சென்னை மாநகராட்சி பள்ளிக்கு முதல் நாள் சென்றிருந்த ரகுவிற்கு, அங்கு கரும்பலகையில் எழுதியிருந்த வார்த்தை அல்லது தனக்கு முன்னால் இருந்த பாடப்புத்தகத்தில் இருக்கும் தமிழ் வார்த்தைகளில் ஒன்றுகூட புரியவில்லை. இதே ரகு, தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் நயோலி கிராமத்தில் உள்ள தனது பள்ளியில், போஜ்புரி அல்லது இந்தியில் வாசிக்கவும் எழுதவும் உரையாடவும் செய்வான்.
ஆனால் தற்போது புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்தே அது என்னவாக இருக்கும் என ஊகிக்கிறான். “ஒரு புத்தகத்தில் கூட்டல்-கழித்தல் அடையாளம் இருக்கிறது, அப்படியென்றால் அது கணிதம்; இன்னொரு புத்தகம் அறிவியலாக இருக்கலாம்; மற்றொரு புத்தகத்தில் பெண்கள், குழந்தைகள், வீடுகள் மற்றும் மலைகள் உள்ளது” என்கிறான்.
நான்காம் வகுப்பில் இரண்டாவது வரிசை மேஜையில் அமைதியாக அமர்ந்திருக்கும் ரகுவிடம், அருகிலிருக்கும் சிறுவன் கேள்வி ஒன்றை கேட்கிறான். “என்னைச் சுற்றி எல்லாரும் நின்றுகொண்டு தமிழில் ஏதாவது கேட்கின்றனர். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றே எனக்கு புரிவதில்லை. அதனால், மேரா நாம் ரகு ஹே என்பேன். இதைக்கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். எனக்கு பயமாக இருக்கும்”.
ஜலாயுன் மாவட்டத்திலுள்ள நடிகோன் பிளாக்கில் இருக்கும் தங்கள் கிராமத்தை விட்டு 2015 மே மாதம் செல்ல முடிவு செய்தனர் ரகுவின் பெற்றோர்கள். அவர்கள் சென்னைக்கு ரயில் ஏறிய அன்று, அழுது, தரையில் புரண்டு அடம் பிடித்துள்ளான் ரகு. அவனது ஐந்து வயது சகோதரன் சன்னி, அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு விடவேயில்லை. “அவனுக்கு (ரகு) போக விருப்பமே இல்லை. இதை பார்க்கும் போது என் இதயமே வெடிப்பது போல் இருந்தது” என்கிறார் ரகுவின் அம்மா காயத்ரி பால்.
ஆனால் வேலைக்காக கிராமத்தை விட்டு வெளியேறுவதை தவிர ரகுவின் பெற்றோர்களுக்கு வேறு வழியில்லை. “விவசாயம் மூலம் எதுவும் கிடைக்காவிட்டால், நாங்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துதான் ஆக வேண்டும். அந்த வருடம் (2013-2014) எங்களுக்கு இரண்டு குவிண்டால் கம்பு மட்டுமே கிடைத்தது. பயிர்களுக்கு தண்ணீர் இல்லை, ஏற்கனவே கிராமத்தில் உள்ள பாதிபேர் வேலை தேடி வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக” கூறுகிறார் 35 வயதாகும் காயத்ரி. எப்படியோ அவருக்கும் அவரது கனவர் மனிஷூக்கும், 45 வயது, சென்னையில் உள்ள கட்டுமான தளத்தில் வேலை கிடைத்துவிட்டது. ஏற்கனவே அங்கு இவர்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நகரம் முற்றிலும் புதிதாக இருப்பதால், ரகுவிற்கு எப்போதும் வீட்டு நியாபகமாகவே இருக்கிறது. “கிராமத்தில் என்னுடைய நண்பர்களோடு கிரிக்கெட், கில்லி, கபடி விளையாடுவேன். மரம் ஏறி மாங்காய் பறிப்போம்” என நினைவுகூர்கிறான். அங்கு முற்றத்தோடு இரண்டு மாடி வீடும் இரண்டு எருமைகளும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இங்கோ, வட சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் தகர ஷீட்டால் அமைக்கப்பட்ட அறையில் தங்கியுள்ளார்கள். அங்கு நாக மரம், கருவேல மரம், மாமரம் எல்லாம் இருக்கும். ஆனால் இங்கோ, பாதி கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டிடமும், சிமெண்ட் மூட்டைகளும், ஜேசிபி எந்திரங்களும் நிற்கின்றன. இங்குதான் அவனது பெற்றோர்கள் தினசரி 350 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.
ஏற்கனவே இந்த மாற்றங்களால் சிரமப்பட்டு வரும் ரகுவிற்கு புதிய பள்ளிக்கு செல்வது மிகப்பெரிய மாற்றமாக உள்ளது. இங்குள்ள மொழி புரியாதது மட்டுமல்லாமல் இங்கு அவனுக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. ஆனாலும் பீகாரிலிருந்து குடிபெயர்ந்த இரண்டு மாணவர்களுக்கு அருகில் அமர்ந்து கொள்கிறான். சென்னையில் உள்ள பள்ளிக்கு சென்று மூன்று வாரங்களுக்கு பிறகு, ஒருநாள் அவன் அழுகையோடு திரும்பியதாக நினைவுகூர்கிறார் காயத்ரி. “இனிமேல் ஒருபோதும் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்றான். அங்கு பாடங்கள் எதுவும் அவனுக்கு புரியாததோடு தன்னிடம் எல்லாரும் கோபமாக பேசுகிறார்கள் என நினைக்கிறான். அதனால் நாங்களும் அவனை பள்ளிக்கு செல்ல வற்புறுத்தவில்லை.”
மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் போல் டியுஷன் வகுப்பு அனுப்பவோ அல்லது தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடத்திற்கு உதவவோ, ரகுவின் பெற்றோர்களான காயத்ரி மற்றும் மனிஷால் முடியாது. மனிஷ் நான்காம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் தனது பெயரை இந்தியில் எப்படி எழுத வேண்டும் என காயத்ரி கற்றுக்கொண்டார். அதையும் ரகுதான் கற்றுக் கொடுத்தான். தன் சிறு வயதில் மாடுகள் மேய்த்துக் கொண்டும் தன்னுடைய நான்கு சகோதரிகளோடு பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டும் இருந்துள்ளார் காயத்ரி. “அவனை பள்ளிக்கு அனுப்பவே சிரமமாக இருக்கும் போது, எப்படி எங்களால் செலவு செய்து டியுஷனுக்கு அனுப்ப முடியும்?” என கேட்கிறார்.
சென்னை பள்ளியிலிருந்து இடைநின்றதும், கட்டுமான தளத்தில் தனது பெற்றோர்கள் வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டும் மழலையர் பள்ளியில் கூட இன்னும் சேர்க்கப்படாத தன் சகோதரன் சன்னியை கவனித்து கொண்டும் இருந்துள்ளான் ரகு. சில சமயங்களில் தனது அம்மாவோடு நடந்து சென்று அடுப்பு பற்ற வைப்பதற்காக மரக்குச்சிகள், பிளாஸ்டிக் மர்றும் தாள்களை எடுத்து வருவான்.
பள்ளிக்கு செல்வதும் கடினமாக இருக்கிறது, அவர்களின் பெற்றோர்களும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். மேலும், ரகு மற்றும் சன்னி போன்ற புலம்பெயர் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், குழந்தை பராமரிப்பு போன்றவைகளை வழங்கும் எந்த விதிகளும் கட்டுமான நிறுவனங்களிடமும் கிடையாது. இதுபோன்ற கட்டுமான தளங்களில் இந்தியாவில் மட்டும் 40 மில்லியன் இடம்பெயர்ந்தோர்கள் பணியாற்றுவதாக 2011-ம் ஆண்டு UNICEF-ICSSR அறிக்கை கூறுகிறது.
இந்த இரு சகோதரர்களைப் போல, இந்தியா முழுதும் 15 மில்லியன் குழந்தைகள் தானாகவோ அல்லது தங்கள் பெற்றோர்களுடன் இடம்பெயரும் போதோ, நிலையான கல்வியை இழப்பதாக அறிக்கை சுட்டி காட்டுகிறது. “பருவகால மற்றும் தற்காலிக இடப்பெயர்வுகள் குழந்தைகளின் கல்வியை பெரிதாக பாதிக்கிறது. இப்படி பள்ளிக்கல்வியை பாதியிலேயே நிறுத்துவதால் அவர்கள் கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளில் (மற்ற குடும்பத்தோடு கிராமத்தில் இருக்காமல் அவர்களும் தங்கள் பெற்றோர்களோடு சென்று விடுகிறார்கள்) மூன்றில் ஒருபகுதியினரால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை” எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
வேலை தேடி பெற்றோர்கள் ஒவ்வொரு இடமாக மாறும்போது, ரகு போன்ற குழந்தைகளுக்கு படிப்பதற்கான தடைகள் மேலும் அதிகமாகிறது. 2018 மார்ச் மாதம், சென்னையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததும், மகராஷ்ட்ராவின் ராய்கர் மாவட்டத்திலுள்ள அலிபக் தாலுகாவிற்கு இடம்பெயர்ந்தனர். அங்கு இவர்களின் உறவினர் இரண்டு வருடமாக வசித்து வருகிறார்.
மனிஷ் தொடர்ந்து கட்டுமான தொழிலாளராக வேலை செய்து வருகிறார். தொடர் முதுகு வலியால் தற்போது எந்த வேலைக்கும் செல்லாத காயத்ரி, வீட்டையும் குழந்தைகளையும் கவனித்து கொள்கிறார். தினமும் காலை 8 மணிக்கு அலிபாக் நகரத்தில் உள்ள மகாவீர் சௌக்கில் ஒப்பந்ததாரர்களுக்காக காத்திருக்கிறார் மனிஷ். இப்படி கூலி வேலைக்குச் சென்று தினமும் 400 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். “சிலசமயங்களில் 4-5 நாட்களுக்கு யாரும் என்னை வேலைக்கு அழைக்க மாட்டார்கள். அந்த நாட்களில் எந்த வருமானமும் கிடைக்காது” என்கிறார்.
அலிபாக்கிற்கு சென்றதும் ரகுவிற்கு மற்றொரு போராட்டம் ஆரம்பமாகிறது. தற்போது புதிய பள்ளியில் சேர்ந்துள்ளதால் மராத்தியில் எழுதப்பட்டுள்ள பாடப்புத்தகத்தை புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் புதிதாக நண்பர்களை பிடிக்க வேண்டும். தன் வீட்டிற்கு அருகிலுள்ள சிறுவனின் நான்காம் வகுப்பு புவியியல் பாடபுத்தகத்தை அவன் பார்த்தபோது, தேவனகிரி வடிவத்தில் உள்ளதை அவனால் வாசிக்க முடியவில்லை. மூன்று வருடங்கள் பள்ளிக்கு செல்லாததால் அவன் இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. இருந்தாலும், 2018-ம் ஆண்டு ஜூலை மாதமே பள்ளியில் திரும்பவும் சேர்ந்துள்ளான். தன்னை விட குறைந்த வயதுடைய சிறுவர்களோடு 11 வயதில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
“மராத்தி எழுத்துக்களும் இந்தியும் ஒரேப்போன்று இருக்கும், ஆனால் வித்தியாசமாக எழுத வேண்டும் என்பதை மறந்துவிட்டேன். வார்த்தைகளின் அர்த்தம் மற்றும் அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதை சுரேஷ் (அருகில் வசிக்கும் ஒரு நண்பன்) கற்றுக் கொடுத்தான். மெதுவாக, நான் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளேன்” என்கிறான் ரகு.
வைஷெட் கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்கு செல்கிறான் ரகு. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் மொத்தம் 400 மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் 200 பேர் புலம்பெயர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் என்கிறார் தொடக்கப்பள்ளி ஆசிரியரான ஸ்வாதி க்வாடே. இங்கு, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைகளோடு தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வரும் ரகு, மராத்தியில் பேசவும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டுள்ளான். பெற்றோர்களால் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள சன்னி, தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
வளர்ந்து வரும் கடற்கரை நகரமான அலிபாக், மும்பையிலிருந்து 122கிமீ தொலைவில் உள்ளது. கடந்த இருபது வருடங்களில் இங்கு பெருகி வரும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தால், பீகார், மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசங்களில் இருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்துள்ளனர். இவர்களின் குழந்தைகள் தாலுகா பள்ளியிலோ அல்லது அரசாங்க உதவி பெறும் மராத்தி பள்ளிகளிலோ படிக்கின்றனர்.
இந்த மாறுதலை எளிமையாக்க, சில ஆசிரியர்கள் ஆரம்பத்தில் புலம்பெயர் மாணவர்களிடம் இந்தியில் உரையாடுகிறார்கள். க்வாடே கூறுகையில், “அலிபாக் ஜில்லா பள்ளியில் பல புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். முற்றிலும் புதிய சூழலில் குழந்தைகளால் எளிதில் பழக்கப்படுத்தி கொள்ள முடியாது. ஒரு ஆசிரியராக, எங்களால் குழந்தைகளுக்கான பாடப்புத்தகத்தை மாற்ற முடியாது. ஆனால், ஒரு சில நாட்களுக்கு எங்களால் தொடர்பு மொழியை மாற்ற முடியும். புதிய விஷயங்களை குழந்தைகள் விரைவாக கற்றுக் கொள்வார்கள். ஆனால் அதற்கான முயற்சிகளை முதலில் ஆசிரியர்கள் செய்ய வேண்டும்”.
அரசாங்க உதவி பெறும் பள்ளியான சுதாகத் கல்வி சங்கத்தில் உள்ள ஐந்தாம் வகுப்பில் மராத்தி மொழி வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளிடம் நம்பிக்கை வளர்ப்பதற்காக ஒவ்வொரு மாணவரையும் வகுப்பின் முன்னால் சென்று சில நிமிடங்கள் பேச சொல்கிறார் ஆசிரியர் மனிஷ் பட்டீல். 10 வயதான் சத்யம் பேசும் முறை வந்தது: “எங்கள் கிராமத்தில் பண்ணைகளில் மக்கள் வேலை செய்வார்கள். எங்களுக்கும் பண்ணை உள்ளது. மழை பெய்யும்போது விதை தூவுவார்கள். அடுத்த சில மாதங்களில் பயிர்களை அறுவடை செய்வார்கள். தண்டுகளிலிருந்து தானியங்களை தனியே பிரித்து எடுப்பார்கள். பின்னர் அதை அரித்து சாக்கு மூட்டையில் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். பின்பு இதை அரைத்து ரொட்டி சுட்டு சாப்பிடுவார்கள்” என அவன் பேசி முடித்ததும் வகுப்பறையில் உள்ள 22 மாணவர்களும் கை தட்டினார்கள்.
“எப்போதும் சோகமாக இருக்கும் சத்யம், யாரிடமும் பேசுவதில்லை” என கூறும் பட்டீல், “குழந்தைகளுக்கு முதலில் அடிப்படையை சொல்லிக் கொடுக்க வேண்டும். எழுத்துருக்களை அறிமுகப்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கலாம். ஆசிரியர்களிடமும் மற்ற சிறுவர்களிடமும் பேச நம்பிக்கையை ஊட்டலாம். எடுத்தவுடனேயே, அவர்கள் இதுவரை கேள்விப்படாத மொழியில் நீண்ட வாக்கியத்தை கூறி திணறடிக்க கூடாது. அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்”.
சத்யம் (முகப்பு படத்தின் முதல் வரிசையில் உள்ள), 2017-ம் ஆண்டு தனது பெற்றோர்களோடு அலிபாக்கிற்கு வந்தான். உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்திலுள்ள தனது கிராமமான ராம்புர் துல்லாவிலிருந்து இது முற்றிலும் வேறாக இருந்தது. அதுவரை வீட்டில் போஜ்புரியில் பேசியும், இந்தி வழிப்பள்ளியில் படித்தும் வந்த ரகு, மராத்தி பள்ளியில் மூன்றாம் வகுப்பு சேர்ந்தான். அப்போது அவனுக்கு எட்டு வயது மட்டுமே. சத்யம் கூறுகையில், “முதல்முறையாக நான் மராத்தி மொழியை பார்த்தபோது, இது தவறான இந்தி என என் பெற்றோர்களிடம் கூறினேன். ஒவ்வொரு எழுத்தையும் என்னால் வாசிக்க முடிந்தாலும், முழு வார்த்தையின் அர்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”.
“எங்கள் குழந்தைகள் மராத்தி பள்ளிகளுக்கே செல்கிறார்கள். ஆங்கிலப் பள்ளியில் கட்டணம் செலுத்தும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை” என்கிறார் 35 வயதாகும் ஆர்த்தி. இரண்டாம் வகுப்பு வரை படித்துள்ள ஆர்த்தி, இல்லத்தரசியாகவும் விவசாயியாகவும் இருந்தவர். தங்களது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் கம்பு விளைவித்துள்ளனர். அவரது கணவரான 42 வயது பிரிஜ்மோகன் நிசாதும் இந்த நிலத்தில் வேலை செய்துள்ளார். ஆனால் மோசமான பாசன வசதி காரணமாக தொடர்ந்து பயிர் விளைச்சல் குறைவாக இருந்ததால், வேறு வேலை தேடி கிராமத்தை விட்டு வேறு ஊருக்குச் சென்றார்.
தற்போது கட்டுமான தொழிலாளராக மாதத்திற்கு 25 நாட்கள் என தினசரி 500 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். இந்த வருமானம் ஐந்து பேர் (சாதனா, 7 வயது மற்றும் சஞ்சனா, 6 வயது என இரு மகள்களும் சத்யம் செல்லும் பள்ளியில் படிக்கிறார்கள்) கொண்ட அவர்களின் குடும்பச் செலவுகளுக்கு உதவுகிறது. கிராமத்தில் வசித்து வரும் தன்னுடைய வயதான பெற்றோருக்காக மாதம் 5000 ரூபாய் அனுப்புகிறார்.
தன்னுடைய கிராமத்திலிருந்து 20கிமீ தொலைவிலுள்ள சாசவான் கிராமத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கும் பிரிஜ்மோகன், “என்னைப் போல் என் குழந்தைகளும் கடினமான கூலி வேலையை செய்யக் கூடாது. அவர்கள் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்காகதான் இதெல்லாம் செய்கிறேன்” என்கிறார்.
சத்யம் போல், குஷி ராஹிதாஸும் மொழி மாற்றத்தால் சிரமப்படுகிறான். ஷிங்காகத் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் குஷி கூறுகையில், “என் கிராம பள்ளியில் போஜ்புரி மொழியில் படித்தேன். எனக்கு மராத்தி புரியாததால் பள்ளிக்கு செல்லவே பிடிக்கவில்லை. வார்த்தைகள் இந்தி போலவே இருந்தாலும் அர்த்தம் வேறாக உள்ளது. ஆனாலும் கற்றுக் கொண்டேன். ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே என் ஆசை”.
குஷியின் குடும்பம் உத்தரபிரதேசத்தின் உலர்பர் கிராமத்திலிருந்து அலிபாக் வந்துள்ளது. அவரது அம்மா இந்திரமதி, தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள சிறிய உணவகத்திற்கு தினமும் 50 சமோசா செய்து கொடுக்கிறார். இதன்மூலம் அவருக்கு தினசரி 150 ரூபாய் கிடைக்கிறது. குஷியின் தந்தை ராஜேந்திரா, தினசரி 500 ரூபாய் சம்பளத்திற்கு கட்டுமான தளங்களில் வேலை செய்கிறார். “எங்களிடம் எந்த நிலமும் கிடையாது. அதனால் அடுத்தவர்களின் பண்ணைக்கு வேலைக்கு செல்வோம். ஆனால் வேறு வேலை தேடி பலரும் கிராமத்திலிருந்து சென்று விட்டதால் இங்கும் எந்த வேலையும் இல்லை. தற்போது அலிபாக்கில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளோம். எல்லா முயற்சிகளும் இவர்களுக்காகதான்” என தனது இரு மகள்களையும் மகனையும் சுட்டி காட்டி கூறுகிறார் இந்திரமதி.
குஷி, சத்யம் போன்ற மராத்தி பேசாத பல சிறுவர்கள் சுதாகத் பள்ளியில் அதிகளவில் சேர்வதால் – மொத்தமுள்ள 270 மாணவர்களில் 178 பேர் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – வாரந்தோறும் திருவிழாக்கள், குடியரசு தினம், விளையாட்டு வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் குழு விவாதம் நடத்துகிறார் பள்ளி தலைமையாசிரியர் சுஜாதா பட்டீல். பட அட்டைகளை பயன்படுத்தி, தாங்கள் பார்த்தவற்றை தங்கள் தாய்மொழியில் விவரிக்குமாறு மாணவர்களை அனுமதிக்கும் ஆசிரியர்கள், பிறகு அந்த வார்த்தையை மராத்தியில் கூறுகிறார்கள். கலந்துரையாடலுக்குப் பிறகு, மாணவர்கள் படங்களை வரைந்தும் வாக்கியங்களை இந்தி அல்லது போஜ்புரி அல்லது மராத்தியிலும் எழுதுகிறார்கள். வார்த்தைகளை மனப்பாடம் செய்ய இந்தப் பயிற்சி அவர்களுக்கு உதவுகிறது.
மேலும், பள்ளியில் புதிதாக இந்தி அல்லது போஜ்புரி பேசும் சிறுவர்கள் சேர்ந்தால், அவர்களை மராத்தி மொழி தெரிந்த மாணவரோடு அமர வைக்கிறார்கள். 11 வயதான சுராஜ் பிரசாத், விலங்குகள் பற்றிய கதை புத்தகத்தில் இருந்து மராத்தியில் ஒரு வார்த்தை வாசிக்க, அவனது புது வகுப்பு தோழனான தேவேந்திரா ரஷிதாஸ் அதை அப்படியே மறுபடியும் வாசிக்கிறான். இரு சிறுவர்களும் – சுராஜ் 2015-ம் ஆண்டும், தேவேந்திரா 2018-ம் ஆண்டும் - தங்கள் பெற்றோர்களோடு உத்தரபிரதேசத்திலிருந்து அலிபாக் வந்துள்ளார்கள்.
மாநிலத்திற்கு மாநிலம் மொழி வேறுபடும். அதுபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேறு வேறு தாய்மொழி இருக்கலாம். அதனால் புலம்பெயர் குழந்தைகள் தொடர்ந்து படிக்க வேண்டுமானால், அவர்களுக்கு வசதியாக உள்ளூர் மொழியில் பாடங்கள் இருப்பது மிகவும் முக்கியம்” என்கிறார் தலைமையாசிரியர் பட்டீல். இதுபோன்ற முயற்சிகள் பள்ளியிலிருந்து இடைநிற்றல் விகிதத்தை குறைக்கும் என அவர் நம்புகிறார்.
மொழி அல்லது பழக்கமில்லாத மொழி வழியாக கல்வி ஆகியவற்றோடு நிதி தடைகள், தரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பு போன்றவைகளும் பள்ளியிலிருந்து மாணவர்கள் இடைநிற்பதற்கு காரணமாக இருப்பதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு சுட்டி காட்டுகிறது. பள்ளியிலிருந்து இடைநிற்பது தொடக்க நிலையில் 10 சதவிகிதமாகவும், இடைநிலை பள்ளியில் 17.5 சதவிகிதமாகவும், உயர்நிலை பள்ளியில் 19.8 சதவிகிதமாக இருப்பதாகவும் 2017-18 அறிக்கை கூறுகிறது.
“மொழி தடைகள் மற்றும் வேறு வேறு நிர்வாக நடைமுறைகள் காரணமாக உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயரும் குழந்தைகளுக்கு அதிக சிரமம் ஏற்படுகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டம் பாரளுமன்றத்தில் நிறைவேற்றிய பிறகும், புலம்பெயர் குழந்தைகளுக்கு அவர்கள் போய் சேரும் இடங்களிலும் அல்லது அவர்களது சொந்த ஊரிலும் கூட எந்த ஆதரவையும் அரசாங்கம் வழங்குவதில்லை” என UNICEF-ICSSR அறிக்கை குறிப்பிடுகிறது .
“உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயரும் குழந்தைகளுக்கு மொழி தடையை அகற்றி தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டம் வகுத்து, தீர்வு காண வேண்டியது மிகவும் முக்கியம். பள்ளியிலிருந்து இடைநிற்கும் குழந்தை, எந்த எதிர்கால பாதுகாப்பும் இல்லாத குழந்தை தொழிலாளராக மாறவே அதிக வாய்ப்புள்ளது” என்கிறார் அகமதாபாத்தைச் சேர்ந்த கல்வி செயற்பாட்டாளர் ஹெராம்ப் குல்கர்னி. அரசு அதிகாரிகள் புலம்பெயர் குழந்தைகளை கண்காணித்து கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் அவர்கள் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறார் ஆசிரியரான ஸ்வாதி க்வாடே.
ஆனாலும் இடப்பெயர்வு என்ற கத்தி இவர்களின் தலைக்கு மேல் இன்னும் தொங்கி கொண்டுதான் உள்ளது. மறுபடியும் வேலை தேடி வேறு மாநிலத்திற்கு இவர்களின் பெற்றோர்கள் செல்லலாம். அங்கு வேறு மொழியில் பாடங்கள் இருக்கக்கூடும். குஜராத்தின் அகமதாபாத்திற்கு மே மாதம் செல்ல இருப்பதாக ஏற்கனவே ரகுவின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். “அவனுக்கு தேர்வு முடியட்டும். தேர்வு முடிவு வந்த பிறகே அவனிடம் சொல்ல வேண்டும்” என்கிறார் ரகுவின் தந்தை மனிஷ்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா