விட்டோ பாண்டேவுக்கு கழிவறையை அடைவதற்கு 60 அடிகள் தேவைப்படும். இந்த சமமில்லாத நிலத்தில் அவரால் தனியாக அங்கு செல்ல முடியாது. சில நேரங்களில், அவரின் கையைப்பிடித்து, நடந்து அழைத்துச்செல்லும் ஒருவரின் துணைக்காக பல மணி நேரங்கள் வரை காத்திருக்கக் நேரிடும். “அடிக்கடி கீழே விழுவேன். விழுந்து எழுவேன். ஒருமுறை காளை மாடு முட்டியதில், சில வாரங்களுக்கு எனது உடல் வீங்கியிருந்தது“ என்று அவர் கூறுகிறார்.
பிறவியிலேயே விட்டோ, பார்வையற்றவர். அவரை வழக்கமாக, அவரது சகோதரரின் மனைவி கீதாதான் கழிவறைக்கு அழைத்துச் செல்வார். “இவர் என்னை கழிவறைக்கு அழைக்கும்போது நான் வேறு வேலை செய்துகொண்டு இருப்பேன். அதுதான் பிரச்னையாக இருக்கும“ என்று கீதா கூறுகிறார். அவர் திறந்தவெளியை பயன்படுத்துபவர். “இந்த கழிவறையில் தண்ணீர் வசதியும் இல்லாததால், அது மிகவும் அசுத்தமாக உள்ளது. இது ஒரு பயனற்ற கழிவறை“ என்று அவர் கூறுகிறார். அவரது கணவர் சனாதாக், விட்டோவின் மூன்று சகோதரர்களுள் இளையவர். அவர் லக்னோ மாவட்டத்தில், கோசாய்கஞ்ச் வட்டத்தில் உள்ள பக்காரி கிராமத்தில் உள்ள அவர்களின் 0.6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
பக்காரியில் கட்டப்பட்டுள்ள 203 கழிவறைகளில் பெரும்பாலானவை வசிக்கும் இடத்தில் இருந்து மிகத்தொலைவில் உள்ளது. உடைந்து விழும் நிலையிலும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. அடிப்படையான கழிவறை வசதி கூட இல்லாததால், அவர்கள் இயற்கை உபாதைகளை நீண்ட நேரத்திற்கு அடக்கி வைத்திருக்க வேண்டியுள்ளது, நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது, கிராமவாசிகள் முன் அவமானப்பட வேண்டியுள்ளது.
தாராவதி சாஹீ, இல்லத்தரசி, அவருக்கு வயிறு கோளாறு ஏற்படும்போது, தொலைவில் உள்ள கழிவறை அவசரமாகச் செல்லும்போது, மற்றவர்கள் வீட்டின் முன்புறமே மலம் கழித்துவிட நேரிடும். “இது எவ்வளவு அவமானகரமாக இருக்கும். அக்கம்பக்கத்தினர், என்னை அருவருப்பாக பார்ப்பார்கள். வயிறு சரியில்லாதபோது, எனக்கு மலத்தை அடக்குவது மிகச்சிரமமானது. நான் மலம் கழித்த இடத்தை, நாளொன்றுக்கு 5 முறை கழுவிவிடுவேன்“ என்று அவர் கூறுகிறார். 65 வயதில் கழிவறைக்கு சிறிது தூரம் நடந்து செல்வதே அவருக்கு கடினமான ஒன்றாகும். அவரின் 72 வயது கணவர், மட்டா பிரசாத் சாஹீவுக்கு, அவர்களின் மூன்று பிகா விளைநிலத்தில் வேலை செய்வதே கடினமாக இருக்கும் நிலையில், அவருக்கும் தாராவதிக்கு உள்ள அதே பிரச்னை உள்ளது. “நாங்கள் நிறைய பேரிடம் கைகட்டி நின்றோம். ஆனால் ஒருவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. கழிவறை கேட்டுக்கேட்டே நான் சோர்ந்துவிட்டேன்“ என்று அவர் கூறுகிறார்.
லக்னோ நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் பக்காரி, 190 வீடுகளை கொண்டது. இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 100 சதவீதம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம், மத்திய அரசின் குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகத்தால் 2014ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. நாடு முழுவதையும் சுத்தமாக வைத்துக்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஆனால், பக்காரியின் கழிவறைகள் கட்டும் திட்டம் தூய்மை இந்தியா திட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே போடப்பட்டது. 2009ம் ஆண்டு, மாயாவதி மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதே இந்த கிராமம், டாக்டர் அம்பேத்கார் கிராம சபா விகாஸ் யோஜனாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது உத்திரபிரதேச மாநிலத்தின் ஒரு திட்டம். அது தூய்மையான கழிவறைகளை ஏற்படுத்துவதையும் உள்ளடக்கியது. மற்ற முக்கியமான ஐந்து அடையப்படவேண்டிய குறிக்கோள்கள்: மின்சாரம், சாலை வசதி, தண்ணீர், வீடுகள் மற்றும் சாக்கடை போன்றவையாகும். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 170 கழிவறைகளில் விட்டோ பயன்படுத்தும் கழிவறையும் ஒன்றாகும். அடிப்படையான 18 அளவீடுகளில் ஒன்றான பட்டியல் இனத்தைச்சார்ந்த கணிசாமான அளவிலான மக்கள் வசிப்பதும், இந்த கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணமாகும். 917 பக்காரிவாசிகளில் 381 பேர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களாக 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
பக்காரிகளை சேர்த்த கிராம சபா விகாஸ் யோஜனா திட்டம் வீழ்ச்சியடைந்தபோது, தூய்மை இந்தியா திட்டம், 2012ம் ஆண்டு தனது அடிப்படை கணக்கெடுப்பான, கழிவறை கட்டுவதற்கு தகுதியான வீடுகள் குறித்து கணக்கெடுத்துக்கொண்டிருந்தது. கிராம சபா விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கழிவறைகள் பெற்ற குடும்பங்கள் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
பக்காரி கிராம சபாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அம்பர் சிங் கூறுகையில், “நான் தூய்மை இந்தியா திட்டத்தில் இருந்து, கிராம சபா விகாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகளை சரிசெய்வதற்கு நிதி கேட்டுள்ளேன். அதில் பாண்டேவின் உடைந்த கழிவறையும் அடங்கும். ஆனால், அந்த திட்டம் நிறைவடைந்தபின் பின் ஒன்றும் செய்ய முடியாது“ என்று கூறுகிறார். நிறைவடைந்தபின் என்று சிங் கூறுவது, தூய்மை இந்தியா திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களை குறிக்கிறார். அத்திட்டத்தின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப்பதிவுகளில், கிராமத்தில் அனைத்து கழிவறைகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிடப்பட்டுவிட்டால், புதியவற்றிற்கு நிதி வழங்கப்படமாட்டது.
பழைய கழிவறையையே பயன்படுத்திவருகிறார்கள். அதன் கற்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது : 'என் மீது கூட விழுந்துவிடும்'
இரண்டு திட்டங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டோம், பிண்டேஸ்வரி குடும்பத்தினருக்கும் வேறு வழிகளே கிடையாது. பழைய கழிவறையையே பயன்படுத்திவருகிறார்கள். அதன் கற்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது “என் மீது கூட விழுந்துவிடும். எனக்கு வயதாகிவிட்டது. ஆனாலும் இன்னும் வேலை செய்துகொண்டிருக்கிறேன். இந்தக்கழிவறைகள் அவை கட்டப்பட்ட வேகத்தைவிட விரைவாகவே இடிந்துவிழுந்துவிடும்“ என்று பிண்டேஸ்வரி கூறுகிறார். 57 வயதான அவர் லக்னோவில் வீட்டு வேலை உதவியாளராக பணி செய்து வருகிறார். அவரின் குடும்பத்தில் உள்ள அவரது மகள், இரண்டு மருமகள்கள் உள்பட8 பேரும் வெளியிலே மலம் கழிக்கச்செல்கின்றனர். ஆனால், நகரத்தில தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகளை பயன்படுத்தியே பிண்டேஸ்வரிக்கு பழக்கமாகிவிட்டது. அங்கு வாரநாட்களில் அவர் வேலை செய்கிறார். மாதத்தில் ரூ. 6 ஆயிரம் சம்பாதிக்கிறார்.
பக்காரியில், பல்வேறு ஜாதிகளைச் சார்ந்த மற்றும் பொருளாதார நிலைகளைச் சார்ந்தவர்களுக்கும் ஒரே மாதிரிதான் கழிவறைகள் கட்டப்படுகின்றன. நிலமற்ற, பட்டியல் இனத்தைச்சார்ந்த பிண்டேஸ்வரி குடும்பத்திற்கு கட்டிக்கொடுக்கப்பட்டது போன்ற கழிவறைதான் 62 வயதான ராம் சந்திர பாண்டே வீட்டிலும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு பிராமணர் மற்றும் விவசாயி.
கிராம சபா விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளுக்கான செலவு இந்த கிராமத்தில் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால், பெரும்பாலானோர், ஒவ்வொரு கழிவறைக்கும் 300 செங்கற்கள் தேவைப்பட்டதாகக் கூறுகின்றனர். அந்த செலவை செய்ய முடிந்தவர்கள் தாங்களாகவே கழிவறைகள் கட்டிக்கொண்டனர்.
2.8 ஏக்கர் நிலம்கொண்ட ராம் சந்தர், கழிவறைகளின் தரம் குறைவாக உள்ளது என்று எண்ணுகிறார். அவற்றின் தரத்தை உயர்த்துவதற்கு தனது பணம் ரூ.4 ஆயிரத்தை செலவு செய்தார். “மெல்லிய தகட்டைப்பயன்படுத்தி கட்டப்பட்டிருந்த கதவு ஒரு நாள் இரவு பறந்து சென்றுவிட்டது“ என்று அவர் கூறுகிறார். அவரது 7 பேர் கொண்ட குடும்பத்தில் 7 வயதுடைய அவரது பேத்தி மட்டுமே அந்த கழிவறையை பயன்படுத்துகிறார். “வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தியிருந்தால், இது எந்த காலமோ உடைந்திருக்கும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்நிலையில், பக்காரியில் கழிவறைகள் கழிவுநீர் சாக்கடையுடன் இணைக்கப்படவில்லை அல்லது அவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமா என்று தெரியவில்லை. ஏனெனில், முந்தைய திட்டத்தில் முடிக்கப்பட்டுவிட்டதால், தூய்மை இந்தியா திட்டம் இந்த கிராமத்தை விட்டுவிட்டது. எடுத்துக்காட்டாக ராம் சந்திராவின் வீட்டில் உள்ள கழிவறைக்கான கழிவுநீர்தொட்டி ஒற்றை குழியாக உள்ளது. ஆனால், தூய்மை இந்தியா திட்டம் இரட்டை குழியை பரிந்துரைக்கிறது. இரண்டாவது குழி இணைக்கப்படுவதால் கழிவறையை அதிக நாட்கள் பயன்படுத்தலாம். ஒரு குழி நிரம்பிய, பின்னர் மற்றொரு குழிக்கு நீர் செல்லும் வகையில் இருக்கும். இதனால், தொட்டி நிரம்புவதற்கு 5 முதல் 8 ஆண்டுகள் ஆகும்.
தூய்மை இந்தியா திட்டத்தின், அனைவரும் சமம், அனைவரையும் உள்ளடக்கியது என்ற நோக்கம் பக்காரியில் நிறைவேறவில்லை. முந்தைய திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறைகள் சில வசதிகளை உள்ளடக்கியதாக இல்லை. விட்டோ போன்ற மாற்றுத்திறனாளர்களுக்கும் பயன்படியக்கூடிய வகையில் கழிவறைகள் கட்டப்பட வேண்டும் என்று, கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வசதி செய்து தரப்படவில்லை. மத்திய குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், நாடு முழுவதுமுள்ள தூய்மை பாரத திட்டத்திற்கு எடுத்துக்காட்டாக செய்யப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளர்களுக்கு உதவக்கூடிய சறுக்கு நடைபாதைகள், கைப்பிடிகள், நடைபாதைகள், பார்க்க இயலாதவர்களுக்கு அடையாளங்கள், பெரிய நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால், தன்னிடம் உள்ள ஒரே அடையாள அடையான வாக்காளர் அடையாள அட்டை மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்கும் விட்டோவிற்கு இதுபோன்ற வசதிகள் இருப்பது தெரியாது. “மழை பெய்யும்போது என் கழிவறையின் கூரை ஒழுகத்துவங்கிவிடும். குழி தண்ணீரால் நிரம்பிவிடும்“ என்று அவர் கூறுகிறார். அவ்வாறு ஆகும்போது, அவர் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார். தண்ணீர் வசதியுடன், பயன்படுத்துவதற்கு ஏதுவான கழிவறை அவரது குடும்பத்திற்கு எப்படி கிடைக்கும் என்பது அவருக்கு தெரியாது. ஆனால், அதுபோன்ற ஒரு கழிவறை அவரின் ஆசை. “அப்போது வாழ்க்கை கொஞ்சம் எளிதாகும்“ என்று அவர் கூறுகிறார்.
இவற்றிற்கு மத்தியில், தூய்மை இந்தியா திட்டத்தின் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம் என்ற நோக்கத்திற்கு அர்த்தம் என்ன? என்று பக்காரியில் உள்ள ஒருவருக்கும் தெரியவில்லை. பிண்டேஸ்வரி இரண்டு நிமிடம் யோசித்துவிட்டு,“ கிராமத்திற்கு ஒன்றும் கிடையாது“ என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்குமோ என்கிறார்.
தமிழில்: பிரியதர்சினி.R.