பைதிபகா கிராமத்தில் இருந்து வெளியேற கொடுக்கப்பட்ட அழுத்ததின் காரணமாக, அப்பகுதியில் இருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், தனக்கு உறுதியளிக்கப்பட்ட மாற்று வீட்டிற்காக உப்பல பிரவீன் குமார், தற்போது வரை காத்துக்கொண்டிருக்கிறார். மேலும், இதன் காரணமாக பள்ளிக்கூடத்திலிருந்து வாடகை வீடு, வாடகை வீட்டிலிருந்து அவரின் பெற்றோருக்கு சொந்தமான இடம், பின்னர் கூடாரம் என, வெவ்வேறு இடங்களுக்கும் தொடர்ந்து அவர் இடம்பெயர நேர்ந்துள்ளது.
இதுகுறித்து குறிப்பிட்ட அவர்,” அங்கிருந்து வெளியேறிய முதல் இரண்டு மாதங்களான- மே மற்றும் ஜூன் மாதத்தில் ஹுகும்பேதா பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளியில் இருந்தோம். பின்னர், வகுப்புகள் நடைபெறுவதற்காக பள்ளி மீண்டும் திறக்கப்படவே, அங்கிருந்து நாங்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர நேர்ந்தது,” என்று கூறினார்.
பைதிபகா கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, கோபாலபுரம் மண்டலில் உள்ள ஹுகும்பேதா பகுதியில் மாற்றுவீடுகள் அளிக்கப்படுமென உறுதியளிக்கப்பட்ட 30 குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. இவர்கள் அனைவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு, கோடைக்காலத்தின் போது, மேற்கு கோதாவரி மாவட்டத்தின் போலவரம் மண்டல் பகுதியில் உள்ள பைதிபகா கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 420 குடும்பங்களில் ஒருபகுதியினர் ஆகும் . இவர்கள் அனைவருமே தலித்துகள், மாலா சமுகத்தைச் சார்ந்தவர்கள். இந்நிலையில், இவர்களில் இருபத்து நான்கு குடும்பங்களுக்கு ஹுகும்பேதா பகுதியில் சிறிய அளவிலான, தரமற்ற வீடுகள் மாற்று வீடுகளாக அளிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய இந்த ஆறு தலித் குடும்பங்கள் தற்போதுவரை மாற்று வீடுகளுக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல், புனர் வாழ்வு மற்றும் மீள்குடியமர்த்துதல் (எல்.எ.ஆர்.ஆர்)சட்டம்,2013, ன் படி, பதினெட்டு வயதைக் கடந்து திருமணமான அனைவரும் (திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள அதே கிராமத்தில் இன்னும் வசித்து வருபவர்கள்), தனிக் குடும்பமாகக் கருதப்பட்டு, மீள் குடியமர்த்துதல் மற்றும் புனர்வாழ்வு (R&R) திட்டத்தின் அடிப்படையில், ஒரு வீடு மற்றும் ஒரு முறை பண உதவி நிவாரணமாக வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது. இதேவேளையில், மாற்று வீடுகளுக்காக தற்போது வரை காத்திருக்கும், இந்த ஆறு குடும்பங்களில் புதிதாக திருமணமானவர்களும் அடங்குவர். இவர்கள் பைதிபகா பகுதியில் அவர்களின் பெற்றோருடன் வசித்து வந்தவர்கள்.
இதேசமயத்தில், வேலை தேடுவதற்கு ஏதுவாக, ஹுகும்பேதா பகுதியில் இருந்து சுமார் 8 முதல் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, போலவரம் நகர்ப்பகுதியில் இரண்டு அறைகள் கொண்ட வீடொன்றை 3,000 ரூபாய் மாத வாடகையாகக் கொடுத்து பிரவீன் தங்கியுள்ளார். அவர் கூறுகையில்,” இடம்பெயர்வின் காரணமாக என் வாழ்வாதாரத்தையும் இழந்ததால், என்னால் ரொம்ப நாளைக்கு அந்த வாடகைக் கொடுக்க முடியவில்லை” என்றார். பைதிபகா கிராமத்தில், பிரவீன் விவசாயத் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்தார். மேலும்,தேன் சேகரித்தும்,சுள்ளிகள் மற்றும் இதர காடுசார் பொருட்களை விற்பனை செய்தும் வந்தார்.
சிலகாலம், அவரும்,அவரது குடும்பமும் அவரது பெற்றோர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆர்&ஆர்(மீள்குடியமர்வு குடியிருப்பு) காலனிப் பகுதியில் தங்குவதற்கு முயற்சி செய்துள்ளனர். சிறிய அறை கொண்ட அந்த வீடு, அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இந்நிலையில், ஹுகும்பேதா பகுதியில் தார்பாயை வைத்து கூடாரம் அமைத்து அவர் தங்கத் தொடங்கியுள்ளார். இங்கு தான் அவர், தற்போது வசித்து வருகிறார்.
“இங்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை” என்று கூறிய பிரவீன். இதன் காரணமாக , 15-20 கிலோமீட்டர் தொலைவில்,அருகில் உள்ள குக்கிராமங்களுக்கெல்லாம் விவசாயக் கூலியாக வேலைத்தேடி அலைந்துள்ளார். இதன் வழியாக, வாரத்திற்கு 2-3 தடவை 200 ரூபாய் தினக்கூலியாக ஈட்டி வருகிறார். ஆனால், இந்த வேலைக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோவிற்கோ அல்லது டிராக்டருக்கோ 70-80 ரூபாய் வரை செலவிட்டு வருகிறார். இந்த வேலையும் கிடைக்காத போது,பிரவீன் கூடைகளைச் செய்கிறார்.”மூங்கிலைக் சேகரிக்க ஒரு நாள் எடுக்கும்(அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து), கூடை பின்னுவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். இந்த மூன்று நாள் வேலையின் மூலமாக, எனக்கு வெறும் 2௦௦ ருபாய் தான் கிடைக்கும்(போலவரம் பகுதியில் கூடைகளை விற்பதின் வழியாக),” என்று அவரது வேலை குறித்து விளக்கினார்.
இத்தகைய இடப்பெயர்வுக்கு முன்னதாக, அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள், ஆர்&ஆர் காலனிக்கு அருகாமையிலேயே நிலம்,வேலை வாய்ப்புகள் மற்றும் ரூபாய் 6.8 லட்சம் நிவாரணம்(மீள்குடியமர்த்துதல் திட்டத்தின் அடிப்படையில்; இந்தத் தொகை ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நிர்ணயிக்கப்பட்டது) வழங்கப்படும் என்று கூறப்பட்டது. எவ்வாறாயினும், இடம்பெயர்ந்து இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், இடம்பெயர்ந்த 420 குடும்பங்களுக்கும், உறுதியளிக்கப்பட்ட பல இழப்பீடுகள் இன்று வரை முழுமையாக வழங்கப்படவில்லை. கிராம மக்களின் கணிப்பின் படி, குறைந்தபட்சம் 50 குடும்பங்களுக்கு தற்போது வரை வீடு வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இவர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர் அல்லது பிரவீனைப் போன்று தார்பாய் மூலம் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு,இந்திரா சாகர் பல்நோக்கு திட்டத்தின் காரணமாக,மக்கள் இடம்பெயர நேர்ந்த ஏழு கிராமங்களில் பைதிபகாவும் ஒன்று. சுமார் 5,500 பேரை மொத்த மக்கட்தொகையாகக் கொண்டுள்ள இந்த கிராமம், சரியாக போலவரம் திட்டத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்நிலையில், போலவரம் திட்டம் முழுமையாக முடிவடைவதற்குள், கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள குறைந்தபட்சம் 462 கிராமங்கள், அந்த கிராம்களைச் சேர்ந்த மக்கள், ஆந்திராவில் உள்ள ஒன்பது மண்டல் பகுதிகளில் பரவி, தடமின்றி மறைந்தே விடுவார்கள். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், போலவரம் பகுதி செயலாளர் வெங்கட ராவ் கூறுகையில் , இந்தத் திட்டத்தால் 80,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்துள்ளது. ஆனால், மாற்று வீடுகளுக்காகக் கட்டப்பட்டுள்ள ஒட்டுமொத்த ஆர்&ஆர் காலனிகளையும் ஒன்று சேர்த்தாலும் கூட, அரசு தற்போது வரை கிட்டத்தட்ட 1,000 வீடுகளை மட்டுமே கட்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.
ஏறத்தாழ கைவிடப்பட்ட நிலையில் உள்ள பைதிபகா கிராமம் முழுமையும் ( பார்க்க:பைதிபகாவின் குடும்பங்கள்:தற்போது பத்து குடும்பங்கள் மட்டுமே உள்ளனர் ) தற்போது நான்கு ஆர்&ஆர் காலனிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலனிகள் ஒன்று போலவரத்திலும், மற்றொன்று ஹுகும்பேதாவிலும், பிற இரண்டு ஜங்கரெட்டிகூடம் மண்டல் பகுதியிலும் உள்ளது. அனைத்து தலித்துகளுக்கும் ஹுகும்பேதா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஜங்கரெட்டிகூடம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியிலும், மற்றொரு குடியிருப்பில் உயர் சாதியினருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலவரம் பகுதியில் உள்ள ஆர்&ஆர் காலனிக்கு, ஆந்திரா மாநில பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சார்ந்த கிராமத்தினர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் வீடுகள் அளிக்கப்பட்டுள்ளது. “இது முழுக்க முழுக்க சாதி அடிப்படையிலான பிரிவினை” என ஹுகும்பேதா பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள விவசாயக்கூலியான, 24, ராபகா வெங்கடேஷ் இதனைக் குறித்து குறிப்பிட்டார்.
நிலம் கையகப்படுத்துதல், மீள் குடியமர்வு சட்டத்தின் படி, தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலத்திற்கு ஈடான அளவு நிலம் வழங்கப்பட வேண்டுமென்றும், இதேவேளையில் பிற சாதியினருக்கு நிலத்திற்கு இழப்பீடாக பணம் வழங்கப்பட வேண்டுமென்றும் இச்சட்டம் கூறுகிறது. அதுமட்டுமல்லாது, வன உரிமை அங்கீகாரச்சட்டம் 2006 ன் படி, காட்டினைச் சார்ந்து வாழும் பழங்குடிகள் (... முதன்மையாக காட்டில் வசிப்பவர்கள் மற்றும் வாழ்வாதார தேவைகளுக்காக காடுகள் அல்லது வன நிலங்களை நம்பியிருப்பவர்கள்...)" மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மூன்று தலைமுறைகளாக(75 ஆண்டுகள்) “காட்டில் வசிக்கக்கூடிய மற்றும் காட்டையும் அல்லது காட்டு நிலத்தையும் சார்ந்து வாழக்கூடியவர்கள்...” அதாவது “பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழக்கூடியவர்களுக்கு” வனத்துறை நிலத்தை பட்டா செய்து கொடுக்கவும் அல்லது ஒத்திகைக்கு விடவும் உரிமையளிக்கின்றது.
இதேவேளையில்,பிரவீனின் தந்தை வீராசுவாமிக்கு, பைதிபகா கிராமத்தில், சொந்தமாக இரண்டு ஏக்கர் (வருவாய்)பட்டா நிலமும், மேலும், ஒரு ஏக்கர் பொது(வனத்துறை) நிலத்தில் விவசாயமும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், “அவர்கள் இழப்பீடு தருவதை தவிர்ப்பதற்காக பொது நிலத்திற்கு பட்டா வழங்கவில்லை. இரண்டு ஏக்கர் வருவாய் நிலத்திற்கு மாற்றாக கொடுக்கப்பட்ட நிலமும் பாறை மற்றும் மண் கொண்டதாக, பாசன வசதியின்றி,விவசாயத்திற்கு பயன்படாத வகையில் இருந்தது. இந்த பிரச்சனையை மண்டல் வருவாய் அலுவலருக்கு எடுத்து சென்ற போது, மண்ணை விற்று வாழ்வை நடத்துமாறு அவர் கூறினார்” எனக் குறிப்பிட்டார்.
ஆர்&ஆர் காலனியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் போதிய அளவுடையதாக இல்லை. “அவை தீப்பெட்டி போன்று சிறியதாக, தரமற்றதாக உள்ளது. அரசு கட்டிக்கொடுத்த வீட்டை விட, எங்கள் வீட்டின்(பைதிபகாவில்) தாழ்வாரம் இரண்டு மடங்கு பெரியது. அதுமட்டுமின்றி, மழைக்காலத்தின் போது, வீட்டினுள் ஓழுகும் மழைநீரைப் பிடிப்பதற்கு, நாங்கள் பாத்திரங்களோடு அமர்ந்திருக்க வேண்டி உள்ளது,” என்றார் வீராசுவாமி.
“நாங்கள் தலித்துகள் என்பதால், இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுகிறோம். அதனால் தான் எங்கள் வீடுகள்( தற்போதே) உடைந்து விழுகிறது. எங்கள்(புதிய) நிலங்கள் மண் நிரம்பியதாக உள்ளது” என்றார் ராபகா வெங்கடேஷ்.
இந்நிலையில், உடைந்து வீழ்ந்த உறுதிமொழிகளும், கிட்டாத வேலைவாய்ப்பும் அனைத்து ஆர்&ஆர் காலனியிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கும், அதேவேளையில், பைதிபகாவிற்கு மேல்புறம் அமைந்துள்ள ஏழு கிராமங்களில் ஒன்றான தேவரகோந்தி கிராமம் , வேறு விதமான பிரச்னைகளைச் சந்தித்துள்ளது.
இந்த குக்கிராமப்பகுதியில் பழங்குடியின சமூகமான கோயா சமுகத்தைச் சார்ந்த 130 குடும்பங்கள் வசித்து வந்தனர். மேலும், இப்பகுதி ஆந்திரபிரதேச மாநிலத்தின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள பகுதியாகும். இது அதிகப்படியாக பழங்குடியினர் வசிக்கும் பகுதி என்பதால் வரலாற்றுரீதியிலான மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கவனத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், சில உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால், தேவரகோந்தி பகுதியில் வசித்தவர்கள் தற்போது ஐந்தாவது அட்டவணையின் கீழ் வகைப்படுத்தாத பகுதியின் கீழ் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர். இது ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டு கழகம் வழங்கும் கடன்கள், நிதி உதவி மற்றும் ஐந்தாவது அட்டவணை வழங்கும் இதர சலுகைகள் ஆகியவற்றை பறிக்கும் செயலாகும்.
கரம் செல்லயம்மா , கடந்த 2016 ஆம் ஆண்டு, மே-ஜூன் மாதத்தில், அவரது கணவர்,மகன் மற்றும் மகளுடன், தேவரகோந்தியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறுகுடியமர்வு குடியிருப்பு பகுதிக்கு இடம்பெயர்ந்தார். ஆனால், ஓதுக்கப்பட்ட வீட்டின் அளவு மற்றும் தரம் ஆகியவற்றின் காரணமாக, இவரது குடும்பம் ஐந்து லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து வேறொரு புதிய வீட்டினைக் கட்டியுள்ளது. அவர்களின் சேமிப்பில் இருந்த சிறு தொகை, மீள்குடியமர்த்துதல் மற்றும் புனர்வாழ்வு இழப்பீடாக கிடைத்த சிறு தொகை ஆகியவற்றை இதற்காக செலவிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய செல்லயம்மா, “ இந்த வீடு கட்டுவதற்காக 36 சதவீத வட்டியில், 2 லட்ச ருபாய் கடன்(போலவரம் பகுதியில் உள்ள கடன் கொடுப்பவர்களிடம் இருந்து) வாங்கினேன்” என்றார். இவர் வனத்துறையின் நிலத்தில் விவசாயம் செய்தும், காடு சார் பொருட்களைச் சேகரித்தும் வந்தார். இவருக்கு தற்போது வரை நிலத்திற்கு சமமான இழப்பீட்டு நிலம் மற்றும் மீள்குடியமர்த்துதல் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட முழுத்தொகையான 3.5 லட்ச ருபாய் பணம் முழுமையாக கிட்டவில்லை.
இதேபோன்று, திட்டதத்தின் காரணமாக தேவரகோந்தி ஆர்&ஆர் காலனிப் பகுதிக்கு இடம்பெயர்ந்த,60 வயதுடைய போரகம் ஜக்க ராவ் கூறுகையில் “எங்கள் கிராமத்தில் மொத்தமாக வனத்துறைக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால், அதில் வெறும் 10 ஏக்கருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டிருந்தது. மீதமுள்ள நிலங்களின் மீதான உரிமைகோரல் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அந்த 10 ஏக்கர் நிலத்திற்கு கூட, நிலத்திற்கு சமமான இழப்பீடாக நிலம் வழங்கப்படவில்லை,” என்று கூறினார். ஜக்க ராவ்விற்கு சொந்தமாக மூன்று ஏக்கர் விவசாய நிலமும் நான்கு ஏக்கர் வன நிலத்தில் விவசாயமும் செய்தும் வந்தார். இந்நிலையில், அவரது நிலத்திற்கு மாற்றாக வெறும் மூன்று ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஆர்&ஆர் காலனியிலிருந்து, 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, குஞ்சவரம் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலமும் மண்ணும்,பாறைகளும் நிரம்பியதாக, விவசாயத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு, கம்மம், மேற்கு கோதாவரி மற்றும் கிழக்கு கிருஷ்ணா ஆகிய மாவட்டப் பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களைப் நிலப்பயன்பாடு மாற்றுவதற்கு, எண்களை தவறாகக் குறிப்பிட்டு ஆந்திரா மாநில அரசானது, ஒன்றிய சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்திடம் வன அனுமதியைப் பெற்றது, பல்வேறு கிராம சபைத் தீர்மானங்கள்(கிராமக் கூட்டம் ) மற்றும் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட பல கடிதங்கள் வாயிலாக தெரிய வந்தது.
“நாங்கள் புளி,தேன், மரப்பிசின் மற்றும் இதர வன விளைப்பொருட்களை பயன்படுத்தி வந்தோம். இனி, அதனை இங்கு எங்களால் கொண்டுவர முடியாது.அதுமட்டுமல்லாது, கற்கள் மற்றும் மலைகள் போன்ற எங்கள் பண்பாட்டு சடங்குகளை, பழங்குடியின தெய்வங்களை நாங்கள் இழந்துள்ளோம்” என செல்லயம்மா கூறினார். தற்போது, அவர், அவரது அண்டைவீட்டார்களுடன் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே தனது பழைய கிராமத்தில் உள்ள தெய்வங்களை வழிபடச் செல்கின்றார்.
இதற்கிடையில் போலவரம் திட்டம், இவர்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களைக் கடந்து சென்று கொண்டே இருக்கிறது.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்