“நாங்கள் ஒருபோதும் திரும்பிச் செல்ல மாட்டோம்,” என்கிறார் பீமா சோடி. “நாங்கள் அமைதியைத் தேடி வீட்டைவிட்டு வந்தோம், காட்டுவாசிகள் [நக்சலைட்], ஜூடும்வாலி [சல்வா ஜூடும் போராளிகள்] ஆகியோர் முன்னோர்கள் கிராமத்தில் எங்களை தொந்தரவு செய்தனர்.”
சோயம் லிங்கமாவும் சத்திஸ்கரின் தண்டேவாடா மாவட்டம் பந்தர்பதரில் உள்ள தனது கிராமத்திற்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்கிறார். “நாங்கள் அங்கிருந்து ஓடிவந்துவிட்டோம்...” அவரும் பீமாவும் அங்குள்ள 27 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அனைவருமே சத்திஸ்கரிலிருந்து வந்து இப்போது ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் புர்கம்பாடு மண்டலத்தில் உள்ள சிப்ருபாடுவில் வாழ்கின்றனர்.
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள், தெலங்கானாவின் கம்மம், வாராங்கல் மாவட்டங்களில் காணப்படும் உள் குடிபெயர்வோரின் பல குடியிருப்புகளில் இதுவும் ஒன்று.
பெரும்பாலானோருக்கு சொல்வதெற்கென பல வன்முறை கதைகள் உள்ளன. சுக்மா மாவட்டத்தின் கோன்டா மண்டலில் உள்ள தட்மேட்லா கிராமத்தைச் சேர்ந்த 30 வயது ரவி சோடி பேசுகையில், “2005ஆம் ஆண்டு எங்கள் கிராமம் தாக்கப்பட்டபோது வீட்டைவிட்டு வெளியேறினோம்... கிராமத்தினர் அனைவரும் காட்டிற்குள் சென்றோம். ஆனால் எனது 30 வயது மாமா அங்கு சிக்கிக் கொண்டார். அவர் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார், ஒட்டுமொத்த கிராமமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அச்சத்தில் நாங்கள் அங்கிருந்து இங்கு வந்தோம்,” என்றார். சோடி தற்போது கம்மம் மாவட்டம் சிந்தலபாடுவில் வசிக்கிறார்.
பழங்குடியினச் சமூகங்களில் குறிப்பாக கோண்டு (அல்லது ஆந்திராவின் பஸ்தார், கோயாவில் உள்ள முரியா) சத்திஸ்கரின் எல்லை மாவட்டங்களான சுக்மா, தண்டேவாடா, பீஜப்பூரிலிருந்து அவ்வப்போது விவசாய வேலைக்காக மாநில எல்லைகளைத் தாண்டி புலம்பெயர்கின்றனர். எனினும் அப்பகுதியில் நக்சல் இயக்கத்தினருக்கு இடையே நடைபெறும் வன்முறையில் சிக்கிக் கொள்கின்றனர். 2005ஆம் ஆண்டு சத்திஸ்கரில் சல்வா ஜூடும் போராளிகளுக்கு எதிரான புரட்சியை அரசு ஆதரித்தது. பழங்குடிகள் பெருமளவில் புலம்பெயர உந்தப்பட்டனர். இந்த மோதலில் பலரும் தங்களின் முன்னோர் நிலத்தையும், வனங்களையும் இழந்தனர்.
தங்களின் புதிய வீடுகளில் பாதுகாப்பாக உணர்வதாக பலரும் சொல்கின்றனர், உள்ளூர் விவசாயிகளின் வயல்களில் வேலைசெய்து தினக்கூலி பெறுகின்றனர். சிப்ருபடுவில் வசிக்கும் 19 வயது ஆர்த்தி கல்மு 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் முரிய பழங்குடியைச் சேர்ந்த மங்குவை திருமணம் செய்த பிறகு சத்திஸ்கரின் சுக்மா மாவட்டம் போட்கோ கிராமத்திலிருந்து இங்கு வந்துள்ளார். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள மங்கு மாதம் ரூ.3,000 சம்பளத்திற்கு கிராமப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். “மங்கு படித்த நல்ல மனிதர். கிராமத்தினர் அவரை இங்கு கொண்டு வந்துள்ளனர்,” என்கிறார் ஆர்த்தி. பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்க யாருமில்லை. “நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி.”
சுமார் 200 குடியேற்றங்களில் உள்ள வீடுகளில் குறைந்தது 50,000 புலம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர். அவற்றில் சிப்ருபடுவும் ஒன்று என சுகாதார விவகாரங்களில் வேலை செய்து வரும் அரசு சாரா அமைப்பு தெரிவிக்கிறது. உள்ளூர் மக்களுடன் மோதலை தடுப்பதற்காக வனப்பகுதிக்குள் குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வனச்சூழலுடன் பழக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அது விவசாயத்திற்கு நிலமும், குடிசைகளை அமைப்பதற்கு இடமும் தருகிறது. இருதரப்பிலும் ஒரே மொழியே பேசுவதால் தகவல் தொடர்பு என்பதும் எளிதாகிறது.
அங்குள்ள தொழிலாளர்களில் பீமா சோடி மற்றும் அவரது மனைவி சோடி மங்கியும் உள்ளனர். அவர்கள் தினக்கூலி ரூ.120க்கு மிளகாய்களை பறிக்கின்றனர், எனினும் அவர்களுக்கு கூலியாக மிளகாயைப் பெறவே விரும்புகின்றனர். அவர்கள் பறிக்கும் ஒவ்வொரு 12 கிலோவிற்கும் ஒரு கிலோ கிடைக்கும். இத்தம்பதிக்கு ஆறு வயது மகள் லக்ஷ்மி, மூன்று வயது மகன் பொஜா ஆகியோர் உள்ளனர். இவர்கள் சிலசமயம் 100 நாள் கிராமப்புற வேலை உறுதி திட்டங்களிலும் பணியாற்றுன்றனர். அரிசி, சோளம் போன்ற சில பயிர்களையும் பயிரிடுகின்றனர். “இங்கு எனக்கென சொந்தமான நிலத்தை உருவாக்கிக் கொண்டுள்ளேன்,” என்கிறார் பீமா. வன நிலத்தை ஆக்கிரமித்து வளர்த்தாலும், பட்டா (உரிமை ஆவணம்) இல்லாதபோதும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
மிளகாய் பறிக்கும் பருவமான பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் மட்டும் புலம்பெயர சிலர் விரும்புகின்றனர், பிறகு வீடு திரும்பிவிடுகின்றனர். “நாங்கள் உறவினர்களுடன் வசிக்கிறோம், கிடைக்கும் வேலையைச் செய்கிறோம். சத்திஸ்கரில் எங்கள் கிராமத்தில் அறுவடையை நாங்கள் முடித்துவிட்டோம், [தோட்ட உரிமையாளர்களுக்கு] யூக்லிப்டஸ் மரங்களை வெட்டும் வேலை இங்கு கிடைக்கும்,” என்கிறார் 12 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் (பெயர் சொல்ல மறுத்துவிட்டார்). அவரும், மற்றவர்களும் மிளகாய் பறிக்கின்றனர். தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் வசிப்பவர்களின் உணவுமுறையில் அவர்கள் கூலியாக பெறும் மிளகாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பருவகால புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மங்கராஜ் சோடி ஆதரவளிக்கிறார். “10 ஆண்டுகளுக்கு முன் 12 வயது கூட இருக்காது, ஆசிரமப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இங்கு வந்தேன். குடும்பத்தினரால் படிக்க வைக்க முடியவில்லை என்பதால் பள்ளியிலிருந்து நின்றுவிட்டேன்,” என்கிறார் அவர். “பிற தொழிலாளர்களுடன் இங்கு வந்து குடியேற்றம் செய்தேன். சில வன நிலங்களை சுத்தப்படுத்தி விவசாயம் செய்கிறேன். என் கிராமத்தில் எவ்வளவு நிலம் இருந்தது என்றுகூட எனக்குத் தெரியாது.”
மற்றொரு கிராமவாசியான மத்கம் நந்தா பேசுகையில், “டொர்னாபல், பொலம்பள்ளி கிராமத்தினர் சல்வா ஜூடுமால் அடிக்கப்பட்டபோது நாங்கள் இங்கு ஓடிவந்தோம். நாங்கள் அருகில் துமர்பல் குக்கிராமத்திலிருந்து இங்கு வந்துள்ளோம். இங்கு இரு சகோதரர்கள் உட்பட நான்கு பேர் வந்தோம்.” திரும்பிச் செல்ல விருப்பம் இருக்கிறதா என்று நான் கேட்டேன், “இல்லை, ஒருபோதும் கிடையாது, இந்த இடமே எங்களுக்கு நன்றாக உள்ளது,” என்று அவர் சாதாரணமாக சொல்கிறார்.
எனினும் மறுகுடியேற்றம் செய்த பழங்குடியினருக்கு இன்னும் நிலஉரிமை வழங்கப்படவில்லை. மனித உரிமை குழுக்களின் ஏராளமான களப்பணிக்குப் பிறகு ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா அரசுகள் ரேஷன் அட்டைகள், ஆதார் அட்டைகள் வழங்குகின்றன. சில இடங்களில் வாக்காளர் அடையாள அட்டைகள்கூட வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான புதிய குடியேற்றங்களில் நீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளும் கிடைப்பதில்லை அல்லது போதுமானதாக இல்லை. “அருகமை ரேஷன் கடைக்கு [பொது விநியோக முறை] செல்ல நாங்கள் சிப்புருபடுவிலிருந்து கொண்டபள்ளிக்கு நாங்கள் ஏழு கிலோமீட்டர் நடக்க வேண்டும்,” என்கிறார் மட்கம் நந்தா.
சிப்புருபடுவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு கோதாவரி மாவட்டம் விஞ்சரம் ஊராட்சியில் உள்ள ஜினல்குடாவில், தனது வீட்டிற்கு வெளியே மண் அடுப்பில் சமைக்கும் சுமார் 45 வயது கங்கி. மாலைப் பொழுது என்பதால் சோலார் விளக்குகள் அப்பகுதிக்கு ஒளியூட்டுகின்றன. தண்டேவாடா மாவட்ட டோர்னாபல் காவல்நிலையம் அருகே உள்ள நகல்கொண்டாவில் வசிக்கும் மத்கம் தேவாவிற்கு இந்த வீடு சொந்தமானது என்று அவர் சொல்கிறார். அவரது முதல் மனைவியும், குழந்தையும் அங்கு தொடர்ந்து வேலை செய்கின்றனர். “எங்களுக்கு குழந்தை கிடையாது,” என்கிறார் கங்கி, “ஆனால் முதல் மனைவிக்கு இரு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். எங்களுக்கு அங்கு 4-5 ஏக்கர் நிலம் உள்ளது, ஆனால் அது இரு மகன்களுக்கு போதவில்லை. 2002ஆம் ஆண்டு மிளகாய் பறிக்க தான் முதன்முதலில் கொண்டபள்ளிக்கு வந்தனர். இந்த இடம் குறித்து மக்கள் எங்களிடம் சொன்னார்கள். இங்கு நிலமும், வனமும் உள்ளதால் எங்களுக்கு பிடித்து குடியேறிவிட்டோம்.”
ஜினெல்குடாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண் வீடுகளின் தொகுப்பில் மட்கர் துலேவை நாம் சந்தித்தோம். ஒரு மாதம் முன்பு தான் அவர் சிறிய வீட்டைக் கட்டினார். “உள்ளூர் மக்களுக்கு சொந்தமான பட்லாமடி எனும் பழங்கால கிராமத்தில் உள்ள நிலத்தில் முதலில் நாங்கள் குடியேற்றம் செய்தோம். ஆனால் எங்கள் நிலத்திற்கும், வீட்டிற்கும் இடையே தூரம் அதிகம் இருந்ததால் இங்கு மாறிவிட்டோம். வனநிலத்தில் எங்கள் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி வருகை தந்து இவற்றை இடித்துவிட்டு வெளியேறுமாறு கூறுகின்றனர், ஆனால் நாங்கள் செல்வதற்கு இடமில்லை.”
குக்குனுரு மண்டலத்தில் உள்ள விஞ்சரம் கிராம ஊராட்சியின் தலைவராக புதிதாக (நாங்கள் சென்ற போது) தேர்வு செய்யப்பட்டுள்ள கலுரு பீமயாவை மத்கம் துலே நம்மிடம் அறிமுகம் செய்தார். “சத்திஸ்கரில் நான் கல்மு பீமா,” என்று சிரிக்கும் அவர், “ஆந்திராவில் நான் கலுரு பீமயா ஆகிவிட்டேன். இப்படி தான் எனது பெயரை ஆந்திர பிரதேச அரசு பதிவு செய்துள்ளது!”
அரச எதிர்ப்பு நக்சலைட் இயக்கம் மற்றும் சத்தீஸ்கர் அரசின் ஆதரவுப் பெற்ற கிளர்ச்சிக்கு எதிரான சல்வா ஜூடும் போராளிகளுக்கும் இடையேயான வன்முறையில் சிக்கி, பல பழங்குடியின புலம்பெயர்ந்தோர் தங்கள் பூர்வீக நிலங்களையும் காடுகளையும் இழந்துள்ளனர்
சத்திஸ்கரின் சுக்மா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கல்மு, டோர்னாபல் நிவாரண முகாமிற்கு செல்லுமாறு தனது கிராம மக்களை சல்வா ஜூடும் வற்புறுத்தியபோது இங்கு வந்துள்ளார். அவர்கள் ஒரு மாதம் முகாமில் தங்கிவிட்டு வெளியேறினர்.
மறுகுடியேற்றத்திற்கு பிறகு கல்முவிற்கு மட்டும் புதிய அடையாளம் கிடைக்கவில்லை. “அங்குள்ள எல்மா தேவா இங்கு செல்மா தேவயா,” என சிரிக்கிறார் சிப்புருபடுவிலிருந்து 25-30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்மம் மாவட்டம் உபகா கிராம ஊராட்சியின் சிந்தலபடு கிராம இளைஞர். “ தெலுங்கில் தேவா என்பது தேவயா ஆகிறது. இதனால் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. எனக்கு இரண்டுமே சரிதான்.” எல்மாவிற்கு தனது வீட்டிற்கு திரும்பும் எண்ணமில்லை. “இந்த நிலம் அமைதியாக உள்ளது, நாங்கள் இங்கு நன்றாக இருக்கிறோம்... சத்திஸ்கரை விட்டு நாங்கள் வெளியேறியபோது இருதரப்பிலும் [ராணுவம் மற்றும் தீவிராத அமைப்பு] அனுமதி வாங்கினோம். இதனால் அவர்கள் எந்த முகாமிலும் நாங்கள் இணைய மாட்டோம் என கருதினர்.”
கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சுக்மா, தண்டேவாடா, பிஜாபூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 22 குடும்பங்கள் சிந்தலாபடுவில் குடியேற்றம் செய்துள்ளதாக உள்ளூர்வாசிகள் மதிப்பீடு செய்கின்றனர். இங்கு கிராமத்திற்குள் முறையான சாலை வசதி கிடையாது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாராயண்புரத்திற்குச் செல்ல வேண்டும்.
சிந்தலாபடுவில் குடியேற்றம் செய்தவர்களுக்கும் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு ரேஷன் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களுக்கு குடிநீர், சாலைகள், மின்சாரம், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. உள்ளூர் காவல்துறையும், வனத்துறையும் இவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்துள்ளன. அழைப்பாணை வரும்போதெல்லாம் பழங்குடியினர் காவல்நிலையத்திற்குச் சென்று ஆஜராக வேண்டும்.
காலப்போக்கில், 2011-12 ஆண்டுவாக்கில் சல்வா ஜூடும் கலைக்கப்பட்ட பிறகு வீடு திரும்புவது பாதுகாப்பானது என கருதி பலரும் சத்திஸ்கர் திரும்புகின்றனர். ஆனால் சில பழங்குடியின புலம்பெயர்ந்தோருக்கு புதிய நிலத்தில் கிடைக்கும் நிச்சய அமைதி, விளைச்சலுக்கு சிறிதளவு நிலம் போன்றவையே போதுமானதாக உள்ளது.
தமிழில்: சவிதா