யானையின் காதுகளை கொண்ட அரசன் குஜராத்தியில் எனக்கு மிகவும் பிடித்த சிறுவர் கதை. முதலில் அதை என் தாயிடம்தான் கேட்டேன். பிறகு அதன் பல்வேறு வடிவங்களை கேட்டிருக்கிறேன். தற்போது ஒன்றைக் கிஜுபாய் பதேகாவின் குழந்தைகளுக்கான சிறுகதைகளிலும் படித்துக் கொண்டிருக்கிறேன். பதேகாவின் தொகுதி உலகின் பல நாட்டுப்புறக் கதைகளை கொண்ட தொகுதி. அதிலிருக்கும் அரசனின் கழுதைக் காதுகள் கதையிலிருந்து அரசனின் யானைக் காதுகள் கதையும் தோன்றியிருக்கலாம்.
காட்டில் தொலைந்து பசியில் ஒரு குருவியின் கழுத்தை முறித்து உண்ட ஓர் அரசனின் கதை அது. அதனால் கிடைத்த சாபத்தில் அரசனுக்கு மிகப் பெரிய யானையின் காதுகள் உண்டாகி விடுகின்றன. அரண்மனையில் மிச்ச நாட்கள் முழுவதையும் வெவ்வேறு துணிகள் மற்றும் துண்டுகள் கொண்டு குடிமக்களின் பார்வையிலிருந்து தன் காதுகளை மறைப்பதில் கழிக்கிறான். ஆனால் நீண்டு வளர்ந்து விட்ட முடியையும் தாடியையும் வெட்ட முடிதிருத்துபவனை அழைக்க வேண்டிய நேரம் வருகிறது.
அரசனின் காதுகளைப் பார்த்து முடி திருத்துபவன் அதிர்ச்சி அடைகிறான். அதிகமாக வளர்ந்த அவனது காதுகள் பற்றிய தகவல் கசிந்து விடும் அபாயம் நேர்கிறது. சக்தி வாய்ந்த அரசன் பணிவான அந்த முடி திருத்துபவனை மிரட்டி காதை பற்றி எவரிடமும் பேசக் கூடாதென தடை விதித்து விடுகிறான். ஆனால் முடி திருத்துபவர்கள் இயல்பிலேயே அதிகம் பேசுபவர்கள். ரகசியம் பாதுகாக்கத் தெரியாதவர்கள். எனவே அரசனின் முடி திருத்துபவன், ரகசியத்தை காக்க முடியாமல் சென்று காட்டிலுள்ள ஒரு மரத்திடம் ரகசியமாக சொல்லி விடுகிறான்.
அந்த மரம் ஒரு மரவெட்டியை எதிர்கொண்டதும் அரசனின் யானைக் காதுகள் பற்றி பாட்டு பாடுகிறது. மந்திரம் நிறைந்த அந்த மரத்தை மரவெட்டி தண்டோரா செய்பவன் ஒருவனுக்கு விற்று விடுகிறான். அவன் அந்த மரத்தை வைத்து ஒரு தண்டோரா செய்கிறான். அந்த தண்டோரா வாசிக்கும் ஒவ்வொரு நேரமும் அதே பாடலை திரும்பத் திரும்பப் பாடுகிறது. தெருக்களில் அந்த தண்டோரா வாசிப்பவன் நேராக அரசனுக்கு முன் இழுத்துச் செல்லப்படுகிறான். என்னுடைய நினைவின்படி, தனக்கான சாபத்திலிருந்து விமோசனம் அடைய பறவைகள் சரணாலயம் ஒன்றை அமைக்க வேண்டுமென அந்த அரசன் தெரிந்து கொள்வதாக இருக்கும்.
அரசனுக்கு யானையின் காதுகள்
வாயை மூடுங்கள், ஒரு வார்த்தைப் பேசாதீர்கள்
அரசனுக்கு யானையின் காதுகள்
என சொல்லாதீர்கள்.
அரசனுக்கு யானையின் காதுகள்
என்றக் கதைகள் இப்படி
காற்றில் பரவுவதை அனுமதிக்கக் கூடாது
குருவிகள் எங்கேச் சென்றன
ஒருமுறை அவற்றைப் பார்த்தேன்
அதிக காலம் கூட ஆகிவிடவில்லை
ரகசிய கூட்டை யார் கட்டியது?
விதைகளின் பொறியை யார் அமைத்தது?
ஏமாற்று வேலையென்ற சந்தேகத்தை நிறுத்துங்கள்
அரசனுக்கு யானையின் காதுகள் என
கட்டுக்கதைகள் ஊரெல்லாம்.
குருவிகளைக் காணாமலடிக்க
கூடுகளை விட்டு அவற்றை விரட்டுங்கள்
மரங்கள், காடுகள், நிலங்கள்,
பிற இடங்கள் விட்டு விரட்டிய பிறகு
வாழ்க்கைக்கும் பாடல்களுக்கும் பாடுவதற்கும்
சொந்த விருப்பத்தில் சிறகுகளை விரிக்கவும் உரிமை இருக்குமா அவற்றுக்கு?
குட்டையைக் குழப்பும் கேள்விகளை நிறுத்துங்கள்.
அரசனின் முன் குருவிகள் என்ன?
பறவையைக் காப்பாற்றுங்கள், அரசனை அகற்றுங்கள் என்ற
வெற்று கோஷங்களை அடக்குங்கள்
அரசனுக்கு யானையின் காதுகள்.
‘நானே சாட்சி, என்னை நம்பு
அல்லது வானத்தைக் கேள்,’ என்கிறது இலை.
குருவிகளைக் கொன்றது அரசன்தான்.
என்னை நம்பு என்ற காற்று
அவனது வயிற்றிலிருந்து அவை
பாடுவதை நான் கேட்டேன் என்றது.
ஆனால் மக்கள் சொல்வதை நீ கவனிக்காதே
உன் கண்கள் பார்ப்பதை நம்பாதே
நம்ப விரும்பினால் நம்பிக் கொள்
ஆனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிடாதே
அரசனுக்கு யானையின் காதுகள் என.
என்ன ஓர் அரசன், என்ன ஒரு நாடு!
கடவுளை போல் உடை அணிந்து
பசியிலிருப்போரை உண்பவர் யார்?
இதுபோன்ற பயனற்ற கிசுகிசுக்களில் ஈடுபடாதே என கேட்டுக் கொள்கிறேன்.
உன்னுடைய மனதுடன் நாள் முழுக்க போராடாதே.
ஒரு சுவரை நீ பார்த்தால்
அதில் பிளவுகள் நிச்சயம் இருக்கும்.
ஒவ்வொரு பிளவையும் துளையையும்
அதிகம் ஆராயாதே.
நீ கண்டுபிடிக்கும் உண்மையை
ஒவ்வொரு கிராமமும்
ஆயிரக்கணக்கான நாக்குகளில் பேசிக் கொண்டிருக்கிறது.
அந்த முட்டாள்தனத்தை நீயும் செய்யாதே.
பேச்சறியா செடியிடம் கூடப் பேசாதே.
அரசனுக்கு யானையின் காதுகள் என
நீ பாட்டுப் பாட வேண்டாம்
தண்டோரா போட வேண்டாம்.
குருவிகளையும் மரத்தையும் விட்டுவிட
உன்னைச் சொல்கிறேன்
காட்டைப் பார்ப்பதையும் நிறுத்திவிடு.
அப்படிச் செய்தால் இதையும் தெரிந்து கொள்
இரக்கம் காட்டு, ஓ கடவுளே.
அரசனுக்கு யானையின் காதுகள் என்பது போன்ற
விஷயங்களை கவிதையாக்கும்
தவறைச் செய்யாதே
ஓ, அரசனுக்கு யானையின் காதுகள்.
தமிழில்: கவிதா கஜேந்திரன்