“மக்கள் பேரம் பேசும்போது வேடிக்கையாக உள்ளது,” என்கிறார் ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நுங்கு வியாபாரி குப்பா பப்பலா ராவ். “பெரிய கார்களில் வருகின்றனர், முகக்கவசம் அணிந்துள்ளனர், ரூ.50 நுங்கை ரூ.30-40க்கு கொடு என பேரம் பேசுகின்றனர்,” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்கிறார்.
ரூ.20 மிச்சப்படுத்தி மக்கள் என்ன செய்வார்கள் என வியக்கிறார் பப்பலா ராவ். “அவர்களை விட எனக்கு பணத்தேவை அதிகம் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியுமா. சாதாரண நேரங்களில் இந்தப் பணம் எனது பேருந்து கட்டணத்திற்கு உதவும்.”
விசாகப்பட்டினம் நகரின் இந்திரா காந்தி வனஉயிரின பூங்கா அருகே தேசிய நெடுஞ்சாலை 16ல் மே 29ஆம் தேதி சாலையோரம் நுங்கு விற்ற வியாபாரிகளில் ஒருவர் 48 வயதாகும் பப்பலா ராவ். காக்கி நிற முகக்கவசம் அணிந்தபடி தனது வியாபாரத்தை அவர் கவனிக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில் நுங்கு விற்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். “கடந்தாண்டு ஒரு நாளுக்கு ரூ.700-800 வரை வருமானம் கிடைத்தது - நுங்கு எங்களை ஒருபோதும் ஏமாற்றியதில்லை,” என்கிறார் அவர்.
கோவிட்-19 ஊரடங்கால் நுங்கு வியாபாரிகள் முக்கியமான வாரங்களில் வியாபாரத்தை இழந்துள்ளனர். மே மாத கடைசி வாரத்தில் தான் வியாபாரத்தை தொடங்கினர். “எங்களால் நுங்கும் விற்க முடியவில்லை, வேறு எங்கும் சென்று வேலை செய்யவும் முடியவில்லை,” என்கிறார் பப்பலா ராவின் மனைவியான 37 வயதாகும் குப்பா ராமா. அவர் வாடிக்கையாளர்களுக்கு நுங்குகளை கட்டிக் கொடுக்கிறார். விசாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தபுரம் மண்டலத்தில் உள்ள தங்களது வீட்டிலிருந்து ராமாவும், பப்பலாவும் ஒன்றாகச் சேர்ந்து 20 கிலோ மீட்டர் பயணம் செய்து நுங்கு விற்க வருகின்றனர்.
“வியாபாரம் இந்தாண்டு சிறப்பாக இல்லை. ஒரு நாளுக்கு 30-35 டஜன் நுங்குதான் எங்களால் விற்க முடிகிறது என்கிறார்,” ராமா. “போக்குவரத்து, சாப்பாட்டுச் செலவு போக, நாள் ஒன்றுக்கு ரூ. 200-300 தான் நிற்கிறது,” என்கிறார் பப்பலா ராவ். கடந்தாண்டு தினமும் 46 டஜன் விற்றதையும் அவர் நினைவுகூர்கிறார். இந்தாண்டு ராமாவும், அவரும் 12 நாட்கள் மட்டுமே அதாவது ஜூன் 16 வரை மட்டுமே நுங்கு விற்றுள்ளனர். கோடைக் காலம் முடியும் நிலையில் உள்ளதால் ஜூன் மாத வியாபாரம் என்பது சரிந்து ஒரு நாளுக்கு 20 டஜன் மட்டுமே விற்பனையாகிறது.
ஏப்ரல், மே மாதங்களில், பனை மரங்களில் (போராசஸ் ஃபிளாபெலிஃபெர்), அதிகளவில் நுங்கு வளரும். பதநீர் எனப்படும் மிகச் சிறந்த இனிப்பு பானம். பப்பலா ராவ் போன்ற பனையேறிகள் நுங்கு பறிப்பதுடன், பதநீரையும் சேகரிக்க 65 அடி உயரம் அல்லது அதற்கு மேலுள்ள பனைமரங்களில் கூட ஏறுகின்றனர்.
பனைமரங்களில் கொத்துக் கொத்தாக காய்க்கும் நுங்கு தோற்றத்தில் தேங்காயை நினைவுப்படுத்துகிறது. கோல வடிவத்தில், பச்சை-கருப்பு தோல் மூடிய விதையில் கண்ணாடியைப் போன்று நீர்த்தன்மையுடன் கட்டியாக இருக்கும். நீர்த்தன்மை கொண்ட இக்கட்டியை உண்பதால் உடலின் சூடு தணிந்து உடல் குளிர்கிறது. இதனால் கோடைக் காலங்களில் பதநீரை விட அதிகளவு நுங்கிற்கு வரவேற்பு இருக்கிறது - என்கிறார் பப்பலா ராவ்.
சீசன் நேரத்தில் ஒரு நாளுக்கு இருமுறை என குறைந்தது நான்கு பனைமரங்கள் பப்பலா ராவ் ஏறிவிடுவார். “இது உண்பதற்கான நேரம்,” என்கிறார் அவர். “அதிகாலை 3 மணிக்கு நுங்கு பறிப்பதற்கு நாங்கள் மரமேற தொடங்குவோம்.”
அதிகாலையிலேயே தொடங்கினால்தான் அவரும், ராமாவும் காலை 9 மணிக்கு நகரத்திற்கு வர முடியும். “நிறைய கிடைத்துவிட்டால், ஆட்டோரிக்ஷாவில் ஏற்றி எடுத்து வருவோம் [ஊரடங்கு தளர்விற்கு பிறகு தொடங்கி இருக்கிறார்கள்]. இப்போதெல்லாம் நாங்கள் ஆனந்தபுரத்திலிருந்து விசாகப்பட்டினம் செல்வதற்கும், திரும்புவதற்கும் ரூ. 600 செலுத்துகிறோம். இல்லாவிட்டால் பேருந்து பிடிக்கிறோம்,” என்கிறார் அவர். கடந்தாண்டு ஆட்டோ கட்டணம் ரூ.400-500 என இருந்தது. ஆனந்தபுரத்திலிருந்து இந்நகரத்திற்கு வருவதற்கு பேருந்துகள் அதிகமில்லை. ஊரடங்கு காலத்தில் பேருந்துகள் இன்னும் குறைந்துவிட்டன.
“3-4 நாட்களில் நுங்கு அழுகிவிடும்,” என்கிறார் ராமா. “பிறகு எங்களுக்கு வேலையும் இருக்காது, பணமும் கிடைக்காது.” குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு, அவர்களின் 19 வயது உறவுக்காரப் பையன் கொர்லு கணேஷ் உதவி செய்கிறான்.
ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதங்களில், பப்பலா ராவ் பனைமரங்களில் ஏறி பதநீர் இறக்குவார். அவரும், ராமாவும் அதனை விசாகப்பட்டனம் நகரத்தின் அருகே உள்ள கொம்மாடி சந்திப்பில் சிறு மற்றும் பெரிய கோப்பைகளில் ஊற்றி ரூ.10 அல்லது ரூ.20க்கு விற்கின்றனர். சில நாட்கள் 3-4 கோப்பைகள் மட்டுமே அவர்கள் விற்கின்றனர். சில நேரம் ஒரு நாளுக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை கிடைக்கும். மாதந்தோறும் பதநீர் இறக்கி அவர்கள் தோராயமாக ரூ.1000 வருமானம் ஈட்டுகின்றனர். ஜூலை முதல் டிசம்பர் மாதங்களில் நகரின் கட்டுமானப் பணியிடங்களில் தினக்கூலியாக வேலை செய்கின்றனர்.
விசாகப்பட்டனத்தின் பரபரப்பு நிறைந்த இந்த தேசிய நெடுஞ்சாலைதான் பப்பலா ராவ் மற்றும் ராமாவிற்கு நுங்கு விற்பதற்கான சிறந்த இடம். இங்கு 5-6 மணி நேரம் செலவிட்டு மதியம் 3 மணியளவில் வீடு திரும்புகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் பப்பலா ராவ், ராமா இருக்கும் சில அடி தூரத்தில் என். அப்பாராவ், குதலா ராஜூ, கன்னிமல்லா சுரப்படு ஆகியோர் ஒரு மீட்டர் இடைவெளியை அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் ஆட்டோவில் கொண்டு வந்த பனங்காய்களை தோலுரிக்கின்றனர். பல வாகனங்கள் கடந்தாலும், சில வாகனங்கள் மட்டுமே வாங்குவதற்கு நிற்கின்றன.
பனங்காய்களை நுங்கு வியாபாரிகள் தோலுரிக்கின்றனர். பல வாகனங்கள் கடந்தாலும், சில மட்டுமே வாங்குவதற்கு நிற்கின்றன.
“ இதற்குள் நிரப்பி கொண்டு வந்து மூன்றாண்டுகளாக விற்று வருகிறோம்,” என்கிறார் சுரப்பாடு. அவர் ஐந்து பேர் இருக்கை கொண்ட தனது ஆட்டோவைக் காட்டுகிறார். “இதில் நுங்குகளை ஏற்றி வருவது எளிது.” இந்த பருவத்தில் மே29ஆம் தேதி என்பது விற்பனையின் இரண்டாவது நாள் மட்டுமே. “நாங்கள் வருவாயைச் சமமாக பிரித்துக் கொள்கிறோம். நேற்று எங்களுக்கு தலா ரூ.300 கிடைத்தது,” என்கிறார் அப்பாராவ்.
ஆனந்தபுரத்தில் ஒரே பகுதியில் அப்பாராவ், ராஜூ, சுரப்படு ஆகியோர் வசிக்கின்றனர். அவர்கள் வங்கிக் கடனில் ஆட்டோ வாங்கியுள்ளனர். “பொதுவாக நாங்கள் மாதத் தவணையை [ரூ. 7,500] செலுத்த தவறுவதில்லை, ஆனால் கடந்த மூன்று மாதங்களாக எங்களால் இஎம்ஐ தொகையை செலுத்த முடியவில்லை,” என்கிறார் சுரப்படு. “ஒரு மாத தவணையாவது செலுத்துங்கள் என வங்கியிலிருந்து தொடர்ந்து சொல்கின்றனர். எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.”
நுங்கு விற்காத நேரத்தில் மூவரும் நேரம் பிரித்து கொண்டு, ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சவாரி செய்தினர். ஊரடங்கிற்கு முன் மாதத் தவணை போக எஞ்சிய பணத்தில் மாதம் ரூ. 5000-7000 வரை சமமாக பங்கு பிரித்துக் கொண்டனர்.
“கடந்தாண்டு தெருக்களில் சுற்றி எங்கள் ஆட்டோவில் நுங்கு விற்றோம். நிறைய சம்பாதித்தோம்,” என்கிறார் அப்பாராவ். “இந்தாண்டு அப்படி இல்லை. இதுவே இறுதியாக இருக்காது. நாம் உயிர் பிழைப்போம் என நம்புகிறேன்.”
15 ஆண்டுகளாக நுங்கு வியாபாரம் செய்து வரும் சுரப்படு இப்போது நிலவும் நெருக்கடிகளையும் மீறி தொடர்ந்து தொழிலில் ஈடுபட போவதாகச் சொல்கிறார். “நுங்கு வெட்டுவது எனக்கு பிடிக்கும். இது ஒரு வகையான அமைதியை தருகிறது,” என்று தரையில் உட்கார்ந்தபடி பனை நுங்கை வெட்டிக் கொண்டு சொல்கிறார் அவர். “இது ஒரு வேலை என்பதை விட கலையாக, திறமையாகவே நான் உணர்கிறேன்.”
மே 29 ஆம் தேதி நெடுஞ்சாலையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் எம்விபி காலனியில் 23 வயதாகும் கண்டிபுலா ஈஸ்வர் ராவ், உறவினர் ஆர். கவுதமுடன் ஆட்டோவில் கொண்டு வந்து நுங்கு விற்றார். ஆனந்தபுரம் மண்டலத்தில் உள்ள கோலவானிபேலம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் நுங்கு விற்பதற்காக கிட்டதட்ட 30 கிலோமீட்டர் பயணம் செய்கிறார். மற்ற நுங்கு வியாபாரிகளைப் போன்று இந்தாண்டு மே கடைசி வாரத்தில்தான் நுங்கு வியாபாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
13 வயதிலிருந்து கிட்டதட்ட பத்தாண்டுகளாக ஈஸ்வர் பதநீர் இறக்கும் தொழிலில் உள்ளார். “கடந்தாண்டு ஏப்ரல் மாதம், பதநீர் இறக்க மரமேறியபோது, மலைப்பாம்பு ஒன்று என்னை தாக்கியது. கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டுவிட்டது,” என்றார். அதில் அவரது குடலும் காயமடைந்துவிட்டது. அதற்காக ரூ. 1 லட்சம் செலவில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
“நான் மீண்டும் பனையேற மாட்டேன். வேறு வேலைக்குச் செல்வேன்,” என்றார் ஈஸ்வர். விசாகப்பட்டினத்தின் பீமுனிபட்டணம் மண்டல், ருஷிகோண்டா பகுதிகளில் உள்ள கட்டுமான தளங்களில் உள்ள குப்பைகள், செடிகளை அகற்றும் பணிகளை செய்து தினக்கூலியாக ரூ.70 பெற்று வந்தார். இப்போது அனைத்து கட்டுமானத் தளங்களும் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளன என்றார் அவர். “இந்த ஊரடங்கு நுங்கு பறிப்பதற்காக பனையேறும் நிலைக்கு என்னை மீண்டும் தள்ளிவிட்டது.”
“தொடக்கத்தின் நான் பயந்தேன், ஆனால் என் குடும்பத்திற்கு உதவ வேண்டும்,” என்று அவர் விளக்கினார். ஒரு நாளுக்கு மூன்று முறை என 6-7 மரங்களை அவர் ஏறிவிடுவார். அவரது 53 வயதாகும் தந்தை கண்டேபுலா ராமனா பதநீர் இறக்குவதற்காக 3-4 மரங்கள் ஏறுகிறார். ஈஸ்வரின் சகோதரர் கட்டுமானத் தளங்களில் வேலை செய்கிறார். தாயார், ஒரு தங்கை ஆகியோரைக் கொண்டது அவரது குடும்பம்.
இந்தாண்டு ஜனவரி மாதம் ஆட்டோ வாங்குவதற்காக ஈஸ்வரின் பெயரில் குடும்பத்தினர் வங்கிக் கடன் வாங்கினர். இதற்காக அவர்கள் மாதத் தவணையாக ரூ. 6,500 (மூன்றரை ஆண்டுகளுக்கு) செலுத்த வேண்டும். “ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆட்டோ ஓட்டி மாதம் ரூ. 3000-4000 வரை சம்பாதித்தேன். மார்ச் மாதம் ரூ. 1500 மட்டுமே கிடைத்தது. இப்போது நான் பதநீர் இறக்குவதற்கும், கூலி வேலைகளுக்கும் செல்ல வேண்டும்,” என்று சொல்லும் ஈஸ்வர், ஏப்ரல் முதல் தவணைத் தொகையை செலுத்தவில்லை.
கோவிட்-19 தொற்று பரவும் வரை ஈஸ்வரின் குடும்பத்தினர் கூட்டாக மாதம் ரூ. 7000 - ரூ. 9000 வரை வருவாய் ஈட்டி வந்தனர். “இந்தளவு சம்பாதிக்க எங்களால் முடிந்தவரை முயன்றோம்,” என்கிறார் அவர். பண நெருக்கடி வரும்போது குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்கி கொள்கின்றனர். மார்ச் மாதம் அவரது மாமாவிடம் ரூ. 10,000 கடன் வாங்கியுள்ளனர்.
ஜூன் 18ஆம் தேதி வரை 15-16 நாட்களுக்கு ஈஸ்வர் நுங்கு விற்றார். “இந்தாண்டு சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். என் சகோதரியை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நினைத்தேன்,” என்றார். குடும்ப பொருளாதார நெருக்கடிகள் காரணமாக 2019ஆம் ஆண்டு 15 வயதாகும் கண்டேபுலா சுப்ரஜா பள்ளிப் படிப்பிலிருந்து இடை நின்றார்.
இந்த கோடைக் காலத்தில், மே 29 ஆம் தேதி நுங்கு விற்றதில் அவருடைய உச்ச வருவாய் ரூ. 600. “உங்களுக்கு தெரியுமா, அதில் ஒரு 100 ரூபாய் நோட்டு கிழிந்திருந்தது,” என்று மெல்லிய குரலில் சொன்னார், “இப்படி ஆகும் என நினைக்கவில்லை.”
தமிழில்: சவிதா