“நாங்கள்தான் பஷ்மினா சால்வைகளுக்கு மென்மைத்தன்மையை வழங்குகிறோம்.”
ஸ்ரீநகரிலுள்ள அப்துல் மஜீத் லோனின் வீட்டில் நூல்கள் கிடக்கின்றன. கையில் ஒவுச்சுடன் (கூரான இரும்பு கருவி) தரையில் அமர்ந்துகொண்டு, தேவையற்று இருக்கும் நூல்களை நிபுணத்துவத்துடன் பறித்து, புதிதாக நெய்யப்பட்டிருக்கும் பஷ்மினா சால்வையின் பஞ்சை அகற்றுகிறார். “மிகச் சிலருக்கு மட்டும்தான் எங்களின் கலை இருப்பதே தெரியும்,” என்கிறார் அவர்.
42 வயதாகும் கைவினைக் கலைஞரான அவர் ஸ்ரீநகர் மாவட்டத்தின் நவக்கடல் வார்டில் வசிக்கிறார். மதிப்புவாய்ந்த பஷ்மினா சால்வைகளிலிருந்து நூலையும் பஞ்சையும் பறிக்க ஒவுச் பயன்படுத்துகிறார். இந்த வேலை புரஸ்காரி என அழைக்கப்படுகிறது. இதை செய்பவர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஸ்ரீநகரில் மட்டும் இருக்கின்றனர். அப்துல், இருபது வருடங்களாக புரஸ்காராக இருக்கிறார். எட்டுமணி நேர வேலைக்கு கிட்டத்தட்ட 200 ரூபாய் சம்பாதிக்கிறார்.
நெய்யப்பட்ட, நிறமளிக்கப்பட்ட, பூத்தையல் கொண்ட எல்லா வகை பஷ்மினா சால்வைகளுக்கும் புரஸ்காரி கைகளால் செய்யப்படுகிறது. துணியின் நுட்பமான இயல்புக்கு எந்த இயந்திரமும், கைவினைஞரின் திறனளவுக்கு பொருந்தாது.
புரஸ்காரிக்கு ஒவுச் மிகவும் முக்கியம். “எங்களின் மொத்த வருமானமும் ஒவுச் மற்றும் அதன் தரம் ஆகியவற்றை சார்ந்துதான் இருக்கிறது,” என்கிறார் அப்துல், எதிரே தறியில் விரித்து மாட்டப்பட்டிருக்கும் சால்வையை உற்று நோக்கியபடி. “ஒவுச் இல்லாமல் பஷ்மினா சால்வையை சுத்தப்படுத்துவது எங்களுக்கு கஷ்டம்.”
சமீபமாக ஸ்ரீநகரின் புரஸ்கார்கள் ஒவுச் தயாரிக்கும் கொல்லர்களை கண்டுபிடிக்க சிரமப்படுகின்றனர். அந்த கொல்லர்கள்தான் ஒவுச்சை போதுமான அளவுக்கு கூராக்கவும் செய்பவர்கள். “ஒவுச்கள் இல்லாததால் புரஸ்காரி கலை இல்லாமல் போகும் காலமும் வரும்,” என்கிறார் அப்துல் கவலையோடு. “நானே கூட என்னிடம் இருக்கும் கடைசி ஒவுச்சைதான் பயன்படுத்துகிறேன். இதன் கூர் போய்விட்டால், எனக்கு வேலை இருக்காது.”
அப்துலின் வீட்டிலிருந்து 20 நிமிட நடை தூரத்தில் இரும்புக் கொல்லரான அலி முகமது அகங்கெரின் கடை இருக்கிறது. ஸ்ரீநகரின் அலிக் கடல் பகுதியில் கிட்டத்தட்ட டஜன் கொல்லர் கடைகள் இருக்கின்றன. அலி அவர்களில் மூத்தவர். அலி உள்ளிட்ட எந்த கொல்லரும் ஒவுச் உருவாக்கும் ஆர்வத்தில் இல்லை. அதற்கு செலுத்தும் உழைப்பு மற்றும் நேரத்துக்கு தேவையான வருமானம் கிட்டுவதில்லை என்கின்றனர்.
”ஒவுச் செய்வது தனித்திறமை. ஒவுச் கூராக இருக்க வேண்டும். பஷ்மினா சால்வையில் சிறு நூலை கூட எடுக்குமளவுக்கு நுட்பமாக அது செய்யப்பட வேண்டும்.” ஒரு ரம்பத்துக்கு வடிவம் கொடுக்க சுத்தியல் கொண்டு அடித்தபடியே 50 வயது அலி, “நானொரு ஒவுச் செய்யத் தொடங்கினாலும் வெற்றியடைய மாட்டேன் என உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார். உறுதியாக அவர், “நூர்தான் ஒவுச் தயாரிப்பதில் திறன் பெற்றவர்,” என்கிறார்.
15 வருடங்களுக்கு முன் மறைந்த நூர் முகமது, ஒவுச் தயாரிப்பதில் சிறந்தவர் என்ற பெயரை ஸ்ரீநகரில் பல்லாண்டு காலமாக பெற்றிருந்தவர். ஸ்ரீநகரில் புழக்கத்தில் இருக்கும் ஒவுச்களில் பெரும்பாலானவற்றை செய்தது அவர்தான். ஆனால் புரஸ்கார்களுக்கு ஒரு கவலை இருந்தது. ஏனெனில் நூர் அக்கலையை “அவரின் மகனுக்கு மட்டும்தான் சொல்லிக் கொடுத்திருந்தார். ஆனால் அக்கலையில் அவருக்கு ஆர்வம் இல்லை. தனியார் வங்கியில் வேலை பார்த்து இதைக் காட்டிலும் அதிக வருமானம் அவர் ஈட்டுகிறார்,” என்கிறார் மிர்ஜான்புராவின் பட்டறை ஒன்றில் பணிபுரியும் இளம் புரஸ்காரான ஃபெரோஸ் அகமது.
பட்டறையில் பன்னிரெண்டு புரஸ்கார்களுடன் பணிபுரியும் 30 வயது ஃபெரோஸ், கடந்த இரண்டு வருடங்களாக கூர்படுத்தப்படாத ஒவுச்சை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். “புரஸ்காரி கலையில் வளர்ச்சி இல்லை,” என்கிறார் அவர். “10 வருடங்களுக்கு முன் என்ன சம்பாதித்தேனோ அதே அளவுதான் இப்போதும் சம்பாதிக்கிறேன்.”
“புரஸ்காராக நான் பணிபுரிந்த 40 வருடங்களில், இந்த தொழிலுக்கு கஷ்டகாலம் வந்து பார்த்ததில்லை,” என்கிறார் நசீர் அகமது பட். “இருபது வருடங்களுக்கு முன், ஒரு சால்வைக்கு 30 ரூபாய் கொடுத்தார்கள். இப்போது அதே வேலைக்கு 50 ரூபாய் கிடைக்கிறது.” நசீரின் நிபுணத்துவத்தின் மதிப்பு வருடத்துக்கு ஒரு ரூபாய் என கூடியிருக்கிறது.
புரஸ்கார்கள் சந்திக்கும் சிரமங்கள், கடந்த பத்தாண்டுகளில் ஏற்றுமதியான கஷ்மீரி சால்வைகளின் எண்ணிக்கை சரிவில் பிரதிபலித்தது. 2012-13-ல் இருந்த 620 கோடிகளிலிருந்து 2021-22-ல் 165.98 கோடிகள் வரை அது சரிந்திருப்பதாக ஜம்முகாஷ்மீரின் கைத்தறி மற்றும் கைவினைத்துறை தெரிவித்திருக்கிறது.
தொடர் பயன்பாட்டில் இருக்கும் ஒவுச், இரு மாதங்களுக்கு ஒரு முறை கூர் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற மந்தமான வணிககாலத்தில் சில இரும்புக் கொல்லர்கள் இத்திறனை கற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
“ஒவுச் செய்யவோ கூர்படுத்தவோ புரஸ்கார்களுக்கு தெரிவதில்லை,” என்கிறார் நசீர். அவரின் குடும்பம் புரஸ்காரி கலையை பல தலைமுறைகளாக செய்து வருகிறது. சிலர் ஒவுச்களை கூரான முனைகளும் தட்டையான பகுதியும் கொண்ட கருவியைக் கொண்டு கூர்ப்படுத்த முயலுகிறார்கள். ஆனால் விளைவு திருப்திகரமாக இருப்பதில்லை என்கிறார் நசீர்.
“ஏதோவொரு வகையில் நாங்கள் சமாளிக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
“பாருங்கள், இந்த ஒவுச்சும் கூர்மையாக இல்லை,” என்கிறார் நசீருக்கு அருகே பட்டறையில் அமர்ந்திருக்கும் ஆஷிக் அகமது. அவர் பிடித்திருக்கும் ஒவுச்சின் பற்களை காட்டி சொல்கிறார்: “2-3 சால்வைகள் கூட ஒரு நாளில் முடிக்க முடிவதில்லை. நாளொன்றுக்கு அதிகபட்சமாக நான் சம்பாதிப்பது 200 ரூபாய்தான்.” மழுங்கிய ஒவுச்களுடன் பணிபுரிவது, சால்வைகளை சுத்தப்படுத்தும் நேரத்தைக் கூட்டும். கூரான கருவி அவரின் வேகத்தையும் துல்லியத்தையும் கூட்டி அதிக வருமானத்தைக் கொடுக்குமென்கிறார் ஆஷிக். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் வரை கூட ஈட்ட முடியும்.
40 X 80 அங்குல அளவு கொண்ட ஒவ்வொரு பஷ்மினா சால்வைக்கும் புரஸ்கார்கள் 50 ரூபாய் வருமானம் ஈட்டுவார்கள். பூத்தையல் போடப்பட்ட சால்வைக்கு 200 ரூபாய் வரை வருமானம் கிட்டும்.
இப்பிரச்சினைகளில் சிலவற்றுக்கு தீர்வு காணும் முன்னெடுப்பாக, கைத்தறி மற்றும் கைவினைத்துறையின் கீழ் புரஸ்கார்களை பதிவு செய்ய மாநில அரசு முயன்றது. இந்த வருடத்தின் மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கு திட்டமிடப்பட்டிருக்கும் இந்த முன்னெடுப்பில், “பதிவு செய்வது நிதி உதவியை புரஸ்கார்கள் சுலபமாக பெற உதவும்,” என்கிறார் துறையின் இயக்குநரான மகமூது அகமது ஷா.
நல்ல எதிர்காலம் வாய்க்குமென பதிவுமுறை உறுதியளித்தாலும் நிகழ்காலத்தில் புரஸ்கார்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்
இக்கைவினையால் நிலையான வருமானம் ஈட்டமுடியாதென பல இளம் புரஸ்கார்கள் கவலைப்படுகின்றனர். “பெரிதாக வாய்ப்புகள் ஏதும் தோன்றவில்லை எனில், வேறு தொழிலுக்கு நான் சென்றுவிடுவேன்,” என்கிறார் ஃபெரோஸ். அவருடன் பணிபுரியும் ஒருவர் கூறுகையில், “45 வயதில் எனக்கு திருமணமாக இருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? குறைவாக சம்பாதிக்கும் புரஸ்காரை திருமணம் செய்து கொள்ள யாரும் விரும்புவதில்லை. வேறு வேலை பார்ப்பது நல்லது,” என்கிறார்.
“அது அத்தனை சுலபமில்லை,” எனக் குறுக்கிடுகிறார் 62 வயது ஃபயாஸ் அகமது ஷல்லா. இரு இளம் புரஸ்கார்கள் பேசுவதையும் அவர் கவனித்துக் கொண்டிருந்தார். 12 வயதிலிருந்து வேலை பார்த்து வரும் ஃபயாஸ், புரஸ்காரி கலை பற்றிய நினைவுகள் குறித்து பேசுகிறார். “இக்கலையை என் தந்தை ஹபீபுல்லா ஷல்லாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். சொல்லப்போனால், ஸ்ரீநகரின் பல புரஸ்கார்கள் என் தந்தையிடமிருந்துதான் இக்கலையைக் கற்றுக் கொண்டனர்.”
நிச்சயமின்மைகள் சூழ்ந்து கொண்டிருந்தாலும், புரஸ்காரி கலையை விட்டகல ஃபயாஸ் தயங்குகிறார். “வேறு தொழில் ஏதுமெனக்கு அதிகம் தெரியாது,” என்கிறார் அவர் அந்த யோசனையை நிராகரித்து. நுட்பமான பஷ்மினா சால்வையிலுள்ள பஞ்சை பறித்து புன்னகையோடு அவர், “புரஸ்காரி கலை மட்டும்தான் எனக்கு தெரியும்,” என்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்