தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டம் கும்மடிடாலா வட்டாரத்தில் உள்ள டோமாடுகு கிராம செங்கல்சூளையில் வைதேகியும், அவரது கணவரும் பத்தாண்டுகளாக வேலை செய்கின்றனர். நுவாபடா மாவட்டம் குரும்புரி ஊராட்சியிலிருந்து ஆண்டுதோறும அவர்கள் இங்கு வருகின்றனர். “நாங்கள் சேத்திடம் இருந்து ரூ.20,000 முன்பணம் பெற்றோம்,” என்கிறார் வைதேகி. கூடுதலாக சூளை உரிமையாளர் தினந்தோறும் ரூ.60 உணவுக்கு தருகிறார். “தயவுசெய்து சேத்திடம் குறைந்தது ரூ.80 கொடுக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் நாங்கள் அரை வயிற்றுடனாவது தூங்க முடியும்.”

தெலங்கானாவில் உள்ள ரங்காரெட்டி, சங்காரெட்டி, யாததரி புவனகிரி மாவட்டங்களில் உள்ள செங்கல்சூளைகளுக்கு மறுமுறை சென்றபோது, 2017ஆம் ஆண்டு நான் வைதேகி குடும்பத்தைச் சந்தித்தேன்.

இதற்குப் பல ஆண்டுகளுக்கு  முன், 1990களில் காலாஹண்டி,(இப்போது நுவாபடா மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது) அருகில் உள்ள பொலாங்கிர் (அல்லது பாலாங்கிர், இப்போது சோனிப்பூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு சுபர்னப்பூர் என அழைக்கப்படுகிறது) புலம்பெயர்வு குறித்து ஆராய்ந்து, செய்தி சேகரித்தபோது, நான் நான்கு வகையான புலம்பெயர்வுகளை கடந்து வந்தேன்:

தினக்கூலி தொழிலாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், உணவக தூய்மையாளர்கள் மற்றும் பிற வடிவிலான வேலைக்கு ராய்ப்பூர் நகருக்கு (இப்போது சத்திஸ்கரின் தலைநகரமாக உள்ளது) புலம்பெயர்ந்தவர்கள்; நல்ல பாசன வசதிகள் நிறைந்த பர்கார், சம்பல்பூர் மாவட்டங்களுக்கும், டெல்லி,  மும்பை மற்றும் பிற நகரங்களுக்கு கட்டுமானத் தொழிலாளர்களாகச் சென்ற இளைஞர்கள்; ஆந்திர பிரதேசத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்குச் சென்ற குடும்பங்கள் (கடலோர ஒடிசாவிற்கும் பிறகு சென்றனர்).

PHOTO • Purusottam Thakur

வைதேகி (முன் இருப்பவர்), அவரது கணவர், உறவினர்களுடன் தெலங்கானாவில் உள்ள செங்கல் சூளையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலைசெய்து வருகிறார். இச்சமயம் அவர்கள் ஒரு குழந்தையை மட்டும் தங்களுடன் அழைத்து வந்துள்ளனர். மற்ற இருவர் பள்ளிக்குச் செல்வதால் ஊரில் விட்டுவிட்டு வந்துள்ளனர்

கலாஹண்டி, பாலாங்கிர் பகுதிகளில் பஞ்சம் போன்ற சூழல் ஏற்பட்டதால் 1960களின் மத்தியில் புலம்பெயர்வு தொடங்கியது. 80கள், 90களின் பிற்பகுதியில் வறட்சி, பயிரிழப்பு, கடன் காரணமாக மக்கள் புலம்பெயர்ந்தனர். செங்கல் சூளைகளில், சூளை உரிமையாளர்கள் ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்தோரின் சூழலை சாதகமாக்கிக் கொண்டு, உள்ளூர் தொழிலாளர்களைவிட குறைவான ஊதியத்தை தருகின்றனர். கணவன்,மனைவி, ஒரு மூத்த தொழிலாளரை கொண்டது ஒரு தொகுப்பாக கருதப்படுகிறது. ஒவ்வொரு தொகுப்பும் ரூ.20,000 - ரூ.80,000 வரை முன்பணமாக பெறுகின்றனர்.

இதற்கு மாற்றாக, ஒடிசாவில் உள்ளூர் திருவிழாவிற்குப் பிறகு அக்டோபர் –நவம்பர் மாதங்களில் அறுவடை முடிந்ததும் குடும்பங்களாக அவர்கள் புலம்பெயரத் தயாராகின்றனர். டிசம்பர் – ஜனவரி மாதங்களில் ஒப்பந்தக்காரர்கள் சூளைகளுக்குப் பணியாளர்களை அழைத்துச் செல்கின்றனர். அங்கு அவர்கள் ஜூன் வரை வேலை செய்கின்றனர். பிறகு மழைக்கால தொடக்கத்தில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். அங்கு அவர்கள் தங்களின் சிறிதளவிலான சொந்த நிலத்தில் அல்லது பிறரது நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.

முந்தைய கடன்கள் அல்லது திருமணங்கள், காளைகள் வாங்குவதற்கு, மருத்துவக் கட்டணம் செலுத்த, பிற செலவுகளுக்கு பணியாளர்கள் முன்பணத்தை செலவிடுகின்றனர். சூளையில் ஒவ்வொரு ‘தொகுப்பிற்கும்‘ ரூ.60 குடும்பத்தில் எத்தனை நபர் இருந்தாலும் உணவுத் தொகையாக கொடுக்கப்படுகிறது. பருவத்தின் முடிவில், இத்தொகையுடன் முன்தொகையும், அறுத்த செங்கற்களின் எண்ணிக்கையுடன் கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு 1,000 செங்கற்களுக்கும் ஒவ்வொரு மூன்று நபர் தொகுப்பும் ரூ.220 முதல் ரூ.350 வரை ஈட்டுகின்றனர். சூளை உரிமையாளர் அல்லது ஒப்பந்தக்காரருடன் ஏற்படும் சமரசத்தை பொறுத்து இத்தொகை அமைகிறது. ஒவ்வொரு தொழிலாளர் குழுவும் சுமார் ஐந்து மாதங்களில் 1,00,000 முதல் 4,00,000 எண்ணிக்கையிலான செங்கற்களை அறுக்கின்றனர். மூன்று தொழிலாளர் தொகுப்புடன் வேறு யாராவது உடற்தகுதியுடன் உள்ள குடும்ப உறுப்பினரின் உதவியை சார்ந்து இது அமைகிறது. ரூ.20,000 முதல் மிக அரிதாக அதிகபட்சம் ரூ.1,40,000 வரை வழங்கப்படுகிறது. தினமும் வழங்கப்படும் ரூ.60 படி, மற்றும் முன்தொகை கழிக்கப்பட்டதும், சில தொழிலாளர்கள் கடுமையான சூளை பருவம் முடியும்போது கடனாளி ஆகின்றனர்.

PHOTO • Purusottam Thakur

பனிதா சிந்தா மற்றும் அவரது கணவர் நேத்ரா ரங்காரெட்டி மாவட்டம் கொங்கரா கலன் கிராமத்தில் மூன்றாண்டுகளாக சூளை பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் நுவாபடா மாவட்டம் போடன் வட்டம் கிரிஜோஹாவில் உள்ள சர்கிமுன்டா எனும் குக்கிராமத்தின் சுகோடியா-புஞ்ஜியா பழங்குடியின குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது 7 வயது மகள் பிங்கி, 5 வயது மகள் லக்‌ஷ்மி, ஏழு மாத குழந்தை கல்யாணி ஆகியோருடன் இங்கு வந்துள்ளனர். எங்கள் சர்தார் [ ஒப்பந்தக்காரர் ], சூளை உரிமையாளருடன் அமர்ந்து கூலியை நிர்ணயிக்கின்றனர், என்றார் நேத்ரா. எனக்கும், என் மனைவி மற்றும் என் உறவினர் மூன்று பெரியவர்களுக்கும் சேர்த்து 80,000 ரூபாய் முன்தொகை பெற்றுள்ளோம். 10,000 ரூபாயில் தங்கம் வாங்கினோம், 17,000 ரூபாயை வங்கியில் செலுத்தினோம், மிச்ச பணத்தை செலவிற்கு பயன்படுத்துவோம்

PHOTO • Purusottam Thakur

நான் நேத்ரானந்த் சபர் ( அமர்ந்திருப்பவர் ), ரைபரி போய் ( குழந்தையுடன் முன்னால் நிற்கும் பெண் ) ஆகியோரை சங்காரெட்டி மாவட்டம் ஜின்னாராம் வட்டம் அன்னாராம் கிராமத்தில் சந்தித்தேன் . அவர்கள் நுவாபடா மாவட்டம் மஹூல்கோட் கிராமத்திலிருந்து வந்தவர்கள் . “ நாங்கள் 18 ஆண்டுகளாக [ சூளைக்கு ] வந்து கொண்டிருக்கிறோம் ,” என்றார் போய் .

PHOTO • Purusottam Thakur

விவசாயிகளான ரேமதி தருவா அவரது கணவர் கைலாஷ் பாலாங்கிர் மாவட்டம் பெல்பாரா வட்டம் பண்டிரிஜோர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களை சங்காரெட்டி மாவட்டம் அன்னாராம் கிராமத்தில் சந்தித்தேன். அவர்கள் வறட்சியில் பயிர்களை இழந்து தங்களது மகள், மருமகன், பேத்தி (நடுவில்), 10ஆம் வகுப்புவரை படித்துள்ள இளைய மகன் ஹிமான்ஷூ ஆகியோருடன் புலம்பெயர்ந்துள்ளனர். கல்லூரியில் சேர்வதற்கான செலவை சமாளிக்க ஹிமான்ஷூவும் உடன் வந்துள்ளார்

PHOTO • Purusottam Thakur

சங்காரெட்டி மாவட்டம் டோமாடுகு கிராமத்தில் உள்ள சூளை : சூளையின் சுடாத அல்லது சுட்ட செங்கற்களைக் கொண்டு அவர்களே கட்டிய தற்காலிக குடியிருப்பில் ஆறு மாதங்களுக்கு தங்கிவிட்டு தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் போது குடியிருப்புகளை கலைத்துவிடுகின்றனர் . நெரிசலான ஒன்றாக உள்ள கொட்டகைகளில் குளிப்பதற்கு இடம் கிடையாது, தண்ணீர் தட்டுப்பாட்டுடன், பணியாளர்களுக்கு குறைவான நேரமே கிடைப்பதால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அவர்களால் முடிவதில்லை

PHOTO • Purusottam Thakur
PHOTO • Purusottam Thakur

இடது : சங்காரெட்டி மாவட்டம் அன்னாராம் கிராமம் : தற்காலிக குடிசைக்குள் தொழிலாளியும் அவரது மகளும் . நுவாபடா மாவட்டம் சினப்பலி வட்டத்திலிருந்து இக்குடும்பம் இங்கு வந்துள்ளது . வலது : சங்காரெட்டி மாவட்டம் தோமாடுகு கிராமம் : சினாபலி வட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தனது தற்காலிக சிறிய குடிசைக்கு தண்ணீர் கொண்டு செல்கிறார். கூரை மிகவும் தாழ்வாக உள்ளதால் உள்ளே நிற்பது கூட கடினம்

PHOTO • Purusottam Thakur
PHOTO • Purusottam Thakur

இடது : தெலங்கானாவில் உள்ள அங்கன்வாடிகள் அல்லது உள்ளூர் அரசுப் பள்ளிகளுக்கு செங்கல் சூளை தொழிலாளர்களின் சில பிள்ளைகள் செல்கின்றனர். ஆனால் ஆசிரியர்கள் ஒடியா பேசுவதில்லை என்பதால் கற்பது மிகவும் கடினம். சில சமயங்களில் பெற்றோருடன் சூளைகளில் வேலை செய்வது அல்லது தங்களின் தற்காலிக குடிசைகளைப் பார்த்துக் கொள்வதும் உண்டு. சூளை அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் நுவாபடா மாவட்டம் சர்கிமுண்டாவைச் சேர்ந்த ஆறு வயது நவீன், நான் இங்கு பள்ளிக்குச் செல்கிறேன், ஆனால் என் சொந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லவே விரும்புகிறேன்

வலது : சங்காரெட்டி மாவட்டம் டோமாடுகு கிராமம் : செங்கல் சூளைகளில் வேலை செய்வது என்பது அவர்களுக்கு குடும்பத் தொழில் – தம்பதிகள் தங்களின் குழந்தைகளுடன் பொதுவாக புலம்பெயர்கின்றனர். வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இருப்பதில்லை, சூளையில் பிள்ளைகளும் உதவி செய்வார்கள். குடும்பமாக அதிகாலையில் வேலையைத் தொடங்குவார்கள், காலை 10 அல்லது 11 மணிக்கு ஓய்வெடுப்பார்கள், மீண்டும் மாலை 3 அல்லது 4 மணிக்கு வேலையைத் தொடங்கி, இரவு 10 அல்லது 11 மணி வரை வேலை செய்வார்கள்

PHOTO • Purusottam Thakur

ரங்காரெட்டி மாவட்டம் இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள கொங்கரா கலன் கிராமம் : புலம்பெயர்தல் என்பது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு கடினமானது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளபோதும் பெண்கள் சூளைகளில் அதிக நேரம் வேலை செய்கின்றனர்

PHOTO • Purusottam Thakur

ரங்காரெட்டி மாவட்டம் கொங்கரா கலன் கிராமத்தில் உள்ள சூளை : ஆண்கள் கல் அறுக்கும் போது பெண்கள் களிமண்ணை தயார் செய்வதோடு செங்கற்களை காய வைக்கின்றனர்

PHOTO • Purusottam Thakur

2001 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செங்கல் சூளைக்கு நான் சென்றபோது, புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தவர்கள். 2017ஆம் ஆண்டு தெலங்கானாவில் உள்ள சூளைகளுக்கு வந்தபோது, பழங்குடியின தொழிலாளர்கள் பலரையும் பார்த்தேன். கடன் அதிகரிப்பு மற்றும் காடுகளைச் சார்ந்த தங்களின் வாழ்வாதாரம் சரிந்ததையும் இது காட்டுகிறது

PHOTO • Purusottam Thakur

ஒவ்வொரு 1,000 செங்கற்களுக்கும் மூன்று பேர் கொண்ட குடும்ப தொகுப்பு ரூ. 220 முதல் 350 வரை ஈட்டுகிறது. சூளை உரிமையாளர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்களுடன் ஏற்படும் சமரசத்தைப் பொறுத்து இத்தொகை அமைகிறது. ஒரு குழு கொண்ட தொழிலாளர்கள் கூடுதல் உதவிக்கு கிடைக்கும் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து சுமார் ஐந்து மாதங்களில் 1,00,000 முதல் 4,00,000 வரை கற்களை செய்கின்றனர்

PHOTO • Purusottam Thakur

சங்காரெட்டி மாவட்டம், அன்னாராம் கிராமத்தில் நுவாபடா மாவட்டம் குரும்புரி ஊராட்சியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள். நானும் அவர்களின் மாவட்டம் என்பதைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வயதானவர்களில் ஒருவர் சொன்னார், நீண்ட காலத்திற்கு பிறகு ஒடியா பேசும் ஒருவரை நான் சந்தித்தேன். உங்களை காண்பதில் எனக்கு மகிழ்ச்சி !”

PHOTO • Purusottam Thakur

டிசம்பர்- ஜனவரி மாதங்களில் தொழிலாளர்களை ஒப்பந்தக்காரர்கள் சூளைக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்கள் ஜூன் வரை வேலை செய்துவிட்டு மழைக்கால தொடக்கத்தில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவர். அங்கு அவர்கள் தங்களுக்கு என உள்ள சிறிய நிலத்தில் விவசாயம் செய்வர் அல்லது பிறரது நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்வர்

தமிழில்: சவிதா

Purusottam Thakur

পুরুষোত্তম ঠাকুর ২০১৫ সালের পারি ফেলো। তিনি একজন সাংবাদিক এবং তথ্যচিত্র নির্মাতা। বর্তমানে আজিম প্রেমজী ফাউন্ডেশনে কর্মরত পুরুষোত্তম সমাজ বদলের গল্প লেখায় নিযুক্ত আছেন।

Other stories by পুরুষোত্তম ঠাকুর
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha