uploads/Articles/Chitrangada/Debal-Deb/debaldeb1.jpg


மேற்கு ஒடிசா, இராயகடா மாவட்டத்திலுள்ள வளம் மிக்க நியாம்கிரி மலைத்தொடர் அடிவாரத்தில் அந்த ஜூலை மாதத்தில்  தொடர்ந்து ஐந்தாவது நாளாக மழை பெய்திருந்தது. சற்றே காலந் தப்பிய மழைதான். ஆனால் சூழலியல் வல்லுனர் தேபால் தேபிற்கும்,  அவரது வலக்கரமான துலாலுக்கும் இனிதான் ஓய்வில்லாத வேலையே.நுட்பமாகத் திட்டமிட்டபடி இருவரும் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத புதிய மாதிரியான அவர்களுடையஇரண்டு ஏக்கர் விவசாயப் பண்ணையான ‘பசுதா’வை(தமிழில்: பூமி) பயிர் பருவத்திற்காகத் தயார் செய்யத் துவங்கினர்.


ஒரு வியப்பூட்டும் விஷயம்: இன்னும் சில நாட்களில் இந்த இரண்டு ஏக்கர் பண்ணையில் 1020 வகைபாரம்பரிய அரிசி விதைகள் விதைக்கப்படும்! பாரம்பரிய விதைகள் அழிந்து போகாமல் தடுக்கவும் மரபணுப் பன்முகத்தன்மையை இந்தியாவில் மீட்டெடுக்கவும் 1996-லிருந்து அவர்கள் பெருமுயற்சி எடுத்ததன் பலன் இது.

மும்பை ஓவல் மைதானத்தின் ஓரம் அளவிற்கு மட்டுமே இருக்கும் இந்தப் பண்ணையில் 1000 வகை அரிசி விதைகளை விதைத்து அவை வளர்வதைப் பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடப்போவதில்லை இவர்களுடைய பணி. மாறாக, ஒவ்வொரு வகையிலும் வழிவழியாய்த் தொடரும் மரபியல் தூய்மையைக் காப்பதே இவர்களின் பெரும் பணி. இது சாதாரண விஷயம் அல்ல. குறுக்கு மகரந்த சேர்க்கை நிகழாமல் இருக்க இரண்டு அரிசி வகை செடிகள் ஒரே நேரத்தில் பூக்காதவாறு செய்ய வேண்டும். அதற்காக விதையை விதைக்கும்போதே தேபும் அவர் குழுவினரும் ஒரு நுட்பமான திட்டத்தை வகுத்து அதற்கேற்றாற்போல் விதைத்தனர். (ஆறு ஆண்டுகள் கள சோதனைக்குப் பிறகு ஜூலை 2006-ல் இந்தத் திட்டத்தை ‘Current Science’பத்திரிகையில் தேப் வெளியிட்டார்). ஆனால் தொடர்ந்து  அழிவின் எல்லையில் இருக்கும்  விதைகள் சேர்ந்துக்கொண்டே இருப்பதால்(சென்ற வருடம் மட்டும் 960 புதிய வகைகள்) இந்தத் திட்டத்தை அவ்வப்போது மேம்படுத்தவேண்டிய தேவை அவ்வப்போது ஏற்படுகிறது.

இந்தியாவின் மரபியல் அழிவு

பெரும்பாலான இந்தியர்களின் அன்றாட உணவான அரிசி, புல் வகையைச் சேர்ந்தது. சீனாவில் துவங்கி வட கிழக்கு இமயமலை அடிவாரம் உட்பட தென் கிழக்கு ஆசியா வரை பரந்து விரிந்த பகுதியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களால் இது பயிரிடப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. காலம் செல்ல செல்ல ஒவ்வொரு பகுதியின் புவியியலிற்கு ஏற்ப மனிதர்கள் வெவ்வேறு அரிசி வகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிரிடத் துவங்கினர். அப்படி உலகில் மிக அதிகமாக மரபியல் பன்முகத்தன்மை நிகழ்ந்த இடமாக மேற்கு ஒடிசாவில் இருக்கும் ஜெய்போர் நிலப்பகுதி விளங்குகிறது. அங்கு வாழ்ந்த விவசாயப் பெருமக்கள் கணக்கிலடங்காத அரிசி வகைகளை உருவாக்கியுள்ளனர்(இவற்றிற்கு நில இனங்கள் என்று பெயர்). “நமக்குத் தெரியாத, நாம் இன்னும் பெயரிடாத, திறமைமிக்க கடந்த கால விஞ்ஞானிகள் அவர்கள்”, என்று தேப் அவர்களை அழைக்கிறார்.


/static/media/uploads/Articles/Chitrangada/Debal-Deb/img_5998.jpg


1960-களில் தேப் கொல்கத்தாவில் வளர்ந்துக்கொண்டிருந்தபோது இந்தியாவில் அத்தகைய அரிசி வகைகளின் எண்ணிக்கை 70,000-ம் அதிகமாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இருபதே ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ல் ‘நேஷனல் ஜியக்ராபிக்’ வெளியிட்ட ஒரு கட்டுரை பத்துக்கும் குறைவான அரிசி வகைகளின் மூலமாகத்தான் 75 சதவீதத்திற்கும் அதிகமான அரிசி உற்பத்தி ஆகிறது என்றது. விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் அதிக விளைச்சல் வேண்டி உள்ளீடு அதிகம் தேவைப்படுகிற கலப்பின விதைகளின் பின்னால் முரட்டுத்தனமாக செல்ல ஆரம்பித்த பிறகே இது நிகழ்ந்தது.

இந்த மரபியல் அழிவு இந்திய வயல்களில் மீளவே முடியாத அளவிற்குத் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது: உதாரணத்திற்கு, ஐந்து வருடங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் தேப் சேகரித்த அரிசி வகைகளை இன்று அங்கு யாருமே பயன்படுத்துவதில்லை! இந்த அழிவு மெதுவாகவும் மறைவாகவும் நடைபெறுகிறது. “ஒரு விவசாயி இறந்து, அவரின் மகன் அந்த அரிசி வகையைக் கைவிட நேர்ந்து, அப்படி எளிமையாகவும் இந்த அழிவு நடக்கலாம். ஒரு அரிய வகை அரிசியான ’ஜுகல்’ அப்படி அழிவதை பீர்பம்மில் ஒரு பண்ணையில் பார்த்தேன்.”, என்கிறார் தேப்.


/static/media/uploads/Articles/Chitrangada/Debal-Deb/debaldeb8b.jpg

இந்திய அறிவியல் கழக மாணவரும் அமெரிக்காவின் ‘Fulbright’திட்டத்தின் கீழ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தவருமான தேப், உலக வனவிலங்கு நிதியத்தில்(World Wildlife Fund for Nature) பணி செய்து வந்தார். ஆனால் வங்காளத்தில் அழிந்து வரும் அரிசி வகைகளை ஆவணப்படுத்த நிதி ஒதுக்குமாறு மேலதிகாரிகளிடம் அவர் வைத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட, 1990-களின் நடுவில் அந்தப் பணியிலிருந்து விலகினார். “கண்ணைக் கவரும் பெரிய மிருகங்களை மட்டும் பாதுகாக்க நினைக்கும் நோய் இந்தப் பாதுகாக்கும் அமைப்புகளை பீடித்திருக்கிறது. புலியா? பாதுகாக்கலாம். காண்டாமிருகமா? நிச்சயமாக. ஆனால் ஒரு பண்ணையில் இரசாயன மாசுக்களால் மண்புழுக்களும் தேனீக்களும் சாகின்றன என்றால் அதற்கு யாராவது கவலைப்படுகிறார்களா?”, என்று கசப்புடன் கேட்கிறார்.

பிறகு தேப் அவராகவே கிராமம் கிராமமாகப் பாரம்பரிய அரிசி வகைகளைத் தேடிச் செல்லலானார். பெரும்பாலும் நடையாகவும் பேருந்தின் கூரை மீதாகவுமேஇருக்கும் அந்தப் பயணங்கள். வலுவாக நிறுவப்பட்ட அமைப்புகளை முழுவதும் ஏற்காமல் கேள்விகளோடே அணுகும் தேப், அதற்கேற்றாற்போல் எந்த அமைப்புகளோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் தனித்தே இயங்குகிறார். அவ்வப்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் வகுப்பெடுப்பதன் மூலமாகவும் நண்பர்கள் தரும் நன்கொடைகள் மூலமாகவும் பசுதா பண்ணையை நடத்திச் செல்கிறார். குறிப்பாக அவர் பயணப்படுவது எளிதில் அணுக முடியாத, முறையான நீர்ப்பாசன வசதிகள் இல்லாத, சந்தையிலிருந்து கலப்பின விதைகளையும் இரசாயன உரங்களையும் வாங்க இயலாத விளிம்பு நிலை விவசாயிகள் உள்ள கிராமங்களுக்குத்தான். “பழங்குடியினர் வாழும், வளர்ச்சியில் ‘பிங்தங்கிய’ இடங்கள் என்று இந்திய மேட்டுக்குடியினரால் அழைக்கப்படும் இடங்களில் தான் பாரம்பரிய அரிசி வகைகள் காலப்போக்கில் அழியாமல் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு அரிசி வகையை நான் கண்டால், அந்த விவசாயியின் குடும்பத்திடம் நான் வந்திருக்கும் காரணத்தை சொல்லி சில விதைகளைக் கேட்பேன். பிறகு நமது பாரம்பரியத்தின் ஒரு மிக முக்கிய அங்கத்தை இதுநாள் வரை பாதுகாத்ததற்காக நன்றி கூறிவிட்டு, இதை பயிரிடுவதை நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்வேன்”, என்கிறார் தேப்.

இப்படி வெறுங்காலில் நடந்தே கடந்த 18 ஆண்டுகளில் 1020 பாரம்பரிய அரிசி விதைகளை சேகரித்திருக்கிறார்தேப். அவை வட கிழக்கு, கிழக்கு, தெற்கு என இந்தியாவின் 13 மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டிருக்கின்றன. ‘வ்ரிஹி’ (சமஸ்கிருதத்தில் ’அரிசி’) என்று பெயரிடப்பட்டிருக்கும் அவருடைய விதை வங்கிக்கு காஷ்மீரிலிருந்து இரண்டு பாரம்பரிய அரிசி வகைகள் புதிதாக வந்தடைந்திருக்கின்றன. அதிக உப்புத்தன்மை உள்ள மண்ணில் கூட வளரும் அரிசி வகைகள், தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ள பகுதிகளில் வளரும் அரிசி வகைகள், வறட்சியையும் வெள்ளத்தையும் தாங்கும் வகைகள், கிருமி எதிர்ப்பு கொண்ட வகைகள், ஏன், வறண்ட நிலத்தில் வளரும் அரிசி வகைகள் கூட அவரிடம் இருக்கின்றன. பல மருத்துவ குணம் கொண்ட வகைகளும் 88 வாசனையுள்ள வகைகளும் அதில் அடக்கம்!


/static/media/uploads/Articles/Chitrangada/Debal-Deb/debaldeb6.jpg


நிலையான, சுற்றுச்சூழலுக்குத் தீங்கில்லாத விவசாயத்திற்குத் தேவை, நூற்றாண்டுகளாகத் தங்களது மரபியல் தூய்மையை இழக்காமல் இருக்கும் இந்த நில இனங்களும் அவற்றைப் பாரம்பரிய முறையில் பயிரிடத் தெரிந்த விவசாயிகளும்தான் என்று வாதிடுகிறார் தேப். வருடாந்திர விதை பாதுகாப்புப் பயிற்சியும் சிறு விவசாயிகள் நோக்கிய அவரது விதை விநியோகமும் அவருடைய உள்ளூரிலேயே விதையைப் பாதுகாக்கும் திட்டத்திற்கு வலு சேர்க்கின்றன. இதன் விளைவாக அவருக்குத் தற்போது 3000 உள்ளூர் விவசாயிகளுடன் தொடர்பு இருக்கிறது. பசுதாவிற்கு வரும் விவசாயிகள், அரிசி விதைகளை விலையில்லாமல் பெற்றுச்செல்கிறார்கள். பதிலுக்கு அவர்களின் நிலத்தில் உற்பத்தியாகும் விதைகளைப் பிறருக்கு விநியோகம் செய்யவும், அந்த வகைகளை அழியாமல் பாதுகாக்கவும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்ற டிசம்பரில் இப்படி ஒரு விதை வங்கி இருப்பதைக் கேள்விப்பட்டு 40 மால்கங்கிரி விவசாயிகள் 200-க்கும் அதிகமான கிலோ மீட்டர்கள் கடந்து பசுதாவிற்கு வந்து அவர்களின் நிலத்தில் பயிரிட பாரம்பரிய விதைகளைக் கேட்டனர். “யாரும் விளைச்சல் எவ்வளவு தரும் என்றோ சந்தை விலை எவ்வளவு என்றோ கேட்கவில்லை. எங்களுக்கு மிக உருக்கமான தருணம் அது”, என்கிறார் தேப். மேலும் தேபிற்கு இன்னொரு பெருமிதம், அவரின் பண்ணை ராயகாடாவிலுள்ள கெரண்டிகுடா ஆதிவாசி கிராமத்தின் பொதுநிலத்தில் இருக்கிறது என்பது.  ‘வ்ரிஹி’ வங்கியிலிருந்து விதை பெற்றுச் செல்ல வந்த அந்த கிராம மக்கள், தேப் ஒரு பண்ணை அமைத்து தன் திட்டத்தைத் துவங்க இடம் தேடுகிறார் என்பதை அறிந்து அவர்களாக முன்வந்து அந்த நிலத்தைத் கொடுத்திருக்கின்றனர்.

தேபின் பணிகளில் தென்படும் சமூகத்துவப் பார்வை விவசாயம் சார்ந்த கொள்கை வகுத்தலில் பெரிதும் மாறுபடுகிறது. அங்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சிறு விவசாயிகளின் குரல்கள் கேட்கப்படுவதே இல்லை. சில வருடங்களுக்கு முன் ஒடிசா மாநில அரசு உருவாக்கிய மாநில அரிசி மரபணு வங்கியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புவனேஷ்வரின் புறநகர் பகுதியில் ஒரு அரசாங்கக் கட்டடத்தில் இருக்கும் அந்த வங்கியில் ஒடிசாவைச் சேர்ந்த 900 வகை அரிசி விதைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அலுமினியம் தகட்டுப் பைகளில், பூஜ்ய டிகிரி வெப்பத்தில்,இரசிக்கத்தக்க ஒரு கூடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக ஒரு பாராட்டத்தக்க முயற்சிதான், சந்தேகமில்லை. ஆனால், ஒரு சாதாரண விவசாயியால் அதை எப்படி அணுக முடியும்?

அந்த விதைகளை கவனித்துக்கொள்ளும் அதிகாரிகள் சில மாதிரி விதைகளை விவசாயிகளிடம் தர முடியாது என்கிறார்கள். அவை தவறான கைகளுக்குச் சென்றுவிடும் வாய்ப்பிருக்கிறதாம்(விதை நிறுவனங்கள் என்று பொருள் கொள்ளவும். புதிய பண்புகள் கூட்டி புதிய வகைக் குடும்பங்களை உருவாக்கி லாபம் பார்க்க அவர்கள் பாரம்பரிய மரபணுக்களைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது). ஆனால் ஒடிசா முழுவதுமிருக்கும் விவசாயிகளின் பங்களிப்பில்லாமல் அந்த வங்கியே சாத்தியமாகியிருக்காது என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அரசாங்கமே இந்தப் பாரம்பரிய விதைகளை அதிகாரப்பூர்வமாக சந்தையில் இறக்கலாமே? அப்படி செய்வதன் மூலம் அவ்விதைகளைப் பயிரிட விவசாயிகள் ஊக்கம் பெற்று அவை அழியாமல் காக்கப்படுமே? பாரம்பரிய விதைகளை வெளியிடும் செயல்முறை, அதை செயல்படுத்தும் அதிகாரம், இந்த இரண்டின் கருத்தும் அரசாங்க மற்றும் தனியார் பரிசோதனைக்கூடங்களில் உருவாக்கப்படும் நவீன, வணிக மதிப்பு உள்ள வகைகளின் பக்கம் சாய்கிறது என்பதே உண்மை.

இந்த விதை வங்கிகள் விவசாயிகளால் எளிதில் அணுக முடியாமல் இருக்கிறது என்பது போக வேறொரு பிரச்னையும் இருக்கிறது என்கிறார் தேப்.“ஒரு வகை விதையை உறையவைத்துத் தனிமைப்படுத்துவதால் அங்கு இணைப்பரிணாம வளர்ச்சி ஏற்படாமல் போகிறது.அதாவது 30-40 வருடங்களுக்குப் பிறகு ஒரு பூச்சி எதிர்ப்பு வகையை வெளிக்கொண்டு வந்தால் அதன் எதிர்ப்பு சக்தியால் அதைத் தற்காத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதே 30-40 வருடங்களில் அந்தப் பூச்சி ஒரு குறிப்பிட்ட அளவு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். எனவே அவை கூடத்தில் ஆராய்ச்சி செய்யத்தான் பயன்படும் தவிர களத்தில் விவசாயிகளுக்குப் பயன்படாது”, என்று விளக்குகிறார்.  பாரம்பரிய வகைகள் குறைந்த விளைச்சலையே தருகின்றன என்ற அதிகாரப்பூர்வ வாதத்தையும் தேப் எதிர்கொள்கிறார். “அதிக விளைச்சலைத் தரும் விதைகள் என்று சொல்லப்படும் கலப்பின வகைகளைத் தோற்கடிக்கும் எண்ணற்ற பாரம்பரிய வகைகள் என்னிடம் உள்ளன”, என்கிறார். ஒருபக்கம் உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்களில் கால்வாசி பேர் இந்தியர்கள் என்பதையும் மறுபக்கம் அரிசியையும் கோதுமையையும் சேமித்து வைப்பதில் இந்தியா உலக சாதனையே படைத்துக்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, அதிக விளைச்சல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று சொல்ல முடியாது என்கிறார்.


/static/media/uploads/Articles/Chitrangada/Debal-Deb/debaldeb9.jpg.jpg

பண்ணையில் விளைந்த கீரை, காய்கறிகள், பருப்பு மற்றும் எட்டு வகையான அரிசிச் சோறு ஆகியவை மத்திய உணவாகப் பரிமாறப்பட்டன. அப்பொழுது தேப் சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. “நம்முடைய பரம்பரை சொத்தைப் பணத்தில் அளவிட முடியுமா? உங்களுடைய குடும்பத்தில் ஒரு தனித்துவமான ஓவியமோ, ஒரு புடைவையோ அல்லது 200 ஆண்டுகளாக வழிவழியாக உரிமை கோர ஒரு நகையோ இருக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பணத்திற்காக விற்க நினைப்பீர்களா? அப்படித்தான் எங்களுக்கு இந்தப் பாரம்பரிய அரிசி வகைகள் - அவை எங்கள் பண்பாட்டின் ஒரு அங்கம்!”

இக்கட்டுரையின் ஒரு பதிப்பு Mint Lounge’s August Independence Day இதழில் முதலில் வெளிவந்தது . http://www.livemint.com/Leisure/bmr5i8vBw06RDiNFms2swK/Debal-Deb--The-barefoot-conservator.html

( தமிழில் : விஷ்ணு வரதராஜன் )

Chitrangada Choudhury

Chitrangada Choudhury is an independent journalist.

Other stories by Chitrangada Choudhury