கிருஷ்ணா கவாடே வேகமாக வளர்ந்து விட்டார். கிராமத்தின் பல குழந்தைகள் பள்ளிக்கு சென்றபோது அவர் விவசாயக் கூலியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாட்கூலி ரூ.200. அவரின் நண்பர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது தினக்கூலி வேலைக்காக கட்டுமானத் தளங்களில் அவர் காத்திருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன், 13 வயதில், குடும்பத்துக்காக வருமானம் ஈட்டத் தொடங்கினார். குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர். அவரை விட வெறும் மூன்று வயதே அதிகமாக இருந்த சகோதரர் மகேஷ்ஷும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
மனநிலை பாதிப்பு இருப்பதால் அவர்களின் தந்தையால் வேலைக்கு செல்ல முடியாது என்றும் தாய் தொடர்ந்து நோய்வாய்ப்படுகிறார் என்றும் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த 80 வயது ரகுநாத் கவாடே சொல்கிறார். கிருஷ்ணாவின் தாத்தா அவர். “என் மனைவிக்கும் எனக்கும் வயதாகி விட்டது. எனவே என் பேரர்கள் சீக்கிரமாகவே அதிகமான பொறுப்புகளை எடுக்க வேண்டியச் சூழல். கடந்த 4-5 வருடங்களாக அவர்களின் வருமானத்தில்தான் குடும்பம் தாக்குப்பிடிக்கிறது,” என்கிறார் அவர்.
கவாடேக்கள் மேய்ச்சல் சமூகமான தங்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள். விமுக்தா சாதியாக மகாராஷ்டிராவில் பட்டியலிடப்பட்டிருக்கும் பழங்குடிச் சமூகம். நவ்கன் ரஜூரியில் ஒரு சிறுநிலம் குடும்பத்துக்கு உண்டு. ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலம். சோளம் மற்றும் கம்பு அங்கு பயிரிடப்படுகிறது. குடும்பத்தின் உணவுக்கு தேவையான அளவு விளைவிக்கப்படுகிறது.
கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஆகியோரின் மாத வருமானமான 6000-8000 ரூபாய்தான் குடும்பத்துக்கான செலவுகளுக்கு உதவுகிறது. ஆனால் கோவிட் தொற்று குடும்பத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. மார்ச் 2020-ல் தொடங்கிய ஊரடங்கிலிருந்து இருவருக்கும் வேலை இல்லை. வருமானமும் இல்லை.
“செயற்பாட்டாளர்களும் அரசும் கொடுத்த இலவச உணவுப் பொருட்களை கொண்டுதான் நாங்கள் வாழ்ந்தோம்,” என்கிறார் இருவரின் பாட்டியான 65 வயது சுந்தர்பாய். “வீட்டில் பணம் இல்லை. எண்ணெய், காய்கறி கூட வாங்க முடியவில்லை. ஊரடங்குக்கு பின்னான முதல் மூன்று மாதங்கள் எங்களை நொறுக்கிப் போட்டது.”
ஜூன் 2020-ல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மெல்ல தொடங்கியபோதும், தினக்கூலி வேலை பீடில் கிடைப்பது கடினமாக இருந்தது. “எனவே புனேவுக்கு புலம்பெயர மகேஷ் முடிவெடுத்தான்,” என்கிறார் ரகுநாத். வீட்டுக்குப் பணம் அனுப்பும் அளவுக்கான வேலை அவருக்குக் கிடைக்கவில்லை. “குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக கிருஷ்ணா இங்கேயே இருந்துவிட்டான். பீட் மாவட்டத்தில் வேலை தேடினான்.”
ஆனால் அந்த முடிவு ஆபத்தாக மாறிவிட்டது.
வருமானம் ஈட்ட வேண்டிய பொறுப்பு கிருஷ்ணாவை அழுத்தியது. அந்த 17 வயது இளைஞரின் மனநிலையை அழுத்தம் பாதித்தது. அவரின் பதற்றமும் மன அழுத்தமும் குடும்பத்துக்கு புலப்பட்டது. “அச்சமயத்தில் வேலை இல்லை,” என்கிறார் ரகுநாத். “எரிச்சலூட்டுமளவுக்கு அவர் மாறினார். “சாப்பிட்டானா எனக் கேட்டால் கூட எங்களைத் திட்டுவான். பிறருடன் பேசுவதையே நிறுத்திவிட்டான். வேலை இல்லாததால் தூங்கியே நேரத்தைக் கழித்தான்.”
அந்தக் குடும்பம் நடக்கப் போவதை அறிந்திருக்கவில்லை. கடந்த வருட ஜூலை மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு மதியம் சுந்தர்பாய் கிருஷ்ணாவின் அறைக்கு சென்றபோது, அவரின் உயிரற்ற உடல் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது.
“மகேஷ் இங்கு இருந்தபோது அவனுக்கு ஆதரவாக இருந்தது,” என்கிறார் சுந்தர்பாய். “யாரோ ஒருவர் தன்னை பார்த்துக் கொள்ள இருப்பதாக நினைத்தான். மகேஷ் புனேவுக்கு சென்றவுடன் குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட வேண்டிய பொறுப்பு அவனுக்கு சுமையாக இருப்பதாக உணர்ந்திருக்கிறான் என நினைக்கிறேன். நிலையற்ற வருமானம் அவனுக்கான பொறுப்பைச் செய்ய முடியவில்லை என அவனை யோசிக்க வைத்திருக்கும்.”
கிருஷ்ணாவின் மரணத்துக்கு பிறகு 21 வயது மகேஷ் வீடு திரும்பினார். மீண்டும் அவர் தினக்கூலி வேலை பார்க்கத் தொடங்கினார். அதுவும் வேலை இருக்கும்போது மட்டும்தான். குடும்பத்தின் இருப்புக்கு தற்போது அவர் மட்டுமே வழியாக இருக்கிறார்.
மார்ச் 2020-லிருந்து கோவிட் தொற்று கிருஷ்ணாவின் குடும்பத்தை போலவே பலரின் குடும்பங்களை வறுமைக்குள் தள்ளியிருக்கிறது. மார்ச் 2021-ல் வெளியாகிய அமெரிக்க ஆய்வறிக்கை யின்படி: ”இந்தியாவில் வறுமையிலிருப்போரின் (2 டாலருக்கும் குறைவான ஒருநாள் வருமானம் கொண்டோர்) எண்ணிக்கையில் 7.5 கோடி, கோவிட் தொற்று ஏற்படுத்திய பின்னடைவால் அதிகரித்திருக்கிறது.” ஏற்கனவே பஞ்சம் மற்றும் கடனால் பல வருடங்களாக தத்தளித்துக் கொண்டிருக்கும் பீட் மக்களின் வாழ்க்கைகளை கோவிட் தொற்று இன்னும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கியது.
பொருளாதாரச் சுமை குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் குழந்தைகள் நல வாரியத்தில் முன்னாள் உறுப்பினராக இருந்த குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் சந்தோஷ் ஷிண்டே, இந்த நெருக்கடி குழந்தைகளின் மனநிலையில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்கிறார். “குறிப்பாக வாய்ப்புகள் குறைவாக இருக்கும் குடும்பங்களில் குழந்தைகளும் பொருளாதார ரீதியில் உதவி செய்ய வேண்டியத் தேவை இருக்கிறது. சிறுவயதில் இத்தகைய பெரும் பொறுப்பை சுமப்பது குழந்தைகளுக்கு கஷ்டமாகி விடுகிறது,” என்கிறார் அவர். “உங்களைச் சுற்றி இருப்பவர் ஒரு நாளுக்கு இரு வேளை உணவு கிடைக்கவே போராடிக் கொண்டிருக்கையில், மனநலத்தை பற்றியெல்லாம் நீங்கள் பேசவே முடியாது.”
குழந்தைகள் வேலைக்கு செல்ல வேண்டியிராத சூழல்களிலும் கூட, பொருளாதாரச் சிக்கலால் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் அவர்களை பாதிப்பதுண்டு. “அதுவும் நம் குழந்தைகளின் மனநிலைகளில் பெரும் பாதிப்பை உருவாக்குகிறது,” என்கிறார் ஷிண்டே. ”கோவிட்டுக்கு முன்பு, குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவார்கள். வேறு ஊருக்கு கூட செல்வார்கள். பள்ளிகள் இப்போது மூடப்பட்டிருக்கிறது. எனவே வீட்டுச்சூழலிலிருந்து வெளியேறும் வாய்ப்பே இல்லை.”
ஆனால் 14 வயது சஞ்சனா பிராஜ்தார் வெளியேறி விட்டார். பீடின் பார்லி டவுனில் இருக்கும் ஓரறை வீட்டிலிருந்து ஜூன் 2021-ல் வெளியேறி 220 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவுரங்காபாத்துக்கு சென்று சேர்ந்தார் அவர். 11 வயது தம்பி சமர்த்தையும் 9 வயது சப்னாவையும் கூட உடன் சஞ்சனா அழைத்துச் சென்றுவிட்டார். “என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை,” என்கிறார் அவர். “வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என இருந்தது.”
சஞ்சனாவின் தாய் மங்கள், ஐந்து வீடுகளில் வீட்டு வேலை செய்து ஒரு மாதத்துக்கு 2500 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். தந்தை ராம் டெம்போ ஓட்டுநராக இருக்கிறார். “ஊரடங்குக்கு பின் அவரின் வேலை பறிபோய்விட்டது,” என்கிறார் மங்கள். குடும்பத்துக்கென விவசாய நிலமும் ஏதுமில்லை என்கிறார் அவர். “என்னுடைய சகோதரனும் எங்களுடன்தான் வாழ்கிறார். அவருக்கும் வேலை போய்விட்டது. வாழ்வதற்கு நாங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார் அவர்.
வீட்டை விட்டு கிளம்புவதென சஞ்சனா முடிவெடுத்தபோது 35 வயது மங்களும் 40 வயது ராமும் பணத்துக்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பல நேரங்களில் அவர்களின் சண்டை அசிங்கமாக மாறியிருக்கிறது. “பல நாட்கள் வீட்டில் உணவு இல்லாமல் இருந்திருக்கிறது. வெறும் தண்ணீர் குடித்துவிட்டு உறங்கச் சென்று விடுவோம்,” என்கிறார் மங்கள். “கோபத்தில் இருக்கும்போது சில சமயங்களில் குழந்தைகள் மீதும் கோபத்தைக் காட்டி விடுவீர்கள். அத்தகைய விஷயங்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகளின் நலனுக்கு சரியல்ல என்பதை ஒப்புக் கொள்கிறேன்.”
மங்களின் சகோதரரால் அந்த நிலைமை இன்னும் மோசமானது. வேலையேதும் கிடைக்காத விரக்தியில் அவர் மதுவுக்கு அடிமையானார். “அவர் அதிகம் குடிப்பார். குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து என்னைப் போட்டு அடிப்பார்,” என்கிறார் மங்கள். “கனமான பாத்திரங்களை கொண்டு என் தலையில் தாக்குவார். அவரால் எனக்கு பல காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவருக்கு போதுமான அளவு நான் உணவு கொடுப்பதில்லை என சொல்கிறார். என்ன சொல்வதென தெரியவில்லை. வீட்டில் உணவில்லாத போது நான் எப்படி உணவு கொடுப்பது?”
அவர் அடிப்பதை குழந்தைகள் பார்க்கிறார்கள் என்கிற கவலையெல்லாம் அவருக்கு இல்லை என்கிறார் மங்கள். “குழந்தைகளுக்கு முன்னாலேயே என்னை அவர் அடிப்பார். ஆகவே எப்போது அவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தாலும் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே சென்றுவிடுவார்கள்,” என்கிறார் அவர். “எனினும் அவர்களுக்கு எல்லாமும் கேட்கும். அவர்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள். என் மகள் ஏன் வெளியேறினாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.”
நெருக்கடியாக இருப்பதைப் போல் உணர்ந்ததாகவும் வீட்டை விட்டு வெளியேறுவது மட்டுமே வழி என நினைத்ததாகவும் சஞ்சனா சொல்கிறார். உடன் பிறந்தாருடன் அவர் ரயிலேறிய பிறகு, அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை. பயணச்சீட்டுகளும் இலக்கும் இல்லாமல் அவர்கள் பயணித்தனர். “அவுரங்காபாத்தில் நாங்கள் ஏன் இறங்கினோம் என எனக்கு தெரியவில்லை,” என்கிறார் அவர். “ரயில் நிலையத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். ரயில்வே காவலர்கள் எங்களைப் பார்த்து குழந்தைகள் விடுதியில் சேர்த்துவிட்டார்கள்,” என்கிறார் அவர்.
ஆகஸ்ட் 2021-ன் கடைசி வாரம் வரை, இரண்டு மாதங்களுக்கு மூவரும் விடுதியில் இருந்தனர். பார்லியில் இருந்து தாங்கள் வந்திருப்பதாக விடுதியின் அலுவலர்களிடம் இறுதியில் சொன்னார் சஞ்சனா. உள்ளூர் செயற்பாட்டாளர்களின் உதவியோடு, அவரங்காபாத் மற்றும் பீட் மாவட்ட குழந்தைகள் நல வாரியங்களால் பெற்றோருடன் குழந்தைகள் சேர்த்து வைக்கப்பட்டார்கள்.
அவர்கள் திரும்பிய பிறகும் வீட்டில் எதுவும் மாறவில்லை.
பள்ளி திறக்கப்படுவதற்காக சஞ்சனா காத்திருக்கிறார். ”பள்ளிக்கு செல்ல நான் விரும்புகிறேன். நண்பர்கள் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார். வளர்ந்ததும் காவல் அதிகாரியாக வேண்டுமென விரும்புகிறார் அவர். “பள்ளி திறக்கப்பட்டிருந்தால் நான் ஓடிப் போயிருக்க மாட்டேன்,” என்கிறார் அவர்.
பதற்றத்தில் சிக்கி இருக்கும் மகாராஷ்டிராவின் குழந்தைகள், தொற்று ஏற்படுத்தும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கின்றனர். வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 18 வயதுக்குக் கீழ் வயதுகள் கொண்டிருந்த 25 பேர் தற்கொலை செய்திருப்பதாக ஆகஸ்ட் 8, 2021 அன்று பிரஜாபத்ரா தினசரியில் வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது.
”பொழுதுபோக்குவதற்கான வழிகள் குழந்தைகளுக்கு இல்லாதபோதும் ஆரோக்கியமான முறையில் மனங்களை செலுத்தக் கூடிய சூழல்கள் வாய்க்காத போதும் ஒரு பெரும் வெற்றிடம் உருவாகிறது. அதே நேரத்தில் அவர்களுக்கென இருந்த வாழ்க்கை சரிவதை பார்க்கும் சாட்சிகளாகவும் அவர்கள் இருக்கின்றனர். இவை யாவும்தான் அவர்களின் மன அழுத்தத்துக்கான காரணம்,” என்கிறார் டாக்டர் ஆனந்த் நட்கர்னி. சமுக மனநலம் சார்ந்து இயங்கும் தொண்டு நிறுவனமான சைக்கலாஜிக்கல் ஹெல்த் என்னும் நிறுவனத்தின் நிறுவனர் அவர்.
தொற்று ஏற்படுத்தும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கின்றனர். வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 18 வயதுக்குக் கீழ் வயதுகள் கொண்டிருந்த 25 பேர் தற்கொலை செய்திருப்பதாக ஆகஸ்ட் 8, 2021 அன்று பிரஜாபத்ரா தினசரியில் வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது
கோவிட் தொற்று தொடங்கியதிலிருந்து குழந்தைகளிடமும் பதின் வயதினரிடமும் மன அழுத்தம் அதிகரித்திருப்பதாக சொல்கிறார் நட்கர்னி. “’மூடப்பட்ட மனஅழுத்தம்’ என அது அழைக்கப்படுகிறது,” என்கிறார் அவர். “பெரியவர்களின் பாணியில் அது வெளிப்படாது. பல நேரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவும் செய்யாது. அகச்சிக்கலுக்கான அறிகுறிகளை பெரியவர்களால் அடையாளம் காண முடியாது. இளைஞகள் அவற்றை வெளிப்படுத்தவும் முடியாது. இதனால் மன அழுத்தம் புலப்படாமலும் காணப்படாமலும் சிகிச்சை அளிக்கப்படாமலும் முடிந்து விடுகிறது.”
ராமேஷ்வர் தோம்ரேவும் அவரின் குழந்தையிடம் எந்த சிக்கலையும் பார்க்கவில்லை.
பீடின் திண்ட்ருட் கிராமத்தில், ராமேஷ்வரின் மகன், 15 வயது அவிஷ்கர், பிப்ரவரி 28, 2021-லிருந்து காணாமல் போனார். ஒரு வாரம் கழித்து அவிஷ்கரின் உடல் பள்ளியில் கண்டெடுக்கப்பட்டது. “குற்றம் எதுவும் நடக்கவில்லை எனக் காவலர்கள் உறுதி செய்தனர்,” என்கிறார் ராமேஷ்வர். “பள்ளி மூடப்பட்டிருந்தது. ஆனால் கதவுக்கு கீழே ஒரு இடைவெளி இருந்தது. அதற்குள் நுழைந்து தூக்கிட்டுக் கொண்டான்.”
பள்ளி மூடப்பட்டிருந்ததால், சடலம் கண்டுபிடிக்கப்படும் வரை அதே நிலையில் இருந்தது. “அவனுக்காக எல்லா இடத்திலும் நாங்கள் தேடினோம். எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்கிறார் தந்தை. “பள்ளிக்கு அருகே சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பந்து ஜன்னலுக்குள் சென்றுவிட்டது. கதவுக்கு கீழிருக்கும் வழியில் ஒரு சிறுவன் உள்ளே நுழைகையில் அவனை பார்த்து விட்டான்.”
மகன் தற்கொலை செய்து கொள்ள என்னக் காரணம் என யோசிக்கிறார் ராமேஷ்வர். “அவன் எதுவும் சொல்லவில்லை. அவனுடைய சகோதரனுக்கு அவன் ரொம்ப நெருக்கம். ஆனால் அவனும் எங்களைப் போல் குழம்பிதான் இருக்கிறான்,” என்கிறார் அவர். “அவன் காணாமல் போன அன்று, எங்கள் கடையின் ஷட்டரை அவன்தான் திறந்தான். மதிய உணவுக்கு முன் திரும்பி விடுவதாக சொல்லிச் சென்றான். திரும்பவே இல்லை.”
விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பிற விவசாயப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார் ராமேஷ்வர். “ஊரடங்கில் அனைவரும் சந்தித்த நெருக்கடியைதான் நாங்களும் சந்தித்தோம்,” என்கிறார் அவர். “அது காரணமாக இருக்குமா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உண்மையில் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் நன்றாக இருக்கும்.”
புலிட்சர் மைய த்தின் ஆதரவில் வரும் தொடரில் சுயாதீன இதழியல் மானியம் பெறும் செய்தியாளரின் கட்டுரை இது.
தமிழில் : ராஜசங்கீதன்