“அவற்றை எரியுங்கள்!”
113 வருட பழமையான மதராசா அசிசியா எரிக்கப்பட்ட மார்ச் 31, 2023 நள்ளிரவிலிருந்து இந்த வார்த்தைகளைத்தான் மோகன் பகதூர் புதா நினைவுகூருகிறார்.
“கூச்சலையும் நூலக வாயிற்கதவை உடைக்கும் சத்தத்தையும் நான் கேட்டேன். வெளியே வந்து பார்த்தபோது, அவர்கள் ஏற்கனவே நூலகத்துக்குள் நுழைந்து சூறையாடிக் கொண்டிருந்தார்கள்,” என்கிறார் 25 வயது காவலாளி.
”கூட்டத்திடம் ஈட்டிகளும் கத்திகளும் இருந்தன. செங்கற்களையும் வைத்திருந்தனர். ’அவர்களைக் கொல்லுங்கள், அவற்றை எரியுங்கள்’ எனக் கத்திக் கொண்டிருந்தனர்,” என்கிறார்.
‘தத்துவம், சொற்பொழிவு, மருத்துவம் போன்றவற்றை சார்ந்த புத்தகங்களுடன் 250 எழுத்துப் பிரதிகளும் அலமாரியில் இருந்தன’
புதா, நேபாளிலிருந்து புலம்பெயர்ந்தவர். கடந்த ஒன்றரை வருடங்களாக பிகார்ஷாரிஃப் நகரத்தின் மதராசா அசிசியாவில் அவர் பணிபுரிந்து வந்தார். “நிறுத்த சொல்லி அவர்களை வேண்டியபோது, என்னை தாக்கத் தொடங்கினார்கள். என்னை குத்திவிட்டு, ‘ஏ நேபாளியே.. இங்கிருந்து ஓடிப் போ.. இல்லையெனில் உன்னைக் கொன்று விடுவோம்’ என்றனர்.”
மார்ச் 31, 2023 அன்று, ராமநவமி ஊர்வலத்தின்போது மதவாத கலவரக்காரர்களால் மதராசா (இஸ்லாமிய கல்விக்கான பள்ளி மற்றும் நூலகம்) எரிக்கப்பட்டபோதான சம்பவங்களை அவர் குறிப்பிடுகிறார்.
“நூலகத்தில் ஒன்றும் மிஞ்சவில்லை,” என்கிறார் புதா. “இப்போது அவர்களுக்கு காவலாளி தேவையில்லை. தற்போது எனக்கு வேலை கிடையாது.”
அவரிருந்த மதராசா மட்டுமின்றி, பிகாரின் நாலந்தா மாவட்டத்தின் பிகார்ஷாரிஃப் டவுனிலிருந்த பிற வழிபாட்டுத் தளங்களையும் மதவாத கலவரக்காரர்கள் தாக்கிய ஒரு வாரத்துக்கு பிறகு ஏப்ரல் 2023-ல் பாரி, மதராசா அசிசியாவுக்கு சென்றது. தொடக்கத்தில் அதிகாரிகள் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவு போட்டிருந்தனர். இணையமும் முடக்கப்பட்டிருந்தது. ஒரு வாரம் கழித்து இரு தடைகளும் நீக்கப்பட்டன.
நாம் சென்றிருந்தபோது அங்கு சோர்வுடன் நடந்து கொண்டிருந்த முன்னாள் மாணவர் சையது ஜமால் ஹாசன், “நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் என்னால் படிக்க முடியவில்லை,” என்கிறார். 1970ம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவர் இப்பள்ளியில் தொடங்கினார். பட்டப்படிப்பு வரை படித்தார்.
”ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என பார்க்க வந்தேன்,” என்கிறார் ஹாசன்.
70 வயது முதியவர் சுற்றிப் பார்க்கையில், அவர் இளைஞராக ஒரு காலத்தில் படித்த இடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருப்பது தெளிவாக புலப்பட்டது. கறுப்படைந்த பக்கங்களும் எரிக்கப்பட்ட புத்தகங்களின் சாம்பலும் எங்கும் இருக்கின்றன. மாணவர்களும் ஆசிரியர்களும் வாசிக்கவும் ஆய்வு செய்யவும் பயன்படுத்திய நூலகத்தின் சுவர்கள் கறுப்பு படிந்து விரிசல் விட்டிருக்கின்றன. எரிக்கப்பட்ட புத்தக வாடை காற்றில் நிரம்பியிருக்கிறது. புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த பழமையான அலமாரிகள் சாம்பலாகி இருந்தது.
113 வருட பழமையான மதராசா அசிசியாவில் 4,500 புத்தகங்கள் இருந்தன. கையால் எழுதப்பட்ட இஸ்லாமின் புனித நூல்களான குரான் மற்றும் ஹதித் ஆகியவற்றின் 300 பிரதிகளும் அவற்றில்அடக்கம். பள்ளியின் முதல்வர் முகமது ஷாகிர் காஸ்மி சொல்கையில், “அலமாரியில் 250 எழுத்துப்பிரதிகளும் தத்துவம், சொற்பொழிவு மற்றும் மருத்துவம் ஆகியவற்றை பற்றிய புத்தகங்களும் இருந்தன. மட்டுமின்றி, அனுமதி பதிவேடு, மதிப்பெண் அறிக்கை, 1910ம் ஆண்டிலிருந்து படித்து வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் போன்றவையும் நூலகத்தில் இருந்தன,” என்கிறார்.
அந்த கொடுமையான நாளை நினைவுகூரும் காஸ்மி, “சிட்டி பேலஸ் ஹோட்டலுக்கருகே அவர்கள் வந்ததும், சூழல் பிரச்சினையாக இருப்பதை நான் பார்த்தேன். எங்கும் புகையாக இருந்தது. (அரசியல்) சூழ்நிலை, நகரத்துக்குள் நாங்கள் செல்ல முடியாதளவுக்கு இருந்தது,” என்கிறார்.
அடுத்த நாள் அதிகாலையில்தான் மதராசாவுக்குள் முதல்வரால் நுழைய முடிந்தது. 3 லட்சம் பேர் வசிக்கும் மொத்த நகரத்திலும் மின்சாரம் இல்லை. “தனியாக காலை 4 மணிக்கு நான் வந்தேன். மொபைல் டார்ச் அடித்து நூலகத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். என்னை கையாளும் நிலையில் கூட நான் இருக்கவில்லை.”
*****
அரை டஜனுக்கு மேலான சாலையோர வியாபாரிகள், மதராசா அசிசியாவின் வாசலுக்கருகே மீன் விற்பதில் மும்முரமாக இருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்த அப்பகுதியில் பேரம் பேசும் கடைக்காரர்களின் குரல் கேட்டுக் கொண்டிருக்கின்றன. வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கின்றன. எல்லாமும் இயல்பாக நடந்து கொண்டிருந்தது.
“மதராசாவின் மேற்கு பக்கத்தில் ஒரு கோவிலும் கிழக்குப் பக்கத்தில் ஒரு மசூதியும் இருக்கின்றன. ஒற்றுமையான கலாசாரங்களுக்கான சிறந்த அடையாளம் இதுதான்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் முதல்வர் காஸ்மி.
“எங்களின் பிரார்த்தனைகளால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டதில்லை. அவர்களின் பஜனைகளால் எங்களுக்கும் தொந்தரவு இருந்ததில்லை. இந்த ஒற்றுமையை கலவரக்காரர்கள் குலைத்துவிடுவார்கள் என நான் நினைத்து பார்க்கவே இல்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.”
பள்ளியை சேர்ந்த பிறர் சொல்கையில், அடுத்த நாளும் கலவரக்காரர்கள் பிற அறைகளில் பெட்ரோல் குண்டுகள் எறிந்து சேதப்படுத்த முயன்றதாக கூறுகின்றனர். ஒரு டஜன் கடைகளுக்கும் குடோன்களுக்கும் மேல் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கைகளை இக்கட்டுரையாளருக்கு காட்டப்பட்டது.
பிகார்ஷாரிஃபுக்கு மதக்கலவரம் புதிதில்லை. 1981ம் ஆண்டில் பெரும் மதக் கலவரம் நடந்தது. ஆனால் அச்சமயத்தில் கூட நூலகமோ மதராசாவோ தாக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.
*****
1896ம் ஆண்டில் பிபி சோக்ராவால் மதராசா அசிசியாவில் 500 சிறுவர் சிறுமியர் சேர்ந்திருக்கின்றனர். இங்கு சேரும் ஒரு மாணவர் முடிக்கும் முதுகலைப் படிப்பு, பிகாரின் மாநில அரசு கல்வித் திட்டத்துக்கு இணையானது.
ஊரின் நிலப்பிரபுவான கணவர் அப்துல் அசீஸ் இறந்தபிறகு, அவரின் நினைவில் பிபி சோக்ரா மதராசாவை உருவாக்கினார். “அவர் பிபி சோக்ரா வக்ஃப் எஸ்டேட் ஒன்றையும் உருவாக்கி, அந்த நிலத்தில் வரும் வருமானத்தை, கல்விக்கான மதராசா, மருத்துவ மையம், மசூதிகள் பராமரிப்பு, ஓய்வூதியம், உணவு விநியோகம் போன்ற சமூக செயல்பாடுகளுக்கு செலவழிக்கும் வகையில் வழி செய்திருந்தார்,” என்கிறார் ஹெரிடேஜ் டைம்ஸின் நிறுவனர் உமர் அஷ்ரஃப்.
ஐநா மக்கள்தொகை நிதியம் (UNFPA), பிகார் மதராசா வாரியம்,பிகார் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டில் 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாலிம் இ நவ்பாலிகான் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த மதராசா இருக்கிறது.
“இந்த (மதராசாவும் நூலகமும் எரிக்கப்பட்ட) காயம் கொஞ்சம் ஆறலாம். ஆனால் தொடர்ந்து எங்களுக்கு வலி கொடுக்கும்,” என்கிறார் பிபி சோக்ரா வக்ஃப் எஸ்டேட்டின் நிர்வாகியான மொக்தாருல் ஹாக்.
இக்கட்டுரை பிகாரின் விளிம்புநிலை மக்களுக்காக போராடிய ஒரு தொழிற்சங்கவாதியின் நினைவில் வழங்கப்படும் மானியப்பணிக்காக எழுதப்பட்டது
தமிழில் : ராஜசங்கீதன்