"நீங்கள் அந்த பண்டிகையை நிச்சயம் கொண்டாடி இருப்பீர்கள். எங்களுக்கு என்ன? எந்த வேலையும் இல்லை பணம் எங்கிருந்து வரும்?", என்று தனது வீட்டின் வாசல் படியில் அமர்ந்தபடி 60 வயதாகும் சோனி வாக், தீர்க்கமாக என்னைப் பார்த்து, வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். சுற்றி இருந்த மக்கள் அவரை அமைதியாக இருக்கும் படி சமிக்ஞைகள் செய்ய முயன்றனர். ஆனால் சோனியின் வார்த்தை அவருக்கானது மட்டுமல்ல - அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவரது குக்கிராமத்தில் இருக்கும் அனைவரின் யதார்த்த வாழ்வையும் படம் பிடித்து காட்டியது. அதை யாராலும் மறைக்க முடியாது. அது ஒரு நவம்பர் மாத துவக்க காலம், தீபாவளி அப்போது தான் முடிந்திருந்தது. ஆனால் இந்தப் பதாவில் இருந்த எந்த வீட்டிலும் விளக்குகளே இல்லை. எந்த அலங்கார விளக்குகளும் இல்லை. போடியாச்சி வாடியில் இருக்கும் ஒரு வீட்டில் கூட தீபாவளியின் போது, சில நகர வீடுகளில் பூக்களால் அலங்கரிக்கப்படுவதை போன்ற அலங்காரம் செய்யப்படவில்லை.

வாடியே அமைதியாக இருந்தது. திண்ணை முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் சத்தங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களது கால்கள் புழுதி படிந்து இருந்தன. அவர்களது துணிகள் கந்தலாகவோ அல்லது கிழிந்தோ இருந்தது. உடைந்த பொத்தான்களைக் கொண்ட ஆடைகள் அவர்களில் சிலரை கொஞ்சமாகத் தான் மூடியிருந்தது. திண்ணை முற்றத்தில் ஒரு மூலையில் 8 முதல் 9 வயது வரை இருக்கும் 5 அல்லது 6 பெண் குழந்தைகள் 'வீடு கட்டி' விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் முன் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஈயம் மற்றும் ஸ்டீல் சமையலறை பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான்கு குச்சிகளில் கட்டப்பட்டிருந்த கிழிந்த துணி ஒரு குழந்தைக்கு தொட்டிலாகி இருந்தது.

அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் குழந்தை, பிறந்து ஒரு சில மாதங்களே ஆன குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். நான் அவர்களை அணுகிய போது, அவர்கள் வெளியேறுவதற்காக எழுந்து விட்டனர். நான் அவளிடம் ஏதோ ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் என்பதை உணர்ந்த போது அந்தப் பெண் குழந்தை நின்றுவிட்டாள். "நீ பள்ளிக்குச் செல்கிறாயா?" இல்லை என்பதே பதிலாக இருந்தது. ஒன்பது வயதாகும் அனிதா திவே ஒன்றாம் வகுப்புக்கு பிறகு பள்ளியிலிருந்து நின்றுவிட்டாள். ஏன் செல்லவில்லை? "நான் தான் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும். நான் எப்படி பள்ளிக்குச் செல்ல முடியும்? எனது குடும்பத்தினர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு சென்றுவிட்டனர்", என்று கூறினாள்.

PHOTO • Mamta Pared

போடியாச்சி வாடியில் உள்ள பெரும்பாலான குழந்தைகள்,காலு வால்வியைப் (மேல் வலது)  போலவே சில நாட்கள்  உள்ளூரில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் (கீழ் வலது) வந்து பொழுதைப் போக்கிய பிறகு, ஆரம்பப் பள்ளியில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் இருந்த பிறகு இடை நின்று விடுகின்றனர். வறுமை மற்றும் இடப்பெயர்வே இதற்கான காரணமாக விளங்குகிறது

அவள் அருகில் அமர்ந்திருந்த சிறுவன், காலு சவராவிடமும், சொல்ல அதே கதை தான் இருந்தது. அவனும் ஒன்றாம் வகுப்பிற்கு பிறகு பள்ளியிலிருந்து நின்றுவிட்டான். மற்றொரு பெண் குழந்தை, காலு வால்வி, வந்து அவள் அருகில் நின்று கொண்டு," மழைக் காலங்களில் நான் பள்ளிக்குச் செல்வேன் வெயில் காலத்தில் நான் எனது குடும்பத்துடன் சூளைக்கு சென்று விடுவேன்", என்று கூறினாள்.

காலு வால்வியின் குடும்பத்தைப் போலவே மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள மொகதா நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோம்கார் கிராமத்தில் வசிக்கும் 30 - 35 கட்காரி ஆதிவாசி குடும்பங்களில், பல குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக குடிபெயர்கின்றன.

பள்ளியைப் பற்றி குறிப்பிட்டதுமே கோபமடைந்த அண்டை வீட்டுக்காரரான சுமார் 65 வயதாகும், புத்த வாக், "நீங்கள் எங்களுக்கு வேலை கொடுங்கள் அல்லது காசு கொடுங்கள். எங்கள் பசிக்கு ஏதாவது செய்யுங்கள்", என்று கூறினார்.

"விவசாயமும் நடைபெறவில்லை. வேறு எந்த வேலை வாய்ப்புகளும் இல்லை. எங்களது சாப்பாட்டிற்காக நாங்கள் குடிபெயர்ந்தே ஆக வேண்டும்", என்று 55 வயதாகும் காசிநாத் பாரப், புத்தாவை அமைதிப்படுத்த முயற்சித்தபடி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில், ஜூலை மாதத்தின் போது, அவரும் அருகில் உள்ள கல் அரைக்கும் இடங்களில் வேலை செய்வதற்காக சீரடிக்கு புறப்பட்டுச் செல்கிறார். தீபாவளிக்கு பிறகு, அக்டோபர் மாத இறுதியில் இருந்து மே மாதம் வரை, தானே மாவட்டத்தின் பிவாண்டி வட்டத்திலுள்ள கார்பவ் நகரத்தில் இருக்கும் செங்கல் சூளைகளில் வேலை செய்வதற்காக அங்கு குடிபெயர்கிறார்.

அவர்கள் குடிபெயரும் போது, இந்த குக்கிராமத்தில் இருந்து வெளியேறும் கிட்டத்தட்ட அனைவரும், தங்களது கடன் சுமைகளையும் தங்களுடன் சேர்த்து சுமந்து செல்கின்றனர். கடன்களை திருப்பிச் செலுத்த அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது கூட அவர்களில் பலருக்கு தெரியாது. "நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக எங்களது கணக்குகளை தீர்க்கவில்லை", என்று 50 வயதாகும் லீலா வால்வி கூறினார். "நாங்கள் அங்கு (உல்ஹாஸ் நகரில்) பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். எனது மகளின் திருமணத்திற்காக நான் 30,000 ரூபாயை (எனது செங்கல் சூளை உரிமையாளரிடம் இருந்து) முன்பணமாக பெற்றேன். அதை நான் இன்னும் திருப்பி செலுத்தவில்லை. பலமுறை நாங்கள் தானமாக பெறப்பட்ட உணவைக் கொண்டு தான் எங்களது வயிற்றுப் பசியை ஆற்றியுள்ளோம். நாங்கள் எங்களது கணக்குகளைப் பற்றி கேட்க முயன்றால், எங்களை அவர்கள் அடித்துத் துன்புறுத்துவதுவர்", என்று அவர் கூறினார்.

PHOTO • Mamta Pared

மேல் இடது: 'நாங்கள் எங்களது கணக்குகளைப் பற்றி கேட்க முயன்றால், எங்களை அவர்கள் அடித்துத் துன்புறுத்துவதுவர்', என்று லீலா வால்வி கூறினார். மேல் வலது: அரசாங்கத்தின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு சில கல் வீடுகளைத் தவிர போடியாச்சியில் உள்ள மற்ற குடியிருப்புகள் அனைத்தும் குடிசை வீடுகளாகத் தான் இருக்கின்றன. கீழ் இடது: பைகா திவே தனது குடிசைக்கு அருகாமையில் நின்று சோகம் இழையோடப் பேசினார். கீழ் வலது: கோரக் வால்வியின் கதையை கேட்டு நான் திகைத்துப் போனேன்

லீலா தனது வீட்டை எனக்கு காட்டிக் கொண்டிருந்தார், சிமெண்ட் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு அரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது (பிரதம மந்திரி கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது). போடியாச்சி வாடியில், இந்த அரசாங்க வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு சில கல் வீடுகளைத் தவிர மற்ற குடியிருப்புகள் அனைத்தும் வெறும் குடிசைகளாகத் தான் இருந்தன. எங்களுக்கும் ஒரு குடிசை தான் இருந்தது என்று, வைக்கோல், மண் மற்றும்  உள்ளூரில் கிடைக்கக்கூடிய மரத்தினாலான, அருகிலிருந்த ஒரு சிறிய  குடிசையச் சுட்டிக்காட்டி லீலா கூறினார். அவருடைய புதிய ஜன்னல் இல்லாத வீட்டின் உள்ளே, நண்பகலில் கூட இருட்டாகதான் இருக்கிறது. அடுப்பை சுற்றி எல்லா பொருட்களும் சிதறிக்கிடந்தன. எனது வீட்டில் எதுவுமே இல்லை இந்த அளவு அரிசி தான் மிச்சம் இருக்கிறது என்று கூறிய படி , ஒரு மூலையில் இருந்த ஒரு உருளை பாத்திரத்தை எனக்கு காண்பிப்பதற்காக திறந்தார். அரிசி அடியில் கொஞ்சம் போல இருந்தது.

மற்றவர்களைப் போலவே, 60 வயதாகும் பைகா ராஜா திவேவிற்கும் 13,000 ரூபாய் கடன் இருக்கிறது. "எனது மகனின் நிச்சயதார்த்தத்திற்காக நான் முன்பணத்தைப் பெற்றேன், என்று அவர் கூறினார். தசரா விழாவையொட்டி அக்டோபர் மாதத் துவக்கத்தில், சேத், எங்களது குடும்பத்தை உல்ஹாஸ் நகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு அழைத்துச் சென்றார். ஆனால் மழை தொடர்ந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. எனவே சேத் அங்கேயே அவருக்கு நன்றாகத் தெரிந்த அருகில் இருக்கும் நில உரிமையாளர் ஒருவரிடம் எங்களை  வேலைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இவ்வேலையின் மூலம் தினக்கூலியாகப் பெற்ற 400 ரூபாயில் இருந்தும் ஒரு பகுதியை தனியாக எடுத்து வைத்திருக்கிறார். தீபாவளி நெருங்கிய சமயத்தில் பைகா குடும்பத்தினருக்கு தங்கள் ஊரான போடியாச்சி வாடிக்குத் திரும்ப பணம் தேவைப்பட்டது. சேத், அவர்களுக்கு இந்தப் பணத்தை அப்போது கூட திருப்பிக் கொடுக்கவில்லை. அவர்கள் கிடைத்த வேலையைச் செய்து அதிலிருந்து கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி வைத்திருந்தனர். அதன் பிறகு தீபாவளி முடிந்தவுடன், சேத் அவர்களது அக்குக்கிராமத்திற்கு திரும்பினார் (அம்மக்களை வேலைக்காக வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக).

அதற்குள் அக்குடும்பத்திற்கு அரசுத் திட்டத்தின் கீழ் ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது, எனவே அக்கட்டிடத்தை கட்டுவதற்கு அவர்கள் அங்கேயே தங்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்கள் கடனில் மூழ்கி உதவுவதற்கு ஆளில்லாமல் நின்று கொண்டிருந்தனர். "அவரது கடனை நான் திருப்பி செலுத்த வேண்டும் என்று சேத் கோரினார். ஆனால் நான் வீடு கட்டுவதற்காக இங்கேயே தங்கி விட்டேன். அவர் எனது மனைவி லீலா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 21 வயதாகும் மகனையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார் என்று பைகா சோகம் இழையோடியபடி தனது குடிசை வீட்டிற்கு அருகில் நின்று கொண்டு கூறினார். அவரது மூத்த மகளுக்கு 12 வயது ஆகிறது மற்றும் அவரது இளைய மகளுக்கு வெறும் 8 வயது தான் ஆகிறது.

Young girls in this hamlet are passing their days caring for their younger siblings.
PHOTO • Mamta Pared
There is no farming. There are no other work options' , say the adults
PHOTO • Mamta Pared

இடது: இக்கிராமத்தில் உள்ள இளம் பெண் குழந்தைகள் தங்கள் இளைய உடன்பிறப்புகளை கவனித்து தங்கள் நாட்களை கடத்துகின்றனர். வலது: 'விவசாயமும் நடைபெறவில்லை. வேறு வேலை வாய்ப்புகளும் எதுவும் இல்லை', என்று பெரியவர்கள் கூறுகின்றனர்

அதன் பிறகு, கோரக் வால்வியின் கதையை கேட்டு நான் திகைத்துப் போனேன். ஒரு முறை செங்கல் சூளை உரிமையாளருக்கு சொந்தமான ஒரு காளை இறந்த போது, சூளையில் பணியாற்றிய அனைத்து ஆண் தொழிலாளர்களும் துக்கத்தின் அடையாளமாக தலை முடியை வெட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், என்று என்னிடம் கூறினார். ஒருவராலும் அதை மறுத்துக் கூற முடியவில்லை, அப்படிப்பட்டது அவருடைய அதிகாரம்.பருவம் தவறிப் பெய்யும் மழையின் காரணமாக  சூளையில் செங்கற்கள் ஈரம் ஆகிவிட்டால் அந்த செங்கற்களை தயாரித்ததற்கு தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள் என்று வால்வி என்னிடம் கூறினார். "நாங்கள் எங்களது கடின உழைப்பால் இறந்து போகிறோம், பணமே கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் இறந்து தான் போகிறோம்", என்று அவர் கூறினார். இத்தகைய கடினமான சூழ்நிலையில்  இருந்த போதிலும் கோரக்கால் பத்தாம் வகுப்பு வரை படிக்க முடிந்திருக்கிறது. இருப்பினும் இங்குள்ள பலரைப் போலவே அவரும் செங்கல் சூளையில் தான் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

அவரைப் போலவே லதா திவே மற்றும் சுனில் முக்னே ஆகியோரும் பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்கின்றனர். ஆனால் எங்களால் எப்படி மேலே படிக்க முடியும் என்று அவர்கள் கேட்கின்றனர். அவர்களால் உயர்கல்வியை பெற முடியாது மேலும் அவர்களிடம் இந்த பள்ளிப்படிப்பு இருந்தாலும் அதன் மூலம் அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காது. இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் ஓரிரு வருடங்களுக்குப் பிறகு பள்ளிப்படிப்பைை நிறுத்தி விடுகின்றனர். வறுமை மற்றும் இடப்பெயர்வே இதற்கான காரணமாக விளங்குகிறது.

இங்குள்ள பலரின் வீடுகளில் இருள் தான் இருக்கிறது, கொஞ்சம் அரிசியை தவிர சாப்பிட வேறு உணவு எதுவும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் அதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படுகிறது. இக்கிராமத்தில் உள்ள இளம் பெண் குழந்தைகள் தங்கள் இளைய உடன்பிறப்புகளை கவனித்துத் தங்கள் நாட்களை கடத்துகின்றனர். அவர்களுக்கு திருமணம் ஆன பிறகு அவர்களது புதிய குடும்பங்களுடன் அவர்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இன்றய போட்டி நிறைந்த உலகில் அவர்கள் எங்கே நின்று கொண்டு இருக்கினர், அவர்கள் உயிர் வாழவே போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு கனவு காண்பதற்கு இடம் ஏது? நம்பிக்கையின் கீற்றுகளும் மற்றும் கனவுகளும் அவர்களது வாழ்வில் இன்னும் தீீண்டவே இல்லை. அவை இங்கு எப்போது வந்து சேரும்? அது விடை தெரியா வினாவாகவே தொடர்கிறது.

தமிழில்: சோனியா போஸ்

Mamta Pared

সাংবাদিক মমতা পারেদ (১৯৯৮-২০২২) ২০১৮ সালের পারি ইন্টার্ন ছিলেন। পুণের আবাসাহেব গারওয়ারে মহাবিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতা ও গণসংযোগে স্নাতকোত্তর পাশ করেছিলেন। আদিবাসী জনজীবন, বিশেষ করে যে ওয়ারলি জনগোষ্ঠীর মানুষ তিনি, তাঁদের রুটিরুজি তথা সংগ্রাম বিষয়ে লেখালেখি করতেন।

Other stories by Mamta Pared
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose