பாபு கந்தரே, கால்நடைகளுக்கான கழுத்துமணிகள், அலங்கார நகைகள் விற்பவர். இவை கால்நடை பராமரிப்புக்கும் விவசாயத்திற்கும் பயன்படக்கூடியவை. இந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவர் வாரச் சந்தைகள் - சங்க்லி மாவட்டத்திலுள்ள அட்பாடி மற்றும் ஜத் தாலுகாகளுக்கும், சதரா மாவட்டத்திலுள்ள மஹவத் மற்றும் கதவ் தாலுகாகளுக்கும், மற்றும் அதன் அருகில் இருக்கும் சில இடங்களுக்கும் செல்வார். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கும் வறட்சி காரணமாக, கால்நடைகளுக்கான தீவனமும் தண்ணீரும் பற்றாக்குறை ஆகிவிட்டன. ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனையும் குறைந்துவிட்டன. இது கந்தரேவின் தொழிலையும் மிகவும் பாதித்துள்ளது.
நாங்கள் கந்தரேவை மஹவத் ஊரில் புதன்கிழமையன்று நடக்கும் ஆட்டுச் சந்தையில் சந்தித்தோம்; 30களில் இருக்கும் அவர், தோர் சமூகத்தையைச் சேர்ந்தவர்; அதாவது, இத்தகையை பணிகளைப் பாரம்பரியமாகச் செய்துவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். 35 கிலோமீட்டர் தொலைவிலிருந்து, அட்பாடி கிராமத்திற்கு அவர் வந்துள்ளார். காலை 10:30 இருக்கும்; கிட்டதட்ட சந்தை மூடப்படும் நேரம் அது. மக்கள் அனைவரும் ஷேர் ஆட்டோ, ஜீப் மூலமாக தங்களின் கிராமங்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இறைச்சி விற்பனையாளர்கள் தங்களின் வாகனத்தில் ஆட்டிறைச்சிகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். சில விற்பனையாளர்கள் கடைசி நிமிடத்தில் கிடைக்கும் வாடிக்கையாளர்களுக்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
கந்தரே தனது கடையை ஒரு டெம்போவில் நடத்துகிறார். அதில் பயணம் செய்து, விற்பனை இடத்திற்கு வந்தவுடன் பின் கதவைத் திறந்து வியாபாரம் செய்கிறார். அதன் உள்ளே, அவர் பலவிதமான அணிகலன்கள், ஆபரணங்கள் காட்சிப்படுத்தியிருக்கிறார். தாவே -
கால்நடைகளைக் கொட்டாயிலோ அல்லது மேய்ச்சலின்போதோ கட்டிவைக்கப்படும் கயிறு, கஸ்ரா - மாட்டு வண்டியில் காளைகளையும், எருதுகளையும் கட்டிவைக்கும் கயிறு, கொஃபான் - சிறிய பை வைத்த கயிறு அல்லது பெல்ட் (விளைநிலங்களில் இருக்கும் பறவைகளைத் துரத்த உதவும்)., மஸ்கி - இது பயிறுகளை விலங்குகள் உண்ணாமல் இருக்க அதன் வாயில் கட்டப்படும் துணி, குங்குர் மால் - ஆட்டின் கழுத்தைச் சுற்றி கட்டும் சிறிய அளவிலான மணி, காந்தா - கம்பளி பந்துகளில் சிறிய மணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கழுத்தணி, மொர்கி - மூக்கு சேணலாகப் பயன்படுத்தப்படும் பின்னப்பட்ட கயிறு.
அவர் வாடிக்கையாளர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். “நான் இங்கு வருவதற்காக 400 ரூபாய் செலவழித்தேன். ஆனால், இங்கு 350 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. அதுவும், மொத்த விலை விற்பனையாளர்களிடமிருந்தே மட்டுமே. இதனை வாங்க ஒரு வாடிக்கையாளர்கூட வரவில்லை, காலியாக இருக்கும் தன் மரப் பணப்பெட்டியை காட்டியவாறே கூறுகிறார் கந்தரே. ”இந்த சந்தை இப்போது மூடிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், ஆட்டிறைச்சி மட்டுமே சந்தையில் விற்பனையாகின்றது. குறைந்தபட்சம், அக்கம் பக்கத்தில் நடக்கவிருக்கும் வாரச் சந்தைகளில் இதில் ஏதேனும் சில மணிகளையாவது என்னால் விற்கமுடியுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்”.
Cover photo: பினைஃபர் பருச்சா
தமிழாக்கம்:
ஷோபனா ரூபகுமார்