பிப்ரவரி 18, 1983-ல் நெல்லி படுகொலை நேர்ந்தபோது ரஷித் பேகத்துக்கு வயது எட்டு. “மக்களை அவர்கள் எல்லா பக்கமும் சுற்றி வளைத்து ஒருமூலைக்கு விரட்டினர். அம்புகள் எய்தனர். சிலரிடம் துப்பாக்கிகள் இருந்தன. அவற்றை கொண்டுதான் அவர்கள் மக்களை கொன்றனர். சிலரின் கழுத்துகள் அறுக்கப்பட்டன. சிலர் மார்பில் தாக்கப்பட்ட்னர்,” என அவர் நினைவுகூருகிறார்.
மத்திய அசாமின் மோரிகாவோன் மாவட்டத்தின் நெல்லி பகுதியில், வங்காளத்தை பூர்விகமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அந்த நாளன்று வெறும் ஆறு மணி நேரத்தில் கொல்லப்பட்டனர். அலிசிங்கா, பசுந்தாரி ஜலா, போர்போரி, புக்டுபா பில், புக்டுபா ஹபி, குலாபத்தார், மடிபர்பத், முலாதரி, நெலி மற்றும் சில்பெட்டா போன்றவை மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும். அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி மொத்தமாக 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி 3000லிருந்து 5000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம்.
வீட்டில் ரூமி என அழைக்கப்படும் ரஷிதா அந்த படுகொலையிலிருந்து உயிர் தப்பினார். நான்கு தங்கைகள் கொல்லப்பட்டு தாய் படுகாயம் அடைந்ததை கண்ட சாட்சி அவர். “அவர்கள் வேல் கொண்டு என்னை தாக்கினர், இடுப்பில் சுட்டனர். காலை ஒரு தோட்டா துளைத்தது,” என அவர் நினைவுகூருகிறார்.
1979லிருந்து 1985ம் ஆண்டு வரை அசாமில் நீடித்த வெளியாருக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த இனக்கலவரத்தின் விளைவாக படுகொலை நேர்ந்தது. அச்சம்பவத்தை அனைத்து அசாம் மாணவர் சங்கமும் தோழமை அமைப்புகளும் முன்னெடுத்தன. சட்டவிரோதமாக மாநிலத்தில் குடியேறியவர்களை வெளியேற்ற அவர்கள் கோரினர். அவர்களின் பெயர்களும் வாக்காளர் பதிவேட்டிலிருந்து அகற்றப்பட வேண்டுமென போராடினர்.
பொதுமக்களிடமிருந்தும் அனைத்து அசாம் மாணவர் சங்கத்திடமிருந்தும் (AASU) எதிர்ப்பு வெளிப்பட்டும் இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு பிப்ரவரி 1983ல் சட்டசபை தேர்தல்களை அறிவித்தது. AASU தேர்தல்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. எனினும் வங்காளத்தை பூர்விகமாகக் கொண்ட பல இஸ்லாமியர்கள் பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்தல்களில் வாக்களித்தனர். வெளியாட்கள் என்கிற அடையாளத்துடன் அச்சமூகத்தினர் வாழ்ந்து வந்தனர். உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களைப் பொறுத்தவரை வாக்களிப்பது என்பது அவர்களின் இந்தியக் குடியுரிமையை உறுதிபடுத்தும் செயல். பிப்ரவரி 18ம் தேதி அவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைக்கு அவர்கள் வாக்களித்ததே உடனடி காரணம் என நம்பப்பட்டது.
“வெளியாருக்கு எதிரான இயக்கத்தில் நான் முன்பொரு காலத்தில் பங்கெடுத்திருக்கிறேன். இளம் வயதில் இருந்தேன். இவற்றை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இப்போது அவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் என் பெயர் இடம்பெறாததால் என்னை வெளியாளாக்கி விட்டனர்,” என்கிறார் ரூமி. 2015-2019 வரை அசாம் மாநிலத்தில் நடந்த குடியுரிமை பதிவு பணியில் அவருடைய பெயர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இடம்பெறாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட 19 லட்சம் பேரின் பெயர்களும் அதில் இடம்பெறவில்லை. “என் தாய், தந்தை, சகோதரர், சகோதரி என அனைவரின் பெயர்களும் இருக்கிறது. என் கணவர், குழந்தைகள் ஆகியோரின் பெயர்கள் கூட இருக்கின்றன. ஏன் என் பெயர் இடம்பெறவில்லை?” என்கிறார்.
வங்காளத்தை பூர்விகமாகக் கொண்ட இஸ்லாமியர்கள் மீதும் சில இடங்களில் இருப்பது போல் வங்காள இந்துக்கள் மீதும் கூட இருக்கும் சந்தேகத்துக்கான தொடக்கம், பிரிட்டிஷ் காலனியாதிக்கம் மற்றும் இந்தியத் துணைக்கண்ட பிரிவினை காலம் வரை நீளக் கூடியது. எட்டு வயதில் எதிர்கொண்ட கேள்வியை ரூமி இன்றும் எதிர்கொள்ளும் சூழலில்தான் இருக்கிறார்.
சுபஸ்ரீ கிருஷ்ணன் ஒருங்கிணைத்த ‘வரலாற்றையும் நம்மையும் எதிர்கொள்வோம்’ என்னும் நிகழ்வின் ஒரு பகுதி இக்காணொளி. கலைகளுக்கான இந்திய அறக்கட்டளையால் பெட்டகம் மற்றும் அருங்காட்சியகம் திட்டத்துக்காக பாரியுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட அறக்கட்டளைப் பணி இது. புது தில்லியின் கோதே நிறுவனம்/மேக்ஸ் முல்லர் பவனின் உதவியில் நடத்தி முடிக்கப்பட்ட பணி. ஷேர்-கில் சுந்தரம் கலை அறக்கட்டளையின் ஆதரவிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
தமிழில் : ராஜசங்கீதன்