இந்திய அரசியல் வானில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உதித்த பிறகு, அவரை பிரபலப்படுத்துவதிலும், அவரின் இயக்கத்தை மகாராஷ்டிராவின் எல்லா மூலைகளுக்கும் பரப்புவதிலும் கவிஞர்களும் பாடகர்களும் முக்கியப் பங்காற்றினர். அவரது வாழ்க்கையையும் அவரது சேதியையும் தலித் போராட்டங்களில் அவரது பங்கையும் எவரும் புரிந்து கொள்ளும் எளிய மொழியில் அவர்கள் விளக்கினர். அவர்கள் பாடிய பாடல்கள் மட்டுமே கிராமப்புற தலித்களுக்கான ஒரே பல்கலைக்கழகம். அவர்களின் வழியாகத்தான் அடுத்த தலைமுறையினர் புத்தரையும் அம்பேத்கரையும் சந்தித்தனர்.
ஆத்மாராம் சால்வே (1953-1991) அத்தகைய கவிபாடகர்களில் ஒருவர். 70களின் குழப்பமான காலக்கட்டத்தில் பாபாசாகேப்பின் நோக்கத்தை புத்தகங்களின் வழி தெரிந்து கொண்டார். சால்வேவின் வாழ்க்கை மொத்தமும் அம்பேத்கர் மற்றும் அவரின் விடுதலைச் செய்தி ஆகியவற்றால் நிரம்பியிருந்தது. மராத்வடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டுவதற்கான இருபது வருடகால நாமமந்தர் போராட்டத்தை அவரது கவிதைகள் அற்புதமாக வடிவமைத்தன. அவரது குரலாலும் வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஞானவிளக்கை மகாராஷ்டிராவின் கிராமங்களுக்கு நடந்தே கொண்டு சென்று சேர்த்தார். ஆத்மராமின் பாடலைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் கூடுவர். "பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்ட பிறகு, அம்பேத்கரின் பெயரை பல்கலைக்கழக வாசலில் பொன்னெழுத்துகளால் நான் எழுதுவேன்," என்பார் அவர்.
ஆத்மராம் சால்வேவின் புரட்சிகரமான வார்த்தைகள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு தலித் இளையோரை இன்றும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. பீட் மாவட்டத்தின் 27 வயது மாணவரான சுமித் சால்வே சொல்கையில் ஆத்மாராம் அவருக்கு எத்தகையவர் என்பதை விளக்க "ஒரு முழு நாளும் ஒரு முழு இரவும் போதாது" என்கிறார். டாக்டர் அம்பேத்கருக்கும் ஆத்மாராம் சால்வேக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் ஆத்மாராமின் புரட்சிகரமான பாடல் ஒன்றை அளிக்கிறார் சுமித். "பழங்கால போர்வையைக் கொண்டு எத்தனை காலம் உங்களை மூடிக் கொண்டிருப்பீர்கள்" எனப் பார்வையாளர்களை நோக்கிக் கேள்வி கேட்கிறார் கவிபாடி. "அரசியல் சாசனத்தை பீரங்கியாகக் கொண்டு உங்களின் மீட்பர் பீம் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்தார்." சுமித் பாடலை பாடுவதைக் கேளுங்கள்.
அரசியல் சாசனத்தைப் பீரங்கியாய்க் கொண்டு
உங்களின் மீட்பர் பீம்
அடிமைச்சங்கிலிகளை உடைத்தார்
எத்தனை காலத்துக்கு பழமைப் போர்வை கொண்டு உன்னை நீயே
மூடிக் கொள்வாய்?
உங்களின் வாழ்க்கைக் கந்தலாகக் கிடந்தது
பீம்ஜி உங்களை மனிதனாக மாற்றினார்
நான் சொல்வதைக் கேள், முட்டாளே
ரனோபா (ஒரு கடவுள்) குருட்டுத்தனமாக வணங்கி
தாடியும் முடியும் வளர்ப்பதை நிறுத்து
எத்தனை காலத்துக்கு பழமைப் போர்வை கொண்டு உன்னை நீயே
மூடிக் கொள்வாய்?
போர்வையில் நான்கு வருணங்கள் இருக்கின்றன
பீம் அதை எரித்து சக்தியற்றதாக்கி விட்டார்
நீ புத்த நகரியில் வாழ்ந்து கொண்டு
வேறு எங்கோ இருக்க விரும்புகிறாய்.
பீம்வாதிகளுக்கு நல்ல நாட்கள் எப்போது புலரும்?
எத்தனை காலத்துக்கு பழமைப் போர்வை கொண்டு உன்னை நீயே
மூடிக் கொள்வாய்?
உன் போர்வையிலிருந்து ஒட்டுண்ணிகள் சீவப்படாத உன் முடிக்குள்ளும்
சென்றுவிட்டது
ரனோபாவை உன் வீட்டிலும் மடங்களிலும் நீ வணங்குகிறாய்
அறியாமையின் பாதையிலிருந்து விலகு
சால்வேவை குருவாய் ஏற்றுக்கொண்டு பின்பற்று
மக்களை தவறான திசையில் அழைத்துச் செல்வதை நிறுத்துவாயா?
எத்தனை காலத்துக்கு பழமைப் போர்வை கொண்டு உன்னை நீயே
மூடிக் கொள்வாய்?
இந்தக் காணொளி, இந்தியக் கலைக்கான இந்திய அறக்கட்டளை, ஆவணக் காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகத் திட்டத்தின் கீழ், PARI-யுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட திட்டமான ‘செல்வாக்குமிக்க கவிபாடகர்களும், மராத்வாடாவிலிருந்து வந்த கதைகளும்’ என்ற தொகுப்பின் ஒரு பகுதியாகும். புது தில்லியின் கோத்தே நிறுவனம்/மேக்ஸ் முல்லர் பவன் ஆகியவற்றின் ஆதரவுடன் இது சாத்தியமானது.
தமிழில் : ராஜசங்கீதன்