கோரை வெட்டுவதில் திறன்பெற்ற ஒருவர் 15 நொடிகளில் ஒரு செடியை வெட்டி, அரை நிமிடத்தில் குலுக்கி, அடுத்த சில நிமிடங்களில் ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். அத்தனை விரைவாக ஒரு சிறந்த கோரை வெட்டுபவரால் இந்த வேலையை முடித்துவிட முடியும். புற்கள் வகையைச்சார்ந்த இந்தச்செடி, அவர்களைவிட உயரமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு கட்டும் கிட்டத்தட்ட 5 கிலோ உள்ளது. பெண்கள் அவற்றை எளிதாக சுமந்து செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தலையில் 12 முதல் 15 கட்டுகளை ஒரே நேரத்தில் வெயிலில் அரை கிலோ மீட்டர் தொலைவு சுமந்து செல்கின்றனர். கட்டுக்கு ரூ.2 ஈட்டுவதற்காக இவர்கள் இவ்வளவு கஷ்டப்படவேண்டியுள்ளது.
ஒரு நாளில் அவர்கள் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் 150 கோரை கட்டுகள் பறிக்கிறார்கள். இந்த கோரை புற்கள் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் ஆற்றுப்படுகையில் அதிகளவில் வளர்கின்றன.
கரூரின் மனவாசி கிராமத்தில், காவிரிக்கரையோரம் உள்ள ஒரு நத்தமேட்டில் இந்த கோரைவெட்டும் பெண்கள் வேலை செய்கிறார்கள். இங்கு கோரை வெட்டுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் ஒரு சிறிய இடைவேளையுடன் வேலை செய்கிறார்கள். பசுமையாக அடர்ந்து வளர்ந்துள்ள கோரைகளின் தண்டுகளை கையுறையின்றி வெறும் கையிலே அரிவாளால் குனிந்து வெட்டுகிறார்கள். அவற்றை கட்டாக கட்டி, பெற்றுக்கொள்ளும் இடத்தில் ஒப்படைக்கிறார்கள். அதற்கு திறமை, பலம் மற்றம் கடின உழைப்பும் தேவைப்படுகிறது.
பெரும்பாலான பெண்கள் தாங்கள் சிறு பெண்களாக இருந்தது முதலே கோரை வெட்டுவதாக கூறுகின்றனர். “நான் பிறந்தது முதலே கோரைக்காடு தான் எனது உலகம். நான் 10 வயதாக இருந்தபோதிலிருந்தே வயல்களில் வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.3 சம்பாதிப்பேன்“ என்று 59 வயதான சௌபாக்கியம் கூறுகிறார். 5 பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு உணவளிக்க தற்போது அவரது வருமானம் உதவுகிறது.
எம். மகேஸ்வரி (33). கணவனை இழந்த இவருக்கு பள்ளி செல்லும் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் தந்தை தன்னை மாடு மேய்க்கவும், கோரை வெட்டவும் அனுப்புவதை நினைவு கூறுகிறார். “நான் பள்ளி வாசலை கூட மிதித்ததில்லை“ என்று அவர் சோகமாக கூறுகிறார். “இந்த வயல்வெளிகளே எனது இரண்டாவது வீடு“ என்று அவர் மேலும் கூறுகிறார். ஆர். செல்வி (39) தனது தாயை பின்பற்றி தானும் கோரை வெட்டுகிறார். “எனது தாயும் கோரை வெட்டுபவர்தான். நான் இந்த வேலையை சிறிது வயதில் இருந்தே துவங்கிவிட்டேன்“ என்று அவர் கூறுகிறார்.
முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள், இச்சமுதாயம் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் சமுதாயமாக குறிப்பிடப்பட்டுள்ளது, இவர்கள் அனைவரும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆமூரைச் சேர்ந்தவர்கள். ஆமூர் முசிறி தாலுகாவில் உள்ள ஒரு கிராமம். நத்தமேட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதுவும் காவிரிக்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம்தான். ஆனால், மண் குவாரிகளால், ஆமூரில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. “ஆற்றில் தண்ணீர் இருந்த காலத்தில் எங்கள் ஊரில் கோரை முளைத்தது. பின்னர் தண்ணீர் குறைவான அளவு தண்ணீரே உள்ளது. எனவே நாங்கள் வேலைக்காக நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது“ என்று மகேஸ்வரி கூறுகிறார்.
இதனால், ஆமூரில் வசிப்பவர்கள் நீர்ப்பாசன வசதியுள்ள அருகமை கரூர் மாவட்டத்திற்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் அங்கிருந்து பஸ்சிலோ, லாரியிலோ பணம் கொடுத்து பயணம் செய்து, நாளொன்றுக்கு ரூ. 300 ஈட்டுகிறார்கள். வி.எம். கண்ணன் (47), தனது மனைவி கே. அக்கண்டியுடன் சேர்ந்து கோரை வெட்டுவபவர், “மற்றவர்களுக்காக காவிரி நீர் உறிஞ்சப்படுகிறது. ஆனால், உள்ளூர்வாசிகளான எங்களுக்கு கிடைக்காமல் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்“ என்ற முரணான விஷயத்தை கூறுகிறார்.
ஏ. மாரியாயி, தனது 15 வயது முதலே கோரை வெட்டுபவராக உள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் நாளொன்றுக்கு 100 கட்டுகள் கோரை வெட்டுவோம். தற்போது, குறைந்தபட்சம் 150 கட்டுகள் வெட்டி, ரூ.300 சம்பாதிக்கிறோம். முன்பெல்லாம் கூலி மிகக் குறைவாக இருந்தது. ஒரு கட்டுக்கு 60 பைசா மட்டுமே கிடைத்தது“ என்றார்.
“1983ம் ஆண்டில், 12.5 பைசாவாக இருந்தது“ என்று கண்ணன் நினைவு கூறுகிறார். அவர் தனது 12 வயது முதல் கோரை வெட்டுவதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.8 சம்பாதித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர்தான், ஒப்பந்தக்காரர்களிடம் பலமுறை முறையிட்ட பின்னர் ஒரு கட்டுக்கு ரூ. 1 உயர்த்தப்பட்டது. பின்னர் அது ரூ.2 ஆக ஆனது.
மணி, ஆமூரில் இருந்து கூலியாட்களை அழைத்து வருபவர், ஒன்று முதல் ஒன்றரை ஏக்கர் குத்ததை நிலத்தில் வணிக நோக்கில் கோரை பயிரிட்டுள்ளார். வயலில் தண்ணீர் அளவு குறைவாக இருக்கும்போது, ஒரு ஏக்கருக்கு வாடகை ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மாதத்திற்கு வழங்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். “தண்ணீர் அளவு அதிகமாக இருந்தால், 3 முதல் 4 மடங்கு வாடகை அதிகம் கொடுக்க வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார். அவருக்கு மாத நிகர வருமானம், ஏக்கருக்கு ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும். ஒருவேளை குறைத்து மதிப்பிடப்படிருக்கலாம்.
கோரை புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். சைப்பர்ஏசியே குடும்பத்தைச் சார்ந்தது. இது தோராயமாக 6 அடி உயரம் வரை வளர்கிறது. இது கரூர் மாவட்டத்தில் வணிக நோக்கத்தில் பயிரிடப்படுகிறது. இங்கிருந்து முசிறியில் உள்ள கோரைப்பாய் மற்றும் மற்ற பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற பாய் தயாரிக்கும் மையம்.
இந்த தொழிற்சாலை, வயலில் வேலை செய்யும் தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது. ரூ.300 சம்பாதிப்பது பெண்களுக்கு எளிதானது அல்ல, அவர்கள் காலை 6 மணிக்கே பணிகளை துவக்குவார்கள். காலை 6 மணிக்கே தங்கள் வேலையை துவங்குவார்கள். நீண்டு வளர்ந்துள்ள கோரையை குனிந்து, வளைந்திருக்கும் அரிவாள் கொண்டு அடியில் வெட்டுவார்கள். அவர்கள், பருவ மழைக்காலங்களில் சில நாட்கள் தவிர, ஆண்டு முழுவதும் பணி செய்வார்கள்.
“நான் காலை 4 மணிக்கே எழுந்து, குடும்பத்தினருக்காக சமைத்துவைத்துவிட்டு, அவசரஅவசரமாக ஓடிவந்து பஸ்சை பிடித்து, வயலுக்கு வரவேண்டும். நான் சம்பாதிக்கும் பணம் பஸ் பயணத்திற்கு, சாப்பாட்டுக்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் இந்த வேலை தேவைப்படுகிறது என்று கூறுகிறார் 44 வயதான ஜெயந்தி.
“எனக்கு வேறு என்ன வழிகள் உள்ளன? இந்த ஒரு வேலை மட்டும்தான் எனக்கு கிடைக்கிறது. எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவன் 9ம் வகுப்பும், இளையவன் 8ம் வகுப்பும் படிக்கிறார்கள்“ என்று மகேஸ்வரி கூறுகிறார். அவரின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
பெரும்பாலும் அனைத்து பெண்களும் கோரை வெட்டுவதில் கிடைக்கும் தொகையில்தான் தங்களின் குடும்பத்தை நடத்துகின்றனர். “நான் இரண்டு நாட்கள் இங்கு வேலைக்கு வரவில்லையென்றால், எனக்கு சாப்பிடுவதற்கு வீட்டில் ஒன்றும் இருக்காது“ என்று செல்வி கூறுகிறார். அவரது 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு அவரது வருமானம் முக்கியமானது.
ஆனால், பணம் பற்றாக்குறையாகத்தான் உள்ளது. “எனது இளைய மகள் செவிலியருக்கு படிக்கிறார். எனது மகன் 11ம் வகுப்பு படிக்கிறார். நான் மகனின் படிப்பிற்கு எவ்வாறு பணம் சம்பாதிப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. எனது மகளின் கட்டணத்தையே நான் கடன் வாங்கிதான் செலுத்தியுள்ளேன்“ என்று மாரியாயி கூறுகிறார்.
அவர்களின் வருமானம் ரூ.300ஆக உயர்ந்தும் ஒரு நன்மையும் இல்லை. “முன்பெல்லாம் நாங்கள் வீட்டிற்கு ரூ.200 எடுத்துச்செல்வோம். அதில் நிறைய காய்கறிகள் வாங்கலாம். ஆனால், தற்போது ரூ.300 எங்கள் போதியதாக இல்லை“ என்று சௌபாக்கியம் கூறுகிறார். அவர் வீட்டில், அவரது தாய், கணவர், மகன், மருமகள், அவர் உள்பட 5 பேர் உள்ளனர். “எனது வருமானத்தில் தான் அனைவரும் சாப்பிட வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் பெண்களின் வருமானத்தை நம்பியே உள்ளனர். ஏனெனில் ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். “எனது மகன் கொத்தனர். அவர் ஒரு நாளைக்கு ரூ.1,000 கூட சம்பாதிப்பார். ஆனால், அவரது மனைவிக்கு ஒரு பைசா கூட கொடுக்கமாட்டார். அனைத்தையும் குடிப்பதற்கே பயன்படுத்துவார். அவர் மனைவி பணம் கேட்டால், அவரை கடுமையாக அடித்து தாக்குவார். எனது கணவர் வயதானவர். அவரால் வேலைக்கு செல்ல முடியாது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த கடினமான வாழ்க்கை பெண்களின் உடல் நிலையை வெகுவாக பாதிக்கிறது. “நான் நாள் முழுவதும் குனிந்து கோரை வெட்ட வேண்டியுள்ளதால், எனக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது“ என்று ஜெயந்தி கூறுகிறார். “கடைசியில் நான் வாரமொருமுறை மருத்துவமனைக்குச்செல்கிறேன். அந்த பில் தொகையே ரூ.500 மூதல் ரூ.1,000 வருகிறது. நான் சம்பாதிக்கும் அனைத்தும் என் மருத்துவ செலவிற்கே செல்கிறது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
“எனனால் இதை நீண்ட காலம் செய்ய முடியாது“ என்று மாரியாயி சோகமாக கூறுகிறார். அவர் கோரை வெட்டும் வேலையை நிறுத்த விரும்புகிறார். “எனது தோள்பட்டை, இடுப்பு, நெஞ்சு, கைகள் மற்றும் கால்கள் வலிக்கிறது. எனது கைகள் மற்றும் கால்களில் கூர்மையான கோரை புற்கள் கிழித்து விடுகின்றன. உங்களுக்கு தெரியுமா வெயிலில் வேலை செய்வது எவ்வளவு கொடுமை என்று‘‘ அவர் கேட்கிறார்.
கட்டுரைக்கு உதவியவர் அபர்ணா கார்த்திக்கேயன்
தமிழில்: பிரியதர்சினி R.