்பியக் கடிதம் என்னவானது? “கடைசி நிமிடத்தில் எங்களிடம் வந்த ஓட்டுநர்களுக்குக் கூட தேவையான தகவல்கள் கொடுத்து டாக்சிகளை திருப்பிக் கொடுத்தோம்,” என்கிறார் லம்பா. “இந்த ஓட்டுநர் ஒருவேளை தவறான நபரை அணுகியிருக்கலாம். அவருடைய கடிதம் எங்களுக்குக் கிடைக்கவில்லை.”
*****
‘வாழ்க்கையில் எல்லாமும் மெதுவாக மேம்பட்டுக் கொண்டிருந்தது. 2018ம் ஆண்டில் விஷ்ணுவின் வேலை காரணமாக சொந்தமாக ஃப்ளாட் வாங்கினோம். அவனால் நாங்கள் பெருமை கொண்டோம். ஆனால் என் மகனை நான் இழந்துவிட்டேன். அடுத்ததாக டாக்சியும் ஏலம் விடப்பட்டுவிட்டது’
மார்ச் 2020-ல் ஊரடங்கு தொடங்கியபோது எப்படியோ ஷிவ்புஜன் பாண்டே அவரின் ஊருக்கு திரும்பிவிட்டார். அவருடன் மனைவி புஷ்பாவும் இளைய மகன் விஷாலும் சென்றிருந்தார்கள். அவர்களின் மூத்த மகனான 32 வயது விஷ்ணு வடக்கு மும்பையிலிருந்த அவரின் வீட்டிலேயே மனைவி மற்றும் நான்கு வயது மகள் ஆகியோருடன் தங்கிவிட்டார். அவர் ஒரு மருந்து நிறுவனத்தில் பார்த்துக் கொண்டிருந்த வேலை, தொற்றுக்காலத்தால் பறிபோனது.
ஜூலை 2020-ல் திடீரென நடுக்கமும் மயக்கமும் ஏற்பட்டது. அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. “அதிக அழுத்தத்தில் அவர் இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நான் கிராமத்தில் இருந்தேன். என்ன நடக்கிறதென எனக்கு தெரியவில்லை. தொலைபேசி அழைப்புகளில் அவன் இயல்பாகதான் பேசுவான். உடனே நாங்கள் மும்பைக்கு வந்தோம்,” என்கிறார் ஷிவ்புஜன். 3-4 லட்சம் ரூபாய் செலவானது. உள்ளூர் வட்டிக்காரரிடம் மூன்று பிகா விவசாய நிலத்தை வைத்து ஷிவ்புஜன் கடன் வாங்கினார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் 1ம் தேதி விஷ்ணு இறந்து போனார்.
“எப்போதும் என்னை கிராமத்துக்கு சென்று ஓய்வு பெறும்படி சொல்வான். எல்லாவற்றையும் அவனே பார்த்துக் கொள்வதாக சொன்னான். விஷாலுக்கும் ஒரு வேலை கிடைத்துவிட்டால் நான் ஓய்வு பெறலாமென காத்துக் கொண்டிருந்தேன்,” என்கிறார் ஷிவ்புஜன். 25 வயது விஷால் வணிகவியலில் முதுகலை முடித்திருக்கிறார். அரசு வேலைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். “ஆனால் இது நடந்த பிறகு மும்பைக்கு திரும்பி வர வேண்டுமென எங்களுக்கு தோன்றவில்லை. உங்கள் கண் முன்னாலேயே உங்களின் மகன் இறந்து போவது கொடுமையான விஷயம். என் மனைவி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை,” என்கிறார் ஷிவ்புஜன்.
இறுதிச் சடங்குக்காக குடும்பம் கிராமத்துக்குச் சென்றது. டாக்சி ஏலம் விடப்பட்டத் தகவலை கிருஷ்ணகாந்த் சொன்னதும் ஜுலை 2021-ல் ஷிவ்புஜன் மும்பைக்குத் திரும்பினார்.
“வாழ்க்கை மெதுவாக மேம்பட்டுக் கொண்டிருந்தது,” என்கிறார் அவர். “2018ம் ஆண்டில் விஷ்ணுவின் வேலை காரணமாக சொந்தமாக ஃப்ளாட் வாங்கினோம். அவனால் நாங்கள் பெருமை கொண்டோம். ஆனால் என் மகனை நான் இழந்துவிட்டேன். அடுத்ததாக டாக்சியும் ஏலம் விடப்பட்டுவிட்டது’
ஊரடங்குக்கு முன் இரவு 8 மணியிலிருந்து காலை 8 மணி வரை, சர்வதேச விமானங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு டாக்சி ஓட்டி ஷிவ்புஜனால் மாதத்துக்கு 10,000 முதல் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது. பிறகு அவர் டாக்சியை நிறுத்திவிட்டு ரயிலேறி வீட்டுக்குச் செல்வார். ஊரடங்கிலிருந்து அவர் மும்பையில் வேலை பார்க்கவில்லை. கடந்த மாதம் ஏலத்தை பற்றி கேள்விப்பட்டு நகரத்துக்கு சென்றவர் மீண்டும் கிராமத்துக்கே திரும்பி விட்டார்.
சஞ்சய் மாலி ஊரடங்குக்கு முன் நாளொன்றுக்கு 600-800 ரூபாய் சம்பாதித்தார். ஜூலை 2021ன் இரண்டாம் வாரத்தில் ஒரு டாக்சியை வாடகைக்கு எடுத்து ஓட்டத் தொடங்கினார். வார வாடகை ரூ.1,800. அவர் வாங்கிய கடன்களை பற்றிய கவலையில் இருக்கிறார். சகோதரியின் திருமணத்துக்கென வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடனில் பாதி மட்டும்தான் அடைக்கப்பட்டிருக்கிறது. இவையன்றி குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம் வேறு இருக்கிறது. “என்னுடைய சேமிப்பு, எல்லா பணமும் முடிந்துவிட்டது. நான் வேலை தேட வேண்டும்,” என்கிறார் அவர்.
வடக்கு மும்பையில் இருக்கும் குப்பத்தில் அவருடைய வீட்டுக்கு சென்றபோது, மூன்று நாட்கள் வாடகை டாக்சியை ஓட்டி, வெறும் 850 ரூபாய் சம்பாதித்துவிட்டு பிற்பகல் 2 மணி அளவில் வீடு திரும்பியிருந்தார். மாலையில் திரும்ப வேலைக்குச் சென்று விடுவார்.
“வேலை பார்க்கத் தொடங்கியதிலிருந்து அவரை நிம்மதியாக நான் பார்த்ததில்லை,” என்கிறார் அவரின் மனைவி சதானா மாலி கவலையுடன். “அவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. மருந்துகளுக்கு செலவு செய்யாமல் இருக்க, அவர் மருந்துகளை தவிர்த்துவிடுகிறார். அல்லது ஒரு நாளுக்கு ஒருவேளை மட்டும் மருந்து எடுத்துக் கொள்கிறார். டாக்சியை இழந்ததால் அவர் மோசமான நிலையில் இருக்கிறார்.”
அவர்களின் மகள் தமன்னா 9ம் வகுப்புப் படிக்கிறார். மகன் ஆகாஷ் 6ம் வகுப்புப் படிக்கிறார். கிராமத்திலிருந்து இணைய வழியில் அவர்கள் படிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் தனியார் பள்ளியில் கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் (சில தள்ளுபடிகளுடன்) கட்டணம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாலியின் குடும்பத்தால் தமன்னாவுக்கான கடந்த வருட கட்டணம் மட்டுமே கட்ட முடிந்தது. “ஆகாஷ்ஷின் படிப்பை (இந்த வருடம்) நாங்கள் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவனுக்கான 6ம் வகுப்புக் கட்டணம் எங்களால் கட்ட முடியவில்லை. படிப்பை நிறுத்த வேண்டாமென அவன் வற்புறுத்துகிறான். நாங்களும் விரும்பவில்லை,” என்கிறார் சஞ்சய்.
குடும்பத்தால் தமன்னாவுக்கான கடந்த வருடக் கட்டணம் மட்டுமே கட்ட முடிந்தது. ‘ஆகாஷ்ஷின் படிப்பை (இந்த வருடம்) நாங்கள் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவனுக்கான 6ம் வகுப்புக் கட்டணம் எங்களால் கட்ட முடியவில்லை. படிப்பை நிறுத்த வேண்டாமென அவன் வற்புறுத்துகிறான்’
வடக்கு மும்பையின் குப்பத்தில் வாழும் கிருஷ்ணகாந்த் (அவரது குடும்பத்தைச் சார்ந்த பலரும் கிராமத்துக்கு திரும்பி விட்டனர்) அவரின் அறை வாடகையான ரூ.4,000த்தை பகுதி பகுதியாகத்தான் கட்ட முடிகிறது. மே 2021-லிருந்து இறந்துபோன தம்பியின் பழைய கைவிடப்பட்ட டாக்சியை அவர் ஓட்டத் தொடங்கினார். “நாளொன்றுக்கு 200-300 ரூபாய் சம்பாதிக்க முயலுகிறேன்,” என்கிறார் அவர்.
டாக்சி பறிபோனதை கேள்வி கேட்காமல் விடக் கூடாது என அவர் முடிவெடுத்திருக்கிறார்.
பாரதிய டாக்சி சலக் சங் என்கிற டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் வழக்கறிஞர் தேட அவருக்கு உதவியது. பாதுகாப்பு கருதிதான் ஏலம் நடத்தப்படுகிறது என்றாலும் அது நடத்தப்பட்ட காலக்கட்டம் தவறானது என்கிறார் சங்கத்தின் துணைத் தலைவரான ராகேஷ் மிஷ்ரா.
“எங்களுக்கும் நோட்டீஸ் பற்றி சில மாதங்கள் வரை (மார்ச் 2021 வரை) தெரியவில்லை. எங்களின் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. எங்களின் கவனத்துக்கு இப்பிரச்சினை வந்தபோது, வாகனம் நிறுத்த வேறு இடம் வழங்குமாறு அவர்களிடம் (விமான நிலைய நிர்வாகிகளிடம்) கேட்டோம். ஊரடங்கு காலத்தில் அவர்கள் எங்கே வாகனங்களை நிறுத்த முடியும்? எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஓட்டுநர்களை தொடர்புகொள்ள முயன்றேன். நோட்டீஸ்கள் அவர்களின் மும்பை முகவரிகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருந்தன. அவை ஓட்டுநர்களின் கிராமங்களை எப்படி சென்றடைய முடியும்? மும்பையில் இருந்தோர் டாக்சிகளை வாகன நிறுத்தத்திலிருந்து எடுத்து விட்டனர்.”
“வழக்குத் தொடர அவர்கள் விரும்பினால் அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது,” என்கிறார் லம்பா. ஏலம் விடப்பட்ட டாக்சிகள் நிறுத்தப்பட்ட இடம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்கிறார் அவர். “அத்தனை பெரிய இடத்தை டாக்சிகளுக்கு பயன்படுத்துவதில் அர்த்தம் இல்லை. கறுப்பு - மஞ்சள் டாக்சிகளுக்கான தேவை குறைந்து விட்டது. பயணிகள் ஓலா அல்லது ஊபரைத்தான் விரும்புகின்றனர். விமான நிலையத்துக்கு அருகே ஒரு சிறு வாகன நிறுத்தம் டாக்சிகளுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கிறது.”
ஏலம் விடப்பட்ட 42 டாக்சிகளின் ஓட்டுநர்களையும் தொடர்பு கொள்ள கிருஷ்ணகாந்த் முயன்று கொண்டிருக்கிறார். (சஞ்சய் மாலி அவருக்கு உதவுகிறார்). “சிலர் இன்னும் கிராமத்தில்தான் இருக்கின்றனர். இந்த விஷயம் பற்றியே தெரியாமல் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் எனக்குத் தெரியாது. எனவே அவர்களை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தைப் பற்றி சொல்லும் நபராக நானிருக்க விரும்பவில்லை. ஆனால் வேறு யார்தான் அவர்களுக்கு தகவலைக் கொடுப்பது? மும்பைக்கு திரும்புவதற்கான ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி கூட சிலருக்கு இல்லை.”
வழக்கறிஞர் தயாரித்த புகார் கடிதத்தில் சில டாக்சி ஓட்டுநர்களிடமிருந்து அவர் கையொப்பங்கள் பெற்றிருக்கிறார். ஜூலை 19ம் தேதியிட்ட அக்கடிதம் சகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. “இப்போது என்ன செய்வது?” என அவர் கேட்கிறார். “என்னால் படிக்க முடியும். எனவே நான் இந்த சட்ட வேலையைச் செய்கிறேன். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறேன். என்னுடைய கல்வி இப்போது ஏதோ ஒரு விஷயத்துக்கேனும் பயனளிக்கிறது.” இரவு நேரத்தில் கிருஷ்ணகாந்த் பழைய டாக்சியை ஓட்டுகிறார். “எனக்கு வேறு வழியில்லை. எனக்கு சட்டம் தெரியாது. ஆனால் அவர்கள் எங்களின் அடிவயிற்றில் அடித்து விட்டார்கள். அவர்கள் எடுத்துக் கொண்டது என்னுடைய டாக்சியை மட்டுமல்ல், என்னுடைய வாழ்க்கையையே பறித்துக் கொண்டார்கள்,” என்கிறார் அவர்.
அவரும் பிற ஓட்டுநர்களும் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். “இப்போது என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் அவர். “இரண்டு மாதங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். வழக்கை விட்டு விடலாமா? ஏதேனும் நடக்குமா? நான் அமைதியாக இருக்க விரும்பவில்லை. எனினும் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறேன்.”
தமிழில் : ராஜசங்கீதன்