வேளாண் துறை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது, நாடாளுமன்றத்தில் செப்டம்பர் மாதம் மத்திய அரசால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ஆக்ரோஷ போராட்டம், நாடெங்கும் கவிஞர்களையும் கலைஞர்களையும் உணர்வெழுச்சி கொள்ள வைத்தது. சிறு விவசாயிகளின் அன்றாட போராட்டங்களை பறைசாற்றும் வகையில் பஞ்சாபிலிருந்து இந்த அழகான கவிதை வந்துள்ளது. இக்கவிதையால் ஊக்கம் பெற்ற பெங்களூரு இளம் ஓவியரிடமிருந்து முகிழ்த்த அழகான சித்திரங்களும் இக்கவிதையுடன் சேர்ந்து கொண்டன
ஒரு விவசாயின் கதை
காலடியில்
கிடக்கும் இந்நன்னிலம்
இதை
உழுவதும், விதைப்பதும், அறுப்பதும்
நான்
கைக்கொள்ளும் வைராக்கியம்.
இறுதி
மூச்சு உள்ளவரை,
இதுவே
என் வாழ்க்கையாகும்...
இந்நிலத்தை வியர்வையால் நனைக்கிறேன்,
வீசும்
புயல்களை என்
மார்பில் நிறைக்கிறேன்.
உறையும்
குளிரையும், உருக்கும்
கோடையையும்
என்
ஆன்மாவுக்கு வெளியே
நிறுத்துகிறேன்.
இறுதி
மூச்சு உள்ளவரை,
இதுவே
என் வாழ்க்கையாகும்...
பறவைகளை விரட்ட
வயல்களில் நிறுத்தப்படும்
சோளக்கொல்லை பொம்மையைப்
போல,
என்
ஆன்மாவை கைப்பாவையாக்கி
மகிழ்ச்சி
கொள்வதையும், பகடி
செய்வதையும்
இயற்கை
செய்வதே இல்லை;
என்
அரசாங்கம் செய்கிறது.
இறுதி
மூச்சு உள்ளவரை,
இதுவே
என் வாழ்க்கையாகிறது...
காலம் கரைகிறது,
என் நிலம்
விரிகிறது
இப்பூமி
வானத்தோடு உறைகிறது
ஆனால்!
என் வாழ்க்கை
மண்ணில் கிடக்கிறது
என்
கடனைத் தீர்க்க,
இரண்டு ஏக்கர்
இருக்கிறது.
இறுதி
மூச்சு உள்ளவரை,
இதுவே
என் வாழ்க்கையாகிறது...
என் அறுவடையில் பொன்னிறம்
வெண்ணிறம் பச்சையம்
நான்
சந்தைக்குச் செல்கையில் நம்பிக்கையும்
கூடவரும்,
வீடு
திரும்புகையில் வெறுமையே
கைநிறையும்.
இதுவே
என் நிலம்
தரும் பரிசாகும்.
மரணம்
ஒப்புக்கொள்ளும் நாளும்வரும்,
அப்போது
என் துன்பங்கள் பறந்துபோகும்.
இதுவே
என் வாழ்க்கையாகும்...
குழந்தைகள் புலம்ப,
படிப்பின்றி, பருக்கையின்றி
தவிக்க,
அவர்களின்
கனவுகள் சிதைய,
கூரைக்குக் கீழே
குப்பையாய் கிடக்க,
உடல்கள்
சிதற, உயிர்கள்
நொறுங்க...
இறுதி
மூச்சு உள்ளவரை,
இதுவே
என் வாழ்க்கையாகிறது...
தங்கமும் போகும்,
வைரமும் போகும்
வயிறுகள்
காயும், உயிர்கள்
ஓயும்
ஆனால்,
பசியும்
பேராசையும் ஒரு
நாள் அழியும்
அதுவரை
என் வைராக்கியம் நீளும்
இறுதி
மூச்சு உள்ளவரை,
இதுவே
என் வாழ்க்கையாகும்...
நான் அறுத்தவை
எல்லாம் பொன்னாகும்
விற்பனைக்குப் போகையில்
மண்ணாகும்
கடன்களின்
பாரம், கடுமையாய்
கனக்கும்
என்
மென்னிதயம் விட்டு
விட்டு துடிக்கும்
இறுதி
மூச்சு உள்ளவரை,
இதுவே
என் வாழ்க்கையாகும்...
இனி வருவது
விலங்கா, புரட்சியா?
மற்றொரு
தீர்வும் இருக்கிறதா?
அரிவாளும்
சுத்தியலும் வெறுங்கருவியா?
இல்லை,
நாமேந்தும் இன்னொரு
ஆயுதமா?
இறுதி
மூச்சு உள்ளவரை,
இதுவே
என் வாழ்க்கையாகும்..
பஞ்சாபியிலிருந்து மொழிப்பெயர்த்தவர்
அமிர்தசரசை சேர்ந்த
கட்டடக் கலைஞரான
ஜீனா சிங்.
ஓவியர் அந்தரா ராமன் பெங்களூரு சிருஷ்டி கலை, வடிவமைப்பு, தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காட்சித்தொடர்பியல் இளநிலை பட்டத்தை அண்மையில் பெற்றவர்.
ஆங்கில ஒலிப்பதிவு: சுதன்வா தேஷ்பாண்டே ஒரு நடிகர். ஜனா நாட்டிய மஞ்சின் இயக்குநர், லெஃப்ட்வோர்ட் புக்சின் ஆசிரியர்
தமிழில்: சவிதா