ஒரு முழு வருடத்தை சொந்த ஊரில் கடைசியாக செலவழித்தது எப்போது என்பது ரமேஷ் ஷர்மாவுக்கு நினைவிலில்லை. “இதை 15-20 வருடங்களாக நான் செய்து கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்திலுள்ள காக்சினா கிராமத்தின் ஒரு நிலத்தில் கரும்பு வெட்டிக் கொண்டே.
44 வயது ரமேஷ் பிகாரின் அராரியா மாவட்டத்திலுள்ள அவரின் ஷாய்ர்கவோன் கிராமத்திலிருந்து அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரை – பாதி வருடத்துக்கு – ஹரியானா மற்றும் பஞ்சாபில் விவசாயக் கூலியாக வேலை பார்க்க இடம்பெயர்கிறார். “பிகாரில் விவசாயியாக இருப்பதை விட ஹரியானாவில் கூலியாக இருந்து அதிகம் சம்பாதிக்கிறேன்,” என்கிறார் அவர்.
ஷாய்ர்கவோனில் ரமேஷ்ஷுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் வருடத்தின் ஆறு மாதங்களுக்கு அவர் விவசாயம் பார்க்கிறார். சம்பா பருவத்தில் (ஜூன் – நவம்பர்) நெல் பயிரிடுகிறார். “அவற்றில் பெரும்பாலும் சொந்த பயன்பாட்டுக்குதான்,” என்கிறார் அவர், தான் வெட்டும் கரும்பிலிருந்து பார்வை அகலாமல்.
ஷர்மாவின் பிரதான பணப்பயிர் சோளம்தான். குறுவை காலத்தில் (டிசம்பர் – மார்ச்) பயிரிடுகிறார். ஆனால் அப்பயிர் பெரிய அளவில் பணம் கொடுப்பதில்லை. “கடந்த வருடத்தில் (2020) என்னுடைய விளைச்சலை ஒரு குவிண்டால் 900 ரூபாய் என்கிற விலையில் விற்றேன்,” என்னும் அவர் 60 குவிண்டால் சோளம் அறுவடை செய்திருந்தார். “கமிஷன் ஏஜெண்ட் ஊருக்கு வந்து வாங்கிக் கொள்வார். அப்படித்தான் பல வருடங்களுக்கு நடக்கிறது.”
ரமேஷ்ஷுக்கு கிடைத்த விலை ஒரு குவிண்டாலுக்கு 1760 ரூபாய்தான். சோளத்துக்கென மத்திய அரசு 2019-20ல் விதித்த குறைந்தபட்ச ஆதார விலையிலிருந்து 50% குறைவு. பிகாரின் அரசு மண்டிகளில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்பது நடக்காத காரியமாகி விட்டது. எனவே ஷர்மா போன்ற சிறுவிவசாயிகள் நேரடியாக கமிஷன் ஏஜெண்டுகளுடன் பேரம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
2006ம் ஆண்டில் பிகாரின் அரசு, பிகார் வேளாண் பொருள் சந்தை சட்டம். 1960-ஐ ரத்து செய்துவிட்டது. அதிலிருந்து மண்டி முறையும் மாநிலத்தில் இல்லாமல் போய்விட்டது. அந்த நடவடிக்கை விவசாயத் துறையை தாராளமயப்படுத்தி விவசாயிகள் தனியார் நிறுவனங்களிடம் சந்தைப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என அரசு குறிப்பிட்டது. மண்டிகள் ஒழிக்கப்பட்டதால் பிகாரின் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்துவிடவில்லை. மாறாக தரகர்களை சார்ந்து இயங்கும் தன்மையை அதிகமாக்கியது. விலைகளையும் தரகர்களே நிர்ணயிக்கும் நிலை உருவானது.
இந்தியாவின் பிற பகுதிகளில் இருப்பதை போலல்லாமல் வட கிழக்கு பிகாரில் சோளம் குளிர்காலத்தில் விளைவிக்கப்படுகிறது. இப்பகுதியில் குறுவை பருவ சோளம் சம்பா பருவத்தை விட அதிக விளைச்சலை கொடுப்பதாக தில்லியின் சோள ஆய்வு நிறுவன அறிக்கை குறிப்பிடுகிறது. குளிர்கால விளைச்சல் சோளத்துக்கென அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்கிறது. குறிப்பாக உணவுக்கும் தொழில்துறைக்கும் பயன்படுவதாக கூறுகிறது அறிக்கை.
ஒரு நல்ல பருவகாலத்தில் ஒவ்வொரு ஏக்கரிலுமிருந்து 20 குவிண்டால் சோளத்தை ரமேஷ் ஷர்மா அறுவடை செய்திருக்கிறார். கூலிச்செலவு போக, ஒரு ஏக்கருக்கு 10000 ரூபாய் வரை செலவாகும். “விதை, உரம், பூச்சிக்கொல்லி முதலிய செலவுகளுக்கு அது சரியாய் போகும்,” என்கிறார் அவர். “ஒரு குவிண்டாலுக்கு 900 ரூபாய் என்ற அளவில் நான்கு மாத உழைப்புக்கு பிறகு 18000 ரூபாய் (ஒரு ஏக்கருக்கு) கைக்கு கிடைக்கும். ஆனால் அது போதாது.”
அவருக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு ஏக்கருக்கு 32500 ரூபாய் அவருக்கு கிடைத்திருக்கும். குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக கடந்த வருடத்தில் ரமேஷ் விற்றதில் 17200 ரூபாய் வருமானத்தை ஒவ்வொரு ஏக்கருக்கும் இழந்திருக்கிறார். “நான் என்ன செய்வது? எனக்கு வேறு வழிகள் இல்லை. ஏஜெண்ட் விலை சொல்வார். நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.”
அராரியாவின் குர்சாகட்டா ஒன்றியத்தில் இருக்கும் ஷொய்ர்கவோன் கிராமம் புர்னியே மாவட்டத்தின் குலாபக் மண்டியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோளம் கொள்முதலுக்கு அதுதான் முக்கியமான சந்தை. “APMC சட்டம் ஒழிக்கப்பட்ட பிறகு தனியார் தரகர்கள்தான் மண்டியை நடத்துகின்றனர். புர்னியே மற்றும் அருகாமை மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகள் அங்கு வந்து மண்டியிலும் அதை சுற்றியும் இருக்கும் கமிஷன் ஏஜெண்டுகளிடம் விற்கின்றனர்,” என்கிறார் முகமது இஸ்லாமுதீன். புர்னியேவின் அகில் பாரதிய கிசான் மாசபையின் (இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியின் அமைப்பு) மாவட்டத் தலைவராக இருக்கிறார்.
குலாபக் மண்டிதான் அப்பகுதியின் சோள விலையை தீர்மானிக்கிறது என்கிறார் இஸ்லாமுதீன். “தனியார் வணிகர்கள் அவர்களின் அறிவுக்கேற்ப விலைகளை நிர்ணயிக்கின்றனர். விளைச்சலை எடைபோடும்போது விவசாயிகள் அறுவடை செய்ததை விட குறைவாக வணிகர்கள் எடை போடுவார்கள். விவசாயிகளும் வேறெங்கும் செல்ல முடியாததால் ஒன்றும் செய்ய முடிவதில்லை”
மேலும் பெருவிவசாயிகள்தான் எளிதாக குலாபக்குக்கு செல்ல முடியும். ஏனெனில் அவர்களின் பெரும் விளைச்சலை கொண்டு செல்லக் கூடிய ட்ராக்டர்களை அவர்கள் சொந்தமாக வைத்திருப்பார்கள். “சிறு விவசாயிகள் கிராமத்திலிருந்தே கமிஷன் ஏஜெண்டுக்கு விற்று விடுவார்கள். கிராமங்களிலேயே விளைச்சலை எல்லாம் குறைவான விலைக்கு வாங்கும் தரகர்கள் பிறகு குலபாக்குக்கு அவற்றை கொண்டு வருவார்கள்,” என்கிறார் இஸ்லாமுதீன்.
பிகாரின் 90 சதவிகித பயிர் கிராமத்துக்குள்ளேயே கமிஷன் ஏஜெண்டுகளிடமும் தரகர்களிடமும் விற்கப்படுவதாக ‘செயல்முறை பொருளாதார ஆய்வுக்கான தேசிய சபை’ 2019ம் ஆண்டில் பிரசுரித்த ஆய்வு குறிப்பிடுகிறது. “APMC சட்டம் 2006ம் ஆண்டில் ஒழிக்கப்பட்ட பிறகும் பிகாரில் புதிய சந்தைகளை உருவாக்கவும் ஏற்கனவே இருப்பவற்றில் புதுவசதிகளை உருவாக்குவதற்குமான தனியார் முதலீடு உருவாகவே இல்லை,” என்கிறது அறிக்கை.
பிகாரின் பிற முக்கிய பயிர்களான நெல்லுக்கும் கோதுமைக்கும் கூட சிறு விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை க்கும் குறைவான விலையையே பெறுகின்றனர்.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 என்பது மத்திய அரசால் செப்டம்பர் 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுள் ஒன்றாகும். 14 வருடங்களுக்கு முன் பிகார் மண்டி முறையை ஒழித்த அதே காரணத்துக்காக இந்தியா முழுவதும் இருக்கும் APMC சட்டங்களை இச்சட்டம் நீர்த்து போக வைக்கிறது. இந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தில்லி எல்லைகளில் நவம்பர் 26, 2020லிருந்து போராடி வருகின்றனர். விளைவிப்பவனுக்கு ஆதாரமாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயப் பொருள் சந்தைக் கமிட்டி (APSC), மாநில அரசின் கொள்முதல் போன்றவற்றை இச்சட்டங்கள் அழிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
குறைந்த விலைகளை கொண்டு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் பிகாரின் கிராமப்புறங்களிலிருந்து பல வருடங்களாக ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்கு இடம்பெயருகின்றனர்.
ரமேஷ் ஷர்மா வேலை பார்க்கும் கக்சினாவின் கரும்பு விவசாய நிலங்களில் பிகாரை சேர்ந்த 13 தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வெட்டும் ஒரு குவிண்டால் கரும்புக்கு 45 ரூபாய் கூலி பெற அராரியாவிலிருந்து கர்னலுக்கு இடையிலான 1400 கிலோமீட்டர்கள் பயணித்திருக்கிறார்கள். “நாளொன்றுக்கு 12-15 குவிண்டால்கள் வெட்டுவேன். 540லிருந்து 675 ரூபாய் நாட்கூலியாக கிடைக்கும்,” என்கிறார் 45 வயது ராஜ்மகால் மண்டல். கரும்பை வெட்டிக் கொண்டே.
”இங்கிருக்கும் (ஹரியானாவில்) விவசாயிகளால் எங்களுக்கு நல்ல கூலி கொடுக்க முடிகிறது,” என்கிறார் அராரியாவின் பருவா கிராமத்திலிருந்து வந்த மண்டல். “பிகாரில் இப்படி கிடையாது. நானும் ஒரு விவசாயிதான். மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. நானே அதிகமாய் பணம் சம்பாதிக்க இங்கு வருகிறேன். நான் எப்படி கூலிக்கு ஆட்களை அமர்த்த முடியும்?”
நெல் அறுவடை தொடங்கும்போது அக்டோபர் - நவம்பருக்கு ராஜ்மோகன் ஊரிலிருந்து கிளம்பி விடுவார். “அச்சமயத்தில்தான் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கூலி வேலை செய்வதற்கான ஆட்களின் தேவை அதிகமாக இருக்கும். முதல் இரண்டு மாதங்களுக்கு 450 ரூபாய் நாட்கூலியில் நெல்வயல்களில் வேளை பார்ப்போம். அடுத்த நான்கு மாதங்களுக்கு கரும்பு வெட்டுவோம். ஆறு மாதங்களில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்போம். அந்த வருமானம் உறுதியாக கிடைக்கிறது. என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள அது உதவுகிறது,” என்கிறார் மண்டல்.
ஆனாலும் அந்த வருமானம் சிக்கலை கொடுக்காமல் வரவில்லை. காலை 7 மணிக்கு தொடங்கும் அவர்களின் வேலை முதுகொடிய தொடர்ந்து சூரிய அஸ்தமனம் வரை முடியாது. “மதிய உணவுக்கான ஒரே ஒரு இடைவேளையோடு 14 மணி நேரம் தொடரும் கடுமையான வேலை,” என்கிறார் ஷாய்ர்கவோனை சேர்ந்த 22 வயது கமல்ஜித் பஸ்வான். “இத்தகைய நாட்கள் மாதக்கணக்கில் கூட நீளும். பிகாருக்கு திரும்பிய பிறகு என்னுடைய முதுகு, தோள், முன்னங்கைகள், கால்கள் போன்றவை நாட்கணக்கில் வலிக்கும்.
காக்சினாவில் கரும்பு வயல்களுக்கு அருகேயே நெருக்கடியான, தற்காலிகமான குடிசைகளில் தொழிலாளர்கள் சமையற்கட்டோ கழிவறைகளோ கூட இல்லாமல் வாழ்கிறார்கள். வெளிப்புறத்திலேயே விறகுகளை கொண்டு உணவு சமைக்கிறார்கள்.
பஸ்வானின் குடும்பத்துக்கு சொந்தமாக நிலம் இல்லை. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் அவர் ஒருவர்தான் சம்பாதிப்பவர். பெற்றோரும் இரண்டு தங்கைகளும் குடும்பத்தில் இருக்கின்றனர். “நான் பார்த்துக் கொள்ளவென ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்கள் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வருடத்தின் மிச்சப்பாதியை அவர்களுடன் கழிப்பேன் என்பதில் திருப்தி அடைந்து கொள்கிறேன்,” என்கிறார் அவர். “கிடைப்பதை வைத்துதான் நாங்கள் வாழ வேண்டியிருக்கிறது.”
தமிழில் : ராஜசங்கீதன்