முகமது சமீமின் குடும்பத்தில் மூன்று பேர், ஆனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளில் ஒன்றை உறுதிப்படுத்தும்படி ரயில்வே டிக்கெட் வழங்கும் முகவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்திற்கு திரும்ப முயற்சிக்கும் சமீம், "எனது மனைவிக்கு மட்டுமாவது உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை வேண்டும் என்று விரும்புகிறேன்", என்று கூறினார். "நான் எப்படியாவது ஏறி விடுவேன். எந்த நிலையிலும் என்னால் பயணிக்க முடியும். கடந்த முறை போல மோசமாவதற்கு முன்பு நாங்கள் எங்களது வீட்டிற்கு செல்ல வேண்டும்", என்று கூறுகிறார் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கிராமத்தை அடைய முயற்சிக்கும் சமீம்.
"உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை பெற டிக்கெட் ஒன்றுக்கு 1,600 ரூபாய் கேட்கிறார் முகவர். அதைப் பேசி 1,400 ரூபாய் ஆகக் குறைத்துள்ளேன்", என்று கூறினார். "எங்களுக்கு ஒரு இருக்கை கிடைத்தால் நாங்கள் ஏறி பின்னர் என்ன தொகை அபராதமாக விதிக்கப்படுகிறதோ அதை கட்டிக் கொள்வோம்". மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வழக்கமான மலிவான ரயில் டிக்கெட் 380 முதல் 500 ரூபாய்தான். உபியின் பைசாபாத் மாவட்டத்திலுள்ள மசோதா வட்டத்திலுள்ள அபூ சராய் கிராமத்தில் சமீமின் இரண்டு மூத்த சகோதரர்கள் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு விவசாய கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர், இது ஒரு பருவகால தொழில்.
22 வயதாகும் சமீம் மற்றும் மும்பையில் உள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, கோவிட்-19 பரவுவதை சமாளிக்க மஹாராஷ்டிரா அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் புதிய கட்டுப்பாடுகளான தொழிற்சாலைகளை மூடுதல், கட்டுமான பணியை நிறுத்துதல் ஆகியவை காரணமாக 10 மாத காலத்திற்குள் இது இரண்டாவது முறை தங்களது வீட்டிற்கு திரும்பும் பயணமாகும்.
மும்பையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான, குறிப்பாக பந்த்ரா டெர்மினஸ் மற்றும் லோக்மான்ய திலக் டெர்மினஸ் ஆகியவற்றில் - இங்கிருந்து தான் வடக்கு மாநிலங்களான உத்திர பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவற்றுக்கு பல ரயில்கள் செல்லும், ஏப்ரல் 14ஆம் தேதி புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற விரும்பி ஏப்ரல் 11 - 12 ஆகிய தினங்களில் கிளம்பினர் எனவே அந்த ரயில் நிலையங்கள் கூட்டமாக இருந்தது. மேலும் முடக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலர் வெளியேற முயற்சிக்கின்றனர்.
சிவசேனா தலைமையிலான மாநில அரசு பொது முடக்க கட்டுப்பாடுகளை ஊரடங்கு என்று அழைக்கவில்லை. ஆனால் இது "எங்களை பொறுத்தவரை இரண்டாவது ஊதிய இழப்பு மேலும் அது எங்களை ஏற்கனவே பாதித்துவிட்டது", என்று கூறுகிறார் சமீம்.
அவர் பணிபுரியும் ஆடை உற்பத்தி நிறுவனம் ஏப்ரல் 13 செவ்வாய் கிழமை அன்று மூடப்பட்டது. எனது முதலாளி கூடிய சீக்கிரத்தில் வேலைகளை மீண்டும் துவங்க முடியும் என்று நினைக்கவில்லை. "அவர் 13 நாட்களுக்கு எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை வழங்கினார்", என்று சமீம் கூறினார். 5 ஆயிரத்துக்கும் குறைவான அந்த தொகையே அவரிடம் இருக்கும் மொத்த பணம். லோக்மான்ய திலக் டெர்மினஸிலிருந்து பைசாபாத் வரை செல்லும் ரயிலில் 2 காத்திருப்பு இருக்கைகளுக்கு 780 ரூபாய் செலவு செய்திருக்கிறார், இப்போது உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையை வாங்கித்தரும் ரயில் டிக்கெட் முகவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். "கடந்த வாரம் தான் இந்த அறையின் உரிமையாளருக்கு ஒரு மாத முன் பணமான 5000 ரூபாயை செலுத்தினேன், ஆனால் இன்னும் சில மாதங்களுக்கு நாங்கள் இங்கு இருக்கப்போவதில்லை, இந்த இடத்தை காலி செய்து போகப் போகிறோம் என்று தெரிந்த பின்னரும் உரிமையாளர் ஒரு பைசாவைக் கூட திருப்பித் தரவில்லை", என்று கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பெரிய நகரங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக ரயில்வேத்துறை இயக்கிய 'ஷார்மிக் சிறப்பு' ரயில்கள் ஒன்றில் இக்குடும்பம் மும்பையை விட்டு வெளியேறிச் சென்றது.
அந்த சமயம், உத்திரப் பிரதேசத்திற்கு செல்லும் ரயில் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட இருகைகள் கிடைத்திருக்கிறது என்று ரயில்வேயின் தானியங்கி செய்தி சமீமின் தொலைபேசிக்கு வந்த போது ஏற்கனவே மே மாத இறுதி ஆகி இருந்தது. "வாடகை பணம், தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டிய தொகை மொத்தம் 10,000 ஆக நிலுவையில் இருந்தது (கடந்த ஆண்டு ஊரடங்கின் முதல் இரண்டு மாதங்களில்). எனக்கு நான்கு மாதங்கள் வேலை இல்லை அதனால் எனக்கு 36,000 ரூபாய் ஊதிய இழப்பு ஏற்பட்டது", என்று அவர் கூறுகிறார். இப்போது எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீணாக போனது. ஒவ்வொரு ரூபாயும் முக்கியமான இந்த வேளையில், இது அவரை கடுமையாக பாதித்துள்ளது.
சமீமின் மனைவியான 20 வயதாகும் கௌசியா சோர்வாக இருக்கிறார். வடக்கு மும்பையின் பந்த்ராவிலுள்ள சேரி காலனியில் 8*8 அடி வீட்டில், அவரது 8 மாத குழந்தையான குலாம் முஸ்தபா தனது பொக்கை வாயால் சிரிக்கிறார், அவருக்கு அந்நியர்கள் தூக்குவது பிடிக்கும். கடந்த ஊரடங்கு முடிந்து 2020 ஆகஸ்ட் மாதம் மும்பைக்கு திரும்பியபோது அவனுக்கு ஒரு மாதம் கூட ஆகவில்லை. "சில வாரங்களுக்கு அவனுக்கு உடல்நிலை சரியில்லை, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தது. சூடாகத்தான் இருந்திருக்க வேண்டும்", அவர் கூறினார். "இப்போது மீண்டும் புறப்படுகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. நிலைமை சரியான பிறகு நாங்கள் இங்கு திரும்புவோம்", என்றார்.
நல்ல நாட்கள் வரவேண்டுமென்று அந்த குடும்பம் ஆவலுடன் காத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர் மும்பைக்கு திரும்பியபோது சான்டாக்ரூஸ் மேற்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சட்டைகளை மடிக்கும் வேலைக்குச் சென்றார். ஆனால் கூடுதலாக 1,000 ரூபாய் கிடைக்கும் என்பதற்காக அவர் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த இந்த வேலையை விட்டுவிட்டு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சான்டா க்ரூஸ் கிழக்கில் உள்ள சிறிய ஆடை உற்பத்தி பிரிவில் வேலைக்கு சேர்ந்தார் இங்கே அவருக்கு 10,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
நர்கீஸ் தத் நகரின் குறுகிய நடை பதையில் சில
அடி தூரத்தில் இருக்கும் மோனினிசா மற்றும் அவரது கணவர் முகமது ஷானவாஸ் ஆகியோரும்
இங்கிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். அவர்களும் அபூ சராய் கிராமத்தைச் சேர்ந்தவர்களே. "எனது கணவர் (சான்டா க்ரூஸ் மேற்கில் கடந்த ஆண்டு ஊரடங்கிற்கு முன்புவரை) ஒரு ஆடை தொழிற்சாலையில் பேக்கராக மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் சம்பாதித்து வந்தார்", என்று கூறுகிறார். "ஆனால் நாங்கள் மும்பைக்கு திரும்பியபோது எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை". மே மாத இறுதியில் அந்த குடும்பம் ஷார்மிக் சிறப்பு ரயில் ஏறிச் சென்றது பின்னர் ஆகஸ்ட் மாதம் திரும்பியது. "எனவே அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஓட்டுனராக வேலைக்கு சேர்ந்தார். அவர்கள் மாதம் ஒன்றுக்கு 5000 ரூபாய் சம்பளம் தந்தனர் ஏனென்றால் அவர்களுக்கு எல்லா நாளும் இவர் தேவைப்படுவதில்லை. இப்போது அவர்கள் ஓட்டுநரே தேவையில்லை என்று கூறிவிட்டனர். இந்த ஊரடங்கு காலத்தில் அவர் எங்கே போய் வேலை தேடுவார்?", என்று கேட்கிறார் மோனினிசா.
அதே சேரி காலனியில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த பெருந்தொற்றின் காரணமாக இரண்டாவது முறையாக தங்களது கிராமங்களுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். 2020இல் முதல் சுற்றில் வாழ்வாதாரத்தை இழந்து அவர்களில் சிலர் உறவினர்களிடமும் சொந்தக்காரர்களிடமும் தங்களுடைய கிராமத்தில் தஞ்சம் கோரினர். சாஃபியா அலியின் குடும்பம் இப்போது திரும்பினாலும் அதைத்தான் நம்பியுள்ளது.
எனது தாயுடன் சில நாட்கள், பின்னர் ஒரு சகோதரருடன் பின்னர் மற்றொரு சகோதரருடன் இப்படியே ஒன்று இரண்டு மாதங்கள் கழிந்துவிடும் என்று 30களின் பிற்பகுதியில் இருக்கும் சாஃபியா கூறினார், அவர் தனது 4 குழந்தைகள் மற்றும் கணவருடன் 100 சதுரடி வீட்டில் வசித்து வருகிறார். "எங்களுக்கு கிராமத்தில் எதுவும் இல்லை, நிலம் இல்லை வேலை இல்லை, அதனால் கடந்த ஊரடங்கின்போது நாங்கள் அங்கு செல்லவில்லை", என்று தனது மூத்த மகளான 14 வயதாகும் நூரை, மூன்று வயதாகும் அவரது இளைய மகனை பொது கழிப்பிடத்திற்கு அழைத்துச் செல்லும்படி பணித்துவிட்டு, எங்களிடம் கூறினார். நூர் பானு இப்போது ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லவில்லை மேலும் பரிட்சை இல்லாமலே ஏழாம் வகுப்புக்கு சென்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
சாஃபியாவின் கணவர் பந்த்ராவில் உள்ள பஜார் சாலையில் துணிகளை விற்பனை செய்கிறார் மேலும் ஏப்ரல் 5 முதல் அவர்களின் அன்றாட வருமானம் 100 முதல் 150 ரூபாயாக குறைந்து விட்டது ஏனெனில் மஹாராஷ்டிரா அரசாங்கம் இரவு நேர ஊரடங்கு பகல் பொழுதில் கடைகளை அடைத்தல் ஆகிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு ரமலான் மாதத்திற்கு முன்னர் வரை அவர் நாளொன்றுக்கு 600 ரூபாய் சம்பாதித்து வந்தார் என்று மதிப்பிடுகிறார் சாஃபியா. "கடந்த ஊரடங்கின் போது அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த பொருட்களை வைத்து வாழ்ந்து வந்தோம்", என்று கூறுகிறார் சாஃபியா. "பகலில் சம்பாதித்தால் தான் இரவில் எங்களால் சாப்பிட முடியும் பணம் சம்பாதிக்க வில்லை என்றால் சாப்பாடு இல்லாமல் இருக்க வேண்டியது தான்", என்கிறார்.
பந்த்ரா ரிக்களமேசனின் க்ளோவர் வடிவ மேம்பாலத்திற்கு கீழும் சுற்றியும் உள்ள அந்த காலனியில் சுமார் 1200 குடும்பங்கள் வசித்து வருகின்றன, நர்கீஸ் தத் நகரின் பெரும்பாலான குடும்பங்களில் பொதுவாக இருப்பது போல சாஃபியாவின் வீட்டினரும் அவரை வேலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. உத்திர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்திலுள்ள தங்களது கிராமத்திற்கு அருகாமையில் இருக்கும் கிராமத்தின் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பேருந்து ஏற்பாடு செய்திருக்கிறார் என்று யாரோ சாஃபியாவிடம் கூறியுள்ளனர். அதில் தனது குடும்பத்தினருக்கும் இடம் இருக்கும் என்று நம்புகிறார் அவர்.
"கோண்டாவில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன, எனவே தனது கிராமத்தை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு நாளுக்கு சரியான நேரத்தில் திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார்", என்று சாஃபியா கூறுகிறார். ஹல்தர்மௌ வட்டத்திலிருக்கும் தனது சொந்த கிராமமான அக்கதேராவிற்கு தேர்தல் உண்டா என்பது அவருக்குத் தெரியவில்லை, இருப்பினும் இந்த முறை அவர் மும்பையை விட்டு வெளியேறலாம் என்று நம்புகிறார். "இன்னொரு ஊரடங்கை எங்களால் இங்கிருந்து சமாளிக்க முடியாது. எங்கள் மரியாதையை நாங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்", என்று கூறினார்.
முன்கூட்டியே திட்டமிட்டு இந்த காலனியில் இருந்து வெளியேறும் சிலர் ஊரடங்கு நீக்கப்படும் வரை இங்கு திரும்ப மாட்டார்கள். 20 வயதாகும் சந்தீப் பீஹாரிலால் சர்மா மே 5ஆம் தேதிக்கு கோண்டாவிற்கு செல்ல உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருக்கிறார், அங்கிருந்து சப்பியா வட்டத்திலுள்ள பாபனான் கிராமத்திற்கு அவர் செல்வார். "குடும்பத்தில் ஒரு திருமணம் இருக்கிறது. அப்பாவும் எனது சகோதரியும் கடந்த வாரமே அங்கு சென்றுவிட்டனர். போதுமான வேலை இருக்கும் என்று உறுதியாக தெரியும் வரை நாங்கள் இங்கு திரும்பப் போவதில்லை", என்று அவர் கூறுகிறார்.
சந்தீப் ஒரு நாற்காலி செய்பவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்- அவர் திறமையான மரம் செதுக்குபவர்களான பதாய் சமூகத்தைச் சேர்ந்தவர். "இப்போது எந்த வேலையும் இல்லை, இந்த சூழலில் புதிய நாற்காலிகளை பெறுவதற்கோ அல்லது வீட்டை புதுப்பிப்பதற்கோ யாரும் ஆர்வம் காட்டவில்லை", என்று அவர் கூறுகிறார். "அரசாங்கம் எப்படி இன்னொரு ஊரடங்கை அமல்படுத்துகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏழைகளுக்கு என்ன வகையான இழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்பது அவர்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா?", என்று கேட்கிறார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் புதிய ஆர்டர்கள் வரத் துவங்கி இருந்தன, அதற்குள் கோவிட்-19ன் இரண்டாவது அலை வந்துவிட்டது என்று அவர் கூறுகிறார்.
சுய தொழில் செய்பவர்களும் சிரமப்படுகின்றனர். அவர்களில் கடந்த 30 ஆண்டுகளாக நர்கீஸ் தத் நகரில் வசித்து வரும் 35 வயதாகும் சோஹைல் கானும் ஒருவர். அவர் ஒரு மீன் விற்பனையாளர் அவர் தனது அன்றாட பொருட்களை வெரோசா மீன் சந்தையில் இருந்து வாங்கி வந்து தனது சேரி காலனியிலும் அதைச் சுற்றியும் விற்பனை செய்து வருகிறார். "ரமலான் மாதத்தில் மாலைக்குப் பிறகு வரை விற்பனை நடைபெறும். ஆனால் இரவு 7 மணி அளவில் எங்களது கடைகளை மூடுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொள்கின்றனர்", என்று அவர் கோபமாக கூறுகிறார். "எங்களிடம் குளிர்பதன வசதியும் இல்லை வேறு எந்த வசதியும் இல்லை எனவே விற்கப்படாத மீன்கள் வீணாகத்தான் போகும்", என்று கூறுகிறார்.
கடந்த வாரம் மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டபோது கான் கோண்டா மாவட்டத்திலிருக்கும் அக்கதேரா கிராமத்திற்கு தனது மனைவியை அனுப்பி வைத்தார். அவரும் அவரது சகோதரர் அசமும் சிறிது நேரம் காத்திருந்து பார்க்கின்றனர். கடந்த வருடம் அவர்களது குடும்ப வருமானம் வீழ்ச்சி அடைந்தது அதை அவர்கள் இந்த வருட ரமலான் மாதத்தின் மூலம் சரி செய்யலாம் என்று எண்ணியிருந்தனர், ரமலான் மாதம் ஏப்ரல் 14 அன்று துவங்கியது.
சோஹைலின் தம்பி அசம் கான் ஒரு ரிக்ஷா டிரைவர், அவர் தனது சொந்த பஜாஜ் மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷாவை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். மாதத்தவணை ஆன 4,000 ரூபாயை செலுத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. "வேலை இல்லை என்றாலும் தவணையை செலுத்த வேண்டியிருக்கிறது. முதல்வர் அவர்கள் ஆட்டோகள் இயங்க அனுமதித்திருக்கிறார் ஆனால் மக்கள் யாரும் எங்கும் செல்வதற்கு அனுமதி இல்லை ஆட்டோ டிரைவர்கள் எப்படி சம்பாதிப்பார்கள்?", என்று கேட்கிறார் சோஹைல்.
"மாநில அரசாங்கம் கடந்த முறை செய்ததைப் போலவே கடன் தவணை செலுத்துபவர்களுக்கான உதவியை அறிவிக்க வேண்டும்", என்று அவர் கூறுகிறார். "இதே நிலை நீடித்தால் கடந்த ஆண்டை போலவே எங்களது சொந்த ஊரான கோண்டாவிற்கு திரும்ப வேண்டியதுதான். நாங்கள் மீண்டும் அரசாங்கத்தினை தான் நம்பி இருக்கிறோம்", என்று கூறினார்.
தமிழில்: சோனியா போஸ்