“கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்கு பதில் மொத்தமாக கடவுள் எங்களை கொன்றுவிடலாம்,” என்கிறார் அசார் கான். விவசாயியான அவரின் நிலத்தை, சுந்தர்பனில் இருக்கும் மவுசினி தீவை மே 26ம் தேதி விழுங்கிய கடலலைகளுக்கு இழந்திருந்தார்.

வங்காள விரிகுடாவில் உருவாகி இருந்த புயலால் முரிகங்கா ஆற்றில் வழக்கத்துக்கு மாறாக 1-2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. கரையை உடைத்து ஓடிய நீர், தீவின் தாழ்வுப்பகுதியில் வெள்ளச்சேதத்தை உருவாக்கியது. வீடுகளும் நிலங்களும் சேதமாயின.

யாஸ் புயலின் விளைவு மே 26ம் தேதி மதியத்துக்கும் சற்று முன்பு நேர்ந்தது. தென்மேற்கு மவுசுனியிலிருந்து 65 நாடிகல் மைல் தொலைவிலிருந்த ஒடிசாவின் பலாசோரில் கனமழை பெய்தது. அதிதீவிர புயலாக அது மாறியதும், காற்று 130-140 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.

“புயல் வருவதை நாங்கள் பார்த்தோம். எங்களின் உடைமைகளை எடுப்பதற்கு நேரமிருப்பதாக நினைத்தோம். ஆனால் வெள்ளம் எங்களின் கிராமத்துக்குள் புகுந்து விட்டது,” என்கிறார் பக்தங்கா கிராமத்தை சேர்ந்த மஜுரா பீவி. மவுசினியின் மேற்கிலுள்ள முரிகங்காவின் கரையில் அவர் வசிக்கிறார். “உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினோம். உடைமைகளை காக்க முடியவில்லை. பலர் மரங்களில் ஏறி தங்களை காத்துக் கொண்டனர்.”

தீவின் நான்கு கிராமங்களான பக்தங்கா, பலியாரா, கசும்தலா மற்றும் மவுசுனி ஆகிய இடங்களுக்கு செல்லும் நீர்வழிப் போக்குவரத்து ஓயாத மழையால் மூன்று நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. மே 29ம் தேதி நான் மவுசுனியை அடைந்தபோது பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன.

“என் நிலம் உப்புநீருக்கு அடியில் இருக்கிறது,” என்கிறார் பக்தங்கா முகாமில் நான் சந்தித்த அபிலாஷ் சர்தார். “விவசாயிகளான எங்களின் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம்,” என்கிறார் அவர். “அடுத்த மூன்று வருடங்களுக்கு என் நிலத்தில் விவசாயம் பார்க்க முடியாது. மீண்டும் மண் வளம் பெற ஏழு வருடங்கள் ஆகலாம்.”

PHOTO • Ritayan Mukherjee

புயலின் போது பக்தங்காவில் இருந்த தங்களின் வீட்டை காயென் குடும்பம் இழந்துவிட்டது. “எங்களின் வீடு நொறுங்கிவிட்டது. அதன் நிலையை நீங்கள் பார்க்கலாம். இந்த இடிபாடுகளுக்குள்ளிருந்து நாங்கள் எதையும் மீட்க முடியாது”

மேற்கு வங்கத்தின் நம்கானா ஒன்றியத்தில் ஆறுகளாலும் கடலாலும் சூழப்பட்ட மவுசுனி சந்தித்த பல பேரிடர்களின் வரிசையில் தற்போது யாஸ் புயலும் இடம்பெற்றுவிட்டது.

ஒரு வருடத்துக்கு முன் - மே 20 2020-ல் - அம்பான் புயல் சுந்தர்பனில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. அதற்கும் முன் புல்புல் (2019) மற்றும் அய்லா (2009) ஆகிய புயல்கள் தீவுகளில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. அய்லா, மவுசுனி நிலத்தின் 30-35 சதவிகித நிலத்தை நாசமாக்கியது. தெற்கு கடற்கரை மொத்தமும் உப்புத்தன்மை நிறைந்து விவசாயத்துக்கு லாயக்கற்ற பகுதியாக மாறிவிட்டது.

கடல் மட்டத்தின் வெப்ப உயர்வு மட்டுமின்றி, கடலோர வெப்பத்தின் உயர்வும் சேர்ந்துதான் வங்காள விரிகுடா புயல்களை மிக தீவிரமான புயல்களாக மாற்றுகின்றன என்கின்றனர் ஆய்வு வல்லுனர்கள். புயல்கள் அதி தீவிரமாகும் நிலை மே, அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் அதிகரித்திருப்பதாக இந்திய வானில மையம் 2006ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வு குறிப்பிடுகிறது .

யாஸ் புயலுக்கு முன்னால், தீவின் 70 சதவிகித நிலமான 6000 ஏக்கர் நிலம் விவசாயத்துக்கு உகந்த நிலமாக இருந்தது என்கிறார் பக்தங்காவில் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சரல் தாஸ். “தற்போது வெறும் 70-80 ஏக்கர் நிலம் மட்டும்தான் காய்ந்திருக்கிறது.”

தீவில் வசிக்கும் 22,000 பேரில் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) கிட்டத்தட்ட அனைவருமே புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லும் தாஸ் பக்தங்காவின் கூட்டுறவு பள்ளியில் பணிபுரிகிறார். “கிட்டத்தட்ட தீவிலுள்ள 400 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன. 2000 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.” பெரும்பாலான கால்நடைகள், மீன், கோழிகள் அழிந்துவிட்டன என்கிறார்.

PHOTO • Ritayan Mukherjee

பக்தங்காவை சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கிய நெல்வயல்களில் இருந்து குடிநீர் டிரம்மை இழுத்து வருகிறார்

குடிநீருக்கான பிரதான வழியான ஆழ்துளைக் கிணறுகள் புயலுக்கு பிறகு பயன்படுத்த முடியாத தன்மையை அடைந்திருந்தன. “பல ஆழ்துளைக் கிணறுகள் நீரில் மூழ்கிவிட்டன. அருகே இருக்கும் ஆழ்துளைக் கிணறை அடைய இடுப்பளவு சேற்றில் ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு நாங்கள் நடக்க வேண்டும்,” என்கிறார் ஜெய்னல் சர்தார்.

மவுசுனியின் மக்கள் இத்தகைய பேரிடர்களுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் இயற்கை பாதுகாவலரான ஜோதிரிந்திரநாராயண் லகிரி. சுந்தர்பன் மக்களை பற்றி வெளியாகும் காலாண்டு இதழான சுது சுந்தர்பன் சார்ச்சாவுக்கு ஆசிரியராக இருக்கிறார். “அவர்கள் உயிர் வாழ்வதற்கான புதிய உத்திகளுக்கு தயாராக வேண்டும். வெள்ளத்தை தாங்கும் வீடுகளை கட்டுவது போன்ற முயற்சிகளுக்கு நகர வேண்டும்.”

பேரிடர் அதிகம் நேரும் மவுசுனி போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள், அரசு நிவாரணத்தை சார்ந்திருப்பதில்லை என்கிறார் லகிரி. “வருமுன் தயாரித்தலின் வழிதான் அவர்கள் உயிர் வாழ முடியும்.”

விளைச்சலுக்கு காத்திருந்த 96,650 ஹெக்டேர் (238,830 ஏக்கர்) அளவுக்கான நிலம் மாநிலம் முழுவதும் நீரில் மூழ்கிவிட்டதாக மேற்கு வங்க அரசு கணித்திருக்கிறது . மவுசுனியில் விவசாயம்தான் வாழ்வாதாரம் என்கிற நிலையில், அதன் வளம் நிறைந்த நிலத்தின் பெரும்பகுதி உப்புநீருக்குள் மூழ்கியிருப்பது நிலையை மோசமாக்கியிருக்கிறது.

யாஸ் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவையே தீவின் மக்கள் ஜீரணிக்க முடியாத நிலையில் ஜூன் 11ம் தேதி வடக்கு வங்காள விரிகுடாவில் மேலும் ஒரு புயல் உருவாகுமென இந்திய வானிலை மையம் கணித்திருக்கிறது .

எனினும் பக்தங்காவில் பிபிஜான் பீவிக்கு இன்னொரு முக்கியமான கவலை இருக்கிறது. “தண்ணீர் வடிந்தபிறகு நாகப்பாம்பு வீடுகளுக்கு நுழையத் தொடங்கும். எங்களுக்கு பயமாக இருக்கிறது.”

PHOTO • Ritayan Mukherjee

நிரஞ்சன் மண்டல், ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து சேற்றில் நடந்து செல்கிறார்

PHOTO • Ritayan Mukherjee

“என் மகள் மவுசுனியில் வாழ்கிறாள். கடந்த சில நாட்களாக அவளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்கிறார் நம்கானாவின் பிரதிமா மண்டல். மகளின் வீடு நீரில் மூழ்கியிருக்குமென உறுதியாக நம்புகிறார். “அங்கு சென்று நான் பார்க்கப் போகிறேன்”

PHOTO • Ritayan Mukherjee

மவுசினி தீவை அடைய நீர் வழி போக்குவரத்து மட்டும்தான் வழி. யாஸ் புயலால் நம்கானாவிலிருந்து படகுகள் மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மே 29ம் தேதி நீர் வழிப் போக்குவரத்து தொடங்கியதும் மக்களுக்கு ஆசுவாசம் ஏற்பட்டிருக்கிறது

PHOTO • Ritayan Mukherjee

மவுசுனியின் வெள்ள பாதிப்பு பகுதியின் குடும்பம் ஒன்று, கால்நடைகளை பக்தங்காவுக்கு போராடி பாதுகாப்பாக கொண்டு வருகிறது

PHOTO • Ritayan Mukherjee

மவுசுனியின் தாழ்வுப்பகுதிகளில் இருக்கும் பல குடும்பங்கள் அவர்களின் வீடுகளை காலி செய்ய வேண்டியிருந்தது

PHOTO • Ritayan Mukherjee

நீர் வீட்டுக்குள் வந்து விட்டதாக சொல்கிறார் இந்த பக்தங்கா பெண். அவரின் உடைமைகள் எதையும் காப்பாற்ற முடியவில்லை

PHOTO • Ritayan Mukherjee

“நல்லவேளையாக இவளை காப்பாற்ற முடிந்தது,” என பறவையை குறிப்பிடுகிறார் இச்சிறுபெண். “இவள் என்னுடைய சிறந்த தோழி”

PHOTO • Ritayan Mukherjee

நீர் வற்றுவதற்கென பக்தங்கா முகாமில் காத்திருக்கும் சில பெண்கள்

PHOTO • Ritayan Mukherjee

கிராமத்தின் ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கோவிட் பராமரிப்பு மையத்திலும் நீர் புகுந்திருக்கிறது

PHOTO • Ritayan Mukherjee

வருடத்தின் மொத்த வருமானத்தையும் வெள்ளத்தில் இழந்துவிட்டார் மசூத் அலி. “1200 கிலோ அரிசியை வெள்ளம் அழித்துவிட்டது,” என்கிறார். ’உப்பு நீர் பட்டால் அரிசி பயனற்றதாகி விடும். 40 மூட்டைகளையும் நான் தூக்கிப் போட வேண்டும்’

PHOTO • Ritayan Mukherjee

உடைந்த செங்கற்கள் தொகுதியை உயரமான இடத்துக்கு நகர்த்த முயற்சிக்கிறார் இம்ரான். அலைகள் முரிகங்கா ஆற்றின் கரையை உடைத்துவிட்டது

PHOTO • Ritayan Mukherjee

ஆற்றின் கரையில் இருந்த மஜுரா பீவியின் வீடு முற்றிலும் அலைகளால் அழிக்கப்பட்டுவிட்டது. “ நீர் உள்ளே வந்ததும் நாங்கள் ஓடினோம். பணத்தையோ ஆவணத்தையோ எடுக்க நேரமிருக்கவில்லை.” இப்போது கூடாரத்தில் அவர் வசிக்கிறார்

PHOTO • Ritayan Mukherjee

கரைக்கருகே வாழும் ருக்சானா பள்ளி பாடப்புத்தகங்களை வெள்ளத்தில் இழந்துவிட்டார்

PHOTO • Ritayan Mukherjee

வெள்ளத்தில் இக்குழந்தை பறிபோக இருந்தது. “என்னுடைய மருமகன் ஒரு மரத்தில் ஏறி குழந்தையை காப்பாற்றினான்,” என்கிறார் குழந்தையின் பாட்டியான ப்ரோமிதா. “குழந்தைக்கு எட்டு வயது ஆகிறது. ஆனால் உடுத்த ஒன்றுமில்லை. எல்லாம் நீரில் அடித்து சென்றுவிட்டது”

PHOTO • Ritayan Mukherjee

நீரில் மூழ்காத காகிதங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் யாவும் வெயிலில் காய வைக்கப்பட்டிருக்கின்றன

PHOTO • Ritayan Mukherjee

எட்டாம் வகுப்பு படிக்கும் சகனாரா புத்தகங்களையும் ஆவணங்களையும் மே 26 அன்று இழந்துவிட்டார்

PHOTO • Ritayan Mukherjee

கங்காவின் கிளை நதியான முரிகங்காவின் உடைந்த கரை. மவுசுனி தீவின் தெற்கு முனையில் ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது

தமிழில் : ராஜசங்கீதன்

Ritayan Mukherjee

ঋতায়ন মুখার্জি কলকাতার বাসিন্দা, আলোকচিত্রে সবিশেষ উৎসাহী। তিনি ২০১৬ সালের পারি ফেলো। তিব্বত মালভূমির যাযাবর মেষপালক রাখালিয়া জনগোষ্ঠীগুলির জীবন বিষয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী দস্তাবেজি প্রকল্পের সঙ্গে যুক্ত।

Other stories by Ritayan Mukherjee
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan