2018 நவம்பர் மாதம் தீபாவளிக்கு முந்தைய காலை நேரம். மேற்கு ஒடிசாவைச் சேர்ந்த சுமார் 30-40 இசைக் குழுவினர் ராய்பூரில் உள்ள புத்தா தலாப் சதுக்கத்தில் திரண்டனர். அவர்களின் உடைகள், கருவிகளை வைத்துப் பார்த்தால் அவர்கள் பாலாங்கிர், காலாஹண்டி அல்லது நுவாபடா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று என்னால் சொல்ல முடியும். அவர்கள் அனைவரும் பட்டியலினத்தில் காண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களின் நிகழ்ச்சியை உள்ளூரில் கானா – பாஜா என்கின்றனர். இது ஒடிசாவின் புகழ்பெற்ற நாட்டுப்புற இசையாகும். திருமணங்கள், பூஜைகள் மற்றும் பிற கொண்டாட்டங்கள் பல்வேறு நிகழ்வுகளுக்கான இசை வாத்தியங்களைக் கொண்ட குழுக்கள். ஆண்களை மட்டுமே கொண்ட 5 – 10 இசைக் கலைஞர்கள் குழு அமைக்கின்றனர். ஒவ்வொருவரும் தாப், டோல், ஜாஞ், மஹூரி, நிஷான், தஷா போன்ற மரபு கருவிகளை வைத்துள்ளனர்.
நான் கொஸ்லியில் (அல்லது சம்பல்புரி) மேற்கத்திய ஒடிசா மொழியில் இசைக் கலைஞரிடம் யாருக்காக காத்திருக்கிறீர்கள் என கேட்டேன். என்னுடைய பேச்சைக் கேட்ட பாலாங்கிர் (போலாங்கிர்) மாவட்டம் தித்லாகர் தாலுக்காவில் உள்ள கந்தகால் கிராமத்தைச் சேர்ந்த பெனுதார் ச்சுரா, சுமார் 30 ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருப்பவர், பதிலளித்தார், “நாங்கள் ராவத் – நச்சா குழுவினர்களுக்காக காத்திருக்கிறோம். அவர்கள் நடனத்திற்காக எங்களை வேலைக்கு எடுப்பார்கள்.”
ராவத் அல்லது யாதவ் (ஓபிசி) சமூகத்தினர் ராவத்-நாச்சா என்ற பெயரில் தீபாவளியின் போது கோவர்தன பூஜையில் நடன நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடுவார்கள். “அந்த நடனத்திற்கு அவர்களுக்கு இசை தேவை. அவர்கள் இங்கு வந்து குழுவினரைப் பார்த்து உகந்த ஒன்றை கண்டறிவார்கள்,” என்றார் பெனுதார்.
உங்கள் குழுவினருக்கு எவ்வளவு பணம் தருவார்கள், இங்கு எத்தனை நாட்கள் தங்குவீர்கள் என நான் அவரிடம் கேட்டேன். “நடனக் குழு மற்றும் அவர்கள் தேர்வு செய்யும் குழுவைப் பொறுத்து ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை தருவார்கள். ஒரு வாரம் அல்லது எட்டு நாட்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார்கள். நூற்றுக்கணக்கான குழுவினர் அவர்களுக்காக இங்கு காத்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். ராவத்-நாச்சா குழு வந்து கானா-பஜாவை தேர்வு செய்வார்கள். இச்சமயம் கவுரி-கவுரா பூஜா கொண்டாடப்படும் என்பதால் இதற்கு குழு தேர்வு செய்யப்பட்டால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நிகழ்ச்சி இருக்கும். எங்களுக்கு 15,000-20,000 [ரூபாய்] வரை கிடைக்கும்.”
இங்கு நீங்கள் எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறீர்கள் என அருகில் நின்றுக் கொண்டிருந்த ஷங்கர் சக்ரியாவிடம் நான் கேட்டேன். அவர் பாலாங்கிர் மாவட்டம் சர்குல் கிராமத்தைச் சேர்ந்தவர். “நான் கடந்த 12 முதல் 15 ஆண்டுகளாக இங்கு வந்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார் அவர். “என் சக இசைக் கலைஞர் உபாசு மிக நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கிறார்.” அப்போதெல்லாம் எவ்வளவு பணம் கிடைக்கும் என உபாசுவிடம் நான் கேட்டேன். “அப்போதெல்லாம் 7000-8000 வரை கிடைத்தது,” என அவர் நினைவுகூர்ந்தார்.
குழுவினருடன் செல்லாதபோது நீங்கள் கிராமத்தில் என்ன செய்வீர்கள்? “நாங்கள் அனைவரும் சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள். எனவே [நெல்] அறுவடை முடிந்ததும் நாங்கள் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு [நிகழ்ச்சி நடத்த] செல்வோம். நாங்கள் தீபாவளிக்கு காத்திருந்து இதற்காக ராய்ப்பூருக்கு வருவோம்,” என்றார் அவர்.
ஒடிசாவின் அப்பகுதியில் வறட்சி நிலவுவதாக நான் கேள்விப்பட்டேன், எனவே அதுபற்றி நான் கேட்டேன்: இப்போது பயிர்கள் எப்படி இருக்கின்றன? “இச்சமயமும் வறட்சிதான். எங்கள் பயிர்களை நாங்கள் இழந்துவிட்டோம்,” என விளக்கினார் உபாசு.
நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, குழுவினர் நிகழ்ச்சியைத் தொடங்கினர். நான் அவற்றை காணச் சென்றேன். ராவத் சமூகத்தைச் சேர்ந்த மூவர் பாட, அவர்களுடன் கானா-பஜா இசைக் கலைஞர்கள் இசை அமைத்தனர் – தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக ராவத்துகளைக் கவர கடுமையாக முயன்று கொண்டிருந்தனர்.
சிறிது தொலைவில் கானா-பஜா குழுவைச் சேர்ந்த திருநபர் ஒருவர் நடனமாடி பலரது கவனத்தையும் ஈர்த்தார். அவர்களைத் தாண்டி கானா-பஜா குழுவும், ராவத்-நாச்சா நடனக்காரர்களும் ரிக்ஷாவில் ஏறி கிளம்பிக் கொண்டிருந்தனர். நான் டிரம் கலைஞரிடம் ஓடிச் சென்று எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் பேசினீர்கள்? என கேட்டேன்.
“ஏழு நாட்களுக்கு 18,500 ரூபாய்” என்றார் அவர். எந்த கிராமத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள்? அவர் பதிலளிப்பதற்கு முன் சத்திஸ்கரின் துர்க் மாவட்டம் அச்சோட்டி கிராமத்தின் ராவத் சமூகத்தைச் சேர்ந்த சோனுராம் யாதவ் பேசினார், “இக்குழுவை நாங்கள் தேர்வு செய்துள்ளோம், எட்டு நாட்களுக்கு வேலை இருக்கும்.”
தமிழில்: சவிதா